கோடிகள் கொண்டுவரும் சொகுசுகள்

கோடிகள் கொண்டுவரும் சொகுசுகள்

18 views
0

நண்டு கொழுத்தால் வளையில் இராது என்பார்கள் . பணம் இருப்பில் தேங்கினால் கையில் இராது போலும் . 2760 அறைகளைக்  கொண்ட பாரிய ஆடம்பரக் கப்பலொன்று அறிமுகமாகப் போகின்றது . 6850பயணிகள் இதில் செல்ல முடியும் .200,000 தொன் எடை கொண்ட இந்தக் கப்பல் 2022இல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்கிறார்கள் இதை கட்டுவிக்கும் நிறுவனத்தினர் . தற்பொழுது சேவையில் உள்ள கரபியன் ஹார்மொனி என்ற கப்பலில் 6780 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் . இதுவே மிக அதிகமான பயணிகளை கொண்டு செல்லும் கப்பலாக இருக்கின்றது . பிரான்ஸ் நாட்டு நிறுவனம் நிர்மாணிக்கும் இந்தப் புதிய ஆடம்பரக் கப்பலில் 70பயணிகளை மேலதிகமாக ஏற்றிச் செல்ல முடியும் .

இதன் நீளம் 1080அடியைத் தாண்டும் என்கிறார்கள் . இந்த அளவில் ஒன்றல்ல மொத்தம் நான்கு கப்பல்களை 2022-26 காலப் பகுதிக்குள் நிர்மாணித்து கொடுக்கப் போவதாக இந்த நிறுவனம் கூறுகின்றது .

கடந்த வாரம் இதே நிறுவனம் ஐரோப்பாவின் மிகப்பெரிய உல்லாசக் கப்பலான MSC Meraviglia தன் முதற் கடல் பயணத்தை ஆரம்பிக்கும் வைபவத்தை நிகழ்த்தியது . இக் கப்பலின் நீளம் 1033அடி நீளமும்   213 அடி உயரமும் கொண்டது . இதை நிர்மாணிக்க ஒரு பில்லியன் டொலர் வரை செலவிடப்பட்டுள்ளது . இதில் மொத்தமாக 5714 பயணிகள் பயணிக்க முடியும் .

பணம் பத்தும் செய்யும் என்பது வாஸ்தவந்தான்

மிரள வைக்கும் மின்தூக்கி

வேகம் வேகம் எதிலும் வேகம். இன்றைய கால கட்டத்தில் வேகம்தான் எதிலும் முன் நிற்கின்றது . முந்துபவன் பலவான் என்ற நிலை வந்து சேர்ந்துள்ளது . சாப்பிடுவதில் வேகம் காட்ட மக்டோனால்ட்ஸ்  போன்ற நிறுவனங்கள் முளைக்க கிரிக்கெட் விளையாட்டிலும் ரி20 என்று மட்டுப்படுத்தப்பட்ட இருபது ஓவர்கள் கொண்ட போட்டிகள் பலத்த வரவேற்பை பெற ஆரம்பித்து விட்டன .

இப்பொழுது புதினம் என்னவென்றால் ஜப்பானின் இராட்சத மின்னியல் உற்பத்தி நிறுவனமான ஹிட்டாச்சி உலகின் அதி வேகமான மின்தூக்கியை (Elevator) அறிமுகம் செய்கின்றது . 1260மீட்டர் (4133 அடி ) உயரத்தை ஒரு நிமிடத்தில் சென்றடைய முடியும் வேகத்தை இது கொண்டிருக்கும் .-அதாவது மணிக்கு 75 கி.மீ( 44.7 மைல் ) இதன் வேகம் .

கண்மூடித்தனமான வேகந்தான் .என்றாலும் சேவையில் ஈடுபடுத்தப்ப்படும்போது முழு வேகத்தோடு செயற்படாமல் மணிக்கு 72கி.மீ.என்ற வேகத்தில்தான் இந்த மின்தூக்கி இயக்கப்படும் என்கிறார்கள் .

இது மேலிருந்து கீழ் இறங்கும் வேகம் நிமிடத்திற்கு 600 மீட்டர்கள் என்கிறார்கள் .

அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகம்  எப்பொழுது எங்கே முட்டி மோதப் போகிறதோ தெரியவில்லை.

உலகளாவியரீதியில் உலகில் எங்கே அதிவேக மின்தூக்கிகள் இயங்குகின்றன? சீனாவில் Guangzhou என்ற நகரின் நிதி மைய கட்டடத்தில் உள்ள மின்தூக்கி மணிக்கு 530மைல்கள் வேகத்தில் இயங்கி இன்று முதலிடத்தில் நிற்கின்றது

விவேகமான வேகம் என்றுமே அழிவுகளை அழைத்து வரப் போவதில்லை

மணியோசை மாடுகள்

சுவிஸ் சொக்லேட்டுகள் சுவிஸ் மணிக்கூடுகள்  உலகம் அறிந்தவை .இதேபோல சுவிஸ் மாடுகளைப் பற்றி எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்?

எழில் கொஞ்சும் கிராமப் புறங்களுக்கு சென்றால் பரந்து விரியும் புல்வெளிப் பிரதேசங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் அளவில் பெரிய பசுக்களை நீங்கள் காண்பீர்கள் . கையால் பால் கறந்து மாளாது . இயந்திரக் கருவிகள்தான் இந்த வேலையைச் செய்கின்றன .இவைகள் கழுத்தில் பெரிய மணிகள் கட்டித் தொங்க விடப்பட்டிருப்பதுதான் இங்குள்ள பசுக்களின் விசேஷம் . இவைகள்கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்போது மணிஓசை காதில் வீழ்ந்து கொண்டே இருக்கும் .

இது தகவல் .அப்படியானால் புதினம் என்ன ? இவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன என்ற பரபரப்பு நிறைந்த செய்திதான் இப்பொழுது புதினம். நூற்றுக்கணக்கான மீட்டர் உயரமான  .மலைப்பாங்கான இடமொன்றில் இருந்து 28 பசுக்களும் காளைகளும் குதித்து  மரணித்திருப்பது மர்மமான ஒஉர் நிகழ்வாகி இருக்கின்றது . மூன்று நாட்கள் இடைவெளியில் இப்படி 28 விலங்குகள் மரணித்துள்ளன .

2009இலும் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றதாகச் சொல்கிறார்கள் இங்குள்ளவர்கள் . சமீபத்தில் இங்கு இடம்பெற்ற இடிமுழக்கம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இங்குள்ள சிலர் சந்தேகிக்கின்றார்கள். பசுக்கள் தற்கொலை செய்யும் சுபாவம் கொண்டவை அல்ல என்கிறார்கள் இங்குள்ள விஞ்ஞானிகள் .

மிருகங்கள் அதிகமாக ஒரு இடத்தில் நிற்கும்போது மேய்ச்சலுக்கு வேறு இடம் தேடும் உந்தலால் இப்படி ஒரு நிகழ்வு ஏற்படலாம் என்பது சிலரின் அபிப்பிராயமாக இருக்கிறது .

இரண்டு கால் ஜீவன்களைப் போல் நாலு கால் ஜீவன்களுக்கும் இந்தத் தற்கொலை வியாதி தொற்றா விட்டால் சரிதான் .

பதவி ஓய்வு பெறும் பழைய 5பவுண்ட் தாள்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்வியலின் மரபு . பணத் தாள்களையும் இந்தக் கோட்பாடு விட்டபாடாக இல்லை . அலுவலகரீதியாக ஐந்து பவுண்ட் தாள்கள் கடந்த மே மாதம் பாவனையில் இருந்து ஓய்வு பெற்று விட்டது பழைய கதை . வருகின்ற செப்டெம்பெரில் புதிய பத்து பவுண்ட் பொலிமர் பணத்தாள் வரப் போவது புதினம் .ஒரு கேள்வி ? புழக்கத்தில் இல்லாத இந்தப் பழைய நோட்டுகளை என்ன செய்கிறார்கள் ? சுமாராக மொத்தம் 723,000,000 பத்து பவுண்ட்ஸ் பழைய நோட்டுகள் இருக்கின்றனவாம் .என்ன செய்யப் போகிறார்கள் ?

1990 வரை பழைய நோட்டுகள் எரிக்கப்பட்டன . இதில் கிடைத்த சக்தி இங்கிலாந்து வங்கியின் கட்டடங்களுக்கு குளிர் காலத்தில் சூடேற்ற பயன்படுத்தப்பட்டுள்ளது . 90களில் சூடேற்றும் கருவிகள் நவீனத்துவம் பெற்றதால், இந்த சக்தி வெளி இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.2000 பிறந்ததும் உணவுக் கழிவை மீள் சுழற்சி முறையில் பயன்படுத்துவது போல செய்யத் தொடங்கினார்கள் . 2011இல் மீள் சுழற்சி முறை மூலம் விவசாயிகள் மண்ணை வளம்படுத்தும் முறைக்கு மாறினார்கள் . அதாவது பணத்தை மண்ணாக்கிய பொற்காலம் அப்பொழுதான் ஆரம்பித்தது .

அட எங்கள் பணம் மண்ணாகிறதே என்று கவலைப்படுகிறீர்களா ? என்ன செய்வது ? எல்லாமே இறுதியில் மண்ணுக்குத்தானே சொந்தம் ?

08.06.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *