கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிடுமோ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிடுமோ?

10 views
0

எதிலும் வேகம் என்பதுதான் இன்றைய தாரக மந்திரமாக இருக்கின்றது. நம்மைச் சுற்றி எல்லோருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். முகத்திற்கு முகம் பார்த்து பேசுபவர்கள் அருகிக் கொண்டே போக,  கைத்தொலைபேசிகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பவர்களே அதிகமாகி வருகின்றார்கள்.

பொறுமையாக உட்கார்ந்து, உணவை உண்பவர்களையும் காணோம். நடந்து நடந்து உண்ணும்போது நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பலர் கருதுகின்றார்கள். அதற்கேற்ப அவசர உணவுகள் பல வந்து குதித்திருக்கின்றன.

விளையாட்டுப் போட்டிகளைக் கூட , பொறுமையாக உட்கார்ந்து பார்க்கும் விருப்பம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே போகின்றது. 5 நாட்கள் பொறுமையோடு உட்கார்ந்து நுட்பமாக விளையாடப்படும் நீண்டகால டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளை ரசித்த கூட்டம் போய்,  இப்பொழுது ஒரே நாளில் முடிந்து விடுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் மோதல்களை மோகிப்பவர்கள் பெருமளவு அதிகரித்து இருக்கின்றார்கள்.

டெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டு முதலில் வந்ததுதான் 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டிகள். ஒரு பந்து வீச்சாளர்,   அதிக பட்சம். பத்து ஓவர்களை மாத்திரமே வீச முடியும். 50 ஓவர்களில் விளாசல் மன்னர்கள் விளாசித் தீர்க்கலாம்.

இப்படியான கிரிக்கட் போட்டிகள், 1971 ஜனவரி மாதம் 5ந் திகதிதான் முதற் தடவையாக ஆரம்பித்தன. முதலில் மோதியவர்கள் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்தான்! கிரிக்கட் உலகில் காலங்காலமாக பரம வைரிகளாக இருக்கும் இந்த இரு நாடுகளும்,  உலகப் பிரபல்யமான மெல்பர்ண் கிரிக்கட் மைதானத்தில் மோதிக் கொண்டன.

ஒரு விபத்து போலவே இந்த மோதல் இடம்பெற்றது. இரு நாடுகளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட முடியாமல்,  முதல் மூன்று நாட்களும் மழை குறுக்கிட்டதால்,  அந்த டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது. 40 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மோதல் நான்காம் நாள் விளையாடப்பட்டது. இதில் வெற்றிவாகை சூடியது அவுஸ்திரேலியாதான்.

இதுதான் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மோதல்கள் பிறந்த கதை!

70களின் பிற்பகுதியில் Kerry Packer  என்பவர் உலகளாவிய ரீதியாக இந்த மோதல்களை ஒரு போட்டியாக உருவாக்க,  களத்தில் ஆடுபவர்கள் வர்ண ஆடை அணிதல், பெரும் ஒளிவெள்ளத்தில் இரவு மோதல்கள்,  வெள்ளைக் கிரிக்கட் பந்து ,  நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு என்றெல்லாம் பல புரட்சிகள் கிரிக்கட் உலகில் புகுத்தப்பட்டன.

வழமையான சிகப்பு நிறப் பந்து உபயோகிக்கப்படுவது,  2001இல் இப்படியான மோதல்களில் அடியோடு கைவிடப்பட்டது. கிரிக்கட் வீரர்கள்,  முழு நேரத் தொழிலாக, இப்படியான சுற்றுப்போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றும் வாய்ப்பும் உருவாகியது.

இந்த வேகமான கிரிக்கட் மோதல்களில் 50 ஓவர்களில் மிக அதிகமாக ஓட்டங்கள் ஆடிக் குவித்தவர்கள் என்ற சாதனையை சிறீலங்கா அணியே சாதித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜூலை 4ந் தகதி ஒல்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்தச் சாதனை நிகழ்ந்தது.

சிம்பாவே அணிக்கு எதிராக விளையாடியபோது சிறீலங்கா அணியின் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 19 ஓட்டங்கள் இழப்பிற்கு 8 விக்கட்டுகளை வீழ்த்தியமை , இன்றுவரையில் அதி உயர்ந்த சாதனையாக இருக்கின்றது. இது கொழும்பில் 2001-02இல் விளையாடியபோது சம்பவித்தது. 8 விக்கட்டுகளை இந்த 50 ஓவர் விளையாட்டுக்களில் வீழ்த்தியது இவர் ஒருவரேதான்!

ஐம்பது இருபதாகியது…

இந்த 50 ஓவர் ஆட்டம் கொடுத்த சுவை 20 ஓவர் மோதல்களுக்கு வழி சமைத்துக் கொடுத்தது.

இதற்கு வயது அதிகமில்லை.

2005ம் ஆண்டு பெப்ரவரி17ந் திகதிதான் இது முதலில் ஆரம்பிக்கப்பட்டு,  அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன.

இதிலும் வெற்றி அவுஸ்திரேலியாவுக்குத்தான்!

இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 2007 இல் ICC World Cup T20 என்று சுற்றுப் போட்டிகள் அலுவலகரீதியாக  ஆரம்பமாயின.

இன்றைய நிலையில் இப்படியான மோதல்களில் இறங்கும் 17 உலக நாடுகள் காணப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகள் பத்து மாத்திரமே!

இந்த ரக விளையாட்டில் முதல் செஞ்சரியை மேற்கிந்திய அணியின் கெய்ல் அடித்திருந்தார். நல்ல உயரமான உடலமைப்பைக் கொண்ட இவர் ஒரு விளாசல் மன்னன்!

500வது அகில உலகரீதியான 20 ஓவர் மோதல் கடந்த பெப்ரவரி 16ந் திகதி அயர்லாந்திற்கும் ஐக்கிய அரபுக் குடியரசிற்கும் இடையில் இடம்பெற்றது.

 

இந்தியாவும் பிடித்துக் கொண்டது…

இந்த அதிவேக கிரிக்கட் போட்டி மோகம் இந்திய தொழிலதிபர்களிடம் தெர்றறிக் கொண்டதால் ஐபீஎல் என்ற  விறுவிறுப்பான மோதல்கள் ஜனித்தன.

இந்தியாவின் பிரபல்யங்கள், பெரும் பணத்தை வீசி,  வெளிநாட்டு வீரர்களை விலைக்கு வாங்கி, தங்கள் தங்கள் அணிகளில்  இணைத்து, விளையாடப்படும் சுற்றுப்போட்டிதான் இது!

இந்திய கிரிக்கட் சபைதான் 2007இல் இதை ஆரம்பித்து வைத்தது. வருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெறுவதுதான் இந்த மோதல்கள்.

இந்தச் சம்மேளனம் நடாத்தும் போட்டிகள்தான் கிரிக்கட் உலகில் மிக அதிகமானவர்களால் கண்டு களிக்கப்படுவது. யு ரியூப் 2010இல் நேரடியாக ஒளிபரப்ப ஆரம்பித்தபோது,  உலகமே வியந்தது..

கோடிக்கணக்கில்  பணம் புரள்வதுடன்,  இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பணம் ஈட்டிக் கொடுக்கும் போட்டிகளாகவும் இவை திகழ்கின்றன.

இந்த லீக்கில் சொந்தம் கொண்டாடி போட்டிகளில் பங்கேற்ற 2008இல் ஏலத்தில் விலை கோரப்பட்டது. மொத்த விலை 400 மில்லியன் டாலர்கள். ஏலத்தின் முடிவில் பங்களூர், சென்னை,  டில்லி,  ஹைதரபாத்,  ஜெய்பூர்,  கல்கத்தா, மொஹாலி,  மும்பாய் ஆகிய  எட்டு நகரங்களும் வெற்றியீட்டின.

இதன் ஆரம்பத்திலிருந்து 11 அணிகள் போட்டியில் பங்குபற்றியுள்ளன. இந்தத் தடவை எட்டு அணிகள் மாத்திரமே விளையாடுகின்றன. சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு அணிகள் இரண்டு ஸீஸன்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல் அணியும்தான் விலக்கப்பட்ட அணிகள். இவர்கள் இருவருமே சாம்பியனாக வந்த அணிகள்.!

றோயல் சாலஞ்சேர்ஸ் பங்களுர் என்ற கழகத்தில் விளையாடும் விராத் கோலிதான் அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். 12.5 கோடி இந்திய ரூபாய் (1.89 மில்லியன் டாலர்) இவரது பெறுமதி. ஆனால் 15 கோடிதான்(2.26 மில்லியன் டாலர்) இவருக்குக் கொடுக்கப்படும். இவ்வளவு காலமும் மிகவும் விலைமதிப்பான விளையாட்டு வீரர் என்று கணிக்கப்பட்டு வந்த தோனிக்கு கிடைப்பது 1.89 கோடி டாலர் மாத்திரமே!

பணம் பெருமளவில் புரள்வது மாத்திரமல்ல,பெருமளவு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும், இந்த ஐபிஎல் விளையாட்டுக்கள் ரசிகர்களுக்கு கொடுக்கத் தவறுவதில்லை.

போகிற போக்கைப் பார்த்தால், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதை போல, அல்லது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகிய  கதைபோல ,  5 நாள் டெஸ்ட் மோதல்கள் தேய்ந்து,5 ஓவர் போட்டிகள் வரை சுருங்கி விட்டால் அதில் பெரிதாக நாம் ஆச்சரியப்படத்  தேவையில்லை .

காலந் தரும் கோலம் அது !

01.03.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *