காலை உணவைத் தவிர்த்து விடாதீர்கள்

4 views
0

நாம் தினமும் . காலை உணவு , மதிய உணவு , இரவு உணவு என்று சாபிட்டு வருகிறோமே . இதில் முக்கியமான உணவு எது தெரியுமா ?

காலை உணவுதான் .! என்ன காரணம் தெரியுமா ?  ஒரு சின்ன விளக்கம் இதற்கு அவசியம் தேவைப்படுகிறது . காலை உணவை 8 மணிக்கு சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்  எண்ணி நாலரை மணி நேரத்தில் அதாவது 12.30 மணியளவில் “லஞ்ச்” எனப்படும் மதிய உணவைத் தொடங்கி விடுகிறோம் . பின்பு 4.30 க்கும்  5.00க்கும் இடையில் எதையாவது நொறுக்குகிறோம் . பின்பு 8மணியாகியதும் மாலை உணவு . இந்த எட்டிலிருந்து அடுத்த நாள் எட்டு வரை உடம்பைப் பட்டினி போடுகிறோம் . அதாவது 12மணிநேரம் எதையும் உண்ணாது “நோன்பு” பிடிக்கிறோம் . இதையே அர்த்தமாகக் கொண்டு , நாம் காலை உணவு எடுக்கும் நேரம் விரதம் உடைபடும் நேரம் என்று பொருள்பட , Breakfast என்று காலை ஆகாரத்தை  அழைக்கிறார்கள்.

எனவே இந்த நேரம் நாம் உணவைத் தவிர்ப்பது உடலுக்கு கேடு தரும் . பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும், இன்று காலை உணவை தவிர்ப்பது வழக்கமாகி விட்டது. வெளி
நாடுகளில் பணிபுரியும் பலர், பெயரளவில், சிறு சிறு உணவுகளை ,  சாண்ட்விச்சுகளை சாப்பிட்டால் போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, உடல் நலம் பாதிக்கப்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் குளுகோஸ்சின் அளவு குறைந்து விடும் .இதை, உடனடியாக திரும்பப் பெற, காலை உணவு அவசியம். காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் போதிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காலை சிற்றுண்டி, உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளரும் குழந்தைகள் உட்பட அனைவரின் ஆரோக்கியத்துக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை, காலை உணவுதான். அதிலும், குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில், காலை உணவு ரொம்ப முக்கியம்.
மூளையின் செயல்பாடுகளுக்கு, பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக, பிஸ்கெட்டும், பாணும்  சாப்பிட்டுவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகள் வகுப்பில் சோர்வாக இருக்கின்றனர். குழந்தைகள், படிப்பில் பின்தங்குகின்றனர் என்றால், காலை உணவை சாப்பிடவில்லை என்பதும் முக்கிய காரணம்.


காலை உணவுக்கு, பழங்கள் மிகச்சிறந்த வரப்பிரசாதம். உடலைக் குளிர்விப்பதோடு, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன், நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, காலை நேரத்துக்கு ஏற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11:00 மணியளவில் இதை உட்கொள்ளலாம்.
காலை உணவாக, பழங்கள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும், உடலுக்கு உறுதியை தரும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும், பழ உணவு உதவும். காலை உணவைப் போலவே, மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காலை உணவை, குழந்தைகளுக்கு கொடுத்தால் போதும் என்ற மனநிலையுடன், சத்தில்லாத உணவுகளை கொடுப்பதற்கு பதில், சத்தான உணவுகளை வழங்க முன்வர வேண்டும். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். குழந்தையின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மதிய உணவில் அடங்கியிருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். மதிய உணவுடன், பழ வகை ஏதேனும் கொடுத்து அனுப்பினால், இன்னும் சிறப்பு.  எளிதான வேலை என கருதி, பலரும் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் தயாரித்து பள்ளிக்கு கொடுத்து விடுகின்றனர். இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு கேடாகும். சோறு அதிகமாக கொடுப்பதை விட, மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேருங்கள். அனைவரும், முக்கியமாக, குழந்தைகள் உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். வளரும் பருவத்தில், உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, நாளைய உலகை எளிமையாக சந்திக்க முடியும். எனவே, சத்தான உணவு வகைகளை தேடிப்பிடித்து உட்கொள்வதில் அலட்சியம் கூடாது.

சுவர் இன்றி சித்திரம் வரைய முடியுமா ? ஆரோக்கியமாக உடம்பை  வளர்க்க இன்றே ஆவன செய்வோம் . .இன்றே செய்வோம் .நன்றே செய்வோம்

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *