சதைவெறியும் கொலைவெறியும்-3

சதைவெறியும் கொலைவெறியும்-3

23 views
0

கொலைக்களம்3

உடல் வேட்டை

எனவே இவனால் கொல்லப்பட்டவர்களின் “எச்சங்களை“ இவனைக் கொண்டு கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டார்கள். இவனை உடனடியாக சிறையில் தள்ளவில்லை.  குறைத பட்சம் இவன்  ஒப்புக்கொண்ட மூன்று பெண்களின் உடல்களின் மிஞ்சிய பகுதியாவது  கிடைத்தால்தான், இவன் கொலைகாரன் என்பது உறுதியாக முடியும்.

இரு வாகனங்களில் ஒரு பொலிஸ் குழு இவனையும் ஏற்றிக் கொண்டு, மாலை ஒரு மாலை நேரம் வேட்டையைத் தொடங்கியது. தனக்கு நன்கு பரிச்சயமான இடமென்பதால், அந்த இரவுப் பொழுதிலும்,  கிளாற்மென், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைத் தாண்டி,  ஆள்நடமாட்டம் இல்லாத வனாந்தரப் பிராந்தியத்தில் நுழைந்தபோது, மிக அழகாக  வழிகாட்டிக் கொண்டிருந்தான். அது இரவு நேரமாக இருந்தும், வழிகாட்டுவதில் இவனுக்கு எந்தச் சிரமமும் இல்லாதிருந்ததை பொலிஸார் அவதானித்து மனதுக்குள் வியந்தார்கள்.

முதலில்  ஷேர்லி பிரிட்ஜ்போர்ட் என்ற இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலைசெய்த இடத்தை இவன் காண்பித்துள்ளான்.  அங்கே சிதறலாகக் கிடந்த எலும்புகள் இவன் பொய் சொல்லவில்லை என்பதை பொலிஸாருக்கு உறுதிப்படுத்தின. . உடம்பின் பெரும்பகுதியான எலும்புகளை மிருகங்கள் கொண்டு சென்றிருந்தாலும், எஞ்சியிருக்கும் எலும்புகளை வைத்து, இவை பிரிட்ஜ்போர்ட்டின் எலும்புகள்தானா என்று புலனாய்வு அதிகாரிகளால்,  பின்பு கண்டுபிடித்துக் கொள்ள முடிந்தது.   அங்கே ஒருவரை காவலுக்கு விட்டு விட்டு, புலனாய்வுப் படை தன் வேட்டையைத் தொடர்ந்தது.

கொஞ்சத் துாரம் சென்றதும் வாகனத்தை நிறுத்தும்படி கிளாற்மான் கேட்டுக்கொண்டான். அவனுக்கு எப்படி இந்த இடங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன என்று அதிகாரிகள் ஆச்சரியப்படும் வகையில் , அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் தேடுதல் ஆரம்பமாயிற்று. சில நிமிடங்களில் தேடியது சிக்கியது. ஏறத்தாழ முழுமையான நிலையில் ஒரு எலும்புக்கூடு  கொல்லப்பட்டவளின். மண்டையோட்டில் தலைமுடியும் கொஞ்சம் காணப்பட்டது. இவள்தான் அஞ்செலா றோஜஸ் என்றான் கிளாற்மான். அவளை அந்தப் பெயரில்தான் இவன் அறிந்திருந்தான். ஆனால் துப்பறியும் அதிகாரிகளுக்கு, கொலையுண்டவளின் உண்மையான பெயர் றுத் மேர்க்காடோ என்று தெரியும்.

அடுத்த நாள் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

ஜூடித் ஆன் டல் என்ற பெயருடைய ஓர் இளம் பெண்ணைக் கொன்ற இடத்திற்கு அதிகாரிகளைக் கொண்டு வந்து சேர்த்தான் ஹார்வே கிளாற்மான். இங்கே  சில கந்தலாடைகளைத் தவிர வேறு எதையும் பெரிதாகக் காணவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஓர் எலும்புக்கூட்டை , அந்த வழியாக வந்த சிலர் கண்டு பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்கள்.. அதை மீள்பரிசோதனை செய்ததன்மூலம், இந்த எலும்புக்கூடு ஜூடித் என்ற பெணணுடையது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

கொலையாளியாக கைதாகிறான்

இவனால் மூவர்  கொலைசெய்யப்பட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட கையோடு, நவம்பர் 3ஆம் திகதி  சன் டியாகோ பிரிவு அதிகாரிகளிடம் இவன் கையளிக்கப்பட்டான். இவனை அமெரிக்காவின் வேறு மாவட்டங்களும் விசாரணைக்காக கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவன் செய்த அட்டூழியங்களை விபரமாக அறிந்தால், கொலைகாரர்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள் என்பதை அறிய முடியும் என்று  அதிகாரிகள் கருதினார்கள்.  ஒரு குழு,  தனிப்பட்ட அறைக்குள் இவனை அழைத்து வந்தது. இவன் வாக்குமுலத்தை பதியப்போவதாகவும், இந்தப் பதிவுகள் இவனுக்கு எதிரான சாட்சியமாக அமையலாம் என்று முன்கூட்டியே அவனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவன் சம்மதமும் கோரப்பட்டது. ஆம் என்று முழு மனதாக கிளாற்மான் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்.

அடுத்த நான்கு மணி நேரம் கிளாற்மானின் கொலைக் கதைகள் தொடர்ச்சியாக விரிந்தன. கேட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள், இப்படியொரு மோசமான, பயங்கரமான கதையைக் கேட்டிருக்கவில்லை. ஒரு திகில்நிறைந்த வர்ணத் திரைப்படத்தை நேரில் பார்ப்பது  போன்று, அவர்கள் கண்கள் முன்னே காட்சிகள் மனத் திரையில் விரிந்து திகிலுாட்டின… லொறெயின் விஜில் என்ற இளம்பெண்ணை எப்படித் திட்டமிட்டுக் கொன்றேன் என்பதை ,விலாவாரியாக விபரித்திருந்தான்.

அவளை எப்படி என் அறைக்கு அழைத்து வந்தேன்,  எப்படி அவளை நிர்வாணமாகப் படமெடுத்தேன்,  எப்படி அவளை உடலை அணுஅணுவாய் அனுபவித்தேன்.  எப்படி அவள் உடல் துடிக்க துடிக்க கழுத்தை நெரித்துக் கொன்றேன்,  தான் செய்த ஒவ்வொரு கொடூரத்தையும் அவன் எந்த வித உணர்வுமின்றி விபரித்துக் கொணடிருந்தான்.

பெண்களின் பெயர்கள், முகவரிகள், போன்றவற்றை தெளிவாகக் கூறியதோடு, பெண்களின் மீதான பாலியல் இச்சை தன்னை எப்படி எப்படியெல்லாம் செய்ய வைத்தன என்பதை அவன் விபரித்திருந்தான்.  பாலியல் இச்சைகள் தீர்ந்ததும் தன் மனதில் முதலில் தோன்றுவது, பெண்ணைக் கொல்வதுதான் என்றுk; அவன் கூறியிருந்தான்.  கொல்ல வேண்டும் என்ற திட்டங்கள் எப்படி தனது மனதில் விதைக்கப்பட்டன என்பதையும் அவன் விபரிக்கத் தவறவில்லை.

அவன் பெண்களை வதைசெய்த குரூர முறைகளைக் கூறும்போது, அதை நினைத்து ஒரு துளியேனும் அவன் கவலைப்படாதிருந்ததை அதிகாரிகள் கவனித்தார்கள்.  கைது செய்த நேரம் தொடக்கம் , தன்னைக் கொன்றுவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்த கிளாற்மான், தனது இறுதி வாய்ப்பு  இதுதான் என்பது காரணமாக , ஒளிவு மறைவும் இன்றி, எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதினார்கள்.

 

இவன் மனநோயாளி அல்ல

இந்தக் கொலைகாரன் மீது அப்பொழுதும் கருணை கொண்ட ஒரு உள்ளம் இருந்தது என்றால் அது அவன் தாய் உள்ளந்தான்! 69 வயதான இவனது தாய் இவனைச் சிறையில் நேரில் சந்திக்கச் சென்றுள்ளாள். நவம்பர் 12ந் திகதி இவனை நேரில் சந்திக்க, தாய்க்கு அனுமதி அளித்தார்கள்.  அந்தத் தாய் அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. பத்திரிகையாளர் அவளைச் சூழ்ந்தபோது, தன் மகனைப் பற்றி, இதுவரை எவருமே கூறாத ஒன்றைக் கூறியிருக்கிறாள்.“என் மகன் கொடூரமானவன் அல்ல. அவன் ஒரு நோயாளி” இதுதான் அவள்  தன் மகனைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கு கூறியது.

கிளாற்மான் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் , தாய்கூறியது,  கிளாட்மானை நச்சு வாயு அறைக்கு அனுப்பாமல் தடுக்க, தனக்கு உதவக்கூடுமென நினைத்தார். . அதாவது கிளாற்மான் ஒரு மனநோயாளி என்ற முறையில் தன் வாதத்தை முன்வைக்கலாமென அவர் நினைத்திருந்தார். இதற்கு மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு கிளாற்மான் உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் சாக விரும்பிய கிளாற்மான் இதற்கு மறுத்தான். வக்கீல் ஒருவாறு அவனைச் சம்மதிக்க வைத்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இவனைப் பரிசோதித்த மருத்துவர், இவன் மனநோயாளி அல்ல. இவனுக்கு சரி எது பிழை எது நன்று நன்றாகவே பகுத்தறிய முடியும். இவன் விரும்பினால் தவறானதைச் செய்யவும் இவனால் முடியும் என்று அறிக்கையில் எழுதி இருந்தார்.

வக்கீலின் திட்டம் தவிடுபொடியாகியது.

ஷேர்லி பிரிட்ஜ்பேர்ட் என்ற இளம்பெண்ணை அவள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றபோது, அவளுடன் பக்கத்தில் நின்ற அவள் உறவினர்கள், ஷேர்லியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றவன் இவன்தான் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார்கள்.

இவன் வாய்மொழி மூலம் சொல்லிப் பதிவான டேப்புகளும், நீதிமன்றத்தில் போட்டுக் காண்பிக்கப்பட்டன.

அது 1958ம் ஆண்டு. திகதி டிசம்பர் 15.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் , ஹார்வே கிளாட்மான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால், நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது இந்த நாளில்தான்!

“இப்படியெல்லாம் பெண்கள் வதை செய்யப்பட்டு மிருகத்தனமாக கொலை செய்யப்படலாம் என்பதை இப்பொழுதுதான் முதற்தடவையாக அறிய வந்துள்ளேன். இது உன்னோடு மரணித்துப் போகட்டும்.“ என்று கூறிய நீதிபதி, அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.

போச்சு இவன் மூச்சு

இவனுக்கு ஏ 50259 என்ற இலக்கம் அளிக்கப்பட்டு, சன் குவென்டன் சிறைச்சாலையில், ஏனைய கைதிகளிடமிருந்து ஒதுக்கான ஓர் இடத்தில், தனியாக அடைக்கப்பட்டான். தன் வெறி உணர்வை வெளிப்படுத்த முடியாமல்- படப்பிடிப்பு, குரூரமான சித்தரவதை, கழுத்தை நெரித்துக் கொல்லுதல் என்ற இதுகால வரை கிடைத்த “தீனி“ இப்பொழுது கிடைக்காதது, அவனைப் பெரிதாகச் சித்திரவதைப்படுத்தியது. இந்த ஏகாந்தம் அவனுக்கு பெரும் வேதனையைத் தந்தது.

இது நீண்ட காலம் தொடரவில்லை. செப்டெம்பர்18, 1959ஆம் ஆண்டு, இந்தச் சிறையின் பிரபல்யமான “பச்சை அறைக்கு“ அழைத்துச் செல்லப்பட்டான். சைனட் விஷ வாயுவை இங்கேதான் இவன் சுவாசித்தாக வேண்டும்.

காலை 10 மணிக்கு இதற்கான “சடங்குகள்“ ஆரம்பமாகின. 10.01க்கு இவன் ஆசனத்தில் பிணைக்கப்பட்டான். . ஒரு நிமிடம் கழித்து சோடியம் சைனையிட் கொண்ட குப்பிகள் பச்சை அறைக்குள் வீசப்பட்டன. ஒரு நிமிடம் கழித்து அறையெங்கும் விஷவாய்வு வியாபித்தது. இவன் நாடித்துடிப்பு 200 என்று முதலில் காட்டியது. நேரம் 10.05 ஆகும்போது இது 20ஆக கீழிறங்கியதை, கண்ணாடிச்சுவருக்கு வெளியே நின்ற மருத்துவர்கள் கவனித்தார்கள். 10.06க்கு மூச்சு விடத் திணறியவன் வாயிலிருந்து எச்சில் வழிந்தது.10.07க்கு தலை கீழே சரிந்தது. 10.12க்கு கிளாற்மான் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

மகா மோசமான சாவுதான். ஒருவேளை கழுத்தில் சுருக்கிட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால், இதை அந்தக் கொலைகாரன்  தன் மரணத்தை ரசித்திருப்பானோ? பன்னிரண்டு வயதில் இவன் “விளையாடிய விளையாட்டல்லவா“ அது? கொல்லும் வெறியும்  ஓய்ந்தது……….

25.11.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *