காலனாக மாறுகின்ற காலநிலைக் கோலங்கள்

காலனாக மாறுகின்ற காலநிலைக் கோலங்கள்

7 views
0

“இயற்கை இயற்கையாகவே இல்லாமல் செயற்கைத்தனங்கள் புகுந்து அதனுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தால், விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .  கண்கூடாகப் பார்க்கிறோம் . இனியும் பார்க்கப் போகிறோம் . அது அதுவாகவே இருந்து விட்டால் , இதுவும் இதுவாகவே இருக்கும் என்பது நிச்சயம்”

மேற்கத்தைய நாடுகளில் காலங்கள் நான்கு என்கிறார்கள் .பூ போல பனிகொட்ட , குறுகிய பகலும் நீண்ட இரவும் கொண்ட ஒரு குளிர்  காலம் ..மொட்டை மரங்களில் இலைகள் துளிர்த்து , வண்ண வண்ணப் பூக்கள் காற்றில் அசைந்தாடும் வசந்த காலம் , அரைகுறை ஆடைகளுடன் , இளசுகள் ஓடித்திரிந்து வெயிலில் குளிக்கும் கோடை காலம் . அதைத் தொடர்ந்து , நேர்த்திக் கடனை நிறைவேற்றிக்கொள்வதுபோல, மரங்கள், தம்மை மொட்டையடித்துக் கொள்ளும் இலையுதிர் காலம் .. இப்படியே காலமும் கோலமும் அங்கு மாறுகிறது . எமக்கோ இரண்டு காலங்கள்தான் . பூ பூத்தாலும் , இலைகள் உதிர்ந்தாலும் , மாரி, கோடை காலத்துக்குள் எல்லாமே  உள்ளடக்கம் .

இப்படி,  பிரித்துப் பிரித்து காலங்களைச் சொல்லிய அந்தப் பொற்காலம் மலையேறிப் போய்விட்டது என்றே இன்று சொல்லத் தோன்றுகிறது . எல்லாமே பருவம் தப்பி நிகழ்வது என்பது , இன்றைய சாதாரண நிகழ்வுகளாகி இருக்கின்றன .பருவம் தப்பி வருவதுமல்ல , வருகையும் ஆக்ரோஷமாக இருக்கிறது .அழிவுகளும் பெரிதாக இருக்கின்றன . கோவிலில் கிடாய் வெட்டி , பூசாரி பலி கொடுப்பதுபோல , இந்தப் பருவ மாற்றங்கள் , பல உயிர்களைப் பலியெடுப்பதும் அடிக்கடி சம்பவிக்கும் ஒன்றாக மாறி இருக்கின்றது .கடந்த இரண்டு வருட இயற்கை அனர்த்தங்களோடு, ஒப்பிட்டுப் பார்த்தால்,   2017ம் ஆண்டு , கடந்த இரண்டு ஆண்டுகளையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுமாற்போல், சினம் கொண்ட இயற்கை , கடந்த 9மாதங்களில் நன்றாகவே “வசை பாடி” , தன் முத்திரையைப்  பதித்துள்ளது. இன்னும் பன்னிரண்டு மாதங்கள்  முழுதாக முடியவில்லை . . ஆனால்  தெற்காசிய நாடுகளில் பெரு வெள்ளம் ; வட அமெரிக்காவில் சூறாவளியின் பேயாட்டம் , பூமித்தாயின் மிரட்சி ,  ஆபிரிக்க கண்டத்தில் மண் சரிவுகள் , பெரு வறட்சி;  மத்திய அமெரிக்காவில் சுனாமி அச்சுறுத்தல்  என்று உலக நாடுகள் நன்றாகவே  ஒன்பது மாதங்களில் பந்தாடப்பட்டு விட்டன .

ஆபிரிக்க நாடான சிம்பாவே பெரு மழையை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. போதாத குறைக்கு , சூறாவளித் தாக்குதல்களும் சேர்ந்து கொண்டன.   பல ஆயிரம் பேர் நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்ததோடு , குறைந்த பட்சம் 117 பேர் வரையில் பலியாகினார்கள் .இங்கு மழை காலம் ஆரம்பித்து , கடந்த வருடம் அதாவது 2016 ஒக்டோபரிலிருந்து மார்ச் 2017வரை , இறந்தவர்கள் தொகை 246க்கு குறையாது என்கிறார்கள் . . இறந்தவர்கள் தொகையின் வரிசையில் அடுத்து சீனாவை இங்கே சொல்லலாம் . இந்த ஆண்டு நடுப் பகுதி வரை பெய்த பேய் மழையும் , பெரு  வெள்ளமும் 144உயிர்களைக் கொன்றுள்ளன . வேறு இயற்கை அனர்த்தங்கள் 70பேர் வரையில் உயிரிழக்க காரணிகள் ஆகியிருக்கின்றன. அடுத்து தென் அமெரிக்க நாடான பெரு  பேரழிவைச் சந்தித்த கதையைப் பார்க்கலாம் . தொடர்ச்சியான பெரு மழை ,  அதனால் ஆற்று மட்டங்கள் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளம் , நிலச்சரிவு  என்று இங்கு இயற்கை கொண்ட சீற்றம் , 150 பேர்களின் உயிர்களுக்கு எமனாகியது . இந்த அனர்த்தம் ஒரு மில்லியன் வரையிலானவர்களைப் பாதித்துள்ளது . இதன் மீள் நிர்மாணப் பணிகள் 9 பில்லியன் டொலர் தொகையை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்கிறார்கள் அதிகாரிகள் .

இந்த வரிசையில் அடுத்து வருவது ஆபுகானிஸ்தான் . கடந்த பெப்ரவரி மாத முடிவில் , ஆபுகானிஸ்தானின் 22 மாவட்டங்களில் கொட்டிய பெருமளவு பனி, அடை மழை ,பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது . ஜனவரி , பெப்ரவரி மாதங்களில் 239 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் .  214 பேர் காயப்பட்டுள்ளார்கள் என்று அனர்த்த முகாமைத்துவ ஏஜன்சி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார் . ஐ. நா சபையின் அறிக்கை ஒன்றின்படி , உணவு , வீடு என்ற அடிப்படைத் தேவைகள் 9 மில்லியன் பேருக்கு தேவைப்படுவதாக கணக்கிட்டிருந்தார்கள் .ஆபிரிக்க நாடான கொங்கோவும் இயற்கையின் தாக்குதலில் வகையாகச் சிக்கிக் கொண்டது . இங்கு ஏற்பட்ட நிலச்சரிவு 174பேர்களின் உயிர்களைப் பறித்தது.  .280பிள்ளைகள் பெற்றோர்களை இழந்த அனாதைகள் ஆக்கப்பட்டார்கள். இலங்கை மக்களையும் அது விட்டு வைக்கவில்லை . இந்த வருடம் மே மாத இறுதியில், இலங்கையில் குறிப்பாக இரத்தினபுரியில் பெரு மழையும் , திடீர் வெள்ளமும் 20,000 க்கு மேற்பட்டவர்களைப் பாதித்துள்ளது. இதை விட காலி , நெலுவ , தவலம , நியாகம , பத்தேகம ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெள்ளம் 150,000 பெண்களையும் , 189,000 பிள்ளைகளையும் பாதித்திருக்கின்றது.

“எனக்கு எல்லைகள் இல்லை” என்று சொல்வதுபோல , அமெரிக்காவின் மியாமியில் தொடங்கி , போர்டோ ரிக்கோ என்ற கரபியன் தீவு வரை போய் , பின்னர் இலத்தீன் அமெரிக்கா ஊடாகப் பயணித்து , சூறாவளி பல பிரதேசங்களை நாசம் செய்திருக்கின்றது . தரம்5 என்ற கணிப்புக்குள் வரும் சூறாவளி பலம் வாய்ந்த ஒரு நாசகாரி . சமீபத்திய வாரங்களில் இப்படியான சக்தி வாய்ந்த சூறாவளி கரபியன் தீவுகளையும் , அமெரிக்காவின் பிரதான பிராந்தியங்களின் பல கோடிக்கணக்கானோரையும்   ஸ்தம்பிக்க வைத்துள்ளது. குறிப்பாக  ஹார்வே , இர்மா , மரியா என்று பெயரிடப்பட்ட சூறாவளித் தாக்குதல்கள் பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. போர்டோ ரிகோவில் 3.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  பார்பூடா என்ற தீவில் எவருமே இனி வசிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு தீவு , சூறாவளித் தாக்கத்தினால் நிர்மூலமாகி இருக்கின்றது . பங்களாதேஷ் , இந்தியா , நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில் பாய்ந்தோடிய வெள்ளம் , 40 மில்லியன் வரையிலானவர்களின் வாழ்க்கையை பெரும் துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது . பயிர்கள் நாசம் , வீடுகள் அழிவு , உயிர்ப்பலிகள் , வேலை ஸ்தலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலை –எப்படி இவர்கள் நிலை இருந்திருக்கும் என்பதை உங்களால் ஊகிக்க முடிகின்றதல்லவா ?

சூழல் மாசுபடுவதால் , ஒவ்வொரு வருடமும் 4.2மில்லியன் பேர் , தாம் சாக வேண்டிய காலத்துக்கு முன்பாகவே மரணித்துக் கொண்டு போவது பலர் அறியாத சங்கதி . இவர்களோடு இப்பொழுது அடிக்கடி மிரட்டும் கால நிலை பெரியதொரு ஆட்கொல்லியாக மாறி வருவது , பலரது கவனங்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது என்றே சொல்ல வேண்டும் .  .எகிறும் வெப்பநிலை,  சூழலில்  ஆவியாகிய அதிக நீரை உள்ளடக்கி வைத்திருக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது . இதனால் சில இடங்களில் அதிக மழை வீழ்ச்சியையும் , வேறு சில இடங்களில் கடும் வறட்சியையும் இது உருவாக்கி விடுவதை நாம் காண முடியும். . அதே சமயம் சில இடங்களில் பெரு மழையும் , கடும் வறட்சியும் சேர்ந்தே காணப்படுகின்றன. இதற்கு அமெரிக்க நகரமான கலிபோர்னியாவை நல்லதொரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் .  இங்கே நீண்ட கால வறட்சிக்கு பின்னர் , மழை கொட்டோ கொட்டென்று கொட்டியதுடன் , அதைத் தொடர்ந்து பெரு வெள்ளமும் வந்துள்ளது .

பூமிப் பரப்பிலிருந்து வெளியேறும் பசுங்குடில் எனப்படும் “கிரீன் ஹவுஸ்”  வாயு , மனித குலத்துக்கு, பெரியதொரு எமனாக வந்து வாய்த்துள்ளது. நீராவி , காபனீர்ஒக்சயிட் , மெதேன் , நைட்ரஸ் ஒக்சைட் போன்றவை பூமியின் மேல் ஒரு படலமாக ஒட்டிக்கொண்டு விடுவதால் , மேலிருந்து சூரிய ஒளி ஊடறுத்து பூமிக்குள் வந்தாலும் பூமியிலிருந்து தெறிக்கும் கதிர்களை அண்டவெளிக்கு சிதற விடாமல் தடுத்து விடுகிறது . இதுவே  கடல் தண்ணீர் சூடாவதும் அது மேலெழுவதற்கும்  வழி சமைத்து , இன்று ஹார்வே , இர்மா , மரியா என்று பல பெயர்களில் சூறாவளிகள் மையம் கொள்ளக் காரணிகளாகி விட்டன . நீண்ட காலம் தொடரப் போகும் இந்தப் பசுங்குடில் வாயு வெளியேற்றம் தடுக்கப்படுவது,  இப்போதைக்கு சாத்தியப்படாத ஒன்று . எனவே சூறாவளி எம்மைத் தாக்குவது என்பது இப்போதைக்கு ஓயப்போவதில்லை

இனியும் பெருக்கெடுக்கும் வெள்ளம் அழிவைத் தரக்கூடாது என்பதற்காக , மியாமி அதிகாரிகள் ,  400 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கி , அதற்கான பாரிய திட்டங்களில் இறங்கி இருக்கின்றார்கள் . நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் , வறிய நாடுகளுக்கும் இது எப்படி சாத்தியப்படும் ?  இந்த ஆண்டு உலக நாடுகளைத் தாக்குவதில், சுழன்றடிக்கும்  சூறாவளிக் காற்றே முன்னின்றுள்ளதைக் கவனித்தாகவேண்டும் . செப்டெம்பர் 24 அன்று டொமினிக் குடியரசை தாக்கி  நிர்மூலமாக்கிய  மோசமான அட்லாந்து சமுத்திர சூறாவளியான மரியாவை,  இந்த நாட்டவர்கள் என்றுமே மறந்துவிடப் போவதில்லை. .செப்டெம்பர் 20 அன்று அமெரிக்காவின் ப்ளோரிடா  கீஸ்   என்னும் பிரதேசத்தை  தாக்கிய சூறாவளி இர்மா, கடந்த ஒரு  தசாப்த காலத்தில் அமெரிக்கா காணாத ஒரு பயங்கரம் .  கரபியன் தீவுகளையும் , அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியங்களையும் இந்தச் சூறாவளி  புரட்டி எடுத்துவிட்டுப்  போயுள்ளது .

இந்த வருடம்  ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி  , ஹார்வே என்ற பெயரில் அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்துக்குள் நுழைந்த சூறாவளி , கடந்த 50வருட காலத்தில் இல்லாத அளவு அதிசக்தி வாய்ந்த சூறாவளி என்கிறார்கள் .இறந்தவர்கள் தொகை 70 என்றாலும் , உடமைகளின் சேதம் அளப்பரியதாக இருந்துள்ளது . ஒரு கணக்கின்படி 108 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. அதிக மதிப்புள்ள சொத்து  அழிவு என்று பார்த்தால், ஆகஸ்ட் 2005இல் நடந்த அழிவுதான் அமெரிக்க சரித்திரத்தில் முதலிடத்தைப் பிடிக்கின்றது . சூறாவளி கத்ரீனா என்ற பெயரில் வந்த அழிவின் பெறுமானம் 172பில்லியன் டொலரைத் தொடும் என்று கணித்திருந்தார்கள் . காப்புறுதிப் பணமாக லூசியானா , மிஸ்ஸிசிப்பி, அல்பாமா ஆகிய பிராந்தியங்களில், தனியார் காப்புறுதிப் பணமாக 40பில்லியன் டொலர் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. உலக சரித்திரத்திலேயே மிக அதிக தொகை என்று சொல்லப்பட்டது .

2015இல் உலக நாடுகளெங்கும் பரவலாக , 150 பாரிய அளவிலான இயற்கை அனர்த்தங்கள் சம்பவித்துள்ளன . பலமாகத் தாக்குண்ட கண்டம் ஆசியாதான்! இந்த ஆண்டின் ஏப்ரில் மாதம் , நேபாளத்தை உலுப்பி எடுத்த பாரிய பூகம்பம் 8800 க்கு அதிகமானவர்களைக் கொன்றுள்ளதுடன் ,  900,000 கட்டடங்களை நிர்மூலமாக்கி இருக்கின்றது . சுமாராக ஒரு மில்லியன் பள்ளிப் பிள்ளைகளை படிப்பைத் தொடர விடாமல் தடுத்தது இந்தப் பூகம்பம்! 26மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட இந்த நாட்டின் சரித்திரத்தில் மிக மோசமான உயிர்ப்பலி எடுத்த நிகழ்வு இதுவேதான்! “வேர்ல்ட் விஷன்” என்ற உலக அமைப்பு , இதனால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கைங்கரியத்தை 2018வரை தொடர்கிறது .

இதே ஆண்டின் இறுதியில் , நவம்பர் மாதம் சென்னை கண்ட மழையும் பெருவெள்ளமும் , அது 100வருடங்களில் கண்டிராத ஒன்று . 379பேர் வரையில் மரணித்து இருப்பதோடு , 190மில்லியன் டொலர் பெறுமதியான 100,000 ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன .  ஆபிரிக்க நாடான எதியோப்பியாவிலோ வறட்சி பயமுறுத்தியது. பெருந்தொகையானோரின் வாழ்வாதாரமாக இருந்த கால்நடைகள் இறந்ததும் , பயிர்கள் அழிந்ததும் விவசாயிகளை பலமாகத் தாக்கின . . இந்த வருட ஒக்டோபர் கணிப்பின்படி 8.2மில்லியன் பேர் உணவு உதவி பெற வேண்டியவர்கள் என்ற நிலை உருவாகி இருந்தது  .இவர்கள் வறட்சியில் வாட , மொசாம்பிக் , மலாவி ஆகிய ஆபிரிக்க நாடுகள்  பெரு மழையும் அதைத் தொடர்ந்த வெள்ளத்தாலும் பெரும் பாதிப்பைக் கண்டிருந்தன . 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு , பல்லாயிரக் கணக்கானவர்கள் தமது கால்நடைகள் , பயிர்களை இழந்திருக்கிறார்கள்  , தெருக்கள் , பாலங்கள் சேதப்பட்டுள்ளன .

2016இலும் இயற்கை அனர்த்தங்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை .  மோசமான வறட்சிகள், உயிர்ப்பலி எடுத்த பூகம்பங்கள் , புரட்டி எடுத்த புயல்கள்  என்று மொத்தம் 194 இயற்கை அனர்த்தங்கள் , உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வைப் பாதித்துள்ளன.  தென் அமெரிக்க நாடான ஈகுவடோர் ,  2016, ஏப்ரில் 16 அன்று பூகம்பம் வடிவில் பெரும் பயங்கரத்தைச் சந்தித்தது . 1987  க்குப் பின்னர்  இந்த நாடு சந்தித்த மிக மோசமான  பூகம்பத்தில் 700 பேர் வரையில் சாகடிக்கப்பட்டார்கள் . பல வீடுகள் , பாடசாலைகள் , பாதைகள் , பாலங்கள்  நிர்மூலமாக்கப்பட்டன . ஹயிட்டி தீவு ,  மத்தியூ என்ற பெயர் கொண்ட சூறாவளியால் புரட்டி எடுக்கப்பட்டது.  இந்தத் தீவில் மணிக்கு 145கி.மீ . வேகத்தில் வீசிய சூறாவளி , 500பேருக்கு மேட்பட்டவர்களை கொன்றழித்துள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு 580மில்லியன் டொலர் .

இப்படி நீள்கின்றன அழிவின் பட்டியல்கள்  ! ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல , அடுக்கடுக்காக இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வது , அன்றாட நிகழ்வாகி விட்டது . தொடர்ந்து வந்த மூன்று ஆண்டுகளின் அழிவுகளைப் பார்க்கும்போது , இது இனியும் தொடரும் என்ற அச்சம் நம்முள் தொற்றிக் கொள்கிறது . நாமே நமக்கு குழி தோண்டிக் கொள்கிறோம் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது . காடுகளை அழிக்கிறோம், கார்களால் தெருக்களை நிறைக்கிறோம் ,வாழ்வில் செயற்கைத்தனம் மேலோங்கி நிற்கின்றது . பெண்கள் ஊசி ஏற்றி தங்கள் மார்பகங்களை பருக்க வைப்பது எவ்வளவு கேவலம் என்று நினைத்துக் கொண்டிருக்க , தானாகக் கனியாததை தடி கொண்டு கனிய வைப்பதுபோல , முற்றாத மாங்காய்களை  ஊசி ஏற்றி பழுக்க வைக்கும் அவலம் மறு பக்கத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது . அங்கே மங்கை! இங்கே மாங்காய் ! இரண்டிலுமே இயற்கையை முரட்டுத்தனமாக செயற்கையாக மாற்றும் அவசரம் !

இயற்கை இயற்கையாகவே இல்லாமல் செயற்கைத்தனங்கள் புகுந்து அதனுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தால், விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .  கண்கூடாகப் பார்க்கிறோம் . இனியும் பார்க்கப் போகிறோம் . அது அதுவாகவே இருந்து விட்டால் , இதுவும் இதுவாகவே இருக்கும் என்பது நிச்சயம் !

16.10.2017

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *