கிரிக்கெட் ஒ கிரிக்கெட் ………

கிரிக்கெட் ஒ கிரிக்கெட் ………

12 views
0

இன்றைய நாட்களில்  கிரிக்கெட் விளையாட்டு என்பது சிறுவர் தொடக்கம்  பெரியவர்கள் வரை விரும்பும் விளையாட்டாக மாறி வந்திருக்கின்றது. அது மாத்திரமல்ல தொழில் ரீதியாக ஆண்டு முழுவதும் இதை விளையாடி நிறையச் சம்பாதிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள் . மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் ஆட்ட அறிமுகங்களின் பின்னர் , இந்த விளையாட்டு பல கோடிக்கணக்கானவர்களின் டார்லிங்காக மாறி வருகின்றது . குறிப்பாக , ஐபீஎல் என்று அழைக்கப்படும், இந்தியாவின் இருபது ஓவர்கள் கொண்ட ஒரு நாள் ஆட்டங்கள் , உலகின் சிறப்பு ஆட்டக்காரர்கள் ஒன்று கூடும் ஒரு பெரிய களமாக மாறி இருப்பதுடன் , கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதிக்க , பணம் காய்க்கும் மரங்களாக மாறி இருக்கின்றன . இந்த  விளையாட்டு எங்கே , எப்படித் தோன்றியது ? எந்த விளையாட்டுக்கும் இல்லாத அளவுக்கு மீறிய ஆர்வம் குறிப்பாக ஆசிய நாடுகளில்  எப்படி ஆரம்பித்தது ? இந்த விளையாட்டுப் பற்றிய சுவாரஸ்சியமான தகவல்களையும் , அடிப்படை உண்மைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

இந்த விளையாட்டின் தோற்றுவாயில் இங்கிலாந்து என்பதில் சந்தேகமே இல்லை .16ம்  நூற்றாண்டில் , இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடியதற்கான பதிவுகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன . கிரிக்கெட்டுக்கான விதை போடப்பட்டதும் ,பெரு விருட்சமாக கிளை விட்டு உலக நாடுகளெங்கும் பரந்து விரிந்ததுக்கும் இங்கிலாந்தே காரணம் என்று சொல்லி விடலாம் .  இது பாடசாலைகளிலும் , விவசாயம் செய்யும் சமூகத்தினராலும் , மற்றும் பல இடங்களிலும் விளையாடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது . 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின்  பிரபுக்கள் இதை ஒரு நல்ல விளையாட்டு என்று பார்த்ததோடு , சூதாட நல்லதொரு வாய்ப்பு என்ற கோணத்திலும் இந்த விளையாட்டை பார்க்கத் தொடங்கினார்கள் . இதை ஒரு பணம் காய்க்கும் மரமாக , அன்றே பார்க்கத் தொடங்கி விட்டார்கள் . இந்த மண்ணாசையும் , பெண்ணாசையும் , பொன்னாசையும் யாரைத்தான் விட்டு வைத்திருக்கின்றது ? விளையாட்டு விளையாட்டாக பணத்தியும் சம்பாதித்து விடுவோம் என்ற அடிப்படை ஆசைதான் , கிரிக்கெட்டின் வளர்ச்சியின் முதலாம் அத்தியாயம் என்று சொல்லி விடலாம் .

கைக்குட்டையில் விதிமுறைகள்

பணம் பெருமளவு கையாளப்படலாம் என்ற நிலையில் , இந்த விளையாட்டுக்கு நல்ல விதிமுறைகள் தேவை என்று பிரபுக்கள் கருதியதால் , எல்லோரும் ஏற்கும் வகையில் , விளையாட்டுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன . 1744இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகால விளையாட்டு விதிமுறைகள் , கைகுட்டையிலேயே அச்சிடப்பட்டது என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு தகவல் !.(அன்றைய நாட்களில் ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தாலென்ன , தங்கள் கைவசம் ஒரு கைக்குட்டை இல்லாதவர்களைக் காணமுடியாது ). எனவே விதிமுறைகளில் சந்தேகம் வந்தால் , சட்டென பாக்கெட்டுக்குள் உள்ள கைக்குட்டையை எடுத்து ,விதிமுறைகளை ஒருமுறை  சரி பார்த்துக்கொள்ள , இது நல்ல உதவியாக இருந்திருக்கின்றது . இன்றும் இப்படியான விதிமுறைகள் அச்சிடப்பட்ட கைக்குட்டை , இலண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சீசீ கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இது கற்பனைக் கதையல்ல!

1805 தொடக்கம்,  ஆண்டுக்கு ஆண்டு ஒரு கிரிக்கெட் மோதல் இடம்பெறவே செய்தது .இந்த மோதல்களில் மிக மோசமாக , ஆபத்தான் முறையில் , ஒரு இளம் பிரபு பந்து வீசினார் என்று சொல்லப்பட்டாலும் , அதற்கான பதிவுகள் இருக்கவில்லை . பன்னாட்டு மோதல் என்று பார்த்தோமானால் , 1877இல் இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணியுடன் மோதியதைத்தான் சொல்ல வேண்டும் . மெல்பர்னில் நடந்த  இந்த முதல் மோதலில் , அவுஸ்திரேலிய அணிதான் வெற்றிவாகை சூடியது . ஆனால் இது ஒரு டெஸ்ட் போட்டி என்று சொல்லப்பட்டு, அது 5நாள் டெஸ்ட் தொடர் என்று வரையறுக்கப்பட்டு , அந்த ஐந்து நாட்களும் போட்டியைத் தொடர்வது என்பது சோதனைக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளதாக சொல்கின்றன சரித்திரத் தகவல்கள் !

1882 இல் இலண்டன் ஓவல் மைதானத்தில் , அவுஸ்திரேலியாவும் , இங்கிலாந்தும் மோதிக் கொண்டபோது ,  அவுஸ்திரேலிய அணி அடைந்த வெற்றியே, எதிர்காலங்களில் “ஆஷஸ்” Ashes என்று அழைக்கப்படும் இரு நாடுகளுக்கு இடையிலான ,வருடாந்த தொடர் மோதல்களுக்கு வித்தாக அமைந்தது . இந்தப் போட்டி முடிவில் , “ மரணம் அடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் !. உடல் எரிக்கப்பட்டு , சாம்பல் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது” என்று இங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன . இதுவே நாளடைவில் சாம்பல் என்று பொருள்படும் Ashes என்று இன்றுவரையில் அழைக்கப்பட்டு வருகின்றது .இந்தத் தகவல் நமக்குத் தெரிய வரும்போது , அட இதற்காகவா இந்தப் பெயர் என்று ஆச்சரியப்படுகிறோம் .

ஆட்டத்துக்குள் ஆட்டம்

மகாபாரத்தில் சகுனி ஆடிய ஆட்டம் , அந்தக் காப்பியத்தோடு கரைந்து போய்விடவில்லைப் போலும் . இந்தப் பூமி கணனி உலகமாக பரிணமித்தும் , சூதாட்டம் பல வடிவங்களில் , இன்னமும் பல்லிளித்துக் கொண்டே இருப்பதை நாம் காணலாம் . சூதாட்டமே கிரிக்கெட் வளர்ச்சிக்கு முதல் “மைல் கல்” என்றால் நீங்கள் நம்பத் தயாரா ?

நம்பத்தான்  வேண்டும் !சூதாட்டம்தான் முதன் முதலில் ஆதரவாளர்களை இந்த விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது . . சூதாடுபவர்கள் தங்கள் பந்தயப் பணம் பத்திரமாக இருப்பதற்காக தங்கள் சொந்த குழுவை ஏற்பாடு செய்து கொண்டனர். இந்த குழுக்கள் ” கவுண்டி குழுக்கள்” County Groups என்று அழைக்கப்பட்டன. இவை 1660 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்டன. கவுண்டி பெயர்களை பயன்படுத்தி நடந்த முதல் விளையாட்டு 1709 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கு முன்னரே இப்படிப்பட்ட ஆட்டங்கள் நடந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. 1697 ஆம் ஆண்டு நடந்த போட்டி சசெக்சுக்கும் வேறொரு மாவட்டத்துக்கும் இடையே நடந்திருக்கலாம். இந்தத் தகவல்கள் நமக்கு தெரியவரும்போது , ஓடும் குதிரைகளில் மட்டும்தான் பந்தயப் பணம் கட்டினார்கள் என்றில்லாமல் , ஆடும் விளையாட்டு வீரர்கள் மீதும் பணம் தொன்று தொட்டே கட்டப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம் .  .  விளையாட்டு என்பதை பொழுதுபோக்கு எனபதை மட்டுமே குறியாகக் கொள்ளாது, எப்படிப் பணம் புரட்டலாம் என்பதில் , அப்பொழுது இருந்தவர்களே தீவிரமாக இருந்திருப்பதை , நம்மால் இப்பொழுது அறிய முடிகிறது. ஆட்டங்களுக்குள் நடந்த ஆட்டம் என்றே இந்தப் பந்தயங்களைச் சொல்லத் தோன்றுகின்றது

கனவான்களின் விளையாட்டு

இந்த விளையாட்டுக்கு “கனவான்களின் விளையாட்டு “ என்றொரு பெயரும் உண்டு . ஏனைய விளையாட்டுக்களைப் போலல்லாது, இந்த விளையாட்டுக்கு துடுப்பாட்ட மட்டை , கிரிக்கெட் பந்து , விக்கெட்டுகள் ஆறு , செப்பனிடப்பட்ட களம் என்று பல தேவைப்படுகின்றன . விளையாடுபவர்களும் வெள்ளை உடை அணிந்து , வருவார்கள் . கனவான்களே இந்த விளையாட்டை பெரிதுபடுத்தியதாலும் , கனவான்களைப் போல பளிச்சென்று வெள்ளை உடை அணிந்து களத்தில் குதிப்பதாலும் , பணச் செலவை அதிகம் ஏற்படுத்தும் ஒன்று என்பதாலும் , இது கனவான்களின் விளையாட்டு என்று அழைக்கப்பட்டதில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை . அது மாத்திரமல்ல . இந்த விளையாட்டை விளையாட வகுத்த விதிமுறைகளும் , சாதாரண பாமரனால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே கருத வேண்டும்

இந்த விளையாட்டில் உபயோகிக்கப்படும் பல பதங்கள் , முறையாக அறியப்படும்போது , விளையாட்டை வெகுவாக ரசிக்க முடிகிறது . என்றாலும் அமெரிக்கர்களின் பார்வையில் இது “சோம்பேறிகளின் “ விளையாட்டாகவே நோக்கப்படுகின்றது . . ஒருவர் பந்தை வீச , இன்னொருவர் பந்தை அடிக்க , மைதானத்தில் இன்னும் பத்து சோம்பேறிகள் சுற்றி நிற்க , இதை வேடிக்கை  பார்த்தபடி இன்னுமொரு சோம்பேறிக் கூட்டம் , பவிலியனில் உட்கார்ந்திருக்க நடக்கும் விளையாட்டு இந்தக் கிரிக்கெட் என்று நகைச்சுவையோடு சொல்வதுண்டு .

ஆனால் இந்த விளையாட்டு , டென்னிஸ் விளையாட்டைப் போல தொழில் நுட்பம் நிறைந்த ஒரு விளையாட்டு என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

விளையாட்டும் தொழில் நுட்பமும்

துடுப்பாட்ட வீரருக்கு பந்து வீசும்போது , அதற்கென ஒரு பிரத்தியேகமான தொழில் நுட்பம் தேவைப்படுகின்றது . இல்லையென்றால் நடுவர் No Ball என்று அறிவித்து விடுவார் . குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் வீசப்பட்டால் அது wide ball ஆகி விடும் . அதையே நேராக துடுப்பாட்டக்காரரை நிலைதடுமாற வைக்கும் நோக்கில் வீசினால் , அது பவுன்சராகி விடும் . வித்தை காட்டுவது போல சுழற்றி வீசினால் , அது Googly  ஆகி விடும் .பந்து வீசும் முறையும் விதிமுறையை மீறாததாக இருக்கவேண்டும் . உலகப் புகழ் வாய்ந்த இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரனின் பந்து வீச்சு சர்ச்சைக்கு உள்ளாகி , அவர் பந்து வீசுவது விதிமுறைக்கு மாறானது என்று அவர் பந்து வீச்சு , அதிகாரிகளின் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டு , அதன் பின்பே அங்கீகாரம் கிடைத்தது .

இரு பக்கங்களிலும் மூன்று விக்கெட்டுகள் செங்குத்தாக நாட்டப்பட்டு இருக்குமல்லவா ? இவைக்கு இடையிலான தூரம் 20.12  மீட்டராக இருக்க வேண்டும் . மூன்று விக்கெட்டுகளை நடும்போது ,இவைக்கு இடையிலானஇடைவெளி 22.86 செ.மீட்டராக இருக்க வேண்டும். மூன்று விக்கெட்டுகளுக்கும் மேல் இரண்டு “Bales” எனப்படும் துண்டுகள்  இருக்க வேண்டும் .  ஒரு ஓவரில் , ஆறு பந்துகள் வீசப்படுவது எல்லோரும் அறிந்த ஒன்று . இந்த ஆறு பந்துகளையும் எதிர்கொண்டு , ஒரு ஓட்டம் கூட எடுக்க முடியா விட்டால் , அது (“மெய்டன்”) கன்னி ஓவர் என்று அழைக்கப்படும். துடுப்பாட்ட வீரர் “தீண்ட முடியாத பந்துகளைக்” கொண்ட ஓவர் என்பதால் இது கன்னி கழியாத  ஓவர்  என்றாகிறது. துடுப்பாட்ட வீரர் , எந்த ஒட்டங்களையும் எடுக்காது ஆட்டம் இழந்தால் , “டக்” எடுத்தார் என்ற பதம் உபயோகிக்கப்படுகின்றது. நாம் தமிழில் ஒரு பாடத்தில்  எந்தப் புள்ளிகளிலும் எடுக்காவிட்டால்,  முட்டை எடுத்தார் என்று சொல்வதுபோல , சூட்சகமாக தாரா முட்டை கிடைத்தது என்பதை “டக்” எடுத்தார் என்று சொல்கிறார்கள் . அதிலும் முதலாவது பந்து வீச்சில் , துடுப்பாட்டவீரர் அடுத்தடுத்து மூன்று தொடர்ச்சியான பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் , ஹட்ட்றிக்(Hat trick) என்கிறார்கள் . மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் , முன்னைய நாட்களில் ஒரு தொப்பியை அன்பளிப்பாக கொடுத்து வந்த காரணத்தினால் , இந்தப் பெயர் இதனோடு ஒட்டி இருக்கின்றது . ……

வீட்டுச் சாப்பாட்டை விட, ஹம்பேர்கர் , பிட்ஸா போன்ற “வேக உணவுகளுக்கு” மவுசு ஏற்பட்டுள்ளது போல, இன்றைய நாட்களில் பாரம்பரியமாகத் தொடரும் டெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டு , ஒரு நாள் போட்டிகளிலான மோகம் இப்பொழுது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எதிலும் வேகம் எங்கும் வேகம் என்றைய நிலை இன்று மேலோங்கி இருப்பதால்,ஓரு நாள் கிரிக்கட் போட்டிகளே பலரின் அபிமானத்துக்குரியவையாக மாறி வருகின்றன. அந்தந்த நாட்களில், முடிவுகள் தெரியவருவதுதான் பிரதான காரணம். அதிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் என்பதால், குறித்த இலக்கை அடைய, துடுப்பாட்ட வீரர்களின் துணிச்சலான விளாசல்கள் தேவைப்படுவதும், இப்படி அடிக்க விடாமல் சாதுர்யமாகப் பந்துகளை வீசவேண்டியதும், இந்த ஒரு நாள் விளையாட்டில் அவசியமாகின்றது. பார்ப்பவர்களுக்கும் பரவசம் ஏற்படுத்தும் இந்த விளையாட்டுகளில், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருப்பதில்லை. எனவே அணிகளைத் தெரிவுசெய்யும்போதும், ஒரு நாள் ஆட்டத்துக்குரிய அணியில், விளாசல் மனனர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவர்கள் நிதானமாக விளையாட வேண்டும். அதிலும் ஆரம்பத் துடு;பாட்டக்காரர்கள் என்று வருபவர்களிடம். தனித்துவமான ஒரு திறமையை எதிர்பார்க்கிறார்கள். முழுமூச்சோடு பந்துகளை வீசும் அதிவேக பந்து வீச்சாளர்களை இவர்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். அணியின் தடுப்பு வேலிகள் போல செயற்படுபவர்கள் இவர்கள். இவர்கள் வேகமாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தால்அணி தடுமாறும் நிலை வரலாம்.
கிரிக்கெட்டில் ஓவர்கள்

“ஓவர்” என்ற பதம் ,  கிரிக்கெட்டில் எத்தனை பந்துகளை ஒருவர் வீச முடியும் என்பதற்கு குறிக்கப்படும் சொல்லாகும். 1899வரை, 4 பந்துகளை வீசினால் ஒரு ஓவர் முடிகின்றது என்று இருந்த விதிமுறை, பின்பு ஐந்தாக மாற்றப்பட்டது. 1900இல் ஒரு ஓவரில் வீசப்படக்கூடிய பந்துகள் ஆறாக மாற்றப்பட்டன. இன்றுவரை இந்த விதிமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் 1922இல் அவுஸ்திரேலிய ஓவரில் எட்டு பந்துகள் வீசப்பட்டுள்ளன. இதன் அண்டை நாடான நியூசிலாந்துக்கும் இந்த எட்டுப் பந்துகள் கொண்ட ஓவர் முறை பரவியது. அடுத்து தென் ஆபிரிக்காவும் இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது. ஒரு சோதனைக்காக இங்கிலாந்திலும் எட்டுப் பந்துகள் கொண்ட ஓவர் முறை, 1939இல் பரீட்சார்த்தமாக இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் ரக கிரிக்கெட் விளையாட்டுக்கள், இரண்டாம் உலக மகாயுத்த காலமான 1940இல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பமாகியபோது, ஆறு பந்துகள் கொண்ட ஓவர்களே வீசப்பட்டன. 1947இல் ஆட்டத்துக்கு ஏற்றவாறு , ஆறு அல்லது எட்டு பந்துகள் கொண்ட ஓவர்கள் விசப்படலாமென்று சட்டம் வரையறுக்கப்பட்டது. 1979,80 அவுஸ்திரேலிய நியூசிலாந்து சீசன்கள்; முடிவடைந்ததும் ஆறு பந்து ஓவர்கள் என்ற முறையே உலக நாடுகள் எங்கும் நடைமுறைக்கு வந்தன. 2000மாவது ஆண்டிலிருந்து, இது ஒரு கிரிக்கெட் விதிமுறையாக்கப்பட்டு விட்டது. இது ஓவர்களின் கதை.
கிரிக்கெட் மேய்ப்பர்கள்
கிரிக்கெட் விளையாட்டுக்களின் மேய்ப்பர் என்று சொல்லப்படும் “ஐசிசி” என்ற அமைப்பு 1909இல் இம்பீரீயல் கிரிக்கெட் கொன்பெரென்ஸ் என்றே இருந்துள்ளது. பின்பு 1965இல் பன்னாட்டு கிரிக்கெட் கொன்பெரன்ஸ் என்று மாற்றம் பெற்றது. இதுவே பன்னாட்டு கிரிக்கட் கவுன்சிலாக (ஐசிசி)1989 தொடக்கம் உருவெடுத்துள்ளது. 1909இல் இதன் ஆரம்ப அங்கத்துவ நாடுகளாக , இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரி;க்கா ஆகிய நாடுகளே இருந்துள்ளன. இப்பொழுது அதன் முழு அங்கத்தவர்களாக, டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 12 நாடுகள் இருக்கின்றன. போட்டிகளுக்கான நடுவர்களை நியமிப்பது, விதிமுறைகளை வகுப்பது, போட்டிகளின் திகதிகளை ஒழுங்குபடுத்துவது பன்னாட்டு கிரிக்கெட் விளையாட்டுக்களை நிர்வகிப்பதே இந்த அமைப்பின் பணியாகும்.104 அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தலைமையகம் துபாயில் இருக்கின்றது. இந்த அமைப்பின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸகீர் அபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் மூன்று நாடுகளாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில்; அங்கத்தவர்களாகினார்கள் என்று ஆரம்பத்தில் கூறினோம் அல்லவா? இவர்களைத் தொடர்ந்து 1926இல் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் முழு அங்கத்துவ நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. 1952இல் பாகிஸ்தான் ஏழாவது முழு அங்கத்துவ நாடாக இணைக்கப்பட்டது. 1961இல் தென் ஆபிரிக்கா காமென்வெல்த் அமைப்பை விட்டு விலகியது காரணமாக தன் அங்கத்துவத்தை இழந்தது. 1981இல் முழு அங்கத்துவராக இணைந்ததுதான் இலங்கை. இதன் விளைவாக மீண்டும் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.

1989இல் இந்த அமைப்பு முன்பே குறிப்பிட்டதுபோல, பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் என்று பெயர் மாற்றம் பெற்றதோடு, புது விதிகளும் புகுத்தப்பட்டன. மண்டேலாவின் ஆட்சியின் பின்னர் நிறவெறி ஒதுக்கல் இல்லாதொழிந்ததால், 1991இல் தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும், முழு அளவிலான அங்கத்துவம் வழங்கப்பட்டது. 1992இல் 9வது டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடாக, ஆபிரிக்க நாடான சிம்பாவேக்கு அங்கத்துவம் கிடைத்தது. பங்களாதேஸ், 2000மாவது ஆண்டில் பத்தாவது நாடாக அங்கத்துவம் பெற்றுக் கொண்டது. இறுதி வரவுகளாக, இந்த ஆண்டு ஆபுகானிஸ்தானும், அயர்லாந்தும் 11வது 12வது நாடுகளாக இணைந்துள்ளன. முழு அங்கத்தவம் பெற்ற நாடுகளின் பட்டியல் இதுதான்!
மூவர்களாகிய நடுவர்கள்.
ஒரு போட்டி நடைபெறும்போது ,  இரு நடுவர்களே காணப்படுவார்கள். 1992 தொடக்கம் இந்த நடுவர்களின் எண்ணிக்கை மூன்றாகியது. தென் ஆபிரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியின்போது, “ரன்அவுட்களை” தொலைக்காட்சி மூலம் சரிபார்க்க, மூன்றாவது நடுவர் சமூகமாகியிருந்தார். ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழத்தல், பந்தைப் பிடித்தல், எல்லையைத் தாண்டும் பந்தைக் கவனித்தல் போன்ற விடயங்களில் , இந்த நடுவரின் பங்களிப்பு, பெரிதும் பயனளிக்கின்றது. எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழப்பதைக் கண்காணிக்கும் “கழுகுக் கண்கள்” தொழில் நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்தத் தொழில் நுட்பம் பந்து போகும் திசையைத் துல்லியமாகக் கவனிக்க உதவி வருகின்றது.
இந்த நடுவர்களே ஆட்டத்தின் நீதிபதிகள். களத்தில் நிற்கும் இரு நடுவர்களில் ஒருவர் பந்து வீச்சாளரின் விக்கெட்டுக்கு பின்புறம் நிற்பார். மற்றொரு நடுவர் துடுப்பாட்டக்காரரின்விக்கெட்டிலிருந்து 15-20 மீற்றர் தொலைவில்  “square leg” எனப்படும் நடுப்பகுதியில் நிற்பார்.
.ஆட்டத்திற்கான ஸ்டம்புகள். துடுப்பு மட்டைகள்


“பிட்ச்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நடுக்களத்தில் ஒன்றுக்கு ஒன்று ஒத்திருக்கும் மூன்று மர ஸ்டம்புகள் செங்குத்தாக நடப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதி இரண்டு துண்டு மரக்கட்டைகளால் பிணைக்கப்படுகின்றது. இவற்றின் மொத்த உயரம் 72செ.மீ.(28அங்குலம்). மூன்று ஸ்டம்புகளின் ஒருங்கிணைந்த அகலம் 23செ.மீ(9அங்குலம்). இந்த மூன்று விக்கெட்டுகளும் Off Stump, Middle Stump, Leg Stump என்று அழைக்கப்படுகின்றன. பிட்சின் “பாதுகாப்பான பிரதேசத்தை” வரையறுக்க கீறப்பட்டுள்ள கோட்டைத் தாண்டி துடுப்பாட்ட வீரருக்கு பந்துவீசப்பட்டால், அது பெறுமதியற்றNo Ball என்று நடுவர் அறிவித்து விடுவார். இதனால் எதிரணிக்கு ஒரு ஓட்டம் கிடைப்பது மட்டுமல்ல, பந்துவீச்சாளர் மேலதிகமாக ஒரு பந்து வீசவும் வேண்டும். இந்த எல்லைக் கோட்டை “க்ரீஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த எல்லைக் கோடு “பாப்பிங் கிரீஸ்” அல்லது “பவுலிங் க்ரீஸ்” என்று அழைக்கப்படுகின்றது.
கிரிக்கெட் ஆடத் தேவைப்படும் துடுப்பு மட்டை வில்லோ என்ற மரத்திலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வெள்ளை வில்லோ என்று அழைக்கப்படும் இனத்தையே துடுப்பு மட்டை செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றார்கள். இதன் நீளம் , அகலம் போன்றவை முறையே 96.5செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்ட்ஸ் ஆகும். துடுப்பு மட்டையை முதலில் வடிவமைத்தவர் ஜோன் பால் என்பவராகும்.
விளையாட்டுக்கள் உடற்பயிற்சிக்காக உள்ளவை என்ற காலம் மலையேறிப்போய், இன்று அதனால் நன்றாக உழைக்கவும் முடியும் என்பதை விளையாட்டுக்கள் காண்பித்திருப்பது காலஞ் செய்த கோலம்! இதில் கிரிக்கெட் என்ற விளையாட்டும் ஒன்றாகி இருக்கின்றது.

05.11.2017   புதுவிதி

 

 

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *