எதற்கும் ஒரு விலை உண்டு

12 views
0

 நகரங்கள் மாசுபடுவதை யார்தான் விரும்புவார்கள் ? இலண்டன் நகரமும் இந்த விடயத்தில் வாகனச் சாரதிகளின் குரல் வளைகளை நெருக்க ஆரம்பித்துள்ளது . இலண்டன் நகர பிதா அறிமுகப்படுத்தி உள்ள புதிய சட்டத்தின்படி , 2006க்கு முன்பு பதியப்பட்ட , பெட்ரோல் ,டீசல் வாகனங்கள் , இனி நகருக்குள் நுழைவதானால். பத்து பவுண்ட்ஸ் அதிகமாக அதாவது 21.50 பவுண்ட்ஸ் செலுத்தினால்தான் , நகருக்குள் தமது கார்களைச் செலுத்த முடியும் . தலைநகரின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து , காற்று அசுத்தமாவதைத் தடுக்க , இலண்டன் நகரபிதா கான் முன்வைக்கும் புதிய திட்டமே இது ! மாதமொன்றுக்கு 34,000 வாகனச் சொந்தக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றன செய்திகள் , நகரின் சுத்தம் பேணப்படுவது அவசியம் என்பதால் , இந்த திட்டம் தவிர்க்க முடியாத ஒன்று என்கிறார்கள் அவதானிகள்

வருடா வருடம் 9,000க்கு மேற்பட்ட இலண்டன்வாசிகள் , மிகமோசமான காற்றை சுவாசித்து , மரணம் “நேர காலத்தோடு” ஏற்பட்டு விடுகிறது என்று ஒரு குண்டைப் போடுகிறார் இலண்டன் நகர பிதா ! இலண்டனில் வாழும் பிள்ளைகளின் நுரையீரல் , முழுமையான வளர்ச்சியைக் காணாத நிலையில் இருப்பதை இவர் சுட்டிக் காட்டுகிறார். வளந்தவர்கள் ஆஸ்த்மா , ஞாபக மறதி ,இருதய அதிர்ச்சி போன்ற நோய்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதையும் இவர் இங்கே ஞாபகமூட்டத் தவறவில்லை .

இந்த நிலையில் , சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது . இன்னும் பலகடுமையான விதிமுறைகள் , நடைமுறையில் வர இருக்கின்றன என்று இவர் சுட்டிக் காட்டியுள்ளார் .இந்த மாதம் , அதாவது ஒக்டோபர் 23இலிருந்து , பத்து பவுண்ட்ஸ் மேலதிகமாகக் கட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது . வாரா வாரம் திங்கள் தொடக்கம் வெள்ளிவரை, காலை 7.00 இலிருந்து மாலை   6.00 மணி மட்டும் , இந்த மேலதிகக் கட்டண விதி முறை அமுலில் இருக்கும் . 2020இல் நகரை மிகக் குறைந்த அளவு அசுத்தமான காற்று கொண்ட தலைநகராக மாற்ற, இன்னும் சில கெடுபிடிகள் வரப்போவது நிச்சயம் என்கிறார்கள் அவதானிகள்!எதற்கும் ஒரு விலை உண்டு என்பது சரிதான்

பிறந்த மேனிப் பிரியர்கள்

“உன்னை நேசிக்க முதலில் கற்றுக்கொள். பின்பு பிறரை நேசிப்பதில் உனக்கு சிக்கல்கள் இருக்கப் போவதில்லை” . 2007இலிருந்து , நிர்வாணத்தை நேசிக்கும் அடிட்ரியா என்பவர் . தன் உடம்பைப் பார்க்கும் கோலம் இதுதான் போலும் . இந்தக் குறிப்பிட்ட நபருக்கு நீண்ட காலமாகவே “நிர்வாணம்” என்பதில் அதீதமான ஈடுபாடு இருந்து வந்துள்ளது.  வெளி நாடுகளில் இவரைப் போல்  உலாவும் “ நிர்வாணச்சாமிகள்” சிலருடனும் இவர் தொடர்பு கொண்டுள்ளார் . இது சிறிய குழுவென்றாலும் , நெருக்கமான உறவைக் கொண்ட குழு என்கிறார் இவர் . பொது இடங்களில் நிர்வாணமாக நிற்பதை அடியோடு தடை செய்யும் இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் ஆண்களும் பெண்களுமாக 15பேர் வரையில் கொண்ட குழு இருக்கிறது . தடை அமுலில் இருந்தாலும் வெவ்வேறு இடங்களில் இவர்கள் “நிர்வாணமாக “ ஒன்று கூடுவதை வழக்கத்தில் கொண்டுள்ளார்கள் . ஜகார்த்தாவின் மலைப்பிராந்தியங்களில் , மிக இரகசியமாக இவர்கள் சந்தித்து கொள்கிறார்கள் .

சந்தித்த அடுத்த கணமே ஆடைகளைக் களைந்துவிடுவோம் என்று உற்சாகமாக சொல்லும் இவர் , நாள் முழுவதும் அரசியல் தொடக்கம் அடுப்படிச் சமாச்சாரங்கள் வரை அலசுவோம் என்கிறார் . மிகக் கவனமாக எங்கள் சந்திப்புக்கான இடங்களை  தெரிவு செய்ய வேண்டி இருக்கின்றது என்கிறார் இந்த மனிதர் .

முஸ்லீம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசிய தீவுகளை ஒப்பிடும்போது , பாலி தீவில் , இந்த நிர்வாணச் சாமிகளுக்கு சுதந்திரம் அதிகம் என்று சொல்லபப்டுகிறது. என்றாலும் இந்தச் சுதந்திரம் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளால்தான் அதிகம் அனுபவிக்க முடிகின்றது என்று அலுத்துக் கொள்கிறார் ஒருவர் !

எல்லாம் துறந்த நிலை இவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் , காலம் , இடம் அதற்கு இடமளிக்க தயாராக இல்லை

சிங்கத்துக்கு இரையாக்க வரிசையில் காத்திருப்பு

பிரியமாக வளர்த்த குதிரை இறந்து விட்டால் , அதை சிங்கங்களுக்கு உணவாகக் கொடுக்க விரும்பி , ஆறு மாதங்கள் வரை டென்மார்க்கில் காத்திருக்கிறார்களாம். ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் இந்தக் காத்திருப்பு ?

காரணம் இருக்கவே செய்கின்றது . இறந்த குதிரையை தனியார் நிறுவனத்திடம்  கையளித்து , அதை மீள் சுழற்சி முறையில் இல்லாதொழிக்க , 584டொலர் தொகை செலவிட்டாக வேண்டும் . ஆனால் அதே குதிரையை , டென்மார்க்கின் தலைநகரில் உள்ள மிருகக்காட்சிசாலை நிர்வாகம் ஏற்றுக் கொண்டு , தன் சிங்கங்களுக்கு இரையாக கொடுத்து வருகின்றது . பணச் செலவு எதுவுமில்லை . அதுமாத்திரமல்ல  தமக்கு பிரியமான குதிரை மீள் சுழற்சி முறையில் , இன்னொன்றாக திரிந்து , வேறொருவர் கைக்கு போவதை பலர் விரும்பவில்லை. ஒரு குதிரையை இன்னொரு சிங்கம் உண்பது ஒரு சாதாரண நிகழ்வு .  காட்டு வாழ்வின் உணவுச் சங்கிலியில் இது ஒரு அன்றாட நிகழ்வும் கூட !.என்கிறார் இன்னொருவர் .

இப்பொழுது எல்லோருமே இதை விரும்ப ஆரம்பித்துள்ளதால், குதிரைகளோடு வருபவர்கள் தொகையும் அதிகரிக்க , காத்திருப்புக் காலம் நீளத் தொடங்கி இருக்கின்றது . அது ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம் என்கிறார்கள் மிருகக் காட்சிசாலை நிர்வாகிகள் !

இங்குள்ள சிங்கம் , புலி , கரடி ஒன்ற காட்டு மிருகங்களுக்கு , இந்தக் குதிரை இறைச்சி என்பது அவற்றின் உணவின் ஒரு பகுதியே . இதைவிட முயல் , ஆடு , வரிக்குதிரை போன்றவற்றின் மாமிசத்தையும் கொடுத்து வருகிறோம் என்கிறார் ஓர் அதிகாரி .

 

தெருவோரப் பிரார்த்தனைக்கு “ஒரு கும்பிடு”

பிரார்த்தனைகள் பொதுவாக ஆலயங்கள் , கோவில்கள் , பள்ளிவாசல்கள் போன்ற புனித ஸ்தலங்களிலேயே இடம்பெறுவதுண்டு . இதற்கு விதிவிலக்காக இடம்பெறும் பிரார்த்தனைகளும் உண்டு .தெருவில் காரில் போய்க் கொண்டிருக்கும்போது , தொழுகை நேரம் வந்து விட்டால்  காரை நிறுத்திவிட்டு , தெருவோரம் ஒரு துணியை விரித்து , அதில் உட்கார்ந்து தொழுகை செய்பவர்களும் உண்டு .இதை முஸ்லீம்களே செய்கிறார்கள் .

ஆனால் இப்படியான தொழுகைக்கு , திடீரென தடைபோட்டுள்ளது ஐக்கிய அரபுக் குடியரசு ! இப்படியான தொழுகை நிகழ்வில் இருவர் மரணமாகியதை அடுத்து , எமிரேட்ஸ் அரசு இப்படியான தொழுகைகளுக்கு தடை விதித்துள்ளதாக , இங்குள்ள பத்திரிகைச் செய்தி கூறுகின்றது . தடையை மீறினால் 500 திராம்ஸ் அதாவது  136 டொலர் தொகை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது .

நெடுஞ்சாலைகளில் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது . சமீபத்தில் நடந்த விபத்தும் மரணங்களும் , இவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்குமென்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் .

துபாய் அரசு , சமீபத்தில் அதி வேகமாக ஓடும் சாரதிகள் , பிடிபட்டால் 816டொலர் தொகை வரை அபராதமாகச் செலுத்தும் சட்டத்தை அறிமுகம் செய்திருந்தது . வேகம் விவேகமானது அல்ல என்பதை அறிய. மரணங்கள் வரை காத்திருப்பு எதற்கு ?

24.10.17

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *