அறிந்த மிருகம் அறியாத கதை.4-1-புலி வருகுது புலி வருகுது

அறிந்த மிருகம் அறியாத கதை.4-1-புலி வருகுது புலி வருகுது

25 views
0

பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி என்பார்கள்… பூனை சாதுவானது என்பதையும், புலி வீரத்தின் அடையாளம் என்பதையும் குறிப்பதுதான் இந்தப் பழமொழி. கம்பீரமான தோற்றம் கொண்ட இந்தக் காட்டு மிருகம் வீரத்தின் அடையாளமே!. புலிச் சின்னம் பொறித்த கொடிதான் சோழர்களது கொடியாக இருந்துள்ளது. தமிழர் விடுதலை அமைப்பின் பிரதான சின்னம் புலியேதான்! இன்றைய தமிழரசுக் கட்சிக் கொடியிலும் புலி இருக்கின்றது. பங்களாதேஷ், மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்காக புலியையே பிரகடனப்படுத்தி இருக்கின்றார்கள்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற கேள்விக்கு விடையளிப்பது போல பலம் வாய்ந்த ஒரு வனவிலங்காக இருக்கும் புலிகள் பக்கம் எம் பார்வையைத் திருப்புவோம். பூனைக் குடும்பத்தில் மிகப் பெரியவர்தான் புலி! பொதுவாக புலிகள் தனித்து வாழும் சுபாவம் உடையவை. இந்த மிருகங்களுக்கு இரை தேடும் வசதிக்காக, அளவில் பெரிய பிராந்தியங்கள் தேவைப்படுகின்றன. பலம் வாய்ந்த இந்த இரவு வேட்டைக்காரர்கள், காட்டெருமை, மான், காட்டுப் பன்றி போன்ற மிருகங்களை வேட்டையாட,  மைல் கணக்காக பயணிப்பதால் பெரியதொரு பிராந்தியம் இவைக்கு தேவைப்படுகின்றன. புல்வெளிகள் ஊடாக பதுங்கி , மறைந்து சென்று தன் இரையைப் பிடிக்க, சூழலையொத்த இவற்றின் உரோம நிறம் உறுதுணை புரிகின்றது. ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் வித்தியாசமான வடிவில் வரிகள்  இருப்பது போன்று , ஒவ்வொரு வங்காளப் புலிக்கும் அதன் வரிகள் தனித்துவமாக அமைந்திருப்பது, இந்த மிருகத்தின் தனிச் சிறப்பாகும். புற்களோடு புற்களாகப் பதுங்கியிருந்து, தவழ்ந்து தவழ்ந்து இரையை நெருங்கி, சட்டென வேகமாகப் பாய்ந்து, இரையை தன் முன்னங்கால்களால் அறைந்து கொன்றுவிடும். இந்த அடி எப்பொழுதும் மரண அடியாகவே இருக்கும். நல்ல பசியோடு உள்ள ஒரு புலி , ஒரு இரவில் 60இறாத்தல் எடையுடைய மாமிசத்தை உண்டுவிடும். என்றாலும் பொதுவாக இவை, இதைவிடக் குறைவாகவே உண்கின்றன.

 

சுமத்திரா தீவுப் புலிகள், சைபீரியாப் புலிகள், வங்காளப் புலிகள் என்று இவை உலக நாடுகளெங்கும் பரவலாகக் காணப்படுவதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். உலக நாடுகளெங்கும் 3062க்கும் 3948க்கும் இடையில் இருந்த புலிகளின் தொகை , ஒரு பெரு வீழ்ச்சியைக் காட்டும் தொகை என்பதே நிஜம். இந்தச் சிறிய தொகையில் , இந்திய உபகண்டத்தில்தான் அதிகம் புலிகள் வாழ்கின்றன. சுமாராக இங்கு 2000 புலிகள் வரை இருப்பதாகக் கணிப்பிட்டுள்ளார்கள். 20ம் நாற்றாண்டின் ஆரம்பத்தில், 100,000க்கு மேற்பட்ட  புலிகள் இருந்துள்ளன என்று புள்ளி விபரங்கள் சொல்லும்போது, இந்தப் புலிகள் எவ்வளவு வேகமாக அழிக்கப்பட்டு விட்டன என்பது உங்களக்கு தெளிவாகப் புரிந்திருக்கும். மிகச் சமீபத்திய கணக்கெடுப்பாக , 2016இல் 3890 புலிகள் உலகெங்கும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளதோடு, அழிந்தழிந்து வந்த புலிகள் தொகை சிறுதொகையால் பெருகி இருக்கும் நல்ல செய்தி, நம் காதில் வந்து விழுந்துள்ளது.

ஒரு காலத்தில் புலிகளின் உப இனங்களென  8 இனங்கள் இருந்துள்ளன. ஆனால் இருபதாம்  நாற்றாண்டில் இற்றில் 3 இனங்கள் அடியோடு அழிந்து விட்டன. வேட்டையாடுதலும், காடழிப்புமே புலிகளை அழிக்கும் காரணிகளாக இருந்திருக்கின்றன. காண்டாமிருகத்தின் கொம்பை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்துவதுபோல, இவற்றின் உடல் உறுப்புகளும் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதால்,  இவை மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன.. வங்காளப் புலி என்பது இந்தியப் புலிகள் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள பாதித் தொகைப் புலிகள் காட்டுப் புலிகள்தான்!

புலிகள் மனிதருக்கு அச்சத்தை ஏற்படுத்த வல்லன என்று சொல்லப்பட்டாலும், இவை மனிதர்களைத் தவிர்க்கவே விரும்புகின்றன. எனினும் சில நரமாமிசம் உண்ணும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதற்கு காரணம் இந்த மிருகங்கள் நோயாளிகளாகி விடுவதும், அவற்றின் பிராந்தியத்தில் வேட்டைக்கு மிருகங்கள் இல்லாமையுந்தான். பெண் புலிகள் குட்டிகள் ஈனும்போது அவை 2 தொடக்கம் ஆறு வரையில் காணப்படுகின்றன. ஆண் புலி , பிள்ளைகளை வளர்க்க எந்த வழியிலும் உதவுவதில்லை. இந்த விடயத்தில் மனிதர்கள் பரவாயில்லைப் போல் தெரிகின்றது. அதிலும் ஐரோப்பாவில் உள்ள அப்பாக்கள், அம்மா வேலையை அதிகம் செய்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தக் குட்டிகளின் வயது 18 மாதங்கள் நிறைவடையும் வரை இவற்றால் தனித்து வாழ முடியாது என்பதால், அம்மாப் புலிதான் இந்தக் குட்டிகளின் வளர்ப்பைக் கவனித்து வருகின்றது.

வெள்ளைப் புலியென்றும் ஓர் இனம் இருக்கின்றது. இந்தியாவின் அசாம் மாநிலக் காடுகளிலும், பீஹாரிலும் இவை காணப்படுகின்றன.

நல்ல வளர்ந்த புலியொன்றின் நீளம் என்னவாக இருக்கும்? இது 271செ.மீ தொடக்கம் 310செ.மீற்றர் வரை(வால் உட்பட) காணப்படும். பெண் புலியின் நீளமோ 240 தொடக்கம் 265செ.மீற்றர் வரை காணப்படும். புலிகளின் வால்கள் 85 தொடக்கம் 115 செ.மீற்றர் வரை இருப்பதுண்டு. இதன் எடையோ 180 கிலோவிலிருந்து 258 கிலோ வரை இருப்பதுண்டு. இதற்கு மாறாக , மனிதர்களைப் போல பெண் புலிகளின் எடை 100 தொடக்கம் 160கி.கிராமுக்குள் அடங்கியதாக இருப்பதுண்டு. பங்களாதேஷ் நாட்டில் காணப்படும் ஒரு சிறிய புலி இனமான “சுன்டர்பான்ஸ்” என்று அழைக்கப்படும் ஓர் இன ஆண் புலியின் எடை75 தொடக்கம் 80 கிலோவுக்கள்தான் இருக்கும். இந்த சுன்டர்பான்ஸ் என்பது பங்களாதேஷ் நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட காட்டுப் பிராந்தியமாகும்.2004இல் எடுத்த ஒரு கணக்கின்படி இங்கு 400 வரையிலான புலிகள் காடுகளில் காணப்பட்டுள்ளன. நேபாளத்தில் 2010இல் இறுதியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி 155 புலிகள் வரையில் காணப்பட்டுள்ளன.

மிக நீண்டதும் , வலிமை மிக்கதுமான பற்கள் வங்காளப் புலிகளுக்கே அமைந்துள்ளன. வங்காளப் புலிகள் 325 கிலோ வரை எடை கொண்டவையாக இருப்பதோடு, இவற்றின் உடல் நீளம் 320 செ.மீற்றர் வரை நீள்கின்றது என்கிறார்கள். பூட்டான், நேபாளம், அசாம், உத்தரகந், மே.வங்காளம் ஆகிய வட இந்திய பிராந்தியங்களில் உள்ள புலிகள் அனேகமாக 227 கிலோவுக்கு மேற்பட்ட எடை கொண்டதாக இருக்கின்றன.

சிறுத்தைகள், ஓநாய்கள், நரிகள், முதலைகள், ஆசியக்  கறுப்புக் கரடிகள், போன்ற மிருகங்களை வங்காளப் புலிகள் பிடித்து உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளன. அதாவது மாமிசத்திற்காக பிற மிருகங்களை வேட்டையாடும் மிருகங்களை இவை கொன்று உண்ணும். காட்டு யானைகளை அல்லது காண்டாமிருகங்களை மிக அரிதாகவே இவை கொல்கின்றன. என்றாலும் விதிவிலக்காக, மிக அரிதாக இவை இந்த மிருகங்களைக் கொன்றுள்ளது பதிவில் உள்ளன. பெரிய வங்காளப் புலிகள், யானைக் குட்டியையும், தாய் யானையையும் வேட்டையாடி அதில் வெற்றியும் கண்டுள்ளமை முன்பு சம்பவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.  பொதுவாக உணவுப் பற்றாக்குறையால் பலவீனப்பட்டு, கோடைகாலத்தில் யானைகள் உலாவும் போது இது சம்பவிக்கின்றது. ஒன்றின் பலம் இன்னொன்றின் பலவீனம் என்பது இதுதான் போலும்……

புலிகளின் கதை தொடரும்

22.12.17

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *