தண்ணீருக்கு அடியில் “தண்ணி” அடிக்கலாம்

தண்ணீருக்கு அடியில் “தண்ணி” அடிக்கலாம்

8 views
0

வித்தியாசமாக விருந்து படைக்கும் ஆசை மனிதர்களுக்கு நிறையவே இருக்கின்றது . வீட்டுக்கு விருந்தாளியாக வருபவர்களுக்கான கவனிப்பு , ஆளுக்கு ஆள் வேறுபடுவதுண்டு .

இங்கே நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு விருந்து படைக்கும் உணவகமொன்று , வித்தியாசமாக உங்களுக்கு அதைத் தர ஏற்பாடு செய்திருக்கின்றது ,

தண்ணீருக்கு கீழே ஒரு உணவகத்தை அமைத்துள்ளது ஒரு மாலைதீவு  நிறுவனம்! இந்துசமுத்திரத்தின் நடுவில் அமைந்துள்ள மாலை தீவின் பல தீவுகளில் ஒன்றான ரங்காலி தீவில்தான் இந்த உணவகம் இருக்கின்றது இத்தா என்று பெயரிட்டுள்ள இந்த உணவகம் கடல் மட்டத்துக்கு 16அடி கீழே , இருக்கின்றது , சுவர்கள் கண்ணாடியால் ஆனவை என்பதால் , நீங்கள் ப்ளேட்டில் சாப்பிடும் இன மீன் கண்ணாடிக்கு வெளியே சுதந்திரமாக நீச்சல் அடித்துக் கொண்டிருப்பதை உங்களால் நேரில் பார்த்து ரசிக்க முடியும் . ( என் மச்சாளை உயிரோடு பிடித்து சாப்பிடுகிறானே, என்று தன் கண்முன்னே பிடிபட்ட “மச்சாளை”  நினைத்து அந்த மீன் உங்களை திட்டவும் கூடும் )

தினமும் மதிய உணவும் , இரவு உணவும் பரிமாறப்படுகின்றன . வேறு பல தண்ணீருக்கு அடியிலான போசனசாலைகள் பரவலாகக் காணப்பட்டாலும் ,  சண் டிவியில்  சொல்லிக் கொள்வதுபோல “முதன்முதலாக”  இப்படியொரு போசனசாலையை 2005இல் ஆரம்பித்தது நாங்கள்தான் என்று மார்தட்டி சொல்கிறார்கள் இவர்கள் .ஒரே நேரத்தில் 14பேர் மாத்திரமே சாப்பிடலாம் என்பது இங்குள்ள ஒரு பெரிய “மைனஸ்”. 120 டொலரில் இருந்து மேலேறும் உணவின் விலை அதிகம் என்றாலும் , இப்படியான இடங்களில் இது அதிசயம் இல்லை . ஆனால் இந்த இந்த உணவகம் , இன்னும் 20வருடங்களுக்கு மாத்திரம் நின்று பிடிக்கும் என்பது , சாப்பாட்டு இராமர்களுக்கு வயிற்றில் அடிக்கும் சங்கதிதான் ! படைக்கு பிந்தலாம் .பந்திக்கு முந்த வேண்டும் . யார் யாரெல்லாம் மாலை தீவுப் பயணத்துக்கு தயாராகி விட்டீர்கள் ?

மாப்பிள்ளை இல்லாத திருமணம்

நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையா ? கவலையை விடுங்கள் . இந்த இத்தாலிப் பெண் , மாபிள்ளையே இல்லாமல் கல்யாண வைபவத்தை நடத்தி இருக்கிறாள் .பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் , தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட புதுமையான நிகழ்வு இத்தாலியில் நடந்துள்ளது . 20வருட மாப்பிள்ளை வேட்டையில் மனம் சலித்துப் போய் , 40வயதான இத்தாலியப் பெண்மணி  “மாப்பிள்ளை இல்லாத திருமண நிகழ்வை” , நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் .இத்தாலியின் லொம்பார்டி பிராந்தியத்தில் உள்ள லிசோன் என்னும் இடத்தில் இந்த வினோத நிகழ்வு சம்பவித்துள்ளது .

தன் நண்பர்கள் , உறவினர்கள் புடைசூழ ஒரு ஆடம்பரமான திருமணத்தையே லோரா கனவு கண்டுகொண்டிருந்தார் என்று கூறும் உள்ளூர் ஊடகங்கள் , , அந்தக் கனவு மெய்ப்பட பாரம்பரிய திருமண உடையணிந்து , தனக்கு தானே திருமண மோதிரத்தை அணிந்து , “கல்யாணம்” அமர்க்களமாக நடந்தேறி உள்ளது. இவர் உடல்பயிற்சி போதனாசிரியாராக  தொழில்   புரிகிறார். மாப்பிள்ளைத் தோழன்  இல்லாவிட்டாலும் , மணமகளுக்கு தோழி ஒருவர் வைபவத்துக்கு சமூகமளித்து இருந்தார் .

இங்குள்ள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றின்போது, தனக்கு 40வயதில் பொருத்தமான கணவன் கிடைக்காவிட்டால் , தன்னைத் தானே திருமணம் செய்யப்போவதாக நண்பிகளிடம் இவர் முன்பு கூறி இருந்துள்ளார் . இந்த வைபவத்துக்கு இவர் செலவிட்ட தொகை   8,700 பவுண்ட்ஸ் .வெட்டிய திருமண கேக்கின் மேல் மணப்பெண் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருந்தது . ஏனையவர்களை நேசிக்க முதல் , உங்களை முதலில் நேசியுங்கள் “ என்று சொல்லும் இவர் , “திருமணம்” முடிவில் விடுதலை நாட்களைக் களிக்க எகிப்து பயணமாகிறார் .

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *