நந்தவனத்து கள்ளிச்செடிகள்…

நந்தவனத்து கள்ளிச்செடிகள்…

10 views
0

மதிய உணவு இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆங்கில வகுப்பை அப்பொழுதுதான் ஆசிரியர் ஆரம்பித்திருந்தார். வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த காந்தனுக்கு படிப்பில் புலன் செல்வதாக இல்லை.

அடிக்கடி நேரத்தைப் பார்த்தபடி, ஆசிரியர் பக்கமும் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான காந்தன் ;. இடையிடையே இசக்குப் பிசக்காக ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்கக் கூடியவர். சரியான பதில் கொடுக்கப்படவில்லையென்றால் வகுப்பாசிரியர் ராஜரட்ணம், மாணவனை அதிபரின் அறைக்கு அனுப்பி விடுவார்.

அங்கே அனுப்பப்பட்டு விட்டால், மதிய உணவுக்கும் போகவிடாது, பட்டினி போட்டு விடுவார் அதிபர்;. இப்படிப் பலருக்கு நடந்திருக்கின்றது. அந்த அளவுக்கு மகா கண்டிப்பானவர் அந்தப் பாடசாலை அதிபர். இப்படிச் செய்வது ஒரு மாணவனுக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தி , படிப்பில் அதிக அக்கறை வழிவகுக்கும் என்று அந்த ஆசிரியர் திடமாக நம்பினார்.

அன்று ஆசிரியர் வினைச் சொற்கள் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். நிகழ்காலம் பற்றி முன்னைய வகுப்புகளில் விளக்கங்கள் கொடுத்தபின்பு, இப்பொழுது இறந்த காலத்திற்குத் தாவியிருந்தார். எந்த மொழியிலுமே வினைச் சொற்கள் என்பது வீடு கட்ட உதவும் செங்கற்கள் போன்றவை என்று விளக்கிய ஆசிரியர் ஒவ்வொரு வினைச் சொல்லினதும் மூன்று காலங்களையும் ஒழுங்காகப் படிததால்தான், அந்த மொழி அறிவு பலப்படும் என்று அழுத்திச் சொல்லி இருந்தார் . இன்றும் அவர் அதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஒழுங்கற்ற வினைச் சொற்களின் முக்காலங்களையும் கற்பது எளிதல்ல. மனப்பாடம் செய்வதுதான் உகந்த வழி என்று ஆசிரியர் மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறியதோடு, மூன்று நிலைகளையும் கொண்ட, ஒழுங்கற்ற சொற்களின் பட்டியல் ஒன்றின் பிரதியை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கி இருந்தார்.

ஒரு தடவை அவன் கண்கள் சுவர்க்கடிகாரத்தில் பதிந்தபோது, எடு என்ற சொல்லிற்குரிய மூன்று காலச் சொற்களையும் சொல் பார்க்கலாம் காந்தன் என்று ஆசிரியர் கேட்க

காந்தன் இருக்கையில் இருந்து எழுந்தான். அவன் தயாராகத்தான் இருந்தான். மளமளவென்று மூன்று சொற்களையும் வரிசையாக ஒப்பித்து விட்டு இருக்கையில் உட்கார்ந்தான்.

அவன் உட்கார வகுப்பு முடியும் நேரமும் வந்தது.

மாணவர்களோடு மாணவர்களாக வகுப்பறையை விட்டு வெளியேறினான்.

நேராக பாடசாலைக்கு எதிர்த்தாற்போல நிற்கும் பெரிய பூவரசு மரத்து நிழலில் ஒதுங்கினான். உடலை எரித்து விடுமோ என்று பயப்படவைக்கும் அளவுக்கு வெளியில் வெயிலின் உக்கிரம்….யாழ்ப்பாணத்து கோடை வெயில் எப்பொழுதுமே இப்படித்தான்…

தன்னை நோக்கி ஒருவன் வந்து கொண்டிருந்தபோது அவன் முகம் மலர்ந்தது. அவன் எதிர்பார்த்த ஆள்தான் . காந்தனின் இடக்கையில் அவன் ஒரு சிறுபையைத் திணிக்க, காந்தனின் வலக்கை, வந்தவனின் கையில் மூன்று ஐந்தாயிரம் நோட்டுக்களைத் திணித்தது.

வந்த வேகத்தில் வந்தவன் போய்விட்டான். காந்தனின் கண்கள் நாலாபக்கமும் சுழன்றன. இருவரும் ஆளுக்கு ஆள் கைமாறிக் கொண்டதை யாரும் பார்க்கவில்லை. தன் மோட்டர் பைக் இருக்கும் இடம் நோக்கி நடந்தான் காந்தன்………….

……..அன்று பத்தாம் திகதி. சுண்ணாகம் இலங்கை வங்கியில் அன்று பல வாடிக்கையாளர்கள். அதற்கான காரணம் இருக்கவே செய்தது. அன்று ஓய்வூதியம் வழங்கும் தினம்…

வங்கியில் நின்றவர்களில் அதிகமானவர்கள் வயதாளிகளாக இருந்தார்கள். தங்கள் மாதாந்த ஊதியத்தை எடுப்பதற்காக அங்கு வந்திருந்தார்கள். கோகுலா உடுவில் பிரதேச சபையில் 30 வருடங்கள் பணியாற்றி, இந்த வருட ஆரம்பத்தில்தான் ஓய்வு பெற்றவர்.

அவரும் தன் பணத்தை எடுக்க அங்கு வந்திருந்தார். தன் முறை வந்தபோது தன் சேமிப்பில் 3 இலட்சத்தை நிலையான வைப்பிலிட்டார். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பத்து இலட்சம் ரூபா வரையில் வைப்பிலடலாம். அரசு இதற்கு 15 வீத வட்டி வழங்கும்.

நிலையான வைப்பில் பணத்தை இட்டுவிட்டு, தனக்கு பத்தாயிரம் பணமாக எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் புறப்படத் தயாராகினார் கோகுலா..

தன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ஒரு ஜோடிக் கண்கள் அவதானித்துக் கொண்டிருப்பதை அவர் அறிய நியாயமில்லை.

வங்கியிலிருந்து வீடு அதிக தூரம் இல்லை. வங்கிக்கு வந்தால், எப்பொழுதுமே கோகிலா வீட்டுக்கு நடந்து செல்வதுதான் வழக்கம். ஓட்டோவுக்கு 100 ரூபா கொடுப்பதை விட நடந்து போனால் காசும் மிச்சம். உடலுக்கும் பயிற்சி என்று கோகுலா நினைத்துக் கொள்வதுண்டு.

பிரதான வீதியிலிருந்து , சுண்ணாகம் நூலகத்தையொட்டிய ஒழுங்கையில் நடக்க ஆரம்பித்தார் கோகுலா. தன்னை யாரோ தொடர்வது அவருக்கு அப்பொழுதும் தெரியாது..

இன்னொரு வளைவில் கோகுலா திரும்ப எத்தனித்தபோது, படு வேகத்தில் அவர் பின்னே வந்த மோட்டார் வாகனமொன்று, திடீரென்று நிற்க, வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவன் இடக்கையால் தன் கைப்பையை பிடுங்கிக் கொண்டு, மீண்டும் கேமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போனபோது அவர் அதிர்ந்து போனார். ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போன கோகுலா தன்னைச் சுதாரித்துக் கொண்டு,

ஐயோ கள்ளன் என்று அலறியபோது, அந்தச் சிவப்பு நிற மோட்டார் வண்டியை ஓட்டி வந்தவன் ஒழுங்கை வளைவில் திரும்பி ஒரேயடியாக மறைந்துவிட்டான்.

வங்கியிலெடுத்த பத்தாயிரம். ஏற்கனவே கைப்பைக்குள் இருந்த ஆறாயிரம். கொஞ்சம் சில்லறை எல்லாமே அபகரிக்கப்பட்டு விட்டன.

சைக்கிளில் வநத ஒரு முதியவர், சைக்கிளை நிறுத்தி விட்டு கோகுலாவைப் பரிதாபமாகப் பார்த்தார்.

பையைப் பறிச்சுக் கொண்டு ஓடீற்றானா பிள்ளை?

மௌனமாகத் தலையாட்டினாள் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத கோகுலா.

பிள்ளை ஊர் கெட்டுப் போய்க் கிடக்கு. பொடியள் பொட்டையள் எல்லாம் சின்ன வயசிலேயே எல்லாத்தையும் செய்யப் பழகீற்றுதுகள். கடையில சுருட்டு சிகரெட் விக்கிறமாதிரி, கண்ட இடமெல்லாம் கஞ்சா விக்கிறாங்க. இதை வாங்கப் பொடியளுக்கு காசு தேவைப்படுது. இது சுகமான உழைப்புத்தானே? முருகா நீதான் இந்த மண்ணைக் காப்பாத்த வேணும்..

முதியவர் தன் சைக்கிளில் ஏறி ஒரு மிதிமிதிக்க, அந்தச் சைக்கிளும் லொடலொடப்போடு, முணுமுணுத்துக்கொண்டு பெரிய சப்தத்துடன் ஒட ஆரம்பித்தது…

கோகுலா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…………………..

………….. காந்தனின் ஆங்கில வகுப்பாசிரியர் அன்றைய தினசரியை வாசித்துக் கொண்டிருந்தார்.

பத்தி எழுத்து என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் நாட்டு நடப்பு பற்றி எழுதுவது வழமை. ஆசிரியர் ராஜரட்ணம் இந்தப் பகுதியை என்றுமே வாசிக்கத் தவறுவதில்லை.

அன்றைய தலைப்பு- போதையால் சீரழியும் வடக்கைக் காப்போம் என்பதுதான்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வடக்கில் போதைப் பொருள் பாவனை இருக்கவில்லை. பாலியல் வன்புணர்வுகள் இருக்கவில்லை.அப்படியென்றால் அவை எப்படி யாழ்ப்பாணத்து மண்ணிற்கு வந்தன?

இப்படிக் கேட்டிருக்கின்றார் ஆசிரியர்.

தட்டிக் கேட்க ஆளில்லை என்பது நிதர்சனமாகத் தெரிகின்றது. திட்டமிட்டு, பூந்தோட்டத்தில் கள்ளிச் செடிகள் நடப்பட்டுள்ளன என்பதே யாதார்த்தம். இவைகளைக் களையாவிட்டால், நந்தவனமாக இருப்பது கள்ளிச் செடிக் காடாகி விடும்…….

பத்திரிகையின் பக்கங்களை மேலே புரட்டியதில், கொக்குவில் சந்தியில் நடந்த ஒரு வீதி விபத்துப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. அவர் பிறந்த இடம் என்பதால் அந்தச் செய்தியை முழுவதுமாக அவர் வாசிக்க ஆரம்பித்தார்.

மரங்கள் ஏற்றி வந்த ஒரு லொறியுடன் போட்டார் வண்டியொன்று மோதியதில், மோட்டார் வண்டியை ஓட்டிவந்த இளைஞன் ஸ்தலத்திலேயே மரணம் என்ற வரிகளை வாசித்த போது, அட பாவமே யார் பெற்ற பிள்ளையோ என்று மனம் பரிதாபப்பட்டது.

தினமும் சராசரி நான்கு வீதி விபத்துக்களாவது இடம்பெறும் வடக்கிற்கு இந்த வீதி விபத்து அப்படியொன்றும் புதினமில்லை என்று நினைத்துக் கொண்டார். மரணித்த இளைஞனின் உடலருகே கிடந்த கைப்பையை பொலீஸார் மீட்டிருக்கிறார்கள். உள்ளே ரொக்கமாகப் பதினாறாயிரம் ரூபா பணமும் வங்கிப் பற்றுச் சீட்டும் இருந்துள்ளது. அதே கைப்பையில் இருந்தஅடையாள அட்டையில் கோகுலா மகேந்திரன் என்பவரின் அடையாள அட்டையையும் பொலீஸார் கண்டெடுத்துள்ளார்கள்….

அட கடவுளே அந்தக் கோகுலா செத்த பெடியன்ர தாயாக இருக்கும்.. பாவம் அந்தத் தாயிர மனம் எவ்வளவு வேதனைப்படும்…

இறந்த இளைஞனையும், அவனின் தாயென்று தான் நினைத்த கோகுலா என்ற பெண்ணையும் நினைத்துக் கவலைப்பட்டபடி, பத்திரிகையின் அடுத்த பக்கத்தைப் புரட்டினார் அந்த ஆசிரியர்…

 

 

4.1.2016

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *