அறிந்த மிருகம் அறியாத கதை(3)-அழிந்து விடுமா ஆனைக்கூட்டம்?

9 views
0

கடந்த ஒரு தசாப்த காலத்தில் , யானைகளின் தொகை 62 வீதத்தால் வீழ்ச்சி கண்டு்ளள்ளது. அடுத்த ஒரு தசாப்த காலத்தின் முடிவில் , யானைகள் அடியோடு அழிந்து என்கிறது ஓர் ஆய்வு.‘

கேட்க நன்றாகவா இருக்கின்றது. காடுகளின் மிகப் பெரிய விலங்காக கம்பீரத்தோடு உலாவி வரும் யானைகளுக்கு அழிவு காலமா?

இன்று யானை மட்டுமல்ல, மனித பேராசை, காட்டு விலங்குகள் பலவற்றை வெறும் சித்திரங்களாக்கிக் கொண்டு வருகின்றன. முன்னொரு காலத்தில் மமொத் என்ற பெயரில் உலாவிய மிருகங்களே இன்றைய யானைகளாகி இருக்கின்றன.இன்றைய யானைகள் அழிந்து விட்டால், நாளைய சமுதாயம், சித்திரங்களில் நாம் மமொத்தைப் பார்ப்பது போல, யானைகளையும் சித்திரங்களாகப் பார்க்க வேண்டி வரும்.

உடன் நின்று கொல்லும் தந்தங்கள்

தினசரி 100 காட்டு யானைகள் ஆபிரிக்க காடுகளில் கொல்லப்படுகின்றன என்பது அதிர்ச்சியான தகவல் மாத்திரமல்ல, அருகி வரும் விலங்கினங்களாக யானைகளும் மாறி வருகின்றனவே என்ற ஆதங்கத்தையும் நமக்குத் தருகின்றது.

எதற்காக இவற்றைக் கொன்றழிக்கிறார்கள்?

இதன் தந்தங்கள்தான் இதன் அழிவிக்கு முதல் காரணம். இதைவிட இறைச்சிக்காகவும் யானைகள் கொல்லப்படுகின்றன. .யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஆசியாவில் பெரு மதிப்பு உண்டு. யானைகள் போடும் குட்டிகளின் தொகையை விட, கொல்லப்படும் தொகை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.  ஒருவரது உடல் உறுப்பே அவருக்கு எமனாக வாய்த்து விடுகின்றது என்பது, யானைகளுக்கு சாலப் பொருத்தமாயிருக்கும்.

 சிறிது காலத்தில் வெறும் சித்திரந்தானா?

13 நாடுகளில் வசிக்கின்ற ஆசிய யானை, அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு யானை இனம் என்பது கவலை அளிக்கும் விடயம். இன்றைய புள்ளி விபரத்தின்படி, 40.000க்கு குறைவான ஆசிய யானைகளே எஞ்சிக் கிடக்கின்றன.  நாட்டின் அபிவிருத்தி அபிவிருத்தி என்று சொல்லிக் கொண்டு , நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் அமைத்தல் இந்த மிருகங்களின் வசிப்பிடங்களை அழித்து விடுகின்றன. கிராமங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதற்கு இதுவே தலையாய காரணம் என்பது கவனிக்கத்தக்கது. ஆசிய யானைகள் அவற்றின் தந்தங்களுக்காகவும், ஏனைய உடல் உறுப்புகளுக்காகவும் கொல்லப்பட்டு வருகின்றன.  பல யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பின்பு விற்கப்பட்டு, இந்த மிருகங்கள் உல்லாசப் பூங்காக்களில், உல்லாசப் பயணிகளை மகிழ்விக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. களவில் காடுகளில் மரங்களை வெட்டிச் சாய்ப்போர், வெட்டிய மரங்களுடன் இடம் விட்டு இடம் பெயர, யானைகளின் உதவியையே நாடுகின்றனர்.

    

 

அதென்ன ஆசிய ஆபிரிக்க யானைகள்?

அளவில் பெரியது சிறியது என்ற வேறுபாடு போக, ஆசிய ஆபிரிக்க யானைகள் இடையேயுள்ள வித்தியாசங்கள் பல.! காதுகளின் அளவுகள் , இந்த வித்தியாசத்தில் முதலிடம் பிடிக்கின்றன.  ஆபிரிக்க யானைகளின் காதுகள் ஆபிரிக்க  பூகோளப் படத்தை ஒத்த வழியில் பெரிதாக  இருப்பதும், ஆசிய யானைகளின் காதுகள் இந்திய பூகோளப் பட வடிவில்  சிறிதாக இருப்பதும் கவனிக்கப்படத்தக்கது. கழுத்தைத் தொடும் வகையில் ஆபிரிக்க யானைகளின் காதுகள் நீண்டிருக்கும்.  ஆசிய யானைகளின் காதுகள் அப்படியல்ல.

ஆபிரிக்க யானைகளில்  திறந்த புல்வெளிகளில்(சவன்னா) காணப்படும் யானைகள், காடுகளில் வசிக்கின்ற யானைகள் என்று இரு இனங்கள் காணப்படுகின்றன.

நன்கு வளர்நத ஆசிய யானையின் எடை சராசரியாக 2750 தொடக்கம் 5,420 கிலோ வரை எடைகொண்டதாக இருக்கும். தோள் வரையிலான உயரம் 3.8 மீற்றரைத் தாண்டுவதில்லை.. ஆண்கள் பெண்களை விட அளவில் பெரியவையாகக் காணப்படுகின்றன. அனேகமாக ஆண்களுக்குத்தான் பெரிய தந்தங்கள் இருக்கின்றன. தும்பிக்கையில் ஒரு ‘விரல்‘ மாத்திரமே உள்ளது. முன்னங்கால்நகங்களின் எண்ணிக்கை 5. பின்னங்காலில் இருப்பது 4. இதனுடைய தும்பிக்கை தடிப்பாக இருப்பதோடு வளையங்கள் குறைவாகவே காணப்படும்.நெற்றியில் பிளவு இருக்கும்.

ஆபிரிக்க யானையோ 4000 தொடக்கம் 7000 கிலோ . எடை கொண்டதாகக் காணப்படும். இதனுடைய தோலில் அதிக சுருக்கங்கள் இருப்பதைக் காணமுடியும். இதன் நெற்றி பிளவுபட்டு இராது. ஆணுக்கு பெரிய தந்தங்கள் இருப்பினும்,  ஆண் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருப்பது ஆபிரிக்க யானைகளில் குறிப்பிடத்தக்கது.. தும்பி்க்கை நுனியில் இவற்றிற்கு இருப்பதோ இரு ‘விரல்கள்‘. முன்னங்கால்நகங்கள் 4. பின்னங்கால் நகங்கள்3. இது புல்வெளியில வதிகின்ற யானைகளுக்குப் பொருந்தும். காடுகளில் உள்ள யானைகளுக்கு முன்னங்கால்களில் 5 நகங்கள். பின்னங்கால்களில் 4

அடடா இவ்வளவு விததியாசங்களா என்று கேட்கிறீாகளா? உண்மைதான் இந்த மிருகங்களை நாம் கூர்ந்து பார்க்கும்போதுதான் இந்த விததியாசங்களை  கண்டறிந்து கொள்ள முடிகின்றது.

தாய்லாந்தும் யானைகளும்

பரந்த அளவில் பெரிய  காட்டுப் பிரதேசம் இருப்பதும், அளவில் பெரிதாக இருப்பதும், ஆபிரிக்கக யானைகள் மனிதர்களிடம் பிடிபடாமல் இருக்க ஓரளவேனும்உதவுகின்றன. ஆனால் ஆசிய யானைகளோ  மனிதர்களோடு மனதர்களாக கடந்த 4000 வருடங்களாக வாழ்ந்து வந்திருப்தோடு, பரம்பரை பரம்பரையாக வணக்கத்துக்குரியவையாகவே இவை நோக்கப்பட்டுள்ளன.  உதாரணத்திற்கு தாய்லாந்தை எடுத்துக் கொண்டால், இது அவர்களது தேசீய சின்னம். இந்த யானைகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு தினத்தை இவர்கள் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். மன்னரிடமிருந்து, இராஜ பட்டம் ஒன்றை, யானை பெற முடியும்.

2007இல் எடுத்த ஒரு கணி்ப்பின்படி வளர்க்கப்படும் யானைகள்  தொகை 3,456என்றும் , காட்டில் ஆயிரம் வரையிலான யானைகள் இருப்பதாகவும் ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. 1986இல் இது அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு மிருகமாக இங்கு பிரகடனப்படுத்தப்ட்டிருந்தது.

ஆண்டுதோறும் இடம்பெறும் யானைகள் தினம் இந்த ஆண்டும் அனுஸ்டிக்கப்பட்டது. இத் தினமன்று தாய்லாந்தின் தேசீய பூங்கா திணக்களம் தனது அறிவித்தல் ஒன்றில் யானைகள் தொகை 7தொடக்கம் 10 வீத அதிகரிப்பைக் கண்டிருப்பதாகக் கூறியிருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விடயம்.

 

இலங்கையில் யானைகள்

இலங்கையிலும் யானை வணக்கத்துக்குரிய  ஒரு மிருகமாகவே திகழ்கின்றது. மிருக வதைச் சட்டத்தின் கீழ், வயதில் குறைந்த யானைகளைக் கொண்டு  பார வேலைகள் செய்வதைத் தடைசெய்து, சென்ற ஆண்டு சட்டமாக்கி இருந்தார்கள்.  புராதன சிங்களவர் பிடிக்கப்பட்ட யானைகளை, தமது யானைப் படைக்கு உபயோகித்திருந்தார்கள். ஆனால் இன்று வைபவ நிகழ்வுகளிலேயே யானையைப் பயன்படுத்துகிறார்கள்.

அப்பா அம்மா இல்லாத குழந்தைகளுக்கு ஒரு அனாதை மடம்  இருப்பது எலலோருக்கும் தெரியும்.  இலங்கையிலோ இதற்கு ஒரு படி மேலே போய், அனாதை யானைக்குட்டிகளுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை , பின்வெல்ல என்னும் இடத்தில் அமைத்துள்ளார்கள். .இங்கு 93 யானைக்குட்டிகள் பராமாரிக்கப்பட்டு வருகின்றன என்பது போற்றுதலுக்குரிய  ஒரு பணியாகும்.  பக்கத்தில் மாஓயா ஆறு இருப்பது, இந்த யானைகளுக்கு வசதியாக அமைந்துள்ளது.  அனாதையாக விடப்பட்ட குட்டிகளைப் பராமரிப்பதோடு, காட்டில் காயப்பட்ட யானைகளும் இங்கு கொண்டுவரப்பட்டு, தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகின்றது.. இது உல்லாசப் பயணிகளை பெரிதும் கவரும் ஓர் இடமாகவும் மாறிவருகின்றது.

யானைக் குடும்பங்களின் கதை

யானைக் குடும்பங்களில் குறைந்தது 12 பேரில்  தொடங்கி 100 பேர் வரையில் இருப்பதுண்டு. 30 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண் யானைக்கே கூட்டத்தின் தலைமைப் பதவி்.

இந்தக் கூட்டத்தில் சொந்தக்கார பெண்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஆண் யானைகள் ‘முதிர்ச்சி‘ அடையும் வயதை அதாவது 10 அல்லது 15 வயதை எட்டியதும் கூட்டத்திலிருந்து துரத்தப்படுகின்றன.  சுதந்திரமாக செல்ல இந்த வளர்ந்த ஆண் யானைகள் அனுமதிக்கப்படுகின்றன. இந்தத் துரத்தப்பட்ட யானை இன்னொரு ஆண் யானையுடன் இணைந்தோ அல்லது சிறு ஆண்யானைகள் கொணட கூட்டத்துடனோ இணைந்து கொள்வதுண்டு. 20 வயதை எட்டும்போது, தங்கள் கூட்த்திற்கு திரும்பி வந்து, பெண்களுடன் உறவு வைத்து விட்டுப் போய்விடுகின்றன.

இவர்கள்  வாழ்வு விசித்தரமானதாகத் தெரிகின்றது. இல்லையா? வயதாளியான ஆண் யானைகள் ஏனைய யானைகளுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாத நிலையில், ஒன்றுடன் ஒன்றுடன் சண்டையிட்டு,  நேரகாலத்தோடு ‘போய்ச் சேர்ந்து‘ விடுகின்றன.

யானைகள் உலகில் ‘அதிகாரம் செலுத்துவது‘ வழமையான ஒன்று. மேலிடத்து கட்டளைகளுக்கு கூட்டத்தில் உள்ளவர்கள் கட்டுப்பட்டாக வே்ண்டும். முணுமுணுப்புகளுக்கு இடமில்லை.

 

பிறருக்கு இரங்குதல்

யானைக் குடும்பங்களிடமிருந்து, மனிதர்கள் கற்க வேண்டிய குணம் இது. பிற யானைகளின் நலனில் இவை பெரிதும் அக்கறை காட்டி வருகின்றன. அது மாத்திரமல்ல, இந்த அருங்குணத்தை பரம்பரை பரம்பரையாகத் தொடர வேண்டும் என்பதிலும் தமது விருப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

வழியில் காய்ப்பட்ட யானைகளைச் சந்தித்தால்,  அவற்றின் இரத்தப் போக்கை நிறுத்த , அவை குனிந்து. தும்பிக்கையால் மூடி இரத்தப் போக்கை தடுக்க முயற்சிப்பது, அவதானிக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது, தமது தும்பிக்கைகளால் வாய்ப்புறத்தைத் தொட்டு ‘வணக்கம்‘ சொல்வது இவற்றின் வழமைஎன்பது  உங்களுக்கு ஆச்சாரியத்தை அளிக்கலாம். காணாமல் போன நண்பர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், தங்கள் துப்பிக்கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து, தமது குதுாகலத்தை வெளிப்படுத்துகின்றன. தந்தங்களை  ஒன்றோடு ஒன்று உரசி, தங்கள் செவிகளை ஆட்டி, தமது உடம்பை அசைத்து, பிளிறவும் செய்கின்றன. மிக அதிக பூரிப்பில் சிறுநீர் கழிப்பதோடு, இவற்றின் கண்களுக்கும், காதுகளுக்கும் இடையில் ஒரு வித திரவம் சுரப்பதுண்டு. சில சமயங்களில் 20 நிமிடங்கள் மாத்திரமே பிரிந்திருந்தாலும்,  மீண்டும் காணும்போது, வேகமாக  ஓடி  வந்து‘ ஒன்றையொன்று தும்பிக்கையில் உரசி, பின்பு  வாய்களில் படும்வண்ணம் தும்பிக்கைகளை உயர்த்திக் கொள்கின்றன. அடடா மிருகங்களில் இத்தனை குணங்களா என்று நாம் அதிசயப்படும் வகையில், இவை நடந்து கொள்கின்றன.

ஓசைகள் கொண்டுவரும் தொடர்புகள்

யானைகள் பிளிறுவது நமக்குத் தெரியும். ஆனால் காகத்தைப் போல யானையும்,வேறுபட்ட குரல்களை எழுப்பி,  ஏனைய மிருகங்களுடனான தொடர்பை நிலைப்படுத்திக் கொள்கின்றது.  நாய் போல குரைப்பது தொடக்கம், வாய் கொப்பளிப்பது போன்ற சப்தங்களை எல்லாம் யானை ஏற்படுத்துகின்றது. கரடியைப் போல உறுமுவதும் உண்டு.

சில சமயங்களில் , கூட்டமாக வரும் யானைகள்  சட்டென ஒரு இடத்தில் நின்று, தங்கள் செவிகளை உயர்த்திக் கொள்கின்றன. வெளியில் எந்த சப்தமும் இல்லை.எதற்கு இவை காதுகளை உயர்த்துகின்றன என்று விஞ்ஞானிகள் மூளையைக் குழ்பபியதுண்டு. காரணம் இருக்கிறது. பல மைல்கள் துாரத்தில் நிற்கும்இந்தக் கூட்டத்து யானைகளில் சில எழுப்பும் ஒலிகள்,  வானில் மிதந்து வந்து காதில் விழுவதாலேயே, இவை அப்படி நின்று தகவலை உள்வாங்கிக் கொள்கின்றன என்று பின்பு விஞ்ஞானிகளுக்குப் புரிந்தது.

நாங்கள் வழமையாக நீர் அருந்தும் நீர் நிலையமருகே சந்திப்போம் என்ற செய்தி காற்றலையில் பரிமாறப்பட்டு, கூட்ட அங்கத்தவர்கள் ஒன்றாகச் சந்திக்கும் வசதியை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த‘ இன்பிரா ஒலி‘ மனித செவிகளுக்கு எட்டாத ஒன்று. இந்த ஒலியில் 30க்கு மேற்பட்ட வேறுபட்ட ஒலிகள் இருக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இதற்காக  14 வருடங்களை யானைகளின் மத்தியில் செலவிட்ட இந்தப் பெண்ணால், யானைகளைப் போல வேறுபட்ட குரல்களை எழுப்பி, அவற்றை ஏமாற்ற முடிந்தது என்று சொல்கிறார்கள். பல மைல் துாரத்தில் நிற்கும் துணையை அழைக்க ஒரு குரல், சமீபத்தில் ஒரு காண்டாமிருகம்  நிற்கிறது. அது குட்டியைத் தாக்கலாம் என்ற எச்சரிக்கைக் குரல் என்று  குரல்கள் பல்வேறுபட்டவையாக இருக்கின்றன.

இப்படி நீண்டுகொண்டே போகும் யானைகளைப் பற்றி அறியாத சங்கதிகள் பற்பல!

இப்படியான யானைகள் பாதுகாக்கப்படவில்லையே, அழிகின்றனவே என்பதே பலரது தீராக் கவலையாக இருக்கின்றது.

தரைவாழ் முலையூட்டிகளில் , மிகப் பெரியது எது என்ற கேள்விக்கு பதில், ஆபிரிக்க யானைதான்! எட்டு தொன் வரை எடை கொண்ட இந்த இராட்சத விலங்குகளுக்கு நிகராக எதுவும் கிடையாது. இப்படி ஒரு இராட்சத விலங்கினம் அழிந்து விடுமா?

26.11.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *