புத்தாண்டு தருமா யானைகளுக்கு புதுவாழ்வு?

புத்தாண்டு தருமா யானைகளுக்கு புதுவாழ்வு?

8 views
0

சீனாவுக்கு யானைகள் மீது தீராக் காதல் இருந்து வருகின்றது. இது நீண்ட காலமாகவே தொடர்கின்றது. அடடா சீனாவின் ஜீவகாருண்யம் அற்புதம் அற்புதம் என்று அவசரப்பட்டு ஒரு கருத்தை எடுத்து விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை என்பார்கள். காலங்காலமாக கொல்லப்பட்டு, அழிவின் விளிம்புக்கு இந்த யானைகளைத் தள்ள வைத்துள்ள  இந்தத் தந்த வேட்டைக்கு, சூத்ரதாரி சீனாவேதான். ஆபிரிக்க காடுகளில் களவில் வருடாவருடம் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

30,000  அப்பாவி யானைகள்.!

நம்ப முடியவில்லையா? என்ன செய்வது ? அதுதான் நிஜம். . அதன் ஒரு ஜோடி தந்தங்களுக்காகவே இந்த இராட்சத மிருகங்களை கொன்றொழித்து வருகின்றார்கள். உலக சந்தையில் பெருமளவு தந்தங்களை கொள்முதல் செய்வது, சீனாவும், ஹொங்ஹொங்கும்தான். . இந்தத் தந்த ஏற்றுமதியில் இதுவரை காலங்களில் முன்னணி வகித்த நாடு எது என்று நினைக்கிறீர்கள்? 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டரீதியாக மிக அதிக அளவு தந்தத்தை ஏற்றுமதி செய்த உலக நாடு என்ற “பெருமையை” பிரிட்டன் தட்டிக் கொள்கின்றது.  தந்த ஏற்றுமதியில் பிரிட்டனுக்கு அடுத்ததாக இரண்டாவதாக நிற்கும் அமரிக்காவை விட 370 வீதம் அதிகமான அளவு தொகை தந்தத்தை இது ஏற்றுமதி செய்துள்ளது நமக்கு பதிய தகவல் மாத்திரமல்ல, அதிர்ச்சியைத் தரும் தகவலும் கூட. காட்டு யானைகளின் அழிவுக்கு, ”கனவான்கள்” பலரின் பங்களிப்புகள் பின்னணியில் இருந்துள்ளன என்பதையே இந்தப் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இது பழைய கதை.  உலக அமைப்புகள் கொடுத்த பல அழுத்தங்கள் , கொழுத்த தந்த  வியாபாரியான சீனாவை இன்று அடியோடு மாற்றி வைத்திருக்கின்றது. ஓஹோவென்று கொடிகட்டிப் பறந்த தந்த வியாபாரம் இழுத்து மூடப்பட்டு இருக்கின்றது. இந்த ஆண்டிலிருந்து தந்த விற்பனையை அடியோடு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது சீனா. தொகையாக யானைகள் கொல்லப்படுவதை, இந்தத் தடை, குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப் போகின்றது என்பது உறுதி. வெளி அழுத்தங்களால் உந்தப்பட்டு, 2014 தொடக்கம் தந்த விற்பனையை ஒழிக்க எடுத்த கெடுபிடிகள், இன்று ஒரேயடியாக விற்பனைத் தடையைக் கொண்டு வருமளவிற்கு மாறியுள்ளது. 1975இலிருந்து சட்டரீதியாக   சீனாவிலும், ஹொங்ஹொங்கிலும், அனுமதிக்கப்பட்டு வந்த இந்தத் தந்த வியாபாரம், பெருமளவு யானைகளை அழித்திருந்தன. எனவே இந்தத் தடை என்பது யானைகளை கணிசமான அளவு காப்பாற்றப் போகின்றது என்கிறது ஓர் உலக அமைப்பு!

சீனாவுக்குள் களவில் வந்து சேரும் தந்தங்கள் பிடிபடும் எண்ணிக்கையில் 80 சதவீத வீழ்ச்சி திடீரென வந்துள்ளதாக இந்த உலக அமைப்பு மேலும் கூறுகின்றது. அதே போல தந்தத்தின் விலையும் சந்தையில் 65 சதவீத வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றது என்கிறார்கள். இந்தத் தடையின் கீழ் சீனாவில் தந்தத்தை கடைந்து வெவ்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் 172 தொழிற்சாலைகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும்  வந்துள்ளது மூடுவிழா! சில தொழிற்சாலைகளும், விற்பனை நிலையங்களும், கடந்த வருடம் மார்ச் மாதமே இழுத்து மூடப்பட்டு விட்டன.. 2014இல் இருந்த  சந்தை விலைகளோடு ஒப்பிடும்போது, இந்த வருட விலை 65 வீத வீழ்ச்சி கண்டிருப்பதோடு, சில்லறை வியாபாரிகள் தமது கையிருப்புகளை  பெரிய கழிவில், தடைக்கு முன்பு விற்க முயற்சித்ததைக் காணக்கூடியதாக இருந்தது என்கிறது இந்த Wildaid  என்ற அமைப்பு!

மழை விட்டும் துாவானம் விடவில்லை என்பதுபோல, சீனத் தடை பெரிதில் புகழப்பட்டாலும், சீனாவின் நிர்வாகப் பிராந்தியமாக இருக்கும் ஹொங்ஹொங்கில் இந்தத் தடை செல்லுபடியாகாது என்பதால் உலக அமைப்புகள் குழம்பிப் போயிருக்கின்றன. கடந்த 150 வருடங்களாக யானைத் தந்தங்களுக்கு பெரிய அளவிலான சில்லறைச் சந்தையைக் கொண்டுள்ள முன்னாள் பிரித்தானிய காலனித்துவ நாடான ஹொங்ஹொங்கில் , இந்தக் கதை தொடர்வதால் களவில் யானைகளை வேட்டையாடுவதைத் தடைசெய்வதற்கு இது ஒரு பெரும் தடைக்கல்லாகவே இருக்கப் போகின்றது என்கிறார்கள் ஆர்வலர்கள்.

சீனாவின் 90 வீதமான தந்தக் கொள்வனவை மேற்கொள்ள , ஹொங்ஹொங்கே ஒரு முக்கிய மையமாக இருந்து வருகின்றது. 2003இலிருந்து ஹொங்ஹொங் அதிகாரிகள் சுமாராக 40 தொன் எடைகொண்ட களவில் வந்த தந்தத்தைக் கைப்பற்றியிருப்பதாக கூறியுள்ளார்கள். ஆனால் இத் தொகை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தொகையின் பத்து வீதம் மாத்திரமே என்கிறார்கள். இவர்கள் தந்த வியாபாரத் தடையை அமுலாக்குவது பற்றிய இறுதி வாக்கெடுப்பு, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெறும் என்று ஹொங்ஹொங் அரசு கூறுகின்றது. சீனாவில் தந்தச் சந்தை மூடப்படுவது, ஆசியாவில் பல நாடுகளின் சந்தை மூடுவிழாவிற்கு வழி சமைக்கலாம் என்று நம்பப்படுகின்றது. ஆனால் தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் தந்தங்களுக்கான சில்லறைச் சந்தை வெகுவேகமாக விஸ்தரிக்கப்பட்டு வருவதாக , கென்யாவின் ”யானைகளைக் காப்போம்” என்ற அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

தினமும் , ஒவ்வொரு 26 நிமிடத்துக்கு ஒரு தடவை , ஆபிரிக்காவில் ஒரு யானை களவில் கொல்லப்படுகின்றது என்பது நம்மில் எத்தைனை பேருக்குத் தெரியும்? இயற்கை தன் தேவைகளுக்காக அ கொடுத்த தந்தங்கள் அவற்றின் உயிர்களுக்கு எமனாக வந்து வாய்த்துள்ளன. குறுக்கு வழியில் பெரும்பணம் சம்பாதிக்கும் மனிதனின் பேராசை ஏதும் அறியாத யானைகளின் உயிர்களுக்கு உலைவைத்து வருகின்றன. பல வழிகளிலும் வளர்ந்து விட்ட பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் , இப்பொழுதும் சில தந்த விற்பனை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? 1947க்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட பழமை வாய்ந்த தந்தங்கள் இன்றும் விற்பனை நிலைய்களில் இங்கு சட்டாீதியாக விற்பனை செய்ய முடியும். இந்தச் சட்டரீதியான தந்த விற்பனையின் போர்வையில் , ஆசியாவுக்கு தந்தங்கள் களவில் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கடந்த வருடம், இந்தச் சட்டமூல திருத்தம் பற்றிய விவாதத்தில், பிரிட்டனின் பாராளமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

பழைமைானதோ, நவீனமானதோ தந்த விற்பனையை முற்றாகத் தடைசெய்து, யானைகள் அநியாயமாகக் கொல்லப்படுவதை நிறுத்துங்கள் என்று உலக அமைப்புகள் ,பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இவை இப்படி நிறுத்தினால்தான் ஏனைய நாடுகளுக்கு இது முன்மாதிரியாக அமைவதோடு, உலகெங்கம் தந்தங்களுக்காக அலைபவர்கள் குறையலாம் என்று கருதப்படுகின்றது. சீனா சொன்னதைச் செய்திருக்கின்றது.

பிரித்தானிய சாம்ராஜ்யமும் பின்பற்றுமா?

05.01.2018

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *