அறிந்த மிருகம் அறியாத கதை -தன்னினச் சேர்க்கை  விரும்பிகள் இந்த  ஒட்டகச்சிவிங்கிகள்

அறிந்த மிருகம் அறியாத கதை -தன்னினச் சேர்க்கை விரும்பிகள் இந்த ஒட்டகச்சிவிங்கிகள்

37 views
0

ஒரு தடவை  குடித்த தண்ணீரை உடம்பில் சேமித்துக் கொண்டு, சில நாட்களுக்கு தண்ணீரே இல்லாமல் வாழும் திறன்,  நீண்ட கழுத்து. அதே போல அசாதாரண நீண்ட கால்கள்,  ஒட்டகத்தை ஒத்த முகம் என்று சில குணாம்சங்கள் பொருந்தி வருவதால்தான் ஒட்டகத்தின் பெயரையும் சேர்த்து,  ஒட்டகச்சிவிங்கி என்று இந்த மிருகத்திற்கு பெயர் கொடுத்தார்களோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அறிந்த மிருகம் அறியாத கதை என்ற வரிசையில்,  இப்பொழுது வருவது,  மிருகங்களில் மிக நீண்ட கழுத்துக்குச் சொந்தக்காரரான ஒட்டகச்சிவிங்கி பற்றிய கதைதான்! நாளொன்றுக்கு 75இறாத்தல் வரை சாப்பிடும் நன்கு வளர்ந்த ஓர் ஒட்டகச்சிவிங்கம் குறிப்பாக அக்காசியா என்ற இன மரத்தின் இலைகளைத்தான். மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றது. உயரமான விருட்சங்களிலுள்ள இலைகளை நாக்கை நீட்டி,  சுருட்டிப் பற்றிப் பிடித்துச் சாப்பிட வசதியாக  இதற்கு மிக நீளமான நாக்கு இருக்கின்றது. இதன் நாக்கு,  பலரையும் வியப்பூட்டும் அளவிற்கு மிக நீண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.ஊதாவும்இ கருமையும் கலந்த இதன் நீளம் 50செ.மீ (20 அங்குலம்) என்பது ஒரு சுவாரஸ்ஸியமான தகவல்! காட்டு வெயிலில் சூரிய வெப்பத்தில் தீய்ந்து விடும் என்பதால் இதன் நாக்கு கறுப்பு நிறமாக உள்ளது என்கிறார்கள். அதிக நேரம் இதன் நாக்கு வெளியில் துருத்திக்கொண்டு இருப்பதுதான் காரணம் .

 

ஒரு பசுவைப் போல இரைமீட்டலைச் செய்யவும்,  இதன் உடல் அமைப்பு இடம்கொடுக்கின்றது. இதன் இரைப்பை நான்கு அறைகளைக் கொண்டுள்ளது என்பது வியப்பூட்டும் ஒரு தகவல். நாளொன்றுக்கு 10கலன் தண்ணீரைக் குடிக்கும் சுபாவமுடைய இந்த மிருகங்கள்,  தாம் விரும்பிச் சாப்பிடும் அக்காசியா இலைகளில் இருந்தே அதிகளவு நீரைப் பெற்றுக் கொள்கின்றன. தரை வாழ் பாலூட்டி விலங்குகளில் அதி நீண்ட வாலைக் கொண்ட மிருகமாகவும் இது திகழ்வது அதிசயந்தான். இதன் நீளம் 8 அடி என்கிறார்கள்.இதேபோல,  உலகிலுள்ள அனைத்து முலையூட்டிகளுடன் ஒப்பிடும்போது,  மிக அதிகமான இரத்த அழுத்தம் ஒட்டகச்சிவிங்கிக்குத்தான் இருக்கின்றது. இதனுடைய இதயமும் பல அங்குல அளவுகள் கொண்ட தடித்த உட்சுவருடன் அமைந்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு 170 தடவைகள் என்ற கணக்கில் , இதன் இதயம் துடிக்கின்றது.

Oxpeckers என்று அழைக்கப்படும் ஓர் இனப் பறவைகள்,  எப்பொழுதும் இவற்றின் முதுகில் உட்கார்ந்து கொண்டு சவாரி செய்வதை நாம் காணமுடியும்.  ஒட்டகச்சிவிங்கிகளின்  முதுகில் உள்ள பூச்சிகளையும், ஒட்டுண்ணிகளையும் இந்தச் சிறு பறவைகள் கொத்தி தமக்கு உணவாக்கிக் கொண்டுவிடுகின்றன. இறைவனின் படைப்பின் அற்புதம் இங்கேதான் தெரிகின்றது. ஒன்றுக்கு உணவளிக்கும் அதே நேரம் இன்னொன்றின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகின்றது.

சிறுத்தைப் புலிக்கு இருப்பது போன்ற புள்ளிகளுடனும்,  ஒட்டகத்தின் முகத் தோற்றத்தையும் கொண்ட ஒட்டகச்சிவிங்கிதான்,  தரைவாழ் மிருகங்களில் மிக உயர்ந்ததாகவும்,  இரைமீட்கும் மிருகங்களில் மிகப்பெரிதாகவும் இருக்கின்றது. எந்த ஓர் ஒட்டகச் சிவிங்கிக்கும் இன்னொரு சிவிங்கிக்கு இருப்பது போன்ற புள்ளிகள் இருப்பதில்லை. இதன் மிக நீண்ட கழுத்தும், கால்களும், கொம்புகளும் இந்த மிருகத்தை மற்றைய மிருகங்களிலிருந்து பிரித்து,  தனித்துவம் கொண்டவையாக மாற்றியிருக்கின்றன. ஏறத்தாழ 1.8 மீற்றர்வரை நீண்ட இவற்றின் கால்கள் இவை  வேகமாக ஒடுவதற்கு உதவுகின்றன..

மணிக்கு   . 56 கி. மீ (35மைல்) வேகத்திலும் ,  நீண்ட தூரமாயின் மணிக்கு 16 கி. மீ(10 மைல்) வேகத்திலும்  இவை ஓடுகின்றன . இவைக்கு நீண்ட கழுத்திருப்பது உயரமான அக்காசியா மர இலைகளை சாப்பிட உதவியாக உள்ளது . இதனுடைய 53செ.மீ (21அங்குலம்) நீளமான நாக்கும் தனக்கு வேண்டிய உணவை சுலபமாக தேடிக்கொள்ள உதவுகின்றது.

நூற்றுக்கணக்கான இறாத்தல் எடைகொண்ட இலைகளை  இது வாராவாரம் உண்ண, தினமும் பல மைல் தூரங்களுக்கு பயணிப்பதுண்டு.

ஆபிரிக்க புல்வெளிகளில், தூரத்தில் வரும் எதிரிகளைச் சுலபமாக இனம்கண்டுகொள்ளவும்,  இவற்றின் நீண்ட கழுத்துகள் உதவிவருகின்றன. இவற்றின் நீண்ட கழுத்துகளும், கால்களும் பலஅனுகூலங்களைக் கொண்டுவந்து சேர்த்தாலும், பிரதிகூலங்களும் இருக்கவே செய்கின்றன.குறிப்பாக நீர்நிலைகளில் தண்ணீர் அருந்தும்போது, இவற்றின் நீண்ட கால்கள், இவற்றைச் சுலபமாகக் குனிய விடாது தடுக்கின்றன. நான்கு கால்களையும் அகலவிரித்து,  குனிந்து நீரை அருந்துவது என்பது, ஒட்டகச்சிவிங்கிகளுக்கு சுலபமான பணியாக இருப்பதில்லை. இப்படி நின்றுகொண்டு நீர் அருந்தும்போதுஇ சிங்கம், புலி போன்ற மிருகங்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி விடுவதுண்டு. இந்த ஒரு காரணத்தினால்தானோ தெரியவில்லை ,  இவை சில தினங்களுக்கு ஒருமுறைதான் நீரை அருந்துகின்றன.தாம் உண்ணும் அக்காசியா இலைகளிலிருந்து நிறைய நீரையும் தமக்குப் பெற்றுக் கொள்கின்றன. நீண்ட கால்களின் அசௌகரியத்தினால்,  ஒட்டகச்சிவிங்கிகள் நின்றபடி கன்று போடும்  பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 1.5 மீற்றர்(5அடி) உயரத்திலிருந்து தரையில் கன்றுகள் விழும்போது, அவற்றின் ஆரம்ப வாழ்வே முரட்டுத்தனமாக ஆரம்பிக்கின்றதே என்றே நினைக்கத் தோன்றும். என்றாலும் இந்தக் கன்றுகள் பிறந்த அரைமணி நேரத்தில் எழுந்து நிற்க முடிவதும்இ 10 மணி நேரத்தில் தாயை நோக்கி ஒடுவதும்,  பார்ப்போருக்கு மலைப்பையே ஏற்படுத்தும்.

 

நன்கு வளர்ந்த ஓர் ஒட்டகச் சிவிங்கியின் எடை எவ்வளவாக இருக்கும்? ஆணின் சராசரி எடை 1200கிலோ(2600 இறாத்தல்கள்) என்றும்.  பெண்ணின் எடை 830 கிலோ(1800 இறாத்தல்கள்) என்றும் குறிப்பிடுகின்றார்கள். இந்த எடை இந்த மிருகங்களின் வெவ்வேறு இனத்திற்கேற்ப(மொத்தம் 9 இனங்கள்)  மாறுபடுகின்றன.கிளிமஞ்சாரோ ஒட்டகச்சிவிங்கிகள் என்று அழைக்கப்படும் இனமே இப்பொழுது ஆபிரிக்காவில் அதிகம் காணப்படுகின்ற இனமாகும். கென்யாவிலும்,  தன்ஸானியாவிலும் காணப்படும் இந்த இனத்தில் 40,000 வரை காடுகளில் காணப்படுவதாகச் சொல்கின்றார்கள். Okapi என்று அழைக்கப்படும் ஓர் ஆபிரிக்க மிருகமும், ஒட்டகச்சிவிங்கி குடும்பத்தோடு நெருங்கியதாகக் காணப்படுகின்றது. அக்காசிய மர இலைகளே இவற்றின் பிரதான உணவு என்பதால்,  இந்த மரங்கள் நிறைய உள்ள பிரதேசங்களையே நாடிச் செல்கின்றன. வளர்ந்த மிருகங்களை எந்தக் காட்டு மிருகத்தாலும் தாக்க முடிவதில்லை. ஆனால் குட்டிகளை சிங்கங்கள்.  சிறுத்தைகள்.  காட்டு நாய்கள் போன்றவை கொன்று உண்பதுண்டு. ஆபிரிக்க புல்வெளிகள்தான் இவற்றின் வாசஸ்தலங்கள்.

வடக்கு, தெற்கு, மேற்கு என்று பரவலாக ஒட்டகச்சிவிங்கிகள் ஆபிரிக்கா எங்கும் காணப்படுகின்றன. கங்காரு என்றால் அவுஸ்திரேலியாவில் மட்டுந்தான் காணலாம் என்பதுபோல், ஆபிரிக்க காடுகளில் மட்டுமே காணப்படுவதுதான் ஒட்டகச்சிவிங்கி! புல்வெளிகள் ஊடாக இவை ஓடும்போது முட்புதர்களில் காயப்பட்டுவிடா வண்ணம்,  இயற்கையாகவே இவற்றின் தோல்கள் தடிப்பாக அமைந்திருக்கின்றன. பெரிய கண்கள் கொண்டவை இந்த ஒட்டகச்சிவிங்கிகள். தலையின் இரு பக்கமும் அமைந்துள்ள இந்த இரு கண்களும் வெளியெ  துருத்திக் கொண்டிருக்கின்றன. உயரத்திலிருந்தபடி, இவற்றினால் மிகத் தெளிவாக எதையுமே பார்க்கும் வண்ணம்,  கண்கள் அமைந்திருக்கின்றன. இதற்கு அபாரமான செவிப்புலனும் இருக்கின்றது. இதன் முன்னங்கால்கள்,  பின்னங்கால்களை விட பத்து வீத அளவு அதிகமாக நீண்டிருப்பது.  இந்த மிருகத்திற்கே உரிய,  ஒரு விஷேட உடல் அமைப்பாகும். முன்னங்கால்கள் மனிதருடைய மணிக்கட்டுகளைப் போல் செயற்படுவதோடு,  முழந்தாளின் வேலையையும் செய்கின்றன் பின்னங்கால்கள் அவற்றின் உடம்பைத் தாங்கும் பணியை மேற்கொள்கின்றன.

 

நடப்பதையும்,  பாய்ந்து பாய்ந்து ஓடுவதையுந்தான் இதனால் செய்ய முடியும். நடப்பது என்பது தன் உடலின் ஒரு பக்கத்திலுள்ள கால்களை ஒரே நேரத்தில் அசைத்த வண்ணம், மற்றைய பக்கத்தின் கால்களையும் ஒரே நேரத்தில் அசைப்பதன் மூலம் இது சாத்தியப்படுகின்றது. பின்னங்காலையும் முனனங்காலையும் ஒரே நேரத்தில் முன்னோக்கி அசையவைத்து, தாவி ஓடுகின்றது. ஒட்டகச்சிவிங்கி. ஓடும்போது வாலைக் கிளப்பிக் கொண்டு ஓடுவதும்,  தலையும் கழுத்தும் பின்னுக்கும் முன்னுக்குமாக அசைவதும் இதன் இயல்பாகும். மிக அதிக வேகமாக இதனால் மணிக்கு 67கி.மீ(37மைல்கள்) வேகத்தில் ஓடமுடியும்.

முலையூட்டிகளில்  மிகக் குறைவான நேரம் உறங்குவது ஒட்டகச்சிவிங்கிகள்தான்! தினமும் இது சராசரியாக 4.6 மணி நேரம் உறங்கினால்  அது போதுமானது. நிலத்தில் கிடந்து,  தன் தலையைப் பினபக்கம் சுருட்டி தன் பின்னங்காலில் நிறுத்தி வைத்துக் கொண்டு இது உறங்கும். இதனுடைய உடலமைப்பு,  இதனை நீந்த முடியாமல் தடுக்கின்றது. எனவே நீச்சல் என்பது மிகச் சிரமமான ஒன்று! இதன் உடல் உரோமத்தில் ஒட்டுண்ணிகளை விரட்ட உதவும் இரசாயணப் பொருட்கள் நிறைய இருக்கின்றன. 11 வித்தியாசமான மணங்களைக் கொண்ட இரசாயணத் திரவங்கள் இவற்றின் உரோமங்களில் இருக்கின்றனவாம். ஆண்கள் பெண் மிருகங்களை விட அதிக அளவு செறிவான மணத்தைக் கொண்டிருப்பதாகவும்,  இவற்றின் பாலியல் வாழ்வில் இது சம்பந்தப்பபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இவற்றை ஆண்,  பெண் என்று எப்படிப் பிரித்தறிவது? ஆணின் கொம்புகள் முனைப்பகுதியில் மொட்டையாக இருக்கும். பெண்ணின் கொம்புகளோ கொத்து முடியைக் கொண்டதாக இருக்கும். ஆணின் கொம்புகள் அளவில் பெரிதானவையும் கூட! கொம்புகளைச் சதை மூடியபடிதான் இருக்கும். ஆண் மிருகங்களின் கழுத்துகள்,  அதே வயதொத்த பெண் இனங்களை விட நீண்டதாக இருப்பது,  ஆண்,  பெண் வித்தியாசத்தைக் கண்டறிய இன்னொரு விஷேஷ உடல் அமைப்பாகும். ஒரு மிருகம் இன்னொன்றுடன் சண்டை போடுவது, இந்தக் காட்டு மிருகத்தைப் பொறுத்த மட்டில் மிக வித்தியாசமானது. தங்கள் தங்கள் கழுத்துகளையே இவை சண்டை போடும் ஆயதமாகப் பயன்படுத்துகின்றன என்பது ஒரு விசித்திரமான தகவல். . Necking என்று அழைக்கப்படும் இந்தச் சண்டை முறையால்,  இவற்றிற்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை. சண்டை பெரிதாக இல்லையென்றால், தமது தலையையும்,  கழுத்தையும்,  மற்றையதின் கழுத்தோடும், தiலையோடும் மென்மையாக தேய்க்கும். மோதல் கொஞ்சம் தீவிரமாகும்போது,  இப்படித் தேய்த்துக் கொண்டு,  தலையையும்,  கழுத்தையும், தோள்பட்டையையும் ஒருவர் மீது ஒருவர் சாயக்க முற்படும்போது,   ஏதோ ஒரு மிருகம் அழுத்தம் காரணமாக நிமிர்ந்து நிற்க முடியாமல்,  என்னைவிடு சாமி என்று சொல்லிக் கொண்டுஇ அங்கிருந்து போய்விடுகின்றது. வெற்றிவாகை சூடுபவர்,  புதுப் பெண்டாட்டி ஒருத்தியுடன் சுகித்திருக்கும் வாய்ப்பைத் தட்டிக் கொள்கின்றார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்யும் இந்த விலங்குகள்,  காந்தீயக் கொள்கைகளில் ஊறிப்போன மிருகங்களோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

 

\இவை கூட்டங்களாகத் திரிகின்ற மிருகங்களா என்று ஆராய்ந்ததில்,  மிக நெருக்கமான உறவு,   இந்த மிருகங்களுக்குள் அவ்வளவாக இல்லை என்றே தெரியவந்திருக்கின்றது. ஒரு கூட்டம் என்று பார்த்தால் ஏறத்தாழ ஒரு கிலோ மீற்றர் தொலைவில் நின்று கொண்டு,  ஒரே திசையை நோக்கி நகர்ந்தபடி மேய்கின்ற மிருகங்களே ஒரே கூட்டத்து மிருகங்கள் என்று கண்டறிந்திருக்கின்றார்கள். சில மிருகங்களே இந்தக் கூட்டத்தில் இருக்கும். மிக அரிதாக 40 மிருகங்கள் வரையுள்ள கூட்டங்களும் காணப்பபட்டுள்ளன. பெண் மிருகங்கள் பொதுவாக சில இளம் ஆண் மிருகங்களுடன் கூட்டமாகக் காணப்பபடுதுண்டு. இந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு மிருகங்களுக்கு மேல் இருப்பதில்லை.

இவற்றின் பாலியல் வாழ்க்கை எப்படியானது? இதுவும் சற்று வித்தியாசமானதுதான்! நம்மிடையே ஒருவர் இரு பெண்டாட்டிமாரை வைத்திருந்தால் ,  சின்ன வீடு இருப்பதாகச் சொல்லிக் கொள்வோம். இங்கேயோ இந்த மிருகங்கள் பல சின்னவீடுகளை வைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. வளர்ந்த ஆண் மிருகங்கள்,  எல்லாப் பெண் மிருகங்களுடனும் உடல் உறவு கொண்டு அவற்றைக் கருவடையச் செய்கின்றன. தாம் தேடும் பெண் மிருகங்கள் கருவுறத் தகுதியானவையா என்று கண்டறிய, அவற்றின் மூத்திரத்தைச் சுவைத்து அறிந்து கொண்டு,  பின்பு உடல் உறவு வைத்துக் கொள்கின்றன. அதுவும் எடுத்த எடுப்பில் சாத்தியப்பட்டு விடுவதில்லை. பெண் மிருகங்கள்,   தம்மை அணுகும் ஆண்  வயதில் மூத்ததாகவும்,  ஆளுமைச் சக்தி கொண்டதாகவும் இருந்தால்தான் தம்மை அணுக அனுமதிக்கின்றன. இதன்  காரணமாக நல்ல பொருத்தமான ஆள் இவர்தான்  என்று முடிவெடுக்கும் வரை,  ஆணுடான உறவை பெண் முடிந்த அளவு இழுத்தடிக்கின்றது.  இளமையான மிருகங்களுடன்தான் உறவு வைத்துக் கொள்ள முயற்சிப்பது ஆணின் வழமை. தன்னினச்சேர்க்கை விரும்பிகள் இந்த மிருகங்கள் என்பது,  நம்பமுடியாத ஓர் உண்மை! ஆண் மிருகங்கள்தான் அதிகமாக இப்படியான சேர்க்கையை நாடுகின்றன. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில்,  இந்தப் பழக்கம் 94 வீதமான ஆண்மிருகங்களுக்கும், ஒரு வீதமான பெண்களுக்கும் இருக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்ட இந்த மிருகங்கள், வித்தியாசமான ஒலிகளை எழுப்பி,  தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றன.ஆணுடன் பெண் உடல் உறவு வைத்துக் கொள்ளும் சமயத்தில், பெரிதாக இருமுவது போன்ற ஒலிகளை எழுப்புகின்றன. பெண் மிருகங்கள் தங்கள் கன்றுகளை அழைக்க, வேறொரு விதமான ஒலியை எழுப்புகின்றன. கன்றுகளோ ஆட்டுக்குட்டிகளைப் போல சப்தம் எழுப்புகின்றன. முனகுதல்,  புல்லாங்குழல் ஊதுவதை ஒத்த சப்தம்,  பசு எழுப்புவது போன்ற சத்தம்  என்று வெவ்வேறு ஒலிகளை எழுப்பும் ஒட்டகச்சிவிங்கிகள்,  யானைகளைப் போல தொலைதூரத்திலுள்ள மிருகங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றன.

நின்றபடி இவற்றால் ஓய்வெடுக்க முடிவது,  இறைவன் சிருஷ்டியில் இன்னொரு விந்தை. ஒரே நேரத்தில் இவை 5 நிமிடங்களுக்கு மேல் தூங்குவதில்லை என்பது இன்னொரு புதுமையான தகவல். ஒரு பெண் மிருகம் பிறந்து தனது ஐந்தாவது வருடத்தில் தாயாகும் தன்மையை அடைகின்றது. 15 மாதங்கள் தன் வயிற்றில் கருவைச் சுமந்தாக வேண்டும். 20 மாத இடைவெளியில்தான்,  இது மீண்டும் தாய்மை அடைகின்றது. பிறந்த கன்று 6 அடி உயரமானதாகவும்,  150 இறாத்தல் எடைகொண்டதாகவும் இருக்கும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கன்று நடக்க ஆரம்பித்துவிடும்.பிறக்கும்போதே கொம்புகளுடன்தான் பிறக்கின்றன. இதன் வாழ்நாள் காட்டில் ஏறத்தாழ 25 வருடங்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஆபிரிக்காவின் முழுப் பிராந்தியங்களிலும், ஒட்டகச்சிசிவிங்கி,  வேட்டைகாரர்களின் இலக்காகவே இருந்துவருகின்றது. இதன் வால், தோல்,இறைச்சி போன்றவைக்காகவே இவை கொல்லப்பட்டு வருகின்றன. இதன் வாலை வைத்திருந்தால்இ வீட்டில் நல்ல அதிஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இருந்துவருகின்றது. ஈக்களைக் கலைப்பதற்கும் இது ஒரு நல்ல உபகரணமாகப் பயன்பட்டு வருகின்றது. இதன் தோல் கேடயத்திற்கும், செருப்பிற்கும், மேளம் செய்வதற்கும் தேடப்படுகின்றது. தோலை எரிக்கும்போது வெளிக்கிளம்பும் புகைஇ மூக்கால் இரத்தம் சிந்துவதைத் தடுக்க, ஆபிரிக்காவின் சில இன மருத்துவர்களால் உபயோகிக்கப்படுகின்றது. இதன் முடியைக் கொண்டு, கழுத்தணிகள்இ காப்புகள் செய்கின்றார்கள். ஒய்யாரமாக நடந்துவரும் இந்த ஒட்டகச்சிவிங்கிகளும் இன்று அழிந்துகொண்டுதான் வருகின்றன. மரங்களை அழித்தல்இ வேட்டையாடுதல் போன்றவைதான் முக்கிய காரணங்கள். மனிதனுடைய பேராசை அழிந்தால்தான்இ எந்த விலங்கும் அழிவதிலிருந்து தப்பிப் பிழைக்கும் என்பதற்கு,  இந்த ஒட்டகச்சிவிங்கியும் ஒரு விதிவிலக்கல்ல! 02.06.17

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *