சதை வெறியும் கொலைவெறியும்

சதை வெறியும் கொலைவெறியும்

29 views
0

கொலைக்களம்-1

” ரசனைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன. நிறையச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர்கள் ஒரு சாரார். நிறையக் குடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்னொரு சாரார். நிறையப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள் வேறு சிலர். இதையெல்லாம் தாண்டி வேகமாக எதையும் செய்வதையே விரும்புகிறார்கள். இதையெல்லாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டு, குறிப்பிட்ட சிலரின் அசாதாரண ஆசைகளைப் பார்க்கும்போது, அதிர்ச்சிவயப்பட்டு விடுகிறோம். பிறரை வருத்தி இன்பம் காண்பது என்பது இதிலொன்று. இது ஒரு மனநோய். சமூகத்தில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களைப் போன்றவர்களும், வேறு விதமான மனநோய்கள் கொண்டவர்களும் ஈவிரக்கம் இல்லாமல், பல கொலைகளைச் செய்திருக்கின்றார்கள். மனித மிருகங்களாக நம்மைச் சுற்றி அலைந்த இவர்களது கதைகளையே இத் தொடரில் கொண்டு வருகிறோம்.

அவன் பெயர் ஹார்வே கிளாற்மன். இவனுக்கு 12வயதாக இருக்கும்போதே, இவனை நினைத்து பெற்றோர் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். பிறரைத் துன்புறுத்தி அதில் பாலியல் சுகம் காணுபவனாக இவன் இருந்திருக்கிறான். தனது 12வது வயதில், தனது கழுத்தை கயிற்றுச் சுருக்கில் மாட்டிக் கொண்டு, தான் பட்ட வேதனையில்”சுகம் காண” விளைந்ததை இவன் பெற்றோர்கள் கவனித்திருக்கிறார்கள். பயந்திருக்கிறார்கள். கவலைப்பட்டிருகிறார்கள். மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அவர்களது குடும்ப மருத்துவர் இந்தச் சம்பவத்தை பெரிதுபடுத்தவில்லை.  சிறுவன் வளரவளர , இந்தச் சுபாவம் அவனிடமிருந்து இல்லாது போய்விடும் என்று மருத்துவர் பெற்றோரை ஆறுதல்படுத்தி இருக்கிறார். ஆனால் பாவம், இவன் கையால் பலர் குரூரமாகப் பலியெடுக்கப்படப் போகிறார்கள்  என்பது அப்பொழுது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

பதின்மவயசில் இவன் அட்டகாசம் தொடங்கிவிட்டது. 1940களில் அமெரிக்காவின் கொலறாடோ மாவட்டத்தில் கழிந்த இவனது இளம்பிராயத்தின் போது, இவன் பாலியல் துன்புறுத்தலுக்கு பல பெண்கள் ஆளாகியிருந்தனர். பெண்களின் கண்களைக் கட்டி, வாயை அடைத்து விட்டு, அவர்களைப் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்குவது, திருடுவது என்று இவன் பெண்களை வதைத்துக் கொண்டிருந்தான். இவனோடு ஒரே வகுப்பில் படித்த ஒரு பெண், பின்னொரு காலத்தில் கிளாற்மானை இனங்கண்டு, பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலமொன்றில் இது உறுதியாகி இருக்கின்றது.

 

வகுப்புத் தோழியால் சிறைவாசம்

அந்த இளம்பெண்ணின் பெயர் ஒயிலா ஜோ ஹான்ட்.. துப்பாக்கி முனையில் பயமுறுத்தி, தொலைபேசிக் கம்பத்தோடு அவளைக் கட்டிவைத்து விட்டு, தன்னை இவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருந்தான் என்று இவள் கூறியிருக்கிறாள். இது 1945 மே மாதம் நிகழ்ந்துள்ளது.

தன்னைப் பலாத்காரமாக முத்தமிட்டது..மேலாடையைக் கிழித்து  , அவள் அவயவங்களைப் பிடித்து, வேதனை அளிக்கும் வகையில் குரூரமாக  நடந்து கொண்டது, இடுப்புக்கு கீழேயும் அவன் வக்கிரபுத்தி போன இடமெல்லாம்  அவன் கைகள் அலைந்தது, தன் வேதனையை அவன் வெகுவாக ரசித்தது என்று வெள் தன் முறைப்பாட்டில் தனக்கு நடந்த கேவலங்கைளை விபரித்துக் கூறியிருந்தாள்.

இந்தப் பெண்ணின் துணிச்சலான முறைப்பாடு, முதற் தடவையாக இவனைச் சிறைப் பறவையாக்கி இருக்கின்றது. உயர் கல்லுாரியில் தன் வகுப்பு நண்பர்களோடு படிப்பைத் தொடர வேண்டியவன், டென்வர் சிறைக்குள் தள்ளப்பட்டான்.

தாய் இவனைப் பிணையில் எடுத்து, சிறையிலிருந்து வெளியில் கொண்டுவந்தாள். ஆனால் கிளாற்மானால் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை.

தன் கைவரிசையை மீண்டும் காண்பிக்க ஆரம்பித்தான் இந்தக் கொடியவன். 1945 ஜூலை மாதம் 1945ம் ஆண்டு, இன்னொரு பெண்ணைப் பிடித்து, கைகளைக் கட்டி, வாயை அடைத்து, பாலியல்ரீதியாக வதை செய்திருக்கிறான். இது கொலறாடோ என்ற இடத்தில் சம்பவித்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து. இவன் கைதாகி, மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளான். இந்தத் தடவை அவனுக்குக் கிடைத்தது எட்டு மாதச் சிறைவாசம்.

இந்தச் சிறைவாசத்தின் பின்னர், 1946 ஜூலை மாதம் இவன் தன் தாயுடன், நியூயோர்க் நகரில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளான்.. ஆனால் இங்கேயும் அன் திருந்தவில்லை.. இவனது நியூயோர்க் வாழ்க்கை ஒரு மாதந்தான் கழிந்திருக்கும்.. தொடர்ச்சியான கொள்ளைகள்,  பெண்களின் மீதான தாக்குதல்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, நியூயோர்க் பொலிஸாரினால் கைதாகினான்.

இந்தத் தடவை, 4 வருடங்களுக்கு மேல் அவன் சிறையில் இருந்துள்ளான். இந்தக் காலகட்டத்தில் , அப்பொழுது இங்கு மோசமான சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட ”சிங்சிங்” என்ற சிறைக்குள்ளும் இவன் இருந்துள்ளான்.

கொலைகார “சிங்சிங்“கும் மின்சாரக் கதிரையும்

இந்த ”சிங்சிங்” சிறைபற்றி இங்கு விபரிக்க வேண்டியது அவசியமாகின்றது. இன்றும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, இந்த சிறைச்சாலை இயங்குகின்றது. இது அதி உச்ச பாதுகாப்பைக் கொண்ட, ஒரு சிறைச்சாலையாகும்.  இதன் நிர்மாணப் பணி 1826இல் ஆரம்பி்த்து, 1828இல் பூர்த்தியாகி இருக்கின்றது. 1685இல் அமெரிக்காவிலிருந்த செவ்விந்தியர்களிடமே இந்தக் காணி வாங்கப்பட்டிருந்தமையால், அவர்கள் இந்தக் காணிக்கு இட்ட பெயர்தான் இந்த சிங்சிங். இடையில் பெயர் மாற்றம் பெற்றாலும், இன்றுவரையில் இந்தப் பெயர்தான், இந்தச் சிறையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.

இதைக் கொலைகாரச் சிறை என்று வர்ணிக்கிறார்கள். காரணம் இருக்கவே இருக்கின்றது. 1891இல் இங்குதான் மின்சாரக் கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றுவதை  முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்கள். இதனால் உலகறிந்த ”கொலைகார” சிறைச்சாலையாகியது சிங்கிங். அயல் பிராந்தியமான ஓபேர்ணில் மின்சாரக் கதிரை அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1963 வரை ,  ஏறத்தாழ அனைத்து மரணதண்டனைகளும், இந்தச் சிறைச்சாலையின் மின்சாரக் கதிரையின் மூலமே நிறைவேற்றப்பட்டுள்ளன.. இதன் பின்னர் இந்தக் கொலைகார மின்சாரக் கதிரை, அங்கிருந்து அகற்றப்பட்டு, கிரீன் ஹாவன் என்னும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஹட்சன் ஆற்றை ஒட்டியுள்ள இந்தச் சிறை,  இன்று பல மாடிகளுடன் கூடியதாய், 2000க்கு மேற்பட்ட கைதிகளை அடைத்து வைக்கும் வசதியுடன் மாற்றம் பெற்று  நிற்கிறது. 1825இல் இருந்த சிறைக்கூடம் இப்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1972இல் மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை, ஆண்களும் பெண்களுமாக 614போ், இங்குள்ள மின்சாரக் கதிரை மூலம் மரணதண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்…….

தொடரும் அட்டகாசம்

கிளாற்மானை 1951இல்  அதிகாரிகள் கொலராடோ சிறைக்கு  அனுப்பி வைத்தார்கள். டென்வரின் மனோதத்துவ மருத்துவர் இவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் எந்த மருத்துவராலும் இவனைக் குணப்படுத்த முடியவில்லை. 1951தொடக்கம், 1957வரை இவன் டென்வரில் வாழ்ந்தபோது, , இவன் குற்றச் செயல்கள் எதிலாவது சம்பந்தப்பட்டுள்ளானா என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், அப்பொழுது பிரபல்யமாக இருந்த ஜேன் டோ என்பவளின்  கொலையில், பிரதான சந்தேக நபர் இவன்தான்; என்று  அதிகாரிகள் கருதினார்கள்;. 1954இல் ஓர் இறந்த பெண்ணின் உடலை, ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் கண்டெடுத்தார்கள்.  நீண்ட காலம் கொலையுண்டவள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் கொலைசெய்யப்பட்டவள் பெயர் டொரத்தி என்றும், அவள் வயது 18 என்றும், அரிசோனா பிராந்தியத்தைச் சேர்ந்தவளென்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

கொடூரம் தொடரும்………

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *