வியப்பூட்டும் [இணைய ] வியாபாரி !-அமேசன்

வியப்பூட்டும் [இணைய ] வியாபாரி !-அமேசன்

19 views
0

இன்று உலகின் மிகப் பிரமாண்டமான இணைய நிறுவனமாக மிளிரும் அமேசன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி நம்மை மிரள வைக்கின்றது . இப்பொழுது தன் அமெரிக்க தலைமை அலுவலகத்துக்கு இணையாக , இன்னொரு பாரிய இரண்டாவது அலுவலகத்திற்கு பொருத்தமான இடமொன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றது . குறைந்த பட்சம் ஒரு மில்லியன் ஜனத்தொகையாவது , தெரிவு செய்யும் நகரில் இருக்கவேண்டும் என்பதையே அமேசன் விரும்புகிறது . விமான நிலையம் பக்கத்தில் இருக்க வேண்டும் , நல்ல படித்த சமுதாயம். வர்த்தகத்துக்கு உகந்த சிநேகபூர்வமான சூழல் , போக்குவரத்துக்கு பொருத்தமான சூழல் , என்றெல்லாம் பலதையும் இந்த நகரில் அமேசன் எதிர்பார்க்கிறது . அமெரிக்காவின் அட்லாண்டா நகரும் , கனடாவின் மிகப் பெரிய நகரமான டொராண்டோவும் தெரிவாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நம்பப்படுகின்றது ..மொத்தமாக இந்த இரு நகரங்கள் உட்பட 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு , அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன . 2018இல்தான் எந்த நகரமென்பது தீர்மானமாகத் தெரிவு செய்யப்படும்  என்று சொல்லப்படுகின்றது

ஒரு நிறுவனத்தின் உச்ச வளர்ச்சியைக் காண்பிக்க இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் ?இன்னும் பல ஆயிரம் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பளிக்க , ஒரு நிறுவனம் தயாரென்ற நிலையில் , , அதன் வளர்ச்சி வெளிப்படையாகவே தெரிகின்றது .

1995இல் அதாவது 22வருடங்களுக்கு முன்பு ஜெப் பெசோஸ் என்பவர் , தன்னை ஒரு இணைய ,  புத்தக வியாபாரியாக இனம் காட்டிக்கொண்டபோது, எவருமே இதன் இராட்சத வளர்ச்சியை , கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அந்தக் காலகட்டம் இணைய வியாபாரம் பொது மக்களிடையே பெரிதாக பிரபல்யம் பெற்று இராத காலம் . அப்படியொரு நிலையில் , இணையத்தை முழுக்க முழுக்க நம்பி , அதன் மூலம் , தன் வியாபாரத்தை ஒருவர் வளர்க்கத் திட்டமிட்டால் , அவர் வளர்வார் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் ?

கடபிரா [Cadabra] என்ற பெயர்தான் , அமேசனுக்கு பதிலாக இந்த நிறுவனத்துக்கு கொடுபட இருந்த பெயர் என்பது உங்களுக்கு ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கலாம் . “Relentless”ரிலென்ட்லெஸ் என்ற பெயர் மீதும் பெசோஸ் கண் வைத்திருந்தார் . இறுதியில் அவர் தெரிவு செய்தது அமேசன் என்ற பெயரைத்தான் ! உலகின் மிகப் பெரிய ஆற்றின் பெயரை , தன் நிறுவனத்தின் பெயராக்குவதில் அவருக்கு பெரு மகிழ்வு இருந்தது .

தன்  நூல் இணைய விற்பனை நிலையத்தை திறந்து , ஒரேயொரு மாதத்தில் , 50 வேறுபட்ட மாவட்டங்களிலும்   45 உலக நாடுகளிலும் , அமேசன் தனது புத்தக விற்பனையை நடாத்தி இருக்கின்றது என்று அறிய வரும்போது , நாம் வியப்பின் வசப்பட்டு விடுகிறோம். இந்த நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில் , கசக்கிப்பிழிந்து வேலை வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கின்றது . ஆரம்பத்தில் இங்கு இரவு பகல் பாராது வேலை செய்த ஒருவர் , தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு தன்னை வருத்தி வேலை செய்திருக்கின்றார் . தான் வேலைக்கு வந்த காரை மறந்து , மிதி வண்டியில் தினமும் வீடு போய் வருமளவுக்கு இவர் மறதி இருந்துள்ளது . விடிகாலையில் வேலைக்கு போய் , பிந்திய இரவில்தான் இவர் வீடு திரும்புவார் . தனக்கு வரும் மின்னியல் கடிதங்களை திறந்து பார்க்க நேரம் இல்லாத அளவு வேலை. அப்படி ஒருநாள் தன் மின்னஞ்சலை திறந்தபோது , இவருக்கு  கார் பிழையான இடத்தில் நிறுத்தப் பட்டமைக்காக , அதிகாரிகள் தண்டம் விதித்திருப்பதும் , அதை உரிய காலத்தில் கட்டாததால் .காரை எடுத்துச் சென்றதையும் . குறிப்பிட்ட நாட்களுக்குள் இவர் நேரில் சமூகமளிக்கத் தவறியதால் , கார் ஏலத்தில் விற்கப்பட்டுவிட்டது என்பதையும் இவர் பின்னால்தான் அறிந்து கொண்டுள்ளார் . அந்த அளவுக்கு வேலையோடு “ஐக்கியமாகி “ இருந்துள்ளார் இந்த ஊழியர் !

இது இவரின் கதை மட்டுமல்ல . இங்கு ஆரம்பத்தில் பணியாற்றிய அனைவருக்குமே இந்தச் சங்கடம் இருந்துள்ளது . வேலையை முடிக்க மனைவி , பிள்ளைகளையும் அழைத்து வந்து வேலையை முடித்த சம்பவங்கள் நிறைய உள்ளன என்று சொல்லப்படுகின்றது . இரவு தமது கார்களில் உறங்கி விட்டு , காலையில் வேலையை  குடும்பமாக ஆரம்பித்து விடுவார்களாம் . அந்த அளவுக்கு எப்பொழுதுமே இங்கு ஊழியர் பற்றாக்குறை நிலவி இருக்கின்றது . இந்தக் கால கட்டங்களை எல்லாம் தாண்டி வந்தமையால்தான் , இப்போதெல்லாம் அதிக வேலைப்பளு இருக்கும் காலங்களில் , “சீசனல்” தொழிலாளிகள் என்று மேலதிக ஊழியர்களை காலத்துக்கு காலம்  பணிக்கு  அமர்த்தி வருகிறார்களாம்.

 

“வேகம் எதிலும் வேகம் “ என்பதுதான் அமேசன் நிறுவன அதிபரின் தாரக மந்திரமாக இருந்து வந்துள்ளது . இதன் விளைவாக அமேசன் விநியோக நிலையங்கள் பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளன. 90 களின் பிற்பகுதியிலும்,   2000இன் ஆரம்பக் காலங்களிலும் அமேசன் நிறுவனம் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளது . சமையல் உபகரண விற்பனை ஆரம்பித்தபோது , கத்திகளைப் பாதுகாக்க நல்ல பொதிசெய்ய முடியாத நிலையில் , கத்திகளைக் கையாள்வதில் பல சிக்கல்களை சந்தித்துள்ளார்கள் . கணனிகள் மணிக் கணக்காக இயங்காமல் முரண்டு பிடித்ததால், ஊழியர்கள் விநியோகம் செய்யப்பட வேண்டிய , ஏராளமான பொருட்களைச் சுற்றி  உட்கார்ந்தபடி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார்கள் .

2002இல் அமேசன் அதிபர் அறிமுகப்படுத்திய “இரு பிட்ஸா அணி” யில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் “கசக்கிப் பிழியப்பட்டார்கள் “ என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம் . இந்த அணியில் வந்து சேர்ந்தவர்கள் , ஏன் இதில் வந்து இணைந்தோம் என்று வெறுத்துக் கொள்ளும் அளவுக்கு , இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.  தங்கள் சேவை அதிருப்தி மேலீட்டால் , வாடிக்கையாளர்கள் மின்னஞ்சலை நேராக அதிபருக்கு அனுப்ப முடியும் . அதை வாசித்தபின்னர் , அதே மின்னஞ்சலை சம்பந்தபட்டவருக்கு அனுப்பும் பொது விளக்கம் கேட்டு மறக்காமல் “?”” என்ற கேள்விக்குறியுடன் ஒரு மிரட்டலான கடிதத்தியானுப்பி வைப்பார் பெசோஸ் ! வாடிக்கையாளர்களின் குரல்  நிறுவனத்துக்குள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதில் இவர் குறியாக இருந்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனித்தாக வேண்டும் .

மொத்தம் 341,400 ஊழியர்களை வைத்துக் கொண்டு , வருடத்துக்கு வருடம் பில்லியன் டொலர் கணக்கில் இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக வளர , இப்படி ஒரு கண்டிப்பும் , கட்டுப்பாடும் தேவைப்பட்டுள்ளது என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது .

மின்னூல்களை வாசிக்க உதவும் கிண்டில் எனப்படும் வாசிப்புக் கருவி உற்பத்தி, இணைய நூல் விற்பனை வரை நீளும் இதன் இணைய வர்த்தகம் வியப்புக்குரியது . திரைப்படங்கள் , பாடல்கள் , புத்தகங்கள் , வீட்டு உபகரணங்கள் , மின்னியல் சாதனங்கள் , சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்கள் என்று மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் சாதனங்கள் இவர்களிடம் உண்டு . , அமேசன் இன்று வீட்டுக்கு வீடு காணப்படுகின்றது என்றே சொல்ல வேண்டும் . வீட்டில் கணனி வசதி இருந்தால் அங்கே அமேசனும் இருப்பார் என்ற அளவுக்கு , “அமேசன் சேவை அனைத்துலகுக்கும் தேவை “ என்ற நிலை வந்து சேர்ந்துள்ளது . அமேசன் உலகின் மிகப்பெரிய ஆறு என்று பாடசாலைகளில் படித்தோம் . இந்தக் கணனி யுகத்தில் , அமேசன் உலகின் மிகப்பெரிய மின்னியல் விற்பனை நிறுவனம் என்ற தகவலை அறிய வருகிறோம் .

அமேசன் இழுத்து மூடப்படவேண்டிய ஒன்று என்ற காரசார விமர்சனமே  வெளிக்கிளம்பிய வணணம் இருந்தது . ஆனால் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக இருந்த பெசோஸ் “பெரிதாக வேகமாகச் செய்யுங்கள் “ என்ற சுலோகங்களைத் தாங்கிய ரீ ஷர்ட்களை ஊழியர்களை அணியச் செய்தார் . கடுமையாக உழைக்கச் செய்தார் . ஒரு வருடத்துக்குள்  (1996-97) 1,000,000  வாடிக்கையாளர்கள் . வருமானம் 15.7மில்லியனிலிருந்து 148 மில்லியனாக ஏறி இருக்கின்றது . இதுவே 1998இல்  610 மில்லியன் டொலராகியது . டைம்ஸ் சஞ்சிகை 1999இன் சிறந்த மனிதராக அமேசன் அதிபரையே தெரிவு செய்தது . இதன் வாடிக்கையாளர்களும் 350,000 ஆக அதிகரித்து விட்டார்கள்.

      

“Whole Foods Market “ என்பது அமெரிக்காவில் நல்ல சுகாதாரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் , நாடளாவிய கிளைகளைக் கொண்ட ஒரு பாரிய சுப்பர் மார்கெட்  .  இந்த ஆண்டு இந்த நிறுவனத்தையும் அமேசன் விலைக்கு வாங்கிக் கொண்டு விட்டது . மின் உற்பத்தி செய்யும் 18 காற்று ஆலைகளையும்  , சூரிய கதிரில் இயங்கும் ஆலைகளையும் அமேசன் நிர்வகித்து வருகின்றது .ஆண்டொன்றுக்கு சுமாராக 90,000 வீடுகளுக்கு அவசியப்படும் அளவு மின் உற்பத்தி இவற்றால் செய்ய முடியுமாம் .

பல தடைகள்தாண்டி . இன்று மின்னியல் உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் , அமேசனின் சாம்ராஜ்யம் , இன்னும் பெரிதாக விரியும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .

05.11.17 உதயன் வாரமலர்

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *