அதென்ன மினி உலகக் கிண்ணப் போட்டிகள்?

அதென்ன மினி உலகக் கிண்ணப் போட்டிகள்?

19 views
0

 

இன்றைய நாட்களில் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாக மாறி வருவதுடன் பல கோடிகளைச் சம்பாதிக்கும் பணம்காய்ச்சி மரங்களாகவும் மாறிவருகின்றன. டெஸ்ட் போட்டிகள் ரீ20,  50 ஓவர் ஆட்டம் என்று மினி மோதல்களாக உருவெடுத்த பின்பு,  இதன் கவர்ச்சியும், வேகமும் நன்றாகவே மாறிவிட்டது. “கையில காசு வாயில தோசை” “அடித்தால் சிக்ஸர் பிடித்தால் முட்டை ”என்று ஒரே நாளில் விறுவிறுப்பான மோதல்கள் முடிந்துவிடுவது இதன் கவர்ச்சிக்கு தலையாய காரணம் என்றால் அது மிகையாகாது.

உலக வெற்றிக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு  முன்பு தொடங்குபவைதான் இந்த மினி உலகக் கிண்ணத்திற்கான மோதல்கள்.  உலக வெற்றிக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்ததாக பன்னாட்டு கிரிக்கெட் சபை இந்தப் போட்டிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றது. 1998இல் ஆரம்பிக்கப்பட்ட இது,  இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடாத்தப்பட்டு வந்தது. 2002இல் இதன் பெயர் சாம்பியன் கேடயத்திற்கான போட்டி என்று மாற்றம் பெற்றது .

இந்த மினி உலகக் கிண்ணப் போட்டி என்பது இதுதான்.

இந்தப் போட்டிகள் ஆரம்பமாகியபோது கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவம் பெற்றவர்கள் மாத்திரமே இதில் பங்குபெற்றத் தகுதி பெற்றிருந்தார்கள். 2000 தொடக்கம் 2004 வரை ஏனைய அங்கத்துவர்களும் பங்குபெற்ற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் 2009 தொடக்கம் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. ஒரு நாள் ஆட்டத்தில் முதல் எட்டு இடங்களில் தரப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே-அதுவும் ஆறு மாத காலத்திற்கு முன்பு  தெரிவாகியவர்கள் – பங்குபற்ற முடியும்.

இந்த ஆண்டுக்கான  ஐசீசீ சாம்பியன் கிண்ணத்திற்கான மோதல்கள் இங்கிலாந்திலும் வேல்ஸ் நாட்டிலும் இடம்பெறப்போகின்றன. அடுத்த மாதம் அதாவது ஜூன் முதலாந் திகதி ஆரம்பிக்கும் இந்த மோதல்கள் 18ந் திகதி நிறைவைக் காண்கின்றன. உலக வெற்றிக் கிண்ண மோதல்கள் 2019இல்தான் இடம்பெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுக்களை இதனுடன் ஒப்பிடலாம். 4 வருடத்திற்கு ஒரு முறை என்பது நீண்ட காலம் என்பதால், ரசிகர்களை நீண்ட காத்திருப்பிற்கு உட்படுத்தாமல், கோடைகால விளையாட்டு, பனிக்கால விளையாட்டு என்று பிரித்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்துகிறார்கள் அல்லவா? அப்படி ஒரு ஏற்பாடுதான் இதுவும்!

இந்தத் தடவை போட்டிகளில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்ட எட்டு நாடுகள் இதோ வருமாறு: இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா,  நியுசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் ஆகியவைதான் அந்த நாடுகள். ஒன்பதாவது இடத்திற்கு மே.இந்திய தீவு அணியைத் தள்ளிவிட்டு,  எட்டாவது இடத்திற்கு வந்துள்ள பங்களாதேஷ் அணி இங்கே புதுமுகமாக உள்ளே நுழைகின்றது. 2006க்கு பின்னர் சாம்பியன் கேடயத்திற்கு விளையாட இந்த நாட்டிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு இதுதான்.

மான்செஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கிரிக்கெட் அணிகள் சற்றே மிரண்டு போயிருக்கின்றன. எந்த உயிரும் அவரவர்க்கு வெல்லக்கட்டிதான். ஆனால்  கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ பாதுகாப்பிற்கு தாங்கள் உத்தரவாதம் என்கிறது .

அவுஸ்திரேலியா,  தென் ஆபிரிக்கா,  இந்தியா,  இங்கிலாந்து-இந்த நான்கு அணிகளுமே இந்த எட்டு அணிகளில் மிகுந்த பலசாலிகள். அதிலும் அதிதியாகப் பொறுப்பெடுத்து போட்டிகளை அரங்கேற்றப் போகும் இங்கிலாந்தின் அணி அனல் பறக்க ஆடுகின்றது. துடுப்பாட்டம்,  பந்து வீச்சு,  களத்தில் பந்து பொறுக்குதல்,  பொறுப்பான தலைமைத்துவம்-என்று பல கோணங்களிலும் சிறப்பாக மிளிரும் இங்கிலாந்து அணி ஏனைய அணிகளுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  சமீபத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடந்து முடிந்த இரு 50 ஓவர் மோதல்களும் இதற்கு சாட்சி பகர்கின்றன.

2015இல் ஆரம்பத்திலேயே போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட இங்கிலாந்து அணியை இந்தத் தடவை ஏனைய அணிகள் ஜாக்கிரதையாகவே அணுகும் என்பது நிச்சயம். அதே சமயம் இதுவரையில் இங்கிலாந்து அணி எந்தச் சந்தர்ப்பத்திலும் சாம்பியன் கேடயத்தை பெற முடியவில்லை என்பது சோகமான விடயம். இந்தத் தடவை நல்லதொரு அணித்தலைவரின் வழிநடத்தலில்,  ஸ்ரோக்ஸ் போன்ற சிறந்த ஆட்டக்காரார்களின் பலத்தோடு இந்த அணி எதையாவது சாதிப்பது உறுதி.

இந்திய அணி ஐபீஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றது. இங்கு கிடைத்த தாராளமான பயிற்சி இந்திய அணிக்கு நல்ல பலம் சேர்த்திருப்பது நிச்சயம். இவர்களுக்கு போட்டியாக வரும் இங்கிலாந்து,  தெ.ஆபிரிக்கா,  அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அதிவேகப் பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை என்பது ஒரு குறையாக இருப்பினும், தளம்பாமல் எந்தத் தளத்திலும் பந்து வீசக்கூடியவர்கள் இவர்கள் அணியில் இருக்கின்றார்கள்.

தமது ஊதியம் சம்பந்தமாக கட்டுப்பாட்டுச் சபையுடன் பிணங்கிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி இந்தத் தடவை சாம்பியனாகினால்,  ஊதிய உயர்வுக்கு போராட ஒரு உறுதியான காரணத்தை  அவர்களால் முன்வைக்க முடியும். மிகச் சிறப்பாக ஆடும் அணித் தலைவர் ஸ்டீவன் சிமித் அணிக்கு ஆனைப் பலமாக இருக்கப் போவது திண்ணம்.

தென் ஆபிரிக்க அணி சாமான்னியமான ஒன்றல்ல. அம்லா போன்ற பழுத்த அனுபவசாலிகளுடனும்,  தாகீர் போன்ற சாதுர்யமான பந்து வீச்சாளர்களுடனும் அசுர பலம் கொண்டு விளங்கும் இவர்கள் விளையாட்டில் ஆபிரிக்க சிங்கங்கள்தான்.

இந்த நான்கு அணிகளில் ஒன்றுக்குத்தான் வெற்றிக் கேடயமா? அல்லது பந்தயக் குதிரைகள் இடறி விழ,  பின்னே வந்த குதிரை முன்னே பாய்ந்து சென்று விடுமா?

காத்திருப்போம்.

28.05.17

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *