நகைப்புக்கு இடமாகியுள்ள இலங்கை கிரிக்கெட்

நகைப்புக்கு இடமாகியுள்ள இலங்கை கிரிக்கெட்

12 views
0

அது ஒரு பொற்காலம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது . 90களில் இலங்கை அணி, ஏனைய அணிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது .எதிரணியினரை எதிர்பாராத விதமாக நிலைகுலையச் செய்து தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி , “மரியாதைக்குரிய “ ஓர் அணியாக இருந்தது இலங்கை அணி !

 

 

 

90களில் “Master Blaster” என்று செல்லமாக அழைக்கப்பட்ட சனத் ஜெயசூரியா உங்கள் ஞாபகத்தில் இருக்கிறாரா ? தன் அதிரடி ஆட்டத்தினால் ,   ஒரு நாள் ஆட்டத்தின் போக்கையே திசை திருப்பி எதிரணியினருக்கு சிம்மசொர்ப்பனமாக இருந்தவர் இந்த சனத் ஜெயசூரியா!

இன்று அமைச்சராகி இருக்கும் , முன்னாள் இலங்கை அணித்தலைவர் அர்ஜுனா ரணதுங்க ,90களில் பிரகாசித்த இன்னொரு கிரிக்கெட் வீரராவார் .உலக வெற்றிக் கிண்ணத்தை 1996இல் இலங்கை கைப்பற்றியபோது,  அர்ஜுனாதான் அணித் தலைவராக இருந்துள்ளார் “.தேஷமான்ய” என்ற அரச விருதைப் பெற்ற இவரால்தான் , இலங்கை அணி பலம் வாய்ந்த  அணியாக உருப்பெற்றது என்று கூறினால் மிகையாகாது..

92இல் இலங்கை அணியில் விளையாட ஆரம்பித்த முத்தையா முரளீதரனின் சுழல்  பந்துவீச்சு செய்த லீலைகள் ஏராளம் . ஆட்டத்தின் போக்கையே மாற்றியது இவர் பந்து வீச்சு . சாதனை மேல் சாதனை போதுமடா சாமி என்று நிறுத்தாமல் , 2010ஜூலை வரை டெஸ்ட் போட்டிகளில்  இவர் விளையாடி இருக்கின்றார் . இவர் விளையாடிய 133 டெஸ்ட் போட்டிகளில் 54 வெற்றியை ஈட்டியிருக்கின்றது .

ஒருநாள் .ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை நிலைநாட்டி இருக்கும் வேகப் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் ,90களில் அறிமுகமாகிய இன்னொரு சிறந்த கிரிக்கெட் வீரர்  இவர் ஆவார். 94இல் இலங்கை அணிக்காக இவர் விளையாட ஆரம்பித்துள்ளார் .புதுப் பந்துடன் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடிய இலங்கை அணி வீரர் என்று பார்த்தால்,  இவர் பெயர்தான் உச்சத்தில் இருக்கின்றது .

97இல் விளையாட ஆரம்பித்த மகேல ஜெயவர்தன இலங்கை அணிக்கு இன்னொரு தூணாக இருந்தவர். ஒரு இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரரால் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஓட்டங்களாக இவர் 2006இல் எடுத்த 374ஓட்டங்களை , இன்றுவரை எவரும் தாண்டவில்லை . முன்னாள் அணித்தலைவராக இருந்த இவர் , 10,000 ஓட்டங்கள் என்ற இலக்கைத் தாண்டிய முதல் இலங்கை அணி வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர்!

பந்து காப்பாளரும் , துடுப்பாட்ட வீரருமான ஹஷான் திலகரத்ன 90களில் இருந்த இன்னொரு கிரிக்கெட் ஜாம்பவான் . அர்ஜுனாவைப் போல் இன்று அரசியலில் இறங்கி விட்ட இவர் , 1995இல் மேற்கிந்திய தீவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் , ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு  சதம் எடுத்த , முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார் .

இப்படியாக இலங்கை அணியை பலம் கொண்ட அணியாக வளர்த்தவர்கள் பலர் .

ஆனால் இந்த வளர்ச்சி ,கடந்த 10 வருட காலத்தில் எங்கே மறைந்து போய்விட்டது?

வெளிநாட்டு பயிற்சியாளர்களை முதன்முதலாக தமது நாட்டு அணிக்கு “இறக்குமதி” செய்த முதல் அணிகளுள் ஒன்றாகத் திகழ்ந்த பெருமை , அப்பொழுது இலங்கைக்கு இருந்தது . இவர்களைப் பார்த்தே ஏனைய அணிகளும் பின்பற்றின.

பங்களாதேஷ் அணி இலங்கையிடம் அதன் திட்டங்களை கடன் வாங்கி , தன் அணியில் அறிமுகப்படுத்தி , இன்று அது பலம் வாய்ந்த அணியாக மாறி வருகின்றது .இப்பொழுது  இலங்கை அணியின் நிலைமை என்ன ? ,

கடந்த ஆறு வருட இடைவெளியில் இலங்கை அணிக்கு  பயிற்சி அளிக்க , 10 தலைமைப் பயிற்சி யாளர்கள் வந்து போயுள்ளார்கள் என்பதை நீங்கள் நம்பியே தீரவேண்டும் . இது போதாதென்று , இந்திய அணிக்கெதிரான தொடரின் பின்னர் , இன்னொரு புதியவர் நியமிக்கப்படலாம் என்று பேச்சடிபடுகின்றது .

அவுஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் Jason Gillespie என்பவர் , இலங்கை அணிக்கு பயிற்சி அளிக்க , இலங்கை அதிகாரிகளால் அணுகப்பட்டுள்ளார் .  எந்தப் பயிற்சியாளரும் உங்களுடன் நிலைத்து நிற்கவில்லை என்று காரணம் காட்டி , மரியாதையாக பதவி ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளார் இந்தப் பந்து வீச்சாளர். சொல்லாமல் கொள்ளாமல் கிரகாம் போர்ட் நாட்டை விட்டு ஓடிப்போனது , கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி இருக்கின்றது

தற்போதைய நிர்வாகம் மாத்திரமல்ல , பயிற்சியாளர்களை  தொழில்ரீதியாக அணுகத் தெரியாத சமீபத்து கிரிக்கெட் சபை அதிகாரிகளால் வந்த வினைதான் இது என்கிறார்கள் .

2013இல் இலங்கை கிரிக்கெட் சபை தனக்கு அனுப்பிய ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிட்டு வெகுண்டெழுகிறார் ஸ்டீவ் ரிக்சன் என்பவர் , அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த எனக்கு இவர்கள் அனுப்பி வைத்த ஒப்பந்தம் பெரிய தர்மசங்கடத்தை அளித்தது என்று கூறி இருக்கிறார் . இலங்கை ஓர் அழகான நாடு . அங்கு வாழ வேண்டும் என்ற ஆசையை இலங்கை எப்பொழுதுமே எனக்குள் தூண்டிக் கொண்டிருந்தது என்று கூறும் இவர் , அவருக்கு அனுப்பப்பட்ட ஒப்பந்தத்தால் மனம் காயபட்டுப் போயிருக்கிறார் .

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டீன் ஜோன்ஸ் என்பவரை , இந்திய தொடருக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க , அணுகி இருக்கின்றார்கள் . ஆனால் கொடுப்பனவுகள் கெடுபிடியில் , இந்த நியமனம் சாத்தியப்படாமல் போயிற்று.

சிம்பாவே அணி இலங்கை அணியுடன் ஒப்பிடப்படும்போது , அப்படியொன்றும் பலமான அணி என்று சொல்லிவிட முடியாது .

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதல்கள் ஆரம்பமாகியபோது , இலங்கை அணி தொடரை இலகுவாக கைப்பற்றி விடுமென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள் .

ஆனால் நடந்தது என்ன ? ஒருநாள் தொடர் 3-2என்ற கணக்கில் பறிபோயிற்று. நடந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் தப்பினோம் பிழைத்தோம் என்ற நிலைதான் .

எல்லாவற்றிற்கும்  சிகரம் வைத்தால்போல் , 2017ம் ஆண்டு இலங்கைக்கு  மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது . ஐ சீ சீ சாம்பியன் கேடய மோதலின் முதல் சுற்றில் வெளியேறியது இலங்கை ! தென் ஆபிரிக்காவினுடனான  தொடரில் 5-0 என்ற கணக்கில் வெள்ளையடிக்கப்பட்டது.   இலங்கை அணி .ஒரு நாள் தொடரை சிம்பாவே அணியிடம் இழந்த பின்னர் , 2019இல் இடம்பெறும் ஐ சீ சீ உலகக் கிண்ணப்போட்டியில் பங்கு கொள்ளும் தகுதியை இழந்துவிடுமோ என்ற பயப்பிராந்தியும் எழுந்துள்ளது .

இப்பொழுது எட்டாவது இடத்தில் உள்ள இலங்கை 9வது இடத்திற்கு தள்ளப்பட்டால் , உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்து விடும் .

சிறப்பாக விளையாடி , தன் அணியை 2013 தொடக்கம்  நன்றாகவே நடாத்திச் சென்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் தன் பதவியை ராஜினாமா செய்தது , இலங்கை கிரிக்கெட் உலகில் அதிரலைகளைக் கிளப்பி இருக்கின்றது .புற அழுத்தமே தலையாய காரணம் !

மஹேல ஜெயவர்தன , , குமார் சங்கரக்கார  போன்ற சிறந்த வீரர்கள் விளையாடுவதிலிருந்து ஒதுங்கிய காலம் தொட்டே தள்ளாட்டம் காண ஆரம்பித்துவிட்ட அணி , அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக் கொண்டு , ஒரு பலமான அணியை உருவாக்க முடியாது திணறுகின்றது .

இறுதியாக நடைபெற்ற  சிம்பாவே  டெஸ்ட் மோதலில் கூட 39வயதான சுழல் பந்து வீச்சாளர் ரங்கனா ஹேரத் இல்லாத அணியின் பந்து வீச்சுப் பலம் எந்த அளவுக்கு மாறுபட்டிருக்கும் என்ற சொல்ல வேண்டியதில்லை ..

தலைகள் ஒழுங்காக இருந்தால் நன்றாகவே வாலாட்ட முடியும் . ஆனால் தலைகள் சீராக இல்லை என்றால் கதையே வேறுதான் .

ஆட்டம் கண்டிருக்கும் இந்த அணி தனது பொற்காலத்திற்கு என்று திரும்பும் ? காலந்தான் பதில் சொல்ல வேண்டும் .

 

 

23.07.2017