இன்பம் இங்கே இன்பம் இங்கே

இன்பம் இங்கே இன்பம் இங்கே

20 views
0

வாழ்வில் மகிழ்ச்சியோடு இருப்பது என்பது மிகச் சுலபமாகக் கிடைக்கும் ஒன்றல்ல. அதிலும் ஒரு தனி நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்கள் என்பதற்கு அப்பால் ஒரு தனி நாடு மகிழ்ச்சி நிறைந்த நாடு என்ற பெயரைச் சம்பாதிப்பது போற்றுதலுக்கு உரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

2017இன் மகிழ்ச்சிகரமான நாடாகத் தெரிவாகி இருக்கின்றது நோர்வே . கடந்த இரண்டு வருடங்களாக நான்காம் இடத்தில் இருந்த இந்த நாடு , மூன்று தடவைகள் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியிருந்த டென்மார்க்கை ஒதுக்கி விட்டு முதற் தடவையாக முதல் இடத்தைக் கைப்பற்றி இருக்கின்றது ,இரண்டாம் இடம் டென்மார்கிற்கு போக ஐஸ்லாந்து , சுவிட்சர்லாந்து, பின்லாந்து , நெதர்லாந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன . முதல் பத்துக்குள் கனடா , நியூ சிலாந்து, அவுஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன . ஏற்கனவே இந்தத் தெரிவு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து டென்மார்க் மூன்று தடவைகளும் சுவிட்சர்லாந்து ஒரு தடவையும் முதல் இடத்தை சுவீகரித்திருந்தன.

சரி மிகச் சோகமான நாடுகள் எவை ? 155 நாடுகளைத் தெரிவு செய்து  நடத்திய ஆய்வில் மத்திய ஆபிரிக்க குடியரசுதான் கடைசி இடத்தில் நிற்கின்றது . புருண்டி  (154), தன்சானியா (153), சிரியா  (152) ருவண்டா (151) ஆகிய ஆபிரிக்க நாடுகள் தொடர்ந்து வருகின்றன .

இந்தத் தெரிவு எப்படி நடக்கின்றது ?பணம்தான் மகிழ்ச்சியைத் தருகின்றது என்று சொல்வதற்கில்லை . என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணி என்பதை மறுக்க முடியாது .நாட்டின் உற்பத்தித் திறன் முக்கியத்துவம் பெறுகின்றது . தாராள மனப்பான்மை , ஆரோக்கியமான வாழ்வு , ஊழல் இல்லாத நிலை , விரும்பியதைத் தெரிவு செய்யும் சுதந்திரம்  போன்றவை நன்கு கவனிக்கப்பட்ட பின்னரே இத் தெரிவு மேற்கொள்ளப்பட்டுளது.

நோர்வே தன் மண்ணில் எடுக்கும் எண்ணெய் வளம் மூலம் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றது . எண்ணெயின் சந்தைவிலை வீழ்ச்சி கண்டிருந்தாலும் அது புத்திசாலித்தனமாக இதில் வரும் வருமானத்தை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக ஒதுக்கி இருப்பது இந்த ஆய்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது .

ஓடாது விட்டால் ஓடிவரும் கழிவு

ஓட ஓட விரட்டுவது  என்பது உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல . இங்கே ஓட ஓட அவர்களை விரட்டுவதோடு நின்று விடாமல் ஓட்டாதே உன் காரை ஓட்டாதே என்று கேட்பதோடு நின்று விடாமல் மரணச் செலவில் கழிவும் தருவதாக ஆசை காட்டுகிறார்கள் . இது எங்கே நடக்கின்றது என்று கேட்கின்றீர்களா ? ஜப்பானில்தான் ! இங்குள்ள பெரிய பிரச்சினை இளையவர்களை விட முதியவர்கள் தொகை இங்கு அதிகம் இருப்பதுதான் .இந்த முதியவர்கள் வாகனங்கள் செலுத்தும்போது அதிக விபத்துக்கள் இடம்பெறுவது இந்த நாட்டின் தலை வேதனை தரும் விவகாரமாக மாறி உள்ளது . அயிச்சி என்ற பட்டினத்தில்  2016ம் ஆண்டில் நடந்த மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்துக்களில் 13 வீதமானவை 75வயதுக்கு மேற்பட்ட சாரதிகளால்தான் ஏற்பட்டுள்ளது .

இதற்கு ஒரு தீர்வு காண இங்குள்ள மரணச் சடங்குகளை செய்ய உதவும் நிறுவனம் இங்குள்ள பொலிஸ் பிரிவினருடன் இணைந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளது .வாகன ஓட்டுனருக்கான அனுமதிப் பத்திரத்தை இங்குள்ள வயதாளிகள் பொலிசாரிடம் கையளித்து விட்டு வாகனம் செலுத்துவதை நிறுத்தினால் அவர்களுக்கும் அவர்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் உண்டாக்கும் இறுதி காலச் சேவைச் செலவில் 15 வீதக் கழிவு வழங்கப்படும் என்பதே அந்தத் திட்டம் .

ஜப்பானில் ஒருவர் இறந்தால் அவரை அடக்கம் செய்யும் வரையிலான செலவுகள் மிக அதிகம் என்று சொல்லப்படுகின்றது . ஏறத்தாழ 13,000 டொலர் வரை தேவைப்படும் என்கிறார்கள் .

நாடு கிழடு தட்டிக்கொண்டு போகிறதே என்று அங்கலாய்க்கும் ஜப்பானுக்கு இது ஒரு புதுத் தலைவலி . இந்தப் புதுத் திட்டம் விபத்துக்களைக் குறைக்கலாம் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள். ஓடாது (தெருக்களில்) விட்டால் (வீட்டுக்கு) ஓடி வரும் கழிவு . ஏற்பார்களா ?  .நம்பிக்கைதானே மனிதனின் தும்பிக்கை ?

பகிடிக் கதை சொல்லும் பச்சைக் கிளி

நோய்கள் தொற்றுவது ஆபத்தானது . ஆனால் ஒருவரின் உற்சாகம் இன்னொருவருக்கு தொற்றுவது, ஒருவர் சிரிக்க மற்றவரும் சிரிப்பது என்றுமே வரவேற்கத்தக்கது. சிலர் இதில் சூரர்கள் . தம்மோடு சேர்ந்தவர்களையும் சிரிக்க வைப்பதில் இவர்கள் கில்லாடிகள் . இங்கே புதினம் என்னவென்றால் தன்னோடு சேர்ந்த பறவைகளையும் சிரிக்க வைக்கும் ஒரு இனக் கிளி நியூசிலாந்து நாட்டில் இருக்கின்றது என்பதுதான் . Kea என்பது இதன் பெயர் . இந்த இனக் கிளிகள் அளவில் பெரியவை . 48செ.மீ . நீளம் கொண்டது .  மஞ்சளோடு கலந்த ஒலிவ் பச்சை நிறம் கொண்டது . பழங்கள், பூச்சிகளை உண்ணும் இந்தக் கிளி மாமிசமும் உண்ணும் .

 

மிகவும் புத்திசாலித்தனமான கிளி என்கிறார்கள் .இதில் உள்ள தனித்துவம் என்னவென்றால் இதன் குரல் கேட்டதும் ஏனைய பறவைகளும்  குஷியாகி விடுமாம் . அல்பைன் மலைப் பிராந்தியத்தில் வாழும் இப் பட்சியை மலை வாழ் கோமாளி என்ற பட்டப் பெயரால் அழைக்கிறார்கள் . இதன் குரல் காதில் வீழ்ந்ததும் ஏனைய கிளிகளுக்கும் விளையாட்டுப் போக்கு வந்து விடுமாம் என்கிறார்கள் அவதானிகள் . சிம்பன்சி , எலிகள் போன்ற பாலூட்டிகளில் இந்த  சுபாவம் முன்பு கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும்  ஒரு பறவை இத் தன்மையைக் கொண்டிருப்பது கண்டறியப்படுள்ளமை  இதுவே முதற் தடவையாகும் . பகிடிக் கதை சொல்கிறதோ இந்தப் பச்சைக் கிளி ? மகிழ்ச்சியான முதல் பத்து நாடுகளில் நியூசிலாந்தும்  ஒன்று . இங்குள்ள பறவைகளுக்கும் அது தொற்றி  உள்ளது போலும்

பயமுறுத்தும் பருவமாற்றங்கள்

இன்றைய நாட்களில் நம்மைச்சுற்றி நடப்பவை பல அசாதாரணமானவைகளகவே இருக்கின்றன . கால நிலை கூட அப்படித்தான் . காலம் தப்பிய மழை , பனி என்று வருவதால் விவசாயம் பேரழிவைச் சந்தித்து வருகின்றது .

உலக வானிலை அமைப்பு தனது அறிக்கையில் இதையே சொல்கின்றது .பதிவில் உள்ள மிகச் சூடான ஆண்டாக 2016 மாறி உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள் . சூழலில் உள்ள காபனீர்ஓட்சைட்டின் அளவு என்றும் இல்லாத அளவு அதிகரித்து இருப்பதுடன் ஆர்க்டிக் பனிப்பாளங்கள் உருகி   மாரி காலத்தில் என்றும் இல்லாதவாறு  மிகக் குறைந்த அளவு வெப்ப நிலையை பதிவு செய்துள்ளது . இந்த நிலை 2017இலும் தொடர்கின்றது என்கிறார்கள் இவர்கள் . 80 உலக நாடுகளின் கால நிலை விபரத்தை திரட்டியே இந்த ஆய்வை இவர்கள் நடாத்தி இருக்கின்றார்கள் .

கடந்த ஆண்டு இந்த கடும் வெப்ப நிலைக்கு  எல் நினோவைக் காரணம் காட்டுகிறார்கள் . ஆர்க்டிக் வெப்பநிலை மாற்றம் கண்டு இங்குள்ள பனிப்பாளங்கள் உருகி ஓடுவதும் உலக நாடுகளின் வெப்ப நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது .

இப்பொழுது நவீன மடிக் கணினிகள் இருப்பதால் உடனடி மாற்றங்கள்  செய்யக் கூடிய] நிலை வந்த சேர்ந்துள்ளது  அமெரிக்காவில் 11.000 க்கு மேற்பட்ட சரித்திரம் படைத்த வெப்பநிலைகள் , 2017இன் ஆரம்பத்தில் தகர்க்கப்பட்டன .

மனித உந்தலால் ஏற்படும் காலநிலை மாற்றமும் கவனத்தில் எடுபடவேண்டிய ஒன்று .

மனிதன் வள்ரவதாக பீற்றிக் கொண்டிருக்கிறான் . ஆனால் நிஜத்தில் அவன் கிடுகிடு வளர்ச்சி அவனைச்சுற்றி அழிவை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது . காலநிலை மாற்றம் தானாக வரவில்லை . நாமே நமக்கு வரவழைத்த ஒன்றுதான் அது !

.22.03

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *