உங்களில் யார் உலர் பழம் உண்கிறீர்கள் ? சத்துகளின் களஞ்சியம் அது

உங்களில் யார் உலர் பழம் உண்கிறீர்கள் ? சத்துகளின் களஞ்சியம் அது

12 views
0

மீன் செத்தா கருவாடு … நான் செத்தா ……? இந்தக் கேள்வியை நீங்கள் அடிக்கடி உங்களைக் கேட்டுக் கொள்ளலாம் . காரணம் மீன் இறந்தால் அதை வெயிலில் காயவிட்டு , கருவாடு என்னும் சத்துள்ள உணவாக்கிக் கொள்ளலாம் . மீனை விட காய்ந்த மீனில் சத்து அதிகம் . ஆனால் மனிதன் உயிரோடு நடமாடும் வரைதான் அவனுக்கு மதிப்பு . . மீனின் மதிப்பு அவனுக்கு இல்லை . அவனை எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும் . வேண்டப்படாத ஒன்றாகி விடுவதை வேறு என்னதான் செய்ய முடியும் ?

பழங்களை விரும்பி உண்பவர்கள் ஒருபுறம் இருக்க , பழங்களை கண்டு முகம் சுளிப்பவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள் . பழங்களை விரும்பி உண்பவர்களுக்கு , அது காய்ந்தால் ஊட்டச் சத்து அதிகம் என்பது தெரியும் .உலர் பழங்களில்  ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. எதையாவது கொறிக்கும்  நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் உடல் சக்தி  கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு  முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

உலர்ந்த பழங்களில் என்னதான் உண்டு ?

அத்தியாவசியக் கனிமங்கள், விட்டமின்கள், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients)  நார்ச்சத்து என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . இவற்றை நீண்ட நாள்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்பது இவற்றின் தனிச் சிறப்பு . மேலும் அவற்றைப்  பயணத்தின் போது, மிக எளிதாக , எடுத்துச்செல்லவும் முடியும்.

உலர்ந்த பழத்தில் ஊட்டச்சத்து அடர்த்தியாக இருக்கும். அதேநேரம் இவற்றில் கலோரிகள் மிகவும் அதிகம். எனவே இவற்றை அளவுடன் பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உண்பதே போதுமானது. இயற்கையான சர்க்கரையைக் கொண்டிருக்கும் உலர்ந்த பழங்கள், ரத்தச் சர்க்கரையைப் பாதிப்பதில்லை. சிலவகை உலர்ந்த பழங்களில் பதப்படுத்துவதற்காக, அதிகச் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வகை பழங்கள் ஏற்றவையல்ல..

பாரம்பர்ய உலர்ந்த பழங்களான திராட்சை, பிளம்ஸ், பேரீச்சை மற்றும் அத்தி போன்றவை பழங்களைப்போன்ற ஊட்டச்சத்துக்களையும் அதே நன்மைகளையும் வழங்குகின்றன.  உலர்ந்த பழங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதால் பெருங்குடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்களிக்கின்றன. தினசரி உணவில் உலர் பழங்களைச் சேர்த்துக் கொள்ளும்  வழக்கமுள்ளோர், அவற்றை உட்கொள்ளா தவர்களைவிடக்  குறைந்த உடல் எடை மற்றும்  குறைந்த இடுப்புச் சுற்றளவைக் கொண்டவர்களாக இருப்பதாக  ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உலர் திராட்சைகள் நார்ச்சத்து நிறைந்தவை. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. கலோரி நிறைந்த இவற்றை உணவுக்குமுன் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால் கலோரி நுகர்வு குறைகிறது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளின்போது தங்கள் செயல்திறனை அதிகரிக்கத் திராட்சையை உண்ணலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சேர்க்காத உலர்ந்த நெல்லிக்கனி நன்மை தரும். உலர்ந்த பேரீச்சை இரும்பைப்போன்ற சக்திவாய்ந்தது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றது

உலர்ந்த பழங்கள் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. உணவின் ருசியை அதிகரிக்கக்கூடியவை..உலர்ந்த பழங்களை உண்பதற்குமுன் ஒருவரது உடல்நிலை, வாழ்க்கைமுறை மற்றும் நாள்பட்ட நோய்கள் ஏதும் இருக்கின்றனவா என்பனவற்றைக் கவனிக்க வேண்டும். மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் உலர் பழங்களைச் சாப்பிடலாம்.

சாதாரண பழங்களின் விலையை விட இவற்றின் விலை அதிகம் . ஆனால் இதன் பயன்களும் அதிகம்தான் . எனவே அதிக விலை கொடுத்தாலும் உடலுக்கு அவசியப்படுபவை உலர்பழங்கள்.

எனவே உலர் பழங்களை அதிகம் உண்போம் .உளம் மகிழ ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்

05.09.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *