பாலைவனத்தில் ஒரு சோலைவனம்

பாலைவனத்தில் ஒரு சோலைவனம்

60 views
0

மலர்கள் பூத்துக்குலுங்கும்  அழகுக்கு இணை வேறு ஏதுமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது . வண்ண வண்ணப் பூக்கள் மெல்ல வீசும் காற்றில் தலையசைத்து மணம் பரப்பி அழகுக் குவியல்களாக கிடக்கும்போது அவற்றைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் …

உலகின் மிகப்பெரிய பூங்காவனம் எங்கே இருக்கின்றது தெரியுமா ? ஒரு வரண்ட பிரதேசத்தில்தான் இது இருக்கின்றது  என்ற புதினம் உங்களை ஒருவேளை ஆச்சரியப்படுத்தலாம் . பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள் . பதினொன்றாவதாக ஏன் இதைச் செய்ய முடியாது ?

துபாய் நகரில்தான் இந்தப் பூங்கா இருக்கின்றது . வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட 45க்கு மேற்பட்ட பூவினங்கள் இங்குள்ளன .18ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் மலர்ப் படுக்கைகள் , மலர் வீதிகள் என்று இந்த வளைகுடா நகரில் அழகுக்கு அழகூட்டுகின்றது இந்த இராட்சதப் பூங்கா .

கழிவு நீரை சுழற்சி முறையில் நன்னீராக்கி சொட்டுச்சொட்டாக தண்ணீரைப் பாய்ச்சும் முறையால் பாலைவன வெப்பத்திற்கு நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு 75வீதமான நீரும் சக்தியும் சேமிக்கப்பட்டு வருவது இங்குள்ள விசேஷம் .

பல வழிகளிலும் பாரிய வளர்ச்சியைக் கண்டுவரும் வளைகுடா நாடான ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகரான துபாயில் 2013ம் ஆண்டு காதலர் தினமன்று இந்தப் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது , வருடா வருடம் ஒக்டோபர் தொடக்கம் ஏப்ரில் வரை இந்தப் பூங்கா பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் . ஜூன் தொடக்கம் செப்டெம்பர் வரை சராசரி 40 பாகையைத் தொடும் அகோர வெப்பநிலை காரணமாக பூங்கா மூடப்பட்டு இருக்கும் ..

இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகளைக் கொண்ட தோட்டம்  இதன் சிறப்பம்சமாகும். 26இனங்களை உள்ளடக்கிய 15,000 க்கு மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் அடைத்து வைக்கப்பட்ட கொண்ட இந்தத் தோட்டம் உலகின் மிகப் பெரியது என்கிறார்கள் .

மழைத்தூறலுக்காக ஏங்கும் இந்த வறண்ட பூமியில் மலர் வனம் ஒன்றை அமைக்க முடியும் என்றால் , முன்பே குறிப்பிட்டது போல பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதோடு அது  பாதாளத்தில் மட்டுமல்ல பாலைவனம் வரை கூடப் பாயும் என்றே சொல்லத் தோன்றுகின்றது .

அனைத்தும் அம்மாவிற்கே ….

இங்கே அரசியல் பேசவரவில்லை . இந்த அம்மா கதை சீனாவில் நடக்கின்றது . அங்கே அம்மா ஆட்சியும் இல்லை . தனது 74வது வயதில் பெண்ணைப் போல உடுத்திக்கொண்டு தனது அம்மாவைச் சந்திக்கச் செல்லும் ஒரு முதியவர் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்துவார். இவர் கடந்த 14 வருடங்களாக ஒவ்வொரு வாரமுடிவிலும் தன் தாயை ஒரு பெண்ணின் கோலத்தோடு சென்று சந்திப்பதைத் தொடர்கிறார் என்பது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் .

என்ன காரணம் தெரியுமா ? பெண்பிள்ளைகளுக்காக ஏங்கிய தாயாருக்கு அடுத்தடுத்து இரண்டு ஆண் பிள்ளைகள் கிடைத்து இவர் ஏக்கம் நிறைவேறாமல் போய்விட்டது . அந்த ஏக்கத்தை தணிக்கவே இந்த மகன் இப்படி நடந்து கொள்கின்றார் .

இதற்காகவே தனி நேரம் ஒதுக்கி முக ஒப்பனை செய்து , நவநாகரீகமான ஆடைகள் அணிந்து தன் தாயைச் சந்தித்து வருகிறார் என்கிறது சீனாவின் மக்கள் தினசரி . லீ என்ற பெயர் கொண்ட இந்த சீனக் குடிமகன் தனது 60வது வயது தொடக்கம் இதை ஒழுங்காகச் செய்து வருகிறார் என்பது புதுமையான விடயந்தான் .

என் தாயின் மன மகிழ்ச்சிக்காகவே இதைச் செய்து வருகிறேன் . என் அம்மாவின் சந்தோஷமே என் சந்தோஷம். அவர் ஆண் பிள்ளைகளுக்காக ஏங்கி அது கிடைக்காமல் தவிப்பது எனக்குத் தெரியும் என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவர் கூறியுள்ளார். தாய்க்கு இப்பொழுது வயது 96.

தாய்ப் பாசத்தை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதற்கு இவர் நல்லதொரு முன்னுதாரணம் ….

கொல்லாததால் கொண்டாட்டம்

பூரிம் என்றால் என்னவென்று அறிந்திருக்கிறீர்களா? யூதர்களின் நாட்காட்டியின்படி அடார் என்றொரு மாதம் வருகின்றது . அதில் 14ந் திகதி இவர்களால் கொண்டாடப்படும் ஒரு பெருநாள்தான் இந்தப் பூரிம் பெருநாள் . தங்கள் எதிரிகளை தோற்கடித்த நாளை நினைவூட்டும் நாளாகவே இது அமைகின்றது . இவர்களின் “பைபிள்” என்று ஒன்று இருக்கின்றது , அதை எஸ்தரின் சுவடி என்று அழைக்கிறார்கள்.

இதன்படி இவர்கள் இந்த நாளில்  ஏழைகளுக்கு பரிசளித்து , உணவைப் பகிர்ந்து உண்டு கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .இவர்களது வழிபாட்டு ஸ்தலத்தில் எஸ்தர் சுவடியை வாசிக்க வேண்டும்.

மிகப் புராதனம் வாய்ந்தது இந்தப் பெருநாள் . முன்னொரு காலத்தில் பேர்சியா என்று அழைக்கப்பட்ட ஈரானில் 2500 வருடங்களுக்கு முன்பு ஹமான் என்பவன் யூதர்களை அடியோடு அழிக்க தீட்டப்பட்ட திட்டத்தை முறியடித்த மகிழ்வைக் கொண்டாடவே இந்தப் பெருநாள்.  இந்தக் கால கட்டத்தில் பெர்சிய சாம்ராஜ்யத்தில் சிறுபான்மையினராக வாழ்ந்தவர்கள்தான் யூதர்கள் .

பொதுவாக மார்ச் 14, 15ந்  திகதிகளில் இந்தக் கொண்டாட்டம் வருவதுண்டு , ஜெருசலேமில் 15ந்  திகதியிலும் ஏனைய நகரங்களில் 14ந்  திகதியிலும் இக் கொண்டாட்டம் இடம்பெறும் என்கிறார்கள் .

கொல்லப்படாமையால் கொண்டாட்டமோ ?

நஞ்சுண்ணும் நல்லவர்கள்

வீட்டுக்கு வீடு வாசல்படி என்பார்கள் . சில பிரச்சினைகள் நம் வீட்டு வாசலைத்தான் தேடிவருகின்றன என்றில்லை . நன்கு முன்னேறிய பொருளாதார பலம் மிக்க ஜாம்பவான் நாடுகளிலும் இருக்கவே செய்கின்றன,

மருந்தடித்து மரக்கறிகளை நஞ்சாக்கும் மோசமான காரியம்  நம் நாட்டில்  தாராளமாகவே இடம்பெறுகின்றது , யாழ்ப்பாணத்தில் சுவையான மாம்பழங்களை பழுக்க வைக்க பல யுக்திகளைக் கையாண்டு அவற்றை நாசமாக்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன் . ஆனால் வெளிநாடுகளிலும் இதே கதைதான் .

சமீபத்திய ஆய்வொன்றின்படி சூப்பர்மார்க்கெட்டுகளில் விற்கப்படும் ஸ்டோர்பெரி பழங்களில் 70 வீதமானவை கிருமிநாசினிச் செறிவுள்ளவையாக இருக்கின்றன என்று கண்டறின்துள்ளார்கள், புற்று நோய் , உடல் பருப்பது, சலரோகம் , ,மலட்டுத்தன்மை என்று மனிதர்களைத் தாக்கும் நோய்களுக்கு இது ஒரு காரணி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கெட்டவர்கள் அதாவது உடல் நலத்திற்கு  ஒவ்வாதவர்கள் என்று பட்டியல் இட்டு குறிப்பாக 12 பழங்களும் மரக்கறிகளும் தரப்பட்டுள்ளன , பொதுவாக இவை ஐரோப்பிய மண்ணிற்கு உரியவை என்றாலும் கெட்டவர் சகவாசம் வந்தால் நல்லவரும் கெட்டவராகி விடுவார் என்பதற்கு இவற்றைப் பார்த்து அறிந்து விடலாம்

கிழங்கு , தக்காளி , அப்பிள் , செர்ரி போன்றன பொல்லாத பன்னிரெண்டில் வந்துள்ள ஒரு சில போக்கிரிகள் . முதலிடம் ஸ்ரோபெரி பழங்களுக்கே கிடைக்கின்றது .

யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம் என்று ஆரம்பிக்கும் ஒரு பழைய பாடல்தான் ஞாபகத்திற்கு வருகின்றது
16.03.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *