அறிந்த மிருகம் அறியாத கதை..4-2பனிப்பிரதேச சைபீரியப் புலிகள்

அறிந்த மிருகம் அறியாத கதை..4-2பனிப்பிரதேச சைபீரியப் புலிகள்

17 views
0

 

அளவில் பெரிய வங்காளப் புலிகள் பற்றி நாம் அறியாத பல தகவல்களை சென்ற வாரம், பகிர்ந்து கொண்டோம்.

இந்த வாரம் பெரிய அளவில் நடமாடும் சைபிரீயப் புலிகள் பக்கம் செல்வோம். அமுர் புலி என்றும் இதற்கொரு பெயர் உண்டு. மஞ்சூரியன் புலி,  கொரியன் புலி என்றும் இதை அழைத்து வருகிறார்கள். இன்று ருஷ்.யாவில் காணப்படும் இந்தப் புலிகள், ஒரு காலத்தில், கொரியா, வட கிழக்கு சீனா, கிழக்கு மொங்கோலியா என்று பரவலாகப் பல இடங்களில் காணப்பட்டுள்ளன. இன்று இந்த இனம் அருகி, சைபீரியாவுக்கு உரியது என்றாகி விட்டது. 2005 வரை சைபீரியப் புலிகள் இந்தப் பிராந்தியத்தில் 400 வரையில் இருந்துள்ளன.. பின்பு மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்த இந்த இனப் புலிகள் , மீண்டும் 2015இல் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி , 480 தொடக்கம் 540 வரையில் அதிகரித்துள்ளன.  நமக்கு மனஆறுதல் அளிக்கும் செய்தி இது என்பதில் சந்தேகமே இல்லை.

மாறுபட்ட உடல் அமைப்பு

வெளிறிய மஞசள் நிற உடம்பில், கறுத்த  வரிகளைக் கொண்டவை இந்த இனப் புலிகள். இதன்  வால் வங்காளப்  புலிகளின் வால்களை விட சற்றே நீண்டது. வங்காளப் புலிகளின் வால்கள் 110 செ.மீற்றராக இருக்க, சைபீரியப் புலிகளின் வால்கள் ஐந்து தொடக்கம் 10 செ.மீற்றர் அதிக நீளம் கொண்டவையாக இருக்கின்றன. புலிகளிலேயே மிகப் பெரிய இனமாக கருதப்படுவது அமுர் புலி எனப்படும் சைபீரியப் புலிதான்! ஆனால் இங்கே ஒன்றைக் கவனித்தாக வேண்டும். அடைத்து வளர்க்கப்படும் புலிகள்தான் இப்படிப் பெரிய அளவில் காணப்படுவதுண்டு என்கிறார்கள். காடுகளில் தன்னிச்சையாக  திரியும் அமுர் புலிகள் விடயத்தில், இந்த அளவு வித்தியாசப்படுகின்றது.

இருபதாம் நு ற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில் , எழுபதுகளில் இருந்ததை விட, எடையில் கூடிய சைபீரியன் புலிகள் இருந்துள்ளன. ஆண் , பெண் என்று இரு பால் புலிகளுக்கும் இது பொருந்தும். இன்றைய காட்டு சைபீரியன் புலிகள்    வங்காளப் புலிகளை விட அளவில் சிறியதாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இப்படி எடை குறைந்தமைக்கு காரணம், சைபீரியப் புலிகள் பிடிக்கப்பட்டு கூடுகளில் வளர்க்கப்படும்போது, இவை நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகமாகி, காயப்பட்டு, பொதுமக்களோடு முரண்படும் ஒரு நிலை தோன்றுவதுதான் என்கிறார்கள்!

1943இல் கொல்லப்பட்ட மஞ்சூரியப் புலிதான் இதுவரையில் காணப்பட்ட, அதிக எடைகொண்ட புலி என்கிறார்கள். இதன் எடை 300கிலோவைத் தாண்டும் என்பது வியக்க வைக்கும் தகவல். . அசாதாரண எடைகொண்ட( 348 கிலோ ) சிக்கோட் மலைப் பிராந்தியத்தில், வேட்டைக்காரர்களால் ஒரு ஆண்புலி கொல்லப்பட்டதாகவும், இதன் நீளம் 3.5 மீற்றர் வரையில் இருந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

சகல இனப் புலிகளிலும், மிகத் தடித்த உரோமத்தைக் கொண்டது சைபீரிய, கஸ்பியன் புலிகள் என்று சொல்லப்படுகின்றது. சைபீரியப் புலிகளின் மீசையும், தலைக்கு மேலும், பின்புறமாகவும் உள்ள உரோம்மும்  மிக நீண்டதாக, ஏனைய இனப் புலிகளிலிருந்து வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. உடம்பில் உள்ள வரிகள், சற்றே அகன்றிருப்பதும் இதன் தனிச் சிறப்பு.

பரந்திருந்த இனம் அழிந்துவிட்டது

இந்த சைபீரியப் புலிகள், ஒரு காலத்தில் கொரிய நாட்டு மஞ்சூரியாப் பிராந்தியத்திலேயே நிறையக் காணப்பட்டுள்ளன.  அத்துடன் வட கிழக்கு சீனாவிலும்,ருஸ்யாவிலும், மொங்கோலியாவிலும் இவை இருந்துள்ளன. பைக்கால் என்ற ஏரியை ஒட்டிய பகுதியில்தான் கஸ்பியன் புலிகள் இருந்துள்ளன. கிழக்கு ஆசியாவின் சீனா, மொங்கோலியா, தாய்வான், ஜப்பான் , கொரியா, இந்தோசீனா,கிழக்கு சைபீரீயா ஆகிய நாடுகளை துர கிழக்கு நாடுகள் என்றே அழைக்கிறார்கள்.இன்றைய நிலையில் சீனாவில் அமுர் புலிகள் 18-22 வரையே காணப்படுகின்றன. 2005இல் , ருஸ்யாவின் துர கிழக்கு நாடுகளில்   331-393 வரை காணப்பட்ட   அமுர் புலிகளில், நன்கு வளர்ந்த, குட்டிகள் ஈனக்கூடிய 250 புலிகள் வரை இருந்துள்ளன.

சைபீரியப் புலிகள் காணிகளைப் பிடிப்பதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இந்த மிருகங்கள் வேட்டைக்காக 1000 கிலோ மீற்றர் வரை பயணஞ் செய்யும் என்பது ஆச்சரியமான ஒரு தகவல். 1992-93 காலகட்டத்தில், 100 சதுரக் கிலோமீற்றர் துரத்தில் 0.62 புலிகள் இருந்துள்ளன. அதிகூடிய அளவு . 1993இல், 100 சதுரக் கிலோமீற்றருக்கு 0.3 புலிகளாக இருந்துள்ளன. ஒரு ஆண்புலிக்கு, 2.4 பெண்புலிகள் . ஆண் புலிகளுக்கு யோகந்தான்….

மாப்பிள்ளைப் புலியாருக்கு பெண்டாட்டிகள் பல

சைபீரியன் புலிகள்,  ஒரு ஆண்டில் , மாத வித்தியாசமின்றி,  விரும்பிய நேரத்தில் உடல் உறவு வைத்துக் கொள்கின்றன என்பதும் நம்மை வியக்க வைக்கும் விடயம். ஒரு பெண் புலி  உடலுறவுக்கு  தான் தயார் என்பதை வெளிப்படுத்த மரத்தடியில் சிறுநீர் கழிப்பதோடு, மரத்தின் அடிப்பகுதியை ரன நகங்களால் விறாண்டி அடையாளப்படுத்தி விடுகின்றது. தன்னை நெருங்கும் ஆண்புலியுடன் 5 தொடக்கம் 6 நாட்களை பெண்புலி கழிக்கின்றது. ஆனால் மூன்று நாட்கள் மாத்திரமே தன்னுடன் உடல் உறவு கொள்ள அனுமதிக்கின்றது.  குட்டி ஈன மூன்று தொடக்கம் மூன்றரை மாதங்கள் தேவைப்படுகின்றன. இவை ஒரு தடவையில் போடும் குட்டிகள் 2தொடக்கம் 4. குட்டிகள் பிறக்கும்போது குருடாகவே  இருப்பதுண்டு. பாதுகாப்பான ஒரு குகைப் பகுதிக்குள் குட்எகளை மறைத்து விட்டு, பெண்புலி வேட்டைக்கு கிளம்பி விடும். அப்படியானால் அப்பா எங்கே என்று கேட்கிறீர்களா? அவருக்கு கிடைத்த நாலைந்து நாளோடு கதை முடிந்து விடுகின்றது. அவரை இன்னொரு குறுகிய காலக் காதலி அணுகியிருப்பார். என்ன நாங்களும் புலிகள் போல் இருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்ற எண்ணம் வருகிறதா? இன்னொரு விடயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஆண் புலிகள் தனியனாக இருப்பதால், நீண்ட துரம் பயணிக்கின்றன. இத் தருணத்தில், கள்ள வேட்டைக்காரர்களாலும், ஏனைய புலிகளாலும் தாக்கப்படும் அபாயம் ஆண் புலிகளுக்கே அதிகம் உண்டு.

பாலியல் முதிர்ச்சிப் பருவம்

பிறந்து 35 மாதங்கள் கழிந்த நிலையில் இவை வாலிபப் பருவத்தை எட்டிவிடுகின்றன. ஆனால் பாலியல் முதிர்ச்சிக்காக, இவை 48 தொடக்கம் 60 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஒரு சைபீரியப் புலியின் வாழ்க்கை 16-18 வருடங்கள் வரை மாத்திரமே! காட்டில் வாழ்பவை 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.ஆனால் அடைத்து வளர்க்கப்படுபவை 25 வருடங்கள் வரை உயிரோடு இருக்க வல்லன.

புலிகளின் உணவுப் பழக்கம்

பொதுவாக சைபீரியன் புலிகள் வெவ்வேறு பிரதேசங்களில் காணப்படும் வெவ்வேறு இன மான்களையும், காட்டுப் பன்றிகளையும், பிடித்து உண்பது வழக்கம். சில சமயங்களில், ஆசியக் கறுப்புக் கரடியையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் இந்த சைபீரியப் புலி. இவற்றை விட முயல்களையும் உண்பதோடு, சல்மான மீனையும் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றது. தொடர்ந்து சில வருடங்கள் நடாத்திய ஆய்வின் முடிவில், இவற்றின் உண்ணும் அளவை ஓரளவு கண்டறிந்துள்ளார்கள்.  மூன்று வளர்ந்த புலிகளின் கழுத்தில் கருவிகளை மாட்டி, இவை அவதானிக்கப்பட்டுள்ளன. கோடைகாலங்களில்  இந்த மூன்று புலிகளும் சுமாராக  ஒரு 4 தொடக்கம் 7 நாட்களுக்கு ஒரு தடவை இரைகளைக் கொன்றுள்ளன. தினமும் சராசரி 8 கிலோ எடை கொண்ட இறைச்சியை உண்டுவருவதையும் கண்டறிந்துள்ளார்கள். பனிக் காலத்தில்5தொடக்கம் 7 நாட்களுக்கு ஒரு தடவை  அளவில் பெரிய இரைகளைக் கொன்றுள்ளதோடு, உண்ணும் அளவும் அதிகரித்திருக்கின்றது. நாளொன்றுக்கு 10.3கிலோ மாமிசம் உண்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நம்மவர்கள் பனிகாலத்தில் அதிகம் சாப்பிடுகிறார்களா? ஐரோப்பிய வாழ்க்கையை வருடக் கணக்காகஅனுபவித்திருந்தாலும் இதற்கு உடன் பதில் இப்போதைக்கு இல்லை. இரை நிறையக் காணப்பட்டால், சிறிய மிருகங்களையே குறிவைத்துக் கொல்வது, சைபீரியப் புலியின் இன்னொரு தனித்துவமான பழக்கம்.

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *