இந்த வீழ்ச்சியிலிருந்து இனி எழுமா இலங்கை?

இந்த வீழ்ச்சியிலிருந்து இனி எழுமா இலங்கை?

4 views
0

இலங்கை கிரிக்கெட் அணியினர் அடியோடு மறக்க வேண்டிய ஆண்டாக 2017 அமைந்திருந்தது ரசிகர் பட்டாளத்துக்கு விழுந்த ஒரு பலத்த அடிதான்! இனி ஒருபோதும் வரக்கூடாது என்று சொல்லும் வகையில், அடி மேல் அடிவிழுந்த ஆண்டாக, 2017 இலங்கை அணிக்கு உருவாகியதில், உலக தரத்தில் இதன் விளையாட்டு அகல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.

விளையாடிய மொத்த  13 டெஸ்ட்  போட்டிகளில், 7 போட்டிகளில் தோல்வி. 4 வெற்றிகள். விளையாடிய மொத்த 28 ஒரு நாள் போட்டிகளில் 23 தோல்விகள். 5 வெற்றிகள். 15,  20 ஓவர் மோதல்களில் 10இல் தோல்வி.5 இல் வெற்றி.

இது 2017ம் ஆண்டுக்கான இலங்கை அணிக்கான புள்ளிவிபரங்கள். இனி வரவே கூடாது என்ற எண்ண வைக்கும் புள்ளி விபரங்கள்.

சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணியிடம் தோற்றது, உலக  தரத்தில் 11 வது இடத்திலிருக்கும் சிம்பாவே அணியிடம் ஒரு நாள் ஆட்டத் தொடரை இழந்தது, கடந்த ஆண்டில் இரு தடவைகள்  இரு ஒரு நாள் ஆட்டத் தொடர்களில் வெள்ளையடிப்புக்கு உட்பட்டது, அதேபோல இரு தடவைகள் 3-0 என்ற கணக்கில் இரு டெஸ்ட் தொடர்களில் வெள்ளளையடிக்கப்பட்டமைஇலங்கைக் கிரிக்கெட் சரித்திரத்தில் பெருங்கறைகளை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வுகள் இவை

1990களின் ஆரம்பத்தில்தான் இலங்கை அணி இந்த அளவு மோசமான நிலையை எட்டியிருந்தது. அத் தருணத்தில்  இலங்கை அணிக்காக விளையாடியவர்கள் பாதியளவு தொழில்ரீதியான அனுபவத்தையே கொண்டிருந்தார்கள்.

கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் உலகில், தம் பதவியிலிருந்து விலகிய, விலக்கப்பட்ட பெரும் புள்ளிகளின் பட்டியலைப் பார்ப்போமா?

¥ அணி முகாமையாளர், சரித் செனநாயக்க பதவி இறக்கப்பட்டார்.

¥ முதன்மைப் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட், அலவலக ரீதியாக விலகிக் கொண்டார் என்ற     சொல்லப்பட்டாலும், இவர் துாக்கியெறியப்பட்டார் என்பதே நிஜம்.

¥ சிம்பாவேக்கு எதிரான தொடரில் வாங்கிக் கட்டியதன் எதிரொலியாக, அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் , தன் பதவியை  இடைநடுவில் இராஜிநாமா செய்து கொண்டார்.

¥ மட்டுப்படுத்தப்பட்ட அணித் தலைவர் உப்புல் தரங்க, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

¥ பல தரப்பிலிருந்தும் எழுந்த அழுத்தம் காரணமாக , சனத் ஜயசூரியா, அணித் தெரிவுக் குழுவிலிருந்து இராஜிநாமா செய்து கொண்டார்.

¥ இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் துணைத் தலைவர் ஜயந்த தர்மதாச தன் பதவியிலிருந்து இராஜிநாமா

இன்றும் தம் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் திலங்க சுமதிபாலவும் அவர் விசுவாசிகளுந்தான்.!

சுமதிபாலாவும் அவர் பரிவாரங்களும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைசீராகச் செயற்பட முடியாத ஒரு அமைப்பாக உருமாறி விட்டது. இவர்கள் விடும் அறிக்கைகள், நடந்த நிகழ்வுகளுக்கு சம்பந்தம் இல்லாமல் கோமாளித்தனமாக இருக்கின்றது.

இதோ சில உதாரணங்கள்

“20 ஓவர்கள் தொடரில் திஸ்ஸர பெரரா , ஓர் அணித் தலைவராக தன் கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார் என்று நாம் உணர்ந்தோம்”.- இது வெளியிடப்பட்ட அறிக்கை. -(0.3) என்ற கணக்கில் இலங்கை அணி வாரிச் சுருட்டப்பட்டதே நிஜம்.

ஐக்கிய அரபுக் குடியரசில் இடம் பெற்ற மோதல்களில், பாகிஸ்தானுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் பெற்ற வெற்றியும், இந்தியாவுக்கு எதிரான 3 மோதல்களில்இரு  டெஸ்ட் போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்ததும் , எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி, இலங்கை அணியை உலகிலேயே சிறந்ததொரு அணியாக தன்னை நிலைநிறுத்த வழிவகுத்துள்ளதுஎன்று சபை ஒர் அறிக்கையைக் கொடுத்தது. –    இலங்கை 3 டெஸ்ட் போட்டிகளை இன்னிங்ஸால் தோற்றதுடன், இன்னொன்றை 304 ஒட்டங்களால் தோற்றது, கடந்த 7 மாதங்களில் சம்பவித்த நிஜம்.

அணி களத்தில் இறங்கி பிரம்மாதமாக செயற்படுதை எவருமே பெரிதாகப் பாராட்டுவதில்லைஎன்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த வருட மோதல்களில்,  85 “காட்சுகளை கைநழுவ விட்டிருப்பதுதான் உண்மைக் கதை.

இலங்கை அணியைப் பற்றிய குறைகளே ஏராளம் என்றாலும், சென்ற ஆண்டில் சில பாராட்டுக்குரிய விடயங்களும் நடந்தேயிருக்கின்றன. இதில் உச்ச விடயம் பாகிஸ்தான் அணியை 2-0 என்ற கணக்கில் வென்றதுதான். 2009இலிருந்து. தனக்கு பரிச்சயப்பட்ட ஐக்கிய அரபுக் குடியரசு மண்ணில், எந்த வெளிநாட்டு அணியாலும், பாகிஸ்தான் அணியை இங்கு தோற்கடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி சார்பாக அதிசிறந்த இரு ஆட்டக்காரர்களான மிஸ்பா உல்ஹாக், யூனிஸ் கான் ஆகிய இருவரும் விளையாடவில்லை என்ற நொண்டிச்சாட்டை இங்கே முன்வைக்க முடியாது. கடந்த ஆண்டின் மிகச்சிறந்த துடு்ப்பாட்ட வீரராகக் கணிக்கப்படும் டிமுத் கருணரட்ணவின் அசத்தலான துடுப்பாட்டம் இந்தச் சிறப்பான வெற்றிக்கு களம் அமைத்துக் கொடுத்தது என்றால் மிகையாகாது. இந்தத் தொடரில் இவர் மொத்தம் 306 ஒட்டங்களை , சராசரி 76.5 என்ற கணக்கில் ஆடிக் குவித்திருந்தார்.

இது உச்ச நிகழ்வு என்றால், இலங்கை அணியை தொப்பெனக் கீழே விழுத்திய நிகழ்வுகள் பற்பல. சிம்பாவே அணியிடம் நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொண்டது, விசிறிகளைப் பெரிதாகவே காயப்படுத்தி இருக்கின்றது. இலங்கை அணி இத் தொடரில் விளையாடிய விதம், அணித் தெரிவு எந்த அளவுக்கு மோசமானது என்பதை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியது. அணித் தலைவர் அஞ்சலோ தொடரின் இடைநடுவே தன் பதவியை இராஜிநாமா செய்தமையிலிருந்து  நிகழ்வின் கோரம் நன்றாகவே  புலப்பட்டது. .

2017இல் இலங்கை கிரிக்கெட் சபையின் பெரிய சாதனை என்ற முறையில், சந்திகா ஹத்துருசிங்கவை மீண்டும் தலைமை அணிப் பயிற்சியாளராகக் கொண்டுவந்து சேர்த்திருப்பதைச் சொல்லலாம். இடறி விழுந்து கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டை துாக்கி நிறுத்த பொருத்தமான நபர் இவர்தான் என்பது பலரது அபிப்பிராயமாக இருக்கின்றது. அதாவது இவர்களை வழிநடத்த நல்லதொரு மீட்பர் இவர்தான் என்பது பெரும்பான்மையானவர்கள் கணிப்பு! இவரது கைகள் கட்டுப்படாமல், சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். காரணம் கிரிக்கெட் சபைக்கு இவர் சேவை அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படுகின்றது. முன்னைய காலங்களைப் போல, தம் கடிவாளங்களுக்குள் இவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்வெகு சீக்கிரம் வேறொரு புதுப் பயிற்சியாளரைத் தேட வேண்டி வரும்.

சரி இனிப் பிறந்துள்ள 2018, இலங்கை கிரிக்கெட் அணியை  நாம் எந்தக் கோலத்தில் இனிக் காணப்போகின்றோம்? தமது திறமையை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் வருகின்றன. முதலில் வருவது பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடர். அடுத்து ஆசியக் கிண்ணதிற்கான மோதல். வருட நடுவில் கரபியன் தீவுகளுக்கான சுற்றுப் பயணம். அதற்கு முன்னர் தென் ஆபிரிக்க ,இங்கிலாந்து அணியினரின் இலங்கை விஜயம். டிசம்பரில் நியூசிலாந்திற்கான சுற்றுப்பயணம். இதெயெல்லாவற்றையும் விட, மாவட்டரீதியான போட்டிகளை நடாத்த சபை உறுதி அளித்துள்ளது. கடந்த இரு வருடங்களில் முதல் தர சுற்றுப்போட்டிகளை ஒழுங்குபடுத்த சபை தவறியது, மன்னிக்க முடியாத பெரிய குற்றம்.

ஏற்றங்களும் தாழ்வுகளும் கலந்ததுதான் வாழ்கை்கை. மகாபொல்லாத 2017ஐ மறந்து விடுவோம். மறப்போம் மன்னிப்போம் என்றரீதியில், “பாவ மன்னிப்பைப்” பெறும் இலங்கை கிரிக்கெட் சபையின் புத்தாண்டு நடவடிக்கைகளும், அதன் விளைவாக சம்பவிக்கும் நிகழ்வுகளும், கிரிக்கெட் ரசிகர்கள் இழந்த குதுாகலத்தையும், உற்சாகத்தையும்  இந்த ஆண்டு மீட்டுத் தருமா?

03.01.2018

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *