வியப்பூட்டும் விம்பிள்டன் விளையாட்டுகள்….

வியப்பூட்டும் விம்பிள்டன் விளையாட்டுகள்….

11 views
0

இங்கே ஒரு வேடிக்கையைப் பகிர்ந்தாக வேண்டும். கடந்த ஆண்டின் சாம்பியன் நடப்பு ஆண்டில் எல்லா மோதல்களிலும் பங்குற்ற வேண்டிய அவசியம் 1922 வரை இருந்திருக்கவில்லை. நடப்பு வருடத்தில் இறுதி மோதலுக்கு தெரிவாகுபவருடன் கடந்த வருடம் சாம்பியனாக இருந்தவர் மோதுவார். இதில் புதிய சாம்பியன் யார் என்பது முடிவாகும்

பணம் காய்க்கும் மரங்களை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா? அப்படியும் ஒரு மரம் இருக்கிறதா என்று நீங்கள் எதிர்க்கேள்வி கேட்கக்கூடும்.

பணம் பணமாக இன்றைய நாட்களில் காய்த்துக் கொட்டுவது விளையாட்டுகள்தான். வெறும் பொழுதுபோக்கிற்காக, உடற்பயிற்சிக்காக என்றிருந்த விளையாட்டுகள் இன்று கோடி கோடியாகச் சம்பாதிக்கும் வழியை, பலருக்குக் காட்டிக் கொடுத்து வருகின்றன.

குறிப்பாக டென்னிஸ் விளையாட்டு வீரர்களும், காற்பந்தாட்ட வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சம்பாதித்து வருகின்றார்கள். போட்டிகளில் பங்குபற்றும் இவர்களை இராட்சத நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தும்போது ஏராளமான பணத்தை ஒப்பந்த அடிப்படையில் வாரியிறைக்கின்றன. கழகங்களுக்குக் கழகம் விற்கப்படும் காற்பந்தாட்ட வீரர்களின் விலையோ, சந்தையில் எகிறிக் குதித்துக் கொண்டே செல்கின்றது.

விளையாட்டு என்பது ஒரு பணம் காய்ச்சி மரமாகி விட்டது என்பதை இன்னனும் நீங்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லையா?

கிரான்ட் ஸ்லாம் என்று வர்ணிக்கப்படும் பெரிய அளவிலான,  உலக முக்கியத்துவம் வாய்ந்த நான்கு டென்னிஸ் மோதல்கள்,  ஆண்டுக்கு ஆண்டு இடம்பெற்று வருகின்றன. யு.எஸ். ஓப்பின் அமெரிக்காவில் ஆரம்பித்து,  அவுஸ்திரேலிய ஓப்பின் அதைத் தொடர,  மூன்றாவதாக வருவதுதான் பிரெஞ் ஓப்பின்.

வருடத்தின் நான்காவதும், இறுதியானதும்தான் விம்பிள்டன் மோதல்கள்! இந்த மகா பெரிய மோதல்களில் மிகப் பழமை வாய்ந்தவை இந்த விம்பிள்டன் மோதல்கள்தான்!

இலண்டனின் All England Club என்ற கழகம்ää1877இல் ஆரம்பிக்கப்பட்டது. 1968இல்தான்,  இந்த விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல்,  பணம் சம்பாதிக்கும் விளையாட்டுகளாக உருமாறின.அன்று தொடக்கம் இன்றுவரை புற்றரையில்  டென்னிஸ் இங்கே விளையாடப்பட்டு வருகின்றது வருடாவருடம் ஜூன் பிற்பகுதியில் ஆரம்பிக்கும் போட்டிகள்,  ஜூலை முற்பகுதியில் முடிவடைந்து விடுகின்றன.

இந்த வருடம் அதாவது 2016ம் ஆண்டு போட்டிகள் ஜூன் 27இல் ஆரம்பித்து, ஜூலை 10இல் நிறைவடைகின்றன.

இந்த வருடம் 5 வீத அதிகரிப்புடன், பரிசுப் பணம் 28.1 மில்லியன் பவுண்ட்ஸாக(41.05மி.டாலர்கள்) அதிகரிக்கின்றது.ஒற்றையர் ஆட்டத்தில் ஆண்கள் ஆட்டத்திலோ அல்லது பெண்கள் மோதலிலோ வெற்றி பெறுபவர் சுளையாக ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை அள்ளிச் செல்லலாம்.

நீங்களே சொல்லுங்கள். பணமழை பொழிகிறதா இல்லையா?

தொடர்ந்து 4 வருடங்களாக விம்பிள்டன் நிர்வாகம்,  பரிசுப் பணத் தொகையை அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது. 2014இல் கொடுத்த தொகையை விட 7.5 வீதம் அதிகமாக 2015இல் கொடுத்துள்ளார்கள். இந்த வருடத்திலோ அத் தொகையை மேலும் 5வீதத்தால் உயர்த்தியிருக்கின்றார்கள். டென்னிஸ் சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயமும் எழுதப்பட்டுள்ளது. ஒற்றையர் ஆட்டச் சாம்பியன்களுக்குத்தான் பரிசுப் பணத்தின் பெரும்பகுதி சென்றடைவதை இங்கே கவனிக்கத்தக்கது.

1986இல் விம்பிள்டனின் பரிசுப்பணத் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்?

மொத்தப் பரிசுத் தொகை வெறும் 26,150 பவுண்ஸ் என்பது ஆச்சரியமான தகவல்.ஒற்றையர் ஆண்கள் ஆட்டத்தில் கிடைத்த பரிசுத் தொகை 2000 பவுண்ட்ஸ் மாத்திரமே. பெண் வீராங்கனைக்கோ 750பவுண்டஸ். (அக் காலகட்டத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பரிசுத்தொகை சமனாக இருக்கவில்லை.)

30 வருட இடைவெளியில் பரிசுத் தொகை 1 மில்லியன் பவுண்ட்ஸாகி விட்டது.

இதுதான் பணவீக்கமா?

அதிக பணத்தை வென்றெடுத்தவர் என்ற பட்டியலில் முன் நிற்பவர் சுவிஸ்பிரஜையான றோஜர் பெடரர் என்பர்தான். இன்றும் அபாரமாக விளையாடும் 34 வயதான இவர் இன்றுவரை சம்பாதித்தது 97.3 மில்லியன் டாலர்கள்.

உலக டென்னிஸ் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் நிற்கும் சேர்பிய நாட்டவரான நொவாக் சொக்கோவிச் 94 மில்லியன் டாலர் சம்பாத்தியத்தோடு இரண்டாம் இடத்தைப் பிடிக்கின்றார். இவர் இந்த வருடம் 100 மில்லியன் டாலர் வருமானத்தைத் தொடும் முதல் டென்னிஸ் நட்சத்திரமாக மாறலாம்.

பெண்களில் அமெரிக்கரான செரீனா வில்லியம்ஸ் 74 மில்லியன் டாலர் தொகையைச் சம்பாதித்து அசத்தியிருக்கின்றார்.

விம்பிள்டன் 1877ம் ஆண்டு ஜூலை9ந் திகதி முதற் தடவையாக டென்னிஸ்; போட்டிகளை ஆரம்பித்தபோது  ஒற்றையர் ஆட்டம் மாத்திரமே இடம்பெற்றது. வென்றவர் பெயர் ஸ்பென்ஸர். 22 பேர் மோதலில் பங்குபற்றி இருந்தார்கள். மொத்தமாக இருந்த பார்வையாளர்கள்200. நுழைவுக் கட்டணம் ஒரு ஷில்லிங்.

1922 இல் கழகம் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

1884இல் அறிமுகமாகியதுதான் பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம். இதே ஆண்டில் பெண்கள் இரட்டையர் ஆட்டம் புகுத்தப்பட  ஆண்பெண் கலந்த இரட்டையர் ஆட்டம் 1913இல் இணைக்கப்பட்டது.

இங்கே ஒரு வேடிக்கையைப் பகிர்ந்தாக வேண்டும். கடந்த ஆண்டின் சாம்பியன் நடப்பு ஆண்டில் எல்லா மோதல்களிலும் பங்குற்ற வேண்டிய அவசியம் 1922 வரை இருந்திருக்கவில்லை. நடப்பு வருடத்தில் இறுதி மோதலுக்கு தெரிவாகுபவருடன் கடந்த வருடம் சாம்பியனாக இருந்தவர் மோதுவார். இதில் புதிய சாம்பியன் யார் என்பது முடிவாகும்.

மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் காயம் காரணமாக இந்தத் தடவை ஸ்பெயின் வீரரான நடால் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுவரையில் 14 தடவை கிரர்ணட் ஸ்லாம் பட்டம் வென்ற நடால்  இரு தடவைகள்(2008-2010) விம்பிள்டன் சாம்பியனாகத் திகழந்துள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெறும் இந்தப் பிரசித்தமான மோதல்களில் பிரித்தானியர் ஒருவர் சாம்பியனாக வருவது பெரும்பாடாக இருந்து வருகின்றது. 1936இல் பிரெட் பெரி என்பவர் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியனாகிய பின்பு  2013இல்தான் மீண்டும் ஒரு பிரித்தானியர் சாம்பியனாக ஜொலித்தார். அவர்தான் இன்று தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள அன்டி மரே. பெண்கள் விடயத்தில் வேர்ஜீனியா வேட் என்பவர் மாத்திரமே 1977 இல் வெற்றிக் கனியைச் சுவைத்தார்.

நாவலும் பச்சையும் விம்பிள்டனுக்கே உரிய விஷேஷ நிறங்கள். விளையாட்டு வீரர்கள் வெள்ளை ஆடைகளையே அணிய வேண்டும். நடுவரும் பந்து பொறுக்கும் சிறுவர் சிறுமிகள் நீல நிற சீருடை அணிய வேண்டும் என்பது விதி.

கனவான்களின் விளையாட்டு என்ற பட்டியலில் கிரிக்கட்டுடன் டென்னிஸ் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம். காரணம் இரண்டையுமே தடல்புடலான ஏற்பாடுகளுடன்தான் விளையாட முடியும்.

வெள்ளை ஆடைகள்தான் அணிய வேண்டும். பற்பல விதிமுறைகள்.. தொழில்ரீதியான டென்னிஸ் வீரராகப் பயிற்சி எடுக்க பெரும் பணம் செலவு செய்வது மாத்திரமல்ல கடும் பயிற்சியும் தேவை….

வருடக் கணக்காக விளையாடி,  கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றார்கள் என்று நாம் இந்த இந்த நோக்கும் அதே வேளை, இந்த வெற்றிகளுக்காக தம் உடலை எவ்வளவு தூரம் வருத்தி வருகின்றார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்கிறோமோ?

கடும் உழைப்பின் கனிகளைத்தான் இவர்கள் சுவைத்து வருகின்றார்கள்.

உழைப்பால்தான் உயரமுடியும் என்பதற்கு இவர்கள் நல்ல முன் உதாரணங்கள்…

ajgswiss@gmail.com

14.06.16

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *