நீண்ட வால் சேவல்…

நீண்ட வால் சேவல்…

32 views
0

மனிதர்கள்  மீது காட்டும்  பாசத்தை  நீங்கள்  வாயில்லா ஜீவன்களிலும்  காட்டலாம் . வீட்டில்  ஆடுமாடு கோழி என்று வளர்ப்பவர்கள்  பாசத்தோடு வளர்ப்பது  மட்டுமல்ல பயனையும் பெறத் தவறுவதில்லை .

ஜப்பானியர்கள் இன்னும் ஒரு படி மேலே போய்  சாதனைக்காகவும்  உயிரினங்களை வளர்க்கிறார்கள்

பொதுவாகவே பல அசாதாரண கலைகளுக்கு ஜப்பானியர்கள் பிரசித்தமானவர்கள்.

காகிதத்தில் அழகிய உருவங்களைச் செய்வது,  குள்ளமான அளவில் மரங்களைக் காய்க்கச் செய்வது போன்றவற்றில்,  ஜப்பானியர்களை வீழ்த்த உலகில் எவருமில்லை.

இதே ஜப்பானியர்கள் நீண்ட விடயங்களிலும் சாதனையாளர்கள் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

உலகிலேயே மிக நீளமான வால்களைக் கொண்ட சேவல்களுக்கு,  ஜப்பானியர்கள் மாத்திரமே சொந்தக்காரர்கள்.

Onagadori சேவல்கள் என்று இந்த இனச் சேவல்கள் அழைக்கப்படுகின்றன. மரியாதைக்குரிய சேல்கள் என்பதுதான் இந்த ஜப்பானிய சொல்லின் பொருள். இந்த வால் 10 மீற்றர் வரை நீளும் என்பது மிக ஆச்சரியம் தரும் தகவல்.

பறவை இனங்களுள் எந்தப் பறவையாலும் சவாலிட முடியாத சாதனை இது என்பதில் சந்தேகமே இல்லை.

விஷேஷமான கூடுகளில்தான் இவற்றை வளர்க்கிறார்கள். பத்து வருட வளர்;சசியில் ஒரு சேவல் 10 மீற்றர் நீளமான வாலைக் கொண்டிருக்கும். அதி கூடிய நீளமாக 11.3 மீற்றர் நீள வால் ( 38அடி) காணப்பட்டுள்ளது.

1600—1868 காலகட்டத்தில்  இச் சேவல்களின் உற்பத்தி ஆரம்பித்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. .இக் காலகட்டத்தில் இளவரசர் Yamanouchi  தனது படைவீரர்களின் தலைக்கவசத்தில் இச் சேவலின் சிறகொன்றை செருகியபடி விஷேஷ வைபவங்களில் அணிவகுக்கும் வழமையைக் கொண்டிருந்தார்.

இந்தச் சேவலை பண்ணைகளில் வளர்த்தவர்களுக்கு விஷேஷ வரிச் சலுகை அளிக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது..

மிரட்டும்  மின்னணுச்  சாதனங்கள்

சேவல்களை  வளர்த்து இங்கே சாதனை செய்பவர்கள்தான்  பல மின்னணுச்  சாதனங்கள் நமக்குத் தந்து நம்மை  வியக்க வைப்பவர்கள் . நம்மவர்களுக்கும்  ஜப்பானிய  உற்பத்திகளில்தான் தீராத ஆசை.

ஆனால் ஜாக்கிரதை

மின்னணுச்  சாதனங்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதனால், நமக்கு முதுமை, அதன் காலத்திற்கு முன்பே வந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாக, பல மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். Mobile Phones, Tablet P.C.க்கள் பயன்படுத்துவதனால், “tech neck” என்னும் உடல் குறைபாடு ஏற்பட்டு, அது முதுமையான தோற்றத்தை மக்களுக்குத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“tech neck” என்னும் உடல் குறைபாடு, நம் சருமத்தினை தொய்வுறச் செய்கிறது. தாடை எலும்பினை கீழாக இழுக்கிறது. இதனால், நம்முகத்தோற்றம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. முகச் சுளிப்பு எப்போதும் அமைவது போல் ஒரு தோற்றம் முகத்தில் ஏற்படுகிறது. கண்களுக்குக் கீழே கருப்பு வளையங்கள் தோன்றுகின்றன. கழுத்தைச் சுற்றிலும் கோடுகள் உருவாகி, கொழுப்புச் சத்தின் தாக்கத்தைக் காட்டுகின்றன.

இலைமறைவில் கொலைக்களம்

கொலைகார மனிதர்களை அறிந்திருப்பீர்கள் . கொலைகார மரம் பற்றி அறிந்திருக்கிறீர்களா ? நியூசிலாந்து, ஹவாய் தீவுகள் என்று ஆரம்பித்து இன்று இந்தியா வரை பரந்துள்ள இந்த உண மரங்களை பட்சிகளைப் பிடிக்கும் மரங்கள் என்று அழைக்கிறார்கள் . இதன் விதைகள் ஒட்டும் பசைத்தன்மையுடைய விதைகளைக் கொண்டிருப்பதால்  பல பூச்சிகள் இவற்றில் ஒட்டிக்கொள்கின்றன .  . இந்தப் பூச்சிகளை உண்ண இதன் கிளைகளில் வந்து அமரும் பட்சிகளின் கால்கள்  கொடுக்கும் அழுத்தம்  இவற்றை பசைத்தன்மை கொண்ட கிளைகளில் ஒட்டிக்கொள்ள வைத்து விடுகின்றன .சாப்பாட்டுக்கு என்று வந்த பறவைகள் இப்படி மாட்டிக்கொள்ள ,மாமிசம் உண்ணும் பறவைகள் இவற்றைப் பிடித்து உண்டு விடுகின்றன . இப்படி உண்ணப்படாத பறவைகள் இறந்து காய்ந்து பின்பு மரத்தடியில் விழுந்து சிறு சிறு எலும்புத் துண்டுகளாகக் கிடப்பதுண்டு.

இந்த ஒட்டும் தன்மை கொண்ட விதைகள் மூலம் பட்சிகளைக்  கொல்வதால் மரங்களுக்கு என்ன இலாபம் என்று ஆய்வு செய்தார்கள் . தன் இனத்தைப் பெருக்க பறவைகள் இன்னொரு இடத்திற்கு போகமுடியாதபடி மரத்திலேயே கொல்லபட்டு விடுகின்றனவே என்று ஆராய்ந்ததில் இறந்து மரத்தடியில் விழும் பறவைகள் மரத்தின் வளர்ச்சிக்கு நல்ல உரமாக அமையலாம் என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள். வேறு சில காரணங்களைக் கூறினார்கள் . ஆனால் எதுவுமே ஏற்புடையதாக இல்லை .

கடல் பறவைகள் இந்த மரத்தால் பெரிதும் ஈர்க்கப்படுகின்றன என்கிறார்கள் . வருடாவருடம் ஆயிரக்கணக்கான கடல் பறவைகள் இந்த ஒட்டும் விதைகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன .

கடந்த காலங்களில் இந்த மரத்தை வளர்ப்பதை  அடியோடு தடை செய்து   ஒழிக்க வேண்டுமென பறவைகளை நேசிப்போர் குழுமம் கோரியுள்ளது . விதைகள் உள்ள பகுதியைக் கத்தரித்து விட்டால் இந்த அநியாயச் சாவுகள் தவிர்க்கப்படலாமே என்கிறார்கள் இவர்கள்!

ஆள் பாதி அணிகலன் மீதி

 

ஆடை பாதி ஆள் பாதி என்பது போல பெண்கள் அழகுக்கு ஆள் பாதி அணிகலன் மீதி என்று சொல்லி விடலாம் . அந்த அளவுக்கு மங்கையர் மோகம் நகைகளில் இருக்கின்றது .

அதிலும் வைரம் பதித்த நகைகள் என்றால் அழகிகள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .

அப்படியொரு பெரிய ரோஜா வர்ண வைரம் 71.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது . 59.6 கரட் எடை கொண்ட இந்த வைரந்தான் ஒரு ஏல விற்பனையில் இந்த அளவு அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது .

உலகப் பிரசித்தமான சொதெபி ஹாங்காங்கில் நடாத்திய ஏல விற்பனையில்தான் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது .

2013இல் இதே வைரம் இதே ஏல விற்பனை நிறுவனத்தால் ஏலத்தில் ஒருவரால் 83மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது . ஆனால் இந்தக்  குறித்த நபர் இதை வாங்கவில்லை .

மிக முக்கியமான வைரங்களின் ஏல விற்பனை ஜெனிவா நகரிலேயே இடம்பெற்று வருகின்றன . Oppenheimer Blue என்று அழைக்கப்பட்ட பட்டை தீட்டப்பட்ட வைரந்தான் இது வரையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வைரமாக ஜொலித்து வந்தது . கிரிஸ்டீ ஏல விற்பனை நிலையம் (இது இன்னொரு உலகப்புகழ் பெற்ற  ஏல விற்பனை நிறுவனம் ) .57.5மில்லியன் டொலருக்கு இதை விற்பனை செய்திருந்தது.

இந்த விற்பனையை அடுத்து  சொதெபி நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரமான Lesedi La Rona  என்ற வைரத்தை குறைந்த பட்சம் 70மில்லியன் டொலருக்காவது விற்கவேண்டும் என்று முயற்சித்தது . ஆனால் வாங்க ஒருவர் கிடைக்கவில்லை .

தற்பொழுது விற்கப்பட்ட ரோஜா வர்ண வைரம் பட்டை தீட்டுப்பட ஏறத்தாழ இரண்டு வருடங்கள் எடுத்துள்ளன. 2003 இல் இது முதல் தடவையாக பொதுஜன பார்வைக்கு விடப்பட்டது . இலண்டனின் பிரபல்யமான சரித்திர கண்காட்சியகத்திலும் இது பார்வைக்கு விடப்பட்டது .

27.78  கரட் ரோஜா வர்ண வைரமொன்றை 2010இல் இந்த ஏல நிறுவனம் ஜெனிவா நகரில் 46.16மில்லியன் டொலருக்கு  விற்றதே  இதுவரையில் இந்த நிறுவனத்தின் சாதனையாக இருந்துள்ளது   .அலங்காரம் என்று ஒன்று இருக்கும்வரை அணிகலன்களின் விலைமதிப்பு  என்றுமே குறையப்போவதில்லை

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *