சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள

சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள

5 views
0

எதிரிகளை விரட்டியடிக்கவும் நண்பர்களைக் கவர்ந் திழுக்கவும் தாவரங்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன! தங்களுக்குப் போட்டியாக இருக்கும் வேறு தாவரங்களைக்கூட விசேஷ வகை வேதிப்பொருட்களைப் பிரயோகித்து விரட்டுகின்றன அல்லது கொன்றுகூடவிடுகின்றன. இந்த வகையில் அவற்றின் சாமர்த்தியமும் சமயோசிதமும் சாதுரியமும் சாணக்கியனை விஞ்சக்கூடியவை. அவற்றைப் பற்றி ஆராயும் துறைதான் ‘அல்லேலோபதி’ (Allelopathy).

தாவரங்கள் மட்டுமே சுயம்பாகிகளாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தித் தமக்குத் தேவைப்படும் உணவைத் தயாரித்துக்கொள்ளும் திறமை படைத்தவை. மற்ற எல்லா உயிரினங்களும் – கிருமி முதல் மனிதர் வரை – உணவுக்குத் தாவரங்களையே சார்ந்திருக்கின்றன. தாவரங்களை நேரடியாக உண்பவை தாவர உண்ணிகள்; தாவர உண்ணிகளை உண்பவை ஊனுண்ணிகள். இரண்டையும் வாய்ப்புக்கேற்ப உண்பவை அனைத்துண்ணிகள். ஆகவே, எல்லா உயிரினங்களுக்கும் உணவு தரும் அடிப்படையாகத் தாவரங்களே உள்ளன.

தாவர நஞ்சு

தாவரங்கள் தாம் தப்பிப் பிழைக்கவும், தம் இனத்தைப் பெருக்கிப் பரப்பவும் பல விதமான ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. தற்காப்புக்காகத் தமது உடல்களில் முட்களையும், தடித்த பட்டைகளையும், பலவிதமான நஞ்சுகளையும் உருவாக்கிக்கொள்கின்றன. அந்த நஞ்சுகள் ஃபைட்டோடாக்சின் என்ற வகையைச் சார்ந்தவை. அரளிச் செடியின் சாறு கொடிய விஷம்.

மிசில்டோ செடியின் பழங்கள் ஒரு மாட்டைக்கூடக் கொல்லும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டவை. பல செடிகளை உரசினாலே ஒவ்வாமை தோன்றி உடலில் தடிப்பும் அரிப்பும் ஏற்படும். பார்த்தீனியச் செடியின் மகரந்தத் துகள்கள் ஆஸ்துமாவை ஒத்த நோய்க்குறிகளை உண்டாக்குகின்றன. ஆடுதின்னாப் பாளை என்ற பெயரில் பல செடிகள் உள்ளன. ஆடு, மாடுகள் அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டு விலகிப் போய்விடும்.

தாவரங்கள், தம்முடன் போட்டியிடும் தாவரங்களை அழிக்கக் களை கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்களைத் தமது வேர்ப் பிரதேசங்களில் பரப்பிவிடுகின்றன. ஆலமரம் போன்றவை அடர்ந்த நிழலை உண்டாக்கி, வேறு செடிகள் எதுவும் வளராமல் தடுக்கின்றன. சில தாவரங்கள் தமது இலைகளைத் தின்ன முயலும் பூச்சிகளை விரட்டப் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்களை உருவாக்கிக்கொள்கின்றன.

வேப்ப மரம் தனது வேர் முதல் இலைகள் வரை கசப்புத் தன்மையைப் பரப்பிக்கொள்கிறது என்றாலும், தனது காய்கள் கனியாக மாறும்போது அவற்றை இனிப்பாக்குகிறது. பறவைகள் அவற்றை விரும்பி விழுங்கித் தமது எச்சத்தின் மூலம் விதைகளை வேற்றிடங்களில் போட்டு வேம்பின் இனப் பெருக்கத்துக்கு உதவுகின்றன.

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *