தொட்டகுறை விட்டகுறை

தொட்டகுறை விட்டகுறை

30 views
0

வெளிநாடுகளில் அவரவர் படிப்பிற்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு போன்றதுதான். அந்தந்த நாட்டு மொழியைப் படித்தால் ஒருவேளை இது சாத்தியப்படலாம். ஆனால் 50 வயதைத் தாண்டி விட்ட எனக்கு இனியொரு மொழியைப் படித்து, பிறகொரு வேலைதேடுவது என்பது சுலபமான ஒன்றாகத் தெரியவில்லை.

ஊரில் 25 வருடங்கள் லிப்டன் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவன் நான். அரபு நாடுகளில் அதிகமாக உழைக்கலாம் என்ற நப்பாசையோடு,  அங்கிருந்து இந்த அரபு நாட்டிற்குப் புறப்பட்டு வந்தேன். சாரதியாகவே இங்கும் வேலை செய்வதானால்,  சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தாக வேண்டும்.

முயற்சி செய்தேன். மூன்று தடவைகள் முயற்சி செய்தேன்.

முடியவில்லை. இனி முயற்சி செய்யவும் முடியாது.

சுத்திகரிப்புத் தொழிலாளியாக வேலை செய்யத் தயாரா என்று ஏஜன்ட் கேட்டபோது,  அதிர்ச்சியாக இருந்தது.

இல்லை என்று சொல்லி விட்டு வீடு திரும்புவது சுலபம். ஆனால் இந்தப் பயணத்திற்குச் செலவிட்ட தொகையை யார் திருப்பித் தரப் போகிறார்கள்.? ஊரில் யாருக்குத் தெரியப் போகின்றது? பேசாமல் தரும் வேலையை ஒத்துக் கொண்டு ஏதோ கொஞ்சத்தை உழைத்து விட்டு .ஊர் போய்ச் சேர வேண்டியதுதான்.

சம்மதம் தெரிவித்தேன். ஆனால் மனதிற்குள் அழுதேன்.

ரை கட்டிக் கொண்டு,  கம்பனிக் காரில் போய் கடைகளின் முன்பாக கம்பீரமாக இறங்கிய சுப்ரமணியம் என்ற அந்த மணியன் செத்துப் போய் விட்டான். இனி இவன் இங்கே சுத்திகரிப்புத் தொழிலாளி. ஒரு கையில் வாளியும் மறு கையில் துணியுமாக……நினைக்கவே மனம் சிரமப்பட்டது..

செய்யும் தொழிலே தெய்வம் என்று மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி எனக்கு அப்பொழுது தெரியவில்லை…

பெரிய பெரிய அலுவலகங்களின் கண்ணாடிகளை,  ஏணியில் ஏறி துப்பரவு செய்யும். வேலை. என்னோடு பத்துப் பேர் கொண்ட ஒரு கோஷ்டி. காலை 5 மணிக்கு தொடங்கி 8 மணி வரையும்  வேலை செய்து ,  பின்பு மாலை 5 மணிக்கு மீண்டும்  தொடங்கி 8மணி வரை வேலை செய்ய வேண்டும்.

 

முதலில் புதிய சூழல்.. இஸ்டமில்லாத வேலை.. முகம் தெரியாதவர்கள். மனம் சங்கடப்பட்டது. ஆனால் நாளடைவில் எல்லாமே பழக்கப்பட்டு விட்டது.  ஆளை முறிக்கின்ற வேலை இல்லை . பகலில் நிறைய நேரம் வீட்டில் இருக்கக் கிடைத்தது. சம்பளம் குறைவுதான். ஆனால் இலங்கைச் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

வெளியில் அகோர வெயில்.. ஆனால் குளிரூட்டப்பட்ட அந்த அலுவலகங்கள் அங்கு சொர்க்கபுரி போல் இருந்தன. அங்கு வேலை செய்வதும் சிரமமாகத் தெரியவில்லை.

வெளிமாவட்டங்களில் நீண்ட காலம் வேலை செய்து, தனியனாக இருந்து சமையலையும் நான் கற்றுக் கொண்டு விட்டபடியால், இந்த நாட்டில் சமைத்துச் சாப்பிடுவது எனக்குச் சிரமமாகத் தெரியவில்லை. நானே எனது சாப்பாட்டை சமைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

நான் நல்ல டிரைவர் மட்டுமல்ல,சமையலிலும் கெட்டிக்காரன் என்ற தகவல் நானிருந்த காம்பில் பரவியபோது, வெளியில் வேலைக்குப் போவோர்,  தமக்கும் ஒரு தொகைக்குச் சமைத்துத் தரும்படி கோரினார்கள்.

மறுக்கவில்லை. தெரிந்த கலையைப் பணமாக்கலாந்தானே?   பகலில் கிடைக்கும் நேரத்தில் நான் அறையில் சமைத்து வைக்க, எனது வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு விட்டுப் போவார்கள். மாதாமாதம் எனது வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு தொகைப் பணம் வசூலாகி விடும். வேலை கொஞ்சம் அதிகமாக,  என்னோடு காலையில் வேலைக்கு வரும் காந்தன் என்பவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அவனுக்குச் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக மாறினேன்.

பாலைவனத்திலும் சோலைவனம் இருக்கின்றது என்பார்கள். அது இதுதான் போலும்..

நான் இதுவரையில் எந்த மதுபானத்தையும் தொட்டதில்லை. இனியும் அந்த நோக்கம் எனக்கில்லை. ஆனால் விதி யாரைத்தான் விட்டு வைக்கின்;றது?

ஒருநாள் காந்தன் ரகசியமாக ஒரு போத்தல் விஸ்கியைக் கொண்டு வந்தான். இதை ஒரு பாலஸ்தீனியன் விற்கக் கொண்டு வந்தான் . நான் வாங்கி விட்டேன் என்றான் காந்தன். கொடுத்த தொகையைக் கேட்டேன். அந்தத் தொகையை அறிந்த போது எனக்கு மயக்கம் வரும்போலிருந்தது. பெரிய தொகை. எங்கள் உழைப்பிற்கு அது மிகப்பெரிய தொகைதான்.

“அண்ண மண் தின்னிற உடம்பிற்கு அப்பப்போ ஆசைப்படுறதை கொடுத்திட வேண்டும். இல்லாட்டி செத்தாலும்  ஆவியா அலைய வேண்டி வரும்” என்றான் காந்தன் சிரிப்போடு.

எனக்கு அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

அது வெளிநாட்டு விஸ்கி. ஜொனி வோக்கர் என்று எழுதியிருந்தது.

அவன் மூடியைத் திறந்து,  தயாராகக் கொண்டுவந்த சோடாவில் கலந்து,  கிளாஸில் ஊற்றி,  ஒரே மூச்சில் முகத்தைச் சுளித்தபடி கலவையைக் குடித்து முடித்தபோது,  நான் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன்.

எபபடி இருக்கு என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன்.

“அண்ணை வெளிநாட்டுச் சரக்கு எப்படி இருக்கும்? எதையும் அனுபவிச்சுப் பார்த்தால்தானே அண்ணே அதின்ர அருமை தெரியும்” என்றான் காந்தன்.

கதையை நீட்டுவானேன். ஏவாள் தானும் சாப்பிட்டு ஆதாமுக்கும் ஒரு கடி கடிக்க அப்பிளை நீட்டிய கதைதான்.

புதுப் பழக்கம்… வெறி தலைக்கேற ஒளிச்சு சுருட்டி வைத்திருந்த என் சேமிப்பில் ஒரு தாளை எடுத்து,  இந்தா என் பங்கு என்று காந்தனிடம் நீட்டினேன். எதுக்கடா இதை வாங்கினாய் என்று முழங்கியவன் கடைசியில் பங்குத் தொகை கொடுத்து,  சேர்ந்து குடித்து மாண்ட கதைதான் இது…

அன்று எழுதியது முதலாம் அத்தியாயம்…காலப்போக்கில்  அதுவே உடம்பில் ஓர் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டு விட்டது. வசதிப்படும்போது,  காந்தன் ஒரு போத்தலை வாங்கி வருவான். இருவருமாகச் சேர்ந்து குடிப்போம்.

சனியன் எந்தெந்த வழியிலெல்லாம் வந்து சேர்கிறான்? எனக்கு காந்தனின் வடிவில் அந்தச் சனியன் வந்து ஒட்டிக் கொண்டது.

மாதாமாதம் ஒழுங்காக வீட்டுக்குப் பணம் அனுப்புவதை நான் நிறுத்தியபோது,  கடிதங்கள் மிளகாய்க் காரத்தோடு,  மனைவியிடமிருந்து வரத் தொடங்கின.

ஒரு பொய்யை மெய்யாக்க இன்னும் ஒன்பது பொய் வேண்டுமல்லவா?

எனக்கு இப்பொழுது வேலை இல்லை.  புது வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எழுதிக் கடிதம் அனுப்பினேன்.

பேசாமல் ஊருக்கு வந்து சேருங்கள். நான் தனியாக இங்கே மாரடித்தது போதும் என்று சுடச்சுட மனைவி பதில் அனுப்பினாள்.

இரண்டு மாசங்கள் வெகு சிரமப்பட்டு குடியை நிறுத்தி,  கொஞ்சம் பணத்தைப் பிடித்து,  ஊருக்கு அனுபபினேன்.

எனக்கு நல்ல சம்பளத்தில் புதுவேலை கிடைத்து விட்டது என்று தொலைபேசியில் இன்னொரு பொய்யைக் கூறி மனைவியைச் சமாதானப்படுத்தினேன்.

வீட்டிலிருந்த ரேடியோவில் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்ட குடியை,  தொடர்வது என்று மனதுள் வைராக்கியமாக இருந்தேன்

குடி குடியைக் கெடுக்கும் என்பது மட்டுமல்ல. ஆளையும் கெடுத்து விடும். மனiவிக்குக் கூறிய பொய்யை மெய்யாக்கத் தீர்மானித்தேன். யார் காலில் வீழ்ந்தாவது ஒரு புது வேலையைத் தேடி  புது இடத்திற்கு மாறிவிட்டால், இந்தக் காந்தனின் சகவாசம் இருக்காது. நானும் தப்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த வாய்ப்பு வேலை செய்யும் இடத்தில் ஒரு நாள் கிடைத்தது.

எனக்கு முதலாளியாக இருந்தவர்,  ஒரு நாள் காரில் வந்து இறங்கிய போது,  நானும் அவ்விடத்தில் நின்றேன். காரை விட்டிறங்கிய அந்த அரபுக்கார முதலாளி,  இறங்கிய கையோடு,  என்னிடம் வந்தார். “கார் ஓட்டத் தெரியுமா?” என்று என்னிடம் கேட்டார்.

“தெரியும்”; என்றேன் நான்.

“அப்படியானால் என் காரை எடுத்துக் கொண்டு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி வர முடியுமா?” என்று கேட்டார்.

வாகன அனுமதிப் பத்திரம் இல்லை என்று நடந்த கதையையும் சுருக்கமாகச் சொன்னேன். என்னைப் பார்த்து சிரித்தவர்,  “ நீ என் அலுவலகத்திற்கு வா” என்று சொல்லி, ஒரு கார்ட்டையும் கையில் திணித்து விட்டுப் போய்விட்டார்.

எல்லாம் அவன் செயல் என்று சொல்வதைத்  தவிர வேறு எதை நான் சொல்ல முடியும்? அந்தச் செல்வாக்கு மிக்க மனிதர் சகாயத்தால் எனக்கு வாகன அனுமதிப் பத்திரம் கிடைத்து மட்டுமல்ல. எனக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த காரணத்தால்,  அவர் வீட்டுச் சாரதியாகவும் நான் மாறினேன். மாளிகைபோல் இருந்த வீட்டில் தங்கியிருக்க ஓர் அறையும் தரப்பட்டது.

பார்த்தீர்களா? என் வாழ்வு எப்படி எப்படியெல்லாம் மாறிவிட்டது? இப்பொழுது நான் காந்தனைச் சந்திப்பதில்லை. விட்டது சனியன் என்று நினைத்து அகமகிழந்து கொண்டிருக்கின்றேன்.

 

மனைவிக்கு போன் செய்த போது( இப்பொழுது வீட்டு போனையும் இடையிடையே உபயோகிக்கும் சலுகையும் எனக்கு வந்து சேர்ந்திருந்தது) வா வா என்று தொணதொணத்தாயே. இங்கே ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று அவளிடம் பீற்றிக் கொண்டேன்.

ஒருநாள் என் அறைக்குள் இருந்தபடி பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்து முடித்துவிட்டு காலாற நடக்கலாம் என்று நினைத்து வெளியே வந்தேன். அன்று வீட்டில் யாருமில்லை.முதலாளியும் மனைவியும் அடுத்த வீட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டிலிருந்த பணிப்பெண்ணுக்கும் அன்று லீவு நாள்.

முதலாளியின் அறைக் கதவு இலோசாகத் திறந்திருந்தது. வீட்டில் யாருமில்லை என்ற துணிவில்,  மெல்லக் கதவைத் திறந்தேன். அங்கே மேசையில் கண்ட பொருள் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. அரைவாசி குடித்த நிலையில், ஒரு ஜொணி வோக்கர் போத்தல் என்னைப் பார்த்து பல்லிளித்தது. இன்னும் சற்றுத் தள்ளி வேறு ரக மதுபானப் போத்தல்கள் சில இருப்பதையும் என்னால் காணமுடிந்தது…

கதவைப் படாரென அடித்துச் சாத்திவிட்டு, என் அறைக்குள் புகுந்து வேகமாகக் கட்டிலில் வீழ்ந்தேன்…………………………….

கட்டார் விமானம் வளைகுடாவைக் கடந்து உயரப் பறந்து கொண்டிருக்கின்றது. நான் அதில் பயணியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.

சட்டிக்குத் தப்பி நெருப்பிற்குள் விழ நான் தயாராக இல்லை.

முதலாளி வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, மனைவிக்குக் கடும் சுகவீனம் என்று சொல்லி அழுது முதலாளியிடம் கடவுச்சீட்டைப் பெற்று,  தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறேன் நான்…..

29.05.16 (உதயன் வாரமலரில் 2016இல் பிரசுரமாகியது )

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *