கூட இருந்தவள் அனுப்பிவைத்த கூலிக்கொலையாளி

13 views
0

மனைவி என்ற அந்தஸ்தில் கூடஇருந்துகொண்டு, குழிபறிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கணவனிடம் உள்ள பணத்தை அபகரிக்கும் பேராசை, கட்டிய கணவனின் கதையை முடித்துவிடும் தீவிரத்துக்கு ஒரு பெண்ணை உள்ளாக்கி இருக்கின்றது.

குத்துச்சண்டைப் பயிற்சியாளரான ரமோனின் வயது 50 . 45 வயதான இவர் மனைவியின் பெயர் மரியா சோஷா. தன்னைக் கொல்ல மனைவி சதித் திட்டம் தீட்டுகிறாள் என்ற தகவல்  அவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டது.  அவள் கூலிக் கொலையாளியாக ஏற்பாடு செய்திருந்த  , இவரது முன்னாள் மாணவனாயிருந்த ஒருவன் நேரில் ரமோனைச் சந்தித்து இதைக் கூறியபோது அவர் அதிர்ந்து போனார்…கொலையை முடித்தால் 1500 டொலர் தருவதாக மனைவி கூறியிருந்தாள் என்று அறிய வந்தபோது, தன் உயிரின் விலை அமெரிக்க ஹவுஸ்டன் பிராந்திய உளவுப்பிரிவின் உதவியுடன் , தன் மனைவியைக் கையும் மெய்யுமாக பிடிக்கத் திட்டம் தீட்டினார்.

இதற்கு அவர் இறந்தவர் போல் நடித்தாக வேண்டும். நெற்றிப் பொட்டில் சூடு விழுந்து, இரத்தம் வழிவது போல மேக்கப் செய்தாக வேண்டும்.. பொலிஸார் மனைவியைக் கைதுசெய்யும் வரை, வனாந்தரப் பகுதியொன்றில் சவக்குழிக்குள் கிடந்தாக வேண்டும். இப்படித் திட்டமிட்டது பொலிஸ் உளவுத் துறை.  இந்தக் கோலத்தில் ரமோன் படமெடு்க்கப்பட்டு,  சிவில்  உடையில் ஒரு பொலிஸ் அதிகாரி, எடுத்த போட்டோவை நேராக அவர் மனைவியிடம் காண்பிப்பதே திட்டம். தொடர்ந்து மூன்று நாட்கள் தலைமறைவாக இவர் இருக்கவும் வேண்டும்.

20027இல் இவளைச் சந்தித்து, 2010இல் திருமணம் செய்து கொண்ட இத் தம்பதியினாரிடையே, பணவிவகாரம் சம்பந்தமாக மனப்பூசல் ஆரம்பித்துள்ளது. . விவாகரத்துச் செய்யப்போவதாக தன்னிடம் மனைவி சொல்லியிருந்தாலும், தன்னை ஒரேயடியாக மனைவி முடிக்கப் போகிறாள் என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்துள்ளது.

பொலிஸார் தாம் எடுத்த போட்டோவை லுாலுக்கு காண்பித்தபோது, ஏதோ நகைச்சுவையான படம் ஓன்றைப் பார்ப்பது போல பார்த்து, பெரிதாகச் சிரித்த்தாக கூறியிருக்கிறார்கள் பொலிஸ் அதிகாரிகள்.  . அந்த அளவுக்கு, தன் கணவனின் உடல் இருந்த கோலம் கவலையை அளிக்காமல்,அவளுக்கு  சிரிப்பையே வரவழைத்துள்ளது.  இப்பொழுது சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறாள் இந்தச் சிங்காரிக்கு கிடைத்திருப்பது. 20 வருட ஜெயில் வாசம்!

ஐ போனும் ஐ லவ் யூ‘  வும்

மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவது போல, ஐபோனையும் , ஐ லவ் யூவையும் எதற்காக முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? எல்லாம் காரணத்தோடுதான். புதிதாக வந்துள்ள ஐபோன் எக்ஸை சீதனமாக்க் கொடுத்து, காதலை இரந்துள்ளார் ஒருவர். ஒன்றல்ல இரண்டல்ல .25 ஐபோன்கள் இதற்காக்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சீனரான இவர் பெயர் சென் மிங். தொழிலால் வீடியோ வடிவமைப்பாளர். நேரத்தோடு 25 ஐபோன்களையும் வாங்கி, ரோஜாக்களையும், போன்களையும், ஓரு இருதய வடிவில் அடுக்கி , அதன் நடுவில் மோதிரத்தை இவர் மோதிரத்தை வைத்துள்ளார். பின்பு காதலியை நண்பர்கள் உதவியுடன் அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

கையில் மோதிரத்தை நீட்டியபடி , இதோ உனக்கு அர்ப்பணம் என்று 25ஐபோன்களை வைத்துக் கொண்டு நின்றவனுக்கு எப்படி இல்லை என்று பதில் சொல்வது? இந்தா பிடி என்று தன் சம்மதத்தைத் தெரிவித்துள்ளாள் இந்த இளம் பெண். கரும்பு தின்னக் கூலியா?

சரி உங்களுக்கு இந்தக் காதல் கதையைச் சொல்லியாயிற்று. ஏன் காதலைச் சொல்ல ஐபோன்? அதிலும் எதற்காக 25? எல்லாம் காரணத்தோடுதான்.  இருவருமே வீடியோ விளையாட்டுப் பிரியர்கள். சென் மிங் இரு வருடங்களுக்கு முன்பு, தான் உருவாக்கி அறிமுகம் செய்த ஒரு புதிய ‘வீடியோ கேம்‘ மூலந்தான், இருவரதும் நட்பும் மலர்ந்துள்ளது. இவனது காதலியின் வயது 25 என்பதால்தான், 25ஐபோன்கள்! ஒன்றின் விலை நமது பணமதிப்பில் இரண்டு இலட்சம்!

ஆளை விடு சாமி.. இப்படியான காதல்கள் நமக்கு சரிப்பட்டு வராது என்கிறீர்களா?

புதினத்திற்குள் ஒரு புதினம்   இப்படித்தான் ஒரு சீன நாட்டவர், ஒரு தொகை ஐபோன்6 களுக்கு, 100,000 டொலர் வரையில் செலவிட்டு, காதலை இரந்துள்ளார். எனக்கு இதெல்லாம் வேண்டாம். வைரம் கொண்டுவா. என்று இவனை விரட்டியிருந்தாளாம்  காதலி என்கிறது இன்னொரு செய்தி.

ஆறாயிரம் செடி இலைகளும், அதிலொரு ஆடையும்

ஆறாயிரம் செடிஇலைகள்

அதிலொரு அழகான ஆடை. நம்ப முடியவில்லையா?. நம்புஙகள் இது நடந்த கதைதான்.மீண்டும் சீனர்களிடம் செல்வோம்.சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில், ஆடை வடிவமைக்க அதிக  பணம் செலவழிக்க வேண்டாமென்று , இங்குள்ள பல்கலைக் கழக மாணவிகள் சொல்லி வந்ததோடு செயலில் நிரூபித்தும் உள்ளார்கள்.

இரண்டு ஆண்களும் பெண்களுந்தான் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு இந்த ஆடை ‘நெய்தலில்‘ தேவைப்பட்டது 6000 தாவர இலைகள்தான். சமூக வலைத்தளங்களில், ஒரு வார காலம் இவர்களது அற்புதமான  தாவர இலை ஆடைதான் சுற்றிச் சுற்றி வந்திருக்கின்றது.

ஆறு மாத காலத்திற்கு முன்பு பிரசவித்த திட்டம் இது. பல்வேறு அளவிலான, வடிவிலான இலைகள் இவர்களக்கு தேவைப்பட்டிருந்தமையால், பல இடங்களுக்கு இவற்றைத் தேடி இவர்கள் பயணித்துள்ளார்கள்.

இந்த இலைகள் வாடக்கூடாது என்பதற்காக இவற்றை ஒரு இரசாயணக் கலவைக்குள் இட்ட்டு, இரு மணி நேரம் கொதிக்க வைத்துள்ளார்கள்.. இதன் விளைவாக, இலைகளின் மேற்பரப்பு நீக்கப்பட்டு, நரம்புகளுடன் கூடிய, அதிக பலம் கொண்ட இலையின் ‘எலும்புக் கூட்டை‘ இவர்களால் பெற முடிந்திருக்கின்றது.

ஆரம்பத்தில் இலைகள் கொண்ட நடத்திய நெய்தலில் பிழைகள் பல ஏற்பட்டாலும், ஆசியர்கள் வழிநடத்தலில், விரும்பியதை இவர்களால் செய்ய முடிந்துள்ளது.

ஆண்டுதோறும், பல்கலைக்கழக நிர்வாகிகள் நடாத்தி வரும் , போட்டி ஒன்றில் பங்குபற்றவே இத்தனை சிரமத்திற்கு தம்மை உட்படுத்தி இருக்கிறார்கள் இந்த மாணவர்கள்.

முயற்சி திருவினையாக்கும் என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்?

ஒரு ஜோடி காலணிக்கு 15மில்லியன் டொலர்கள்!!!!!!!!!!!

தலைப்பைப் பார்த்த்தும் தலைச்சுற்றல் வருகிறதா? அல்லது பணப் புளிச்சல் உள்ளவர்கள் இதை விளையாட்டாக வாங்கிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?விலையுர்ந்த பல அரிய கற்கள் பதித்த இந்த உயரக் குதிகால் கொண்ட காலணியை வடிவமைத்தவர் பித்தானியரான டெபி விங்ஹாம் என்பவர்தான். இதற்கு இவர் நிர்ணியித்துள்ள விலை சுளையாக  15.1 மில்லியன் டொலர்கள்.

பொதுவாகவே இந்த வடிவமைப்பாளர் உலகின் பிரபல்யமான பணக்கார வர்க்கத்தினருக்கு, காலணிகள் வடிவமைத்து, நல்ல பெயர் சம்பாதித்தவர். உலகிலேயே மிகவும் விலைமதிப்பான ஆடையை வடிவமைத்தவர் இந்தப் பெண்ணேதான். . இவரது ஆடையில் 2000 வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த்தாக்க் கூறுகிறார்கள். உலகின் விலையுயர்ந்த சிகப்பு வைரக்கல்லும் உள்ளடக்கம். இதன் விலை 15.45 மில்லியன் டொலர்கள். ஒரு அரபு வாடிக்கையாளருக்கு வைரக் கல் பதித்த கேக் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு கொடுக்கப்பட்ட பணம் 64 மிலியன் டொலர்கள்.

இதெல்லாம் பணப் புளிச்சல் கதைகள். சந்தனம் மிஞ்சினால் சிலர் செய்வதையே இவர்களும் செய்கிறார்கள் என்று திட்டித் தீர்க்கிறீர்களா? என்ன செய்வது? பணம் இப்படித்தானே நமக்கு ஓரவஞ்சளை செய்கிறது.

இந்தக் குதிகால் காலணியின் தோலில் 24காரட் தங்கப் பூச்சு இருக்கிறதாம். . தையல் வேலைக்கு 18காரட் தங்க இழையை உபயோகித்துள்ளார்கள்.

இப்படியான காலணிகளை இவ்வளவு பெரியதொகை கொடுத்து வாங்கி, வருடத்தில் ஒருமறை அல்லது இருமுறைதான் அணிவார்களாம் இந்தச் சீமாட்டிகள். உடல் கொழுப்பைக் கரைக்க பல வழிகள் இருப்பது நமக்குத் தெரியும். பணக் கொழுப்பைக் கரைக்க இது ஒரு வழி என்று அறிந்து கொள்ளுங்கள்.

12.11.2017

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *