அறிந்த மிருகம் அறியாத கதை -2 காண்டாமிருகம் இனி காணாமிருகமாகிப் போய்விடுமோ

19 views
0

கட்டுமஸ்தான தேகம். உடலை மூடிய போர்க்கவசம். கையிலே குத்தீட்டி.. காட்டில் இந்தக் கோலம் உங்களுக்கு எந்த மிருகத்தை ஞாபகத்திற்கு கொண்டுவருகின்றது?

யானையை நினைத்திருப்பீர்கள். வேறு மிருகங்களையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவந்திருப்பீர்கள். நாம் சொல்ல வந்தது காண்டா மிருகத்தைப் பற்றித்தான்!

முரட்டுத்தனமான ஒரு போர்வீரனைப் போல காட்டின் பலவானாக நிற்கும் இந்தக் காண்டாமிருகம் அழிவின் விளிம்பில் நிற்பது கவலைக்குரியதே.

 

 எஞ்சி இருப்பது மூன்றே மூன்று

ஆபிரிக்காவில் மட்டுமே காணப்படும் இந்தக் காண்டாமிருகங்களை வெள்ளை, கறுப்பு என்று இரு இனங்களாகப் பிரிக்கிறார்கள்.  ஆசியாவில் மேலும் மூன்று இனங்கள் வாழ்கின்றன. இதில் வெள்ளை இனம் குறிப்பாக தென் ஆபிரிக்க காடுகளில்தான் காணப்படுகின்றது. ஆனால் காலப்போக்கில் இவை பொட்ஸ்வானா, நமீபியா,  சிம்பாவே, கென்யா,  சுவாசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் கறுப்புக் காண்டாமிருகங்களின்  98 வீதமான தொகை தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாவே,  கென்யா ஆகிய நான்கு நாடுகளை மையப்படுத்தியே இருக்கின்றன.

வெள்ளைக் காண்டாமிருகங்கள் என்று அழைக்கப்படும் ஓர் இனத்தை , வடக்குக்குரிய சதுர வடிவிலான உதடுகளைக் கொண்ட வெள்ளை இனம்,  தெற்குக்குரிய வெள்ளை இனம் என்று இரு உப பிரிவுகளுக்குள் உள்ளடக்கலாம். சதுர வடிவிலான உதடுகளைக் கொண்ட வெள்ளை இனம், மிக வேகமாக அழிந்து இன்று அருகிவிட்ட விலங்கினமாக மாறியிருக்கின்றது. முன்பெல்லாம் ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கிலும்,  மத்தியிலும் இவை நிறையக் காணப்பட்டுள்ளன.

2017இல் இந்த இனத்தில் மூன்றுதான் எஞ்சி இருக்கின்றன என்று நாம் அறிய வரும்போது அதிர்ச்சிவயப்பட்டு விடுகின்றோம்.

இந்த மூன்றுமே செக் குடியரசின் ஒரு மிருகக் காட்சிசாலைக்குச் சொந்தமானவை. இவர்களின் செலவில்,   கென்யாவின் ஒரு வன விலங்கு பாதுகாப்பகத்தில் இவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இவற்றிக்கு 24 நேர பலத்த காவலும் போடப்பட்டுள்ளது. இவை அடைக்கப்பட்ட நிலையில் இருந்தால் இனவிருத்தி இடம்பெறாது என்பதால்,  ஒன்றை இடையிடையே காட்டில் சுதந்திரமாக உலாவ விடுகிறார்கள்.  இவையும் இறந்து போனால் , பள்ளிப் பிள்ளைகளுக்கு சித்திரமாக வரைந்து காட்டி ‘முன்னொரு காலத்திலே… ” என்றுதான் பாடம் ஆரம்பிக்கும் நிர்ப்பந்தம் வரும்.

கறுப்பு வெள்ளை இரகசியம்

காண்டாமிருகத்தின் நிறம் சாம்பராக இருக்கும்போது, அதென்ன வெள்ளை,  கறுப்பு என்று கதை விடுகிறேன் என்கிறீர்களா? நீங்கள் சொல்வதும் சரிதான். இவற்றின் நிறம் சாம்பர்தான். ஆனால் ஆபிரிக்க மொழியில் “wyd” என்பது அகலம் என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.இந்த வெள்ளை இனத்துக்கு உதடுகள் அகன்று  சதுரமாக இருக்கின்றன.  இவை புல் மேய்வதற்கு வசதியாக அமைந்துள்னன. அதே சமயம் கறுப்பு இனங்களின் உதடுகள் கூரான கொழுக்கி  போல் அமைந்திருக்கின்றது. மரத்தில் தொ்ஙகும் பழங்களை, செடிகளின் மேலுள்ள இலைகள் போன்றவற்றை சுலபமாக உண்ண இப்படியான உதடுகள் அமைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் வெள்ளையைக் குறிக்கும் சொல்லும், அகலத்தைக் குறிக்கும் ஆபிரிக்க சொல்லும், ஒரே தொனியைக் கொண்டுள்ளமையால், ஒன்று வெள்ளையாயிற்று. இன்னொன்று கறுப்பாயிற்று. அவ்வளவுதான். சாம்பர் கறுப்பு வெள்ளையாகிய ரகசியமும் இதுதான்.

ஆசியக் கண்டத்துக்கு உரிய காண்டாமிருகங்கள். இந்தியாவிலும். இந்தோனேசிய தீவுகளான சுமத்திரா, ஜாவாவிலும் காணப்படுகின்றன. இவற்றுள் இந்தியா,  ஜாவிலுள்ள காண்டாமிருகங்களுக்கு ஒரேயொரு கொம்பு மாத்திரமே உண்டு. ஆனால் சுமத்திராத் தீவிலுள்ள மிருகங்களுக்கு, ஆபிரிக்க காண்டாமிருகங்களைப் போல இரு கொம்புகள் உண்டு.

எண்ணுாறு கிலோ எம்டன்

 

வைரமுத்து,  அழகி ஐஸ்வர்யாவை 50 கிலோ தாஜ்மகால் என்று வர்ணித்தார். அப்படியானால் இந்தக் காண்டாமிருகத்தை “எண்ணுாறு கிலோ எம்டன்” என்று அழைக்கலாமோ. (தந்திரமான வேகமான தாக்குதல்களுக்கு ஜேர்மனியின் எம்டன், போர்க்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தது.) இதன் எடை 800 கிலோவிலிருந்து 1400 கிலோ வரை நீள்கின்றது . 2000க்கு மேற்பட்ட எடைகொண்ட அசாதாரண  ஆண் காண்டாமிருகங்கள்   சில ,   முன்பு காணப்பட்டதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தோற்றத்தால் சிறியவை.

இவர் பெரிய கொம்பனோ?

மண்டையோட்டில் துருத்திக் கொண்டுள்ள இரு கொம்புகள் கெராட்டினால் ஆனவை. எமது நகங்களும், தலைமுடியும் இந்தக் கெரட்டினால் ஆனவைதான்!  ;!  இம்பாலா மான் இனங்களின் நீண்ட கொம்புகள் கெரட்டினால்; உருவாகியுள்ளதுபோல, இந்தக் கொம்புகளும் கெரட்டினால்தான் அமைந்துள்ளன. மூளையிலிருந்து வெளிக்கிளம்பும் எலும்புகளை மூடிக்கொண்டு,  இந்த கெரட்டின் இருப்பது,    கொம்புகளுக்கு பெரும் பலமாக அமைகிறது. காண்டாமிருகத்திற்குள்ள இரண்டு கொம்புகளில் ஒன்று நீண்டதாக இருக்கும். இது 50 சென்டிமீட்டர் தொடக்கம்140 செ.மீற்றர் வரை நீளம் என்று சொல்லப்படுகின்றது.

இதுவரை அறியப்பட்ட மிக நீண்ட கொம்பாக 1.5மீற்றர் நீளமான கொம்பு,  ஒரு கறுப்பு காண்டாமிருகத்துக்கு இருந்துள்ளதாக பதிவிலுள்ளது. இவர்  பெரிய கொம்பனோ என்று கேட்குமளவுக்கு இவற்றிற்கு நீண்ட கொம்புகளும் இருக்கின்றன.

சில மிருகங்களுக்கு, ஒரு போனஸாக , சிறிய மூன்றாவது கொம்பும் இருப்பதுண்டு. தம்மை எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மண்ணுக்கடியிலுள்ள வேர்களைக் குத்திக் கிளறவும், கிளைகளை முறிக்கவும், இந்தக் கொம்புகள் உதவுகின்றன.

எதிரியாகி விட்டதே என் கொம்பு…

நான் கொம்பன் என்று பெருமைப்பட வைக்காமல், எங்கள் கொம்புகளே எமக்கு எமனாக வாய்த்து விட்டனேவே என நினைத்து காண்டாமிருகங்கள் கலங்குகின்றன. அழிகின்றன. தொகையில் அருகுகின்றன. வியட்னாமில் இந்தக் கொம்புகளுக்கு பெரிய கிராக்கி நிலவி வருகின்றது.. வியட்னாமில் மருந்துக் கலவைத் தயாரிப்பிற்கு, இதன் கொம்புகள் பெரிதும் தேவைப்படுகின்றன.  புற்று நோய் ஹோடக்கம் பல நோய்களுக்கு > வியட்நாமில் கொம்புப் பவுடர் கலந்து தயாரிக்கப்படும் மருந்துகள் அற்புத நிவாரணி என்று நம்புகிறார்கள் இந்தத் தேவை தொடர்ந்து கொண்டே இருக்கப்போகின்றது. கொம்புகளுக்காக ஒரு மிருகம் கொல்லப்படும் அபாயமும் நீள்கின்றது. பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் பல மருந்துகளின் கலவையில், இதன் கொம்பும் இடம்பெற்று வருவதால், கடந்த 15 வருடங்களில், இந்த அப்பாவி மிருகங்களை அழிப்பது அதிகரிப்பையே கண்டுவருகின்றது.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் யேமன் நாட்டவர்களால் இந்த மிருகங்கள் அழிந்து கொண்டிருந்தன. இவற்றின் கொம்பாலான பிடிகளைக் கொண்ட குத்துவாள்கள்  வைத்திருப்பது என்பது ராஜலட்சணம் என்று கருதத் தொடங்கியதால்,  பெரும் புள்ளிகள்,  தங்கள் நண்பாகளுக்கு இப்படியான குத்துவாள்களைப் பரிசளிக்கும் கலாச்சாரம் ஓங்கியிருந்தது. பொதுவாக வளைகுடாவின் இந்த யேமானியர்கள்,  இடுப்பில் எப்பொழுதுமே குத்துவாளை இடுப்பில் செருகி வைத்திருப்பது இவர்கள் கலாச்சாரத்தில் ஓர் அங்கமாக இருக்கின்றது. ,இந்தக் குத்துவாளின் கைப்பிடி மரம் உட்பட பலவேறு பொருட்களில் செய்யப்பட்டாலும் , காண்டாமிருகக் கொம்பின் பிடியுடன் கூடிய குத்து வாள் இடுப்பில் செருகி வைத்திருப்பவர் பெரும் புள்ளியாக மதிக்கப்படுகிறார் .

ஒட்டுண்ணியை அழிக்க வந்த ஒட்டுண்ணி

காண்டாமிருகங்களுக்கு  அதிலும் குறிப்பாக கறுப்பினத்துக்கு, கண்பார்வைத் திறன் குறைவு என்பதே பொதுவான அபிப்பிராயம். ஆனால் இது தவறான கருத்து என்றும், ஒரு முயலின் கண்களுக்குரிய பார்வைச் சக்தி இதற்கும் உண்டு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இதன் செவிப்புலனும், மோப்பசக்தியும் அபாரம் என்கிறார்கள். ஒட்டகச்சிவிங்கியின் உடம்பில் உட்கார்ந்து கொண்டு, அதன் உடம்பிலுள்ள பூச்சிகளை உண்ணுகின்ற ஒக்ஸ்பெக்கேர்ஸ் பறவைகள் ஒட்டுண்ணிகளை அழிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் புதிய ஆய்வுகளின் அடிப்படையில், உடம்பில் உட்கார்ந்து காண்டாமிருகங்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச் சிறு பறவைகளும் ஒட்டுண்ணிதான் என்கிறார்கள்.

 காட்டில் கூட்டுக்குடித்தனம்

மனிதர்கள் கூட்டுக் குடும்பத்தின் சுகத்தை படிப்படியாக இழந்துவருவதுதான் இன்றைய யதார்த்தம். காட்டு மிருகங்கள் பல இன்னமும் கூட்டுக் குடும்ப வாழ்வில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளன. .பொதுவாக இந்தக் காண்டாமிருகங்களின் கூட்டுக் குடும்பங்களில் புருஷன், பெண்டாட்டி, தம்பி, தங்கச்சி என்று 14 பேர் இருப்பதுண்டு. வளர்ந்த ஆண்கள்தான் எல்லைக் காவலாளிகள். ஒன்று தொடக்கம் மூன்று சதுரக் கிலோ மீற்றர் அளவுள்ள பிராந்தியம், இந்தக் குடும்பத்தின் ஆளுகைக்குள் வந்துவிடும். எருக்களை நிறைத்து, தமது “வேலிகளை”ப் போட்டுவிடும் இந்த எல்லைக் காவலாளிகள். இருக்கும் இடத்தின் புல் வளத்திற்கு ஏற்றவாறு, ஏழு வளர்ந்த பெண் மிருகங்கள் குடும்பத்தில் இருக்கும். ஒரு பெண்ணை  வெல்வதானால் மல்யுத்தம் செய்தே ”மணமகளை” வெல்ல வேண்டி இருக்கின்றது. அதிலும் எதிராளிக்கு தன் கொம்புகளால் சொல்லத்தக்க அளவு காயம் ஏற்படுத்தினால்தான், ”பெண்ணெடுக்க” முடியும். ஆணும் பெண்ணும் உறவு வைத்துக் கொண்டபின்னர் நீ யாரோ நான் யாரோ என்பதுபோல, இரண்டும் இரண்டு திக்குகளில் சென்றுவிடும். எழுதப்படாத காட்டுத் தர்பார் விதிமுறைகள் இவை.

பாலியல் வாழ்க்கை

பாலியல் முதிர்ச்சி  என்பது , நான்கு வயதைத் தாண்டியதும் பெண் காண்டாமிருகத்திற்கு வந்துவிடுகின்றது. ஆனால் அம்மா ஸ்தானத்திற்கான  உடல் பக்குவம்  என்பது இதற்கு ஆறு வயதைத் தாண்டும்போதுதான்  சாத்தியப்படுகின்றது. ஆண்கள் தமக்கு பத்து வயதைத் தாண்டும் வரை, பெண் மிருகங்களுடன் இணைவதில்லை. . பொதுவாக 40 வயது வரை காண்டாமிருகங்கள் உயிர்வாழக்கூடியன. ஆண்டு முழுவதிலும் இவை தமது இணைகளுடன் கூடுகின்றன. என்றாலும், ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்  ஆபிரிக்க காடுகளில்  ஆண்கள்  பெண்களைக் கூடுதலாகத் தேடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிழக்கு ஆபிரிக்காவின் காடுகளில், இந்தத் “தீவிரம்” பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரை காணப்படுகின்றது என்கிறார்கள். சினைக்காலம் 16 மாதங்கள். அதாவது மனிதர்களுக்கு பத்து மாதங்கள் போல, இவற்றிற்கு ஒரு கன்றை  ஈன 16 மாதங்கள் அவசியப்படுகின்றன. கன்றை தாய் ஒருவருடம் வரை பராமரிக்கின்றது. . பிறந்த கன்றுகள் ஒரு வாரத்துக்குள்,இலை குழைகளையோ,  புல்லையோ சாப்பிட ஆரம்பித்து விடுகின்றன.   இரு பிரசவங்களுக்கு இடையில் 2தொடக்கம் 3வருட காலம் விடப்படுகின்றது.

சைவப் பிரியர்களே கவனிக்கவும்

இந்தக் காண்டாமிருகங்களில், ஓர் இனம்  தனியாக புல்மேய்ச்சலையே நம்பி இருக்கின்றது.  முன்னரே குறி்பபிட்டது போல, புல் மேய்ச்சலுக்கு  இசைவாக இதனுடைய உதடுகள் தட்டையாக, சதுரமாக அமைந்துள்ளன. இதனால் நிறையப் புல்வெளிகளைக் கொண்ட பிராந்தியங்களையே தமது வதிவிடங்களாகக் கொண்டிருக்கின்றன.

காட்டு வெயிலில் மேய்வதை இவை விரும்புவதில்லை. சுட்டெரிக்கும் வெயில் வேளைகளில், நிழலுள்ள இடங்களில் உடகார்ந்து இவை ஓய்வெடுக்கும். காலை நேரத்திலும், மாலை நேரத்திலும்தான் இவை மும்முரமான மேய்ச்சலில் ஈடுபடுவதுண்டு வெளயில் மிக வெப்பமாக இருந்தால்,  ஆழமில்லாத சில குளங்களின் சேற்றில் புரளும். இந்த வழியில் அது தன் உடலைக் குளிர்மைப்படுத்திக் கொள்வதோடு,  உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளையும் தீர்த்துக்கட்டிவிடுகின்றன. இங்கே ஒன்றைக் கவனியுங்கள். வெறும் புல்லை மட்டும் தின்று கொண்டு அசுர பலத்தோடு நடமாடுகின்றது. அசைவப் பிரியர்களே கொஞ்சம் கவனிக்கவும். ஆடு கோழி என்று பறப்பன,  நடப்பனவற்றையெல்லாம் சாப்பிட்டால்தான் பலம் வந்துவிடும் என்பதில்லை. கீரையும்,  பொன்னாங்காணியும் இதே வேலையைச் செய்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

காண்டாமிருகம் இனி காணாமிருகமாகிப் போய்விடுமோ என்பதுதான் இன்றைய கவலை …

16.11.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *