கெர்ப்போட்டம்-சிறுகதை

52 views
0

இதென்ன  மழை ?

சொல்லாமல் கொள்ளாமல் சட்டென வருகிறது. ஒன்றோ இரண்டோ  நிமிடங்களுக்கு சோவெனப் பெய்கிறது.

பட்டெனக் காணாமல் போய்விடுகிறது.

எனக்கு எதுவுமே தெரியாது என்பது போல பளிச்சென வெயில் அடி்ககின்றது.

அடடா மழை விட்டுவிட்டது என்று வெளியே புறப்பட்டால், அழையா விருந்தாளியாக பட்டெனக் கொட்டி தெப்பமாக நனைத்து விடுகின்றது.

மழையில் ஸகூட்டர் ஒட்ட அவன் என்றுமே விரும்புவதில்லை. யாழ்வீதிகளில் ஸகூட்டர் ஓட்டுவதே ஒரு சர்க்கஸ்காரனின் வேலைபோல இருக்கும்.

யமகிங்கரர்கள் போல தெருக்களில் வளையவரும் ஓட்டோக்களிடம் வெகு கவனமாக இருக்க வேண்டும்.நாலுகால் பாய்ச்சலில் தங்கள் ‘பைக்குகளை‘ செலுத்துகின்ற இளைஞர் பட்டாளத்திடமிருந்து தப்புவது இன்னொரு சாகஸம்.

நீங்கள் கவனமாக ஓட்டினாலும், இன்னொருவன் கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினால், பலியாடு நீங்கள்தான். அதிலும் மழைகாலம் என்றால் கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டுதான் ஓட்டவேண்டும். ‘பிரேக்‘கிலிருந்து கை எடுக்கவே கூடாது…….

சென்ற வருடம் யாழ்ப்பாணத்தில் மாரிமழை இல்லை. காவிச் சென்ற மழை அங்கிக்கும் வேலை இல்லை.

ஆனால் இந்த வருடம் வட்டியும் குட்டியுமாகப் பெய்கிறது.

வேலை 4 மணிக்கு முடிவடைந்து நேரம் நான்கரையாகி விட்டதென அவனது கைக்கடிகாரம் காட்டியது. இனிப் புறப்பட வேண்டியதுதான்.  விட்டு விட்டு பெய்யும் இந்த மழை விடாது. இனிப் புறப்படவேண்டியதுதானென அவன் தீர்மானித்தான்.

வெளியே ஆறு மணிபோல  வானம் இருட்டி, சிணுங்கிக் கொண்டிருந்தது. மழை அங்கியை அணிந்தவன் , மெல்ல பைக்கை ஒட்ட ஆரம்பித்தான்.

தெருவெல்லாம் கழுவித் துடைத்தாற்போல மழை கொட்டியிருந்த  அடையாளம் வழிநெடுகத் தெரிந்தது. வாகன நடமாட்டம் மிகக் குறைவாக இருந்ததை அவன் அவதானித்தான்

அவனை  ஒரு ஸ்கூட்டி முந்திக் கொண்டு போனது. ஓட்டுபவள் ஒரு பெண். அவனுக்கு மகா எரிச்சலாகஇருந்தது. ஏன் இந்தப் பெண்கள் இவ்வளவு வேகமாக ஓட்டுகிறார்கள்?  இன்னொருவரை முந்திக்கொண்டு செல்வதை இவர்கள் ஏன் விரும்புகிறார்கள்?  அவசரம் அசரமாக இவர்களுக்கு ‘பாத்ரூம்‘ போகவேண்டிய நிர்ப்பந்தமோ? பொறுமையின் சின்னம் பெண்கள் என்கிறார்கள். இது பொறுமையா அல்லது ஆண் முந்திச் செல்கிறானே என்ற பொறாமையா?

வேகமாக ஓடுவது ஒரு நாகரீகம் என்றாகி விட்டதோ? இந்த மழை  நேரத்தில் வேகமாக ஓட்டும் வண்டியை நிறுத்துவது கடினம் என்று இவர்களுக்குத் தெரியாதா?………..

 

சொல்லாமல் கொள்ளாமல் , விட்டிருந்த மழைத் துாறல் சட்டென ஆரம்பித்தது. சில நிமிடங்கள் ‘ஓ‘வெனப் பெய்து விட்டு பட்டென அடங்கியது. அவனது அக்கா பிள்ளையின் ஞாபகந்தான் அவனுக்கு அப்பொழுது வந்தது. அந்தப் பிள்ளையும் இப்படித்தான். காரண காரியம் இல்லாமல்  குய்யோ மாயோ என்று  அழுது ஊரைக் கூட்டும். கையில் எவராவது ஒரு பிஸ்கெட்டை அல்லது ,இனிப்பைத்   திணித்தால், பெட்டிப்பாம்பாய் பிள்ளை அடங்கி விடும்.‘ ஏன் அழுதாய்‘?  என்று யாரும்  கேட்க முடியாது. கேடடால், இரண்டாம் அத்தியாயம் ஆரம்பித்து விடும்…….

 

அவன் மழை அங்கி அணிந்திருந்தாலும், கொட்டும் மழையில் ஸ்கூட்டியை ஒட்டும் அவசரம் அவனுக்கில்லை. வழியில் கண்ட ஒரு தேநீர்க் கடைக்கு முன்பாக ,ஸ்கூட்டியை நனையாத ஓர் இடத்தில் நிறுத்தினான். மழையோ வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டது. மேலே சூரியன் மெல்லப் பல்லிளிப்பது தெரிந்தது.

தண்ணீர் சொட்டும் தன் மழை அங்கியை வெளியே இருந்த ஒரு கதிரையில் மாட்டிவிட்டு, உள்ளே சென்று ஒரு கதிரையில் உட்கார்ந்தான்.

அவனுக்குப் பிடித்தமான ‘சூசியம்‘ இல்லை. ‘வாய்ப்பன் ‘இருந்தது

பிளேட்டில் கொண்டு வந்து வைத்தார்கள்.சுடச்சுட இருந்ததோடு. மொறமொறப்பாகவும் இருந்தது. ஒன்றுக்கு  இரண்டாகச் சாப்பி்ட்டான்

கொஞ்சம் ஆறட்டும் என்று தாமதித்த போது, அவனுக்கு நேர் எதிரே இருந்த ஒரு நாற்காலியில் ஒருவர் வந்து அமர்ந்தார்.

அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.

‘ தம்பி வேலையால வாறியள் போல கிடக்கு‘?

பதிலுக்கு தலையாட்டினான்  குமரன்.

‘துாரத்தில இருந்து வாறியளோ‘?

‘இல்லை உரும்பிராயிலதான் வீடு.‘

அவனுக்கு வாய்ப்பன் கொண்டுவந்தவன்,  ஒரு தட்டில் இரு வாய்ப்பன்களைக் கொண்டு வந்து  அவருக்கும்   வைத்தான். தனக்கு ஒரு ‘பிளேன்டீ‘ வேண்டுமென்று அவனுக்கு முன்னிருந்தவா் கேட்டதால், அடுத்த மேசைக்கு பரிமாறுபவன் சென்றுவிட்டான்.

‘மழையைப் பாத்தியளே தம்பி..ஒரு பிடி பிடிக்குது‘ என்றார் வாய்ப்பனில் ஒரு கடிகடித்த    பெரியவர்.

மனதுக்குள் அடக்கி வைத்திருந்த கேள்வியை குமரன் அவரிடம்  கேட்டுவிட்டான்.

‘அதென்ன புதினமான மழையாக் கிடக்கு பெரியவர்? பட்டெனப் பெய்யுது. பட்டென வெளிக்குது ?

வெளிநாட்டில் நீண்டகாலம் வாழ்ந்து, இப்பொழுது யாழ் மண்ணில் மறுபடியும் வாழ்க்கையைத் தொடக்கி இருக்கும் அவனுக்கு பல புதினங்கள். புதிர்கள் இருக்கத்தான்  செய்கிறது.

. பெரியவர் வாய்ப்பனில் இன்னொரு துண்டைக் கடித்தார்.

‘ தம்பி கொஞ்சக் காலம் இந்த மழை எங்கிட மண்ணில இல்லை. இதைத்தான் ‘கெர்ப்போட்டம்‘ எண்டு நாமள்    சொல்லுறம். தெர்ப்போட்டம் எண்டும் சிலர் சொல்லுகினம்.‘

அதென்ன  கெர்ப்போட்டம் ? இது தமிழ்ச் சொல்லா என்று கேட்க நினைத்தான் அவன்

வாயை சட்டென அடக்கிக் கொண்டான் . ..கையில் வெண்ணெய் இருக்கிறது. ஊரெல்லாம்  நெய்க்கு அலைவானேன்?

ஐபோனைக் கையிலெடுத்தான்.

தமிழில் ‘கெர்ப்போட்டம்‘ என்று எழுதி  இணையத்தில் விளக்கம்    தேடினான்.

உடனே கிடைத்தது.

தமிழர்களின் அடுத்த வருட மழைக் கணிப்பு முறைதான் இந்தக்  கெர்ப்போட்டம். அதாவது ‘கரு ஒட்டம்‘ என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி,  கர்ப்போட்டம் என்றாகி, இன்று  நாட்காட்டிகளில், கெர்ப்போட்டம் என்று திரிந்து  விட்டது. பதினான்கு நாட்கள் ‘கர்ப்போட்ட  நாட்கள்‘ எனப்படுகின்றன. அதாவது மழை கருகொள்ளும் அல்லது மேகம் சூலாகும் நாட்கள் இவை. கர்ப்போட்ட நாட்களில் முறையாகச் சூல் கொண்டால், ஒன்பது மாதங்கள் கழித்து அடுத்த  ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப் பொழிவு அளவும் முறையாக இருக்குமாம்.

அட இவ்வளவு விளக்கம் இந்தச் சொல்லுக்குள் நிறைந்திருக்கிறதா?………………

 

பணத்தைக் கவுண்டரில் செலுத்தி விட்டு, வெளியே வந்தான் குமரன். வெளியே மழை இல்லை. அடுத்த மழை வராது என்பது போல வெயிலடித்துக் கொண்டிருந்தது.

பள்ளிப் படிப்பில் கற்பதைவிட  மேலாக, சமூகம் நமக்கு நிறையச் சொல்லித் தருகிறது. ஆனால் அதைக் காது கொடுத்து கேட்கிற அளவுக்கு நமக்குத்தான் பொறுமையும் இல்லை என்று நினைத்தபடியே ‘போனை‘ ஐ பைக்குள் திணித்தான். ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான்.  கண்ணைக் கூசும் வெயில் முகத்தில் அடித்தது. வீட்டை அண்மித்தபோது, அடுத்த மழைக்கு முதல் வீட்டுக்குள் போய்விடலாம் என்று மனம் சந்தோசப்பட ஆரம்பித்தது.

ஆனால் அது நிலைக்கவில்லை.

இதுவரைதான் தனக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதுபோல  , பட்டென மழை கொட்ட ஆரம்பித்தது.

‘கெர்ப்போட்டம்‘ என்று   குமரன் தனக்குள்       சொல்லிக் கொண்டான்.

28.11.2017

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *