அறிந்த மிருகம் அறியாத கதை(6) வசீகரமான வரிக்குதிரைகள்

அறிந்த மிருகம் அறியாத கதை(6) வசீகரமான வரிக்குதிரைகள்

8 views
0

கைரேகைகள் தனித்துவமானவை என்பது உங்களுக்குத் தொியும்.  இந்தக் கைரேகைகளை வைத்தே பல ரெிய குற்றவாளிகளைப் பிடிதது விடுகிறார்கள். காட்டில் கம்பீரமாக உலாவுகின்ற வரிக்குதிரைகளின் கறுப்பு-வெள்ளைக் கோடுகளும் தனித்துவமானவை. காடுகளில் பல்லாயிரக்கண்ககான  வரிக்குதிரைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும்  தனித்துவமான கறுப்பு-வெள்ளைக் கோடுகள் இருப்பது இறைவனின் படைப்பின்  விந்தையை  நமக்கு வெளிப்படுத்துகின்றது.

மலைப் பிராந்தியங்கள், புல் வெளிகள், பற்றைக் காட்டுப் பிராந்தியங்கள் என்று பல்வேறு இடங்களில் காண்ப்படும்   இந்தக் காட்டு விலங்குகள் அழியவில்லை என்பது நமக்கு மன ஆறுதலையும் , மகிழ்வையும் அளிக்கும் விடயம் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த வரிக்குதிரைகளில் பல இனங்கள் இருக்கின்றன. பரந்த வெளி வரிக்குதிரை என்றொரு இனம் இருக்கின்றது. இவை ஆபிரிக்காவின் தெற்கு, கிழக்குப் பிராந்தியங்களிலேயே காணப்படுகின்றன. மலைப் பிராந்திய வரிக்குதிரைகள் என்பது இன்னொரு இனம். இதன் அடிவயிறு வெள்ளையாக இருக்கும். புல்வெளிப் பிராந்திய வரிக்குதிரைகளோடு ஒப்பிடும்போது,  இதன் கறுப்பு வெள்ளை வரிகள் சற்று நெருக்கமாக இருப்பதைக் காண முடியும்.  தென் மேற்கு ஆபிரிக்கப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

நீண்ட ஒடுக்கமான கழுத்துப் பகுதியைக் கொண்ட இனங்கள் கிரெவ்வீஸ் வரிக்குதிரைகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. வரிக்குதிரை இனங்களில் பெரியது இதுதான். ஆபிரிக்க நாடுகளான எத்தியோப்பியாவிலும், வட கென்யாவிலும் காணப்படும் இந்த வரிக்குதிரை வேகமாக அழிந்துவரும் இனம் என்பதோடு, அருகி வரும் இனமாகவும் இருக்கின்றது என்கிறார்கள்.

ஒரு நன்கு வளர்ந்த வரிக்குதிரையின் தோள்மட்டம் வரையிலான உயரம் 1.3 மீற்றராக இருக்கும்.  அதன் உடல் நீளம் 2.6 மீற்றர் வரை காணப்படும்.  பெண்களை விட ஆண்கள்  சற்றுப் பெரிதாக உள்ள நிலையில், நன்கு வர்ந்த ஓர் ஆண் வரிக்குதிரையி்ன் எடை சுமாராக 350 கிலோ வரை இருக்கலாம்.

இங்கே உங்களிடம்  ஒரு கேள்வி…

வரிக்குதிரையின் உடம்பின் நிறம் என்ன? அதில் ஓடும் வரிகளின் நிறம் என்ன?

வெள்ளை உடம்பில் கறுத்த வரிகளா  அல்லது கறுத்த உடம்பில் வெள்ளை வரிகளா?

உங்கள் பதில் சரியா  என்பதை இறுதியில் சரிபார்த்துக் கொள்வோம்.

சரி  இந்த வரிகள் எதற்கு இந்தக் குதிரைகளுக்குக் கிடைத்திருக்கின்றன? கடவுளின் படைப்புகள் எல்லாமே காரணத்தோடுதானே!  தம்மைத் தாக்கவரும் மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள புற்களிடையே  நின்றுகொண்டு வெளிப்புறத்தை  மறைக்கும்போது, தாக்கும் மிருகத்தின் கண் பார்வையிலிருந்து இவற்றால் தப்ப முடிகிறது.   வரிகள்  எப்பொழுதும் செங்குத்தாகவே இருப்பது இதைச் சாத்தியமானதாக்குகின்றது. அது மாத்திரமல்ல  இந்த மிருகங்கள் துாரத்தில் நிற்கும்போது , வரிகள்  ஒன்றுடன்  ஒன்று இணைந்து  இத்ன உடலைச் சாம்பர் நிறம் கொண்டதுபோல தோற்றமளிக்கச் செய்கின்றன.

இதற்கு ஒரு எதிர்வாதம் உண்டு. . சிங்கம் , கழுதைப் புலி போன்ற மிருகங்களால் தொலைதுாரம் இரவு நேரங்களில் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. பொதுவாக இவை உடல்வாடையை வைத்தே இரையைப் பிடிக்கின்றன என்கிறார்கள்.

வரிகளால் உள்ள இன்னொரு வசதி குறி்பபிடத்தக்கதாகும். கூட்டமாக இவை ஒரு சிங்கத்தால் துரத்தப்படும்போது, பெருந்தொகையான வரிகள் இணைந்து, தான் குறிபார்த்த இரையைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத குழப்பம் சிங்கத்திற்கு ஏற்படுகின்றது.

தனித்துவமான வரிகள்  ஒவ்வொரு குதிரைக்கும் இருப்பதால்,  ஒன்றை அதன் வரிகளைக் கொண்டு இனங்கண்டுகொள்வது  சாத்தியப்படுமா என்பது இன்னமும் அறியப்படவில்லை.

வரிகளால் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் , இதன் உடலில் இரத்தம் உறிஞ்சி வாழும் இலையான்கள் இந்த வரிகளால்  ஈர்க்கப்படுவதில்லை.  ஒரேயடியாக இலையான்கள் போய்விடுவதில்லை என்றாலும்,  இலையான்களின் தாக்கத்திலிருந்து பெரிதும்  விடுபட இந்த வரிகளே  உதவுகின்றன.

சரி இனி  மீண்டும் அதே கேள்வி.

வரிக்குதிரையின் உடம்பின் நிறம் என்ன? வரிகள்  நிறம் என்ன ?

பதில் ஆச்சரியமானதுதான்.

இதற்கு வெள்ளை நிற அடிவயிறு இருப்பதால், வெள்ளை உடம்பில் கறுத்தவரிகள் என்றே நம்பப்பட்டன. இந்த யூகம் தவறு. கறுத்த உடம்பில் வெள்ளை வரிகள் இருப்பதுதான் நிஜம்.

இதன் உடலைக் குளிர்மையாக வைத்திருக்க இந்த வரிகள் கைகொடுக்கின்றன என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விடயம்.

ஒளியை வேகமாக உறிஞ்சும் சக்தி கொண்ட கறுப்பு நிற வரிகளை விட, வெள்ளை வரிகள் மெ ஊடாக   மெதுவாகவே  ஒளி உட்புகுவதால், அதன் உடல் குளிர்மைப்படுத்தப்பட்டு விடப்படுகின்றது.  அதிலும் வரண்ட பிராந்தியக் குதிரைகளுக்கு உடம்பில் வரிகள் அதிகம் என்கிறார்கள்.

வரிகள் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த வரிகள் சொல்லும் கதைகள் நமக்குப் புதிதானவை.

இதன் கண்கள் கண்கள் பக்கவாட்டில்  இருப்பதனால், இதன் பார்வை அபாரமாக இருக்கின்றது. இதற்கு இரவுப் பார்வையும் இருப்பினும், இதனை வேட்டையாடும் மிருகங்கள் அளவு சிறந்த இரவுப் பார்வை கிடையாது.( அப்படியும் கடவுள் கொடுத்திருந்தால், இரவு வேட்டையாடும் மிருகங்களுக்கு ஒரு வரிக்குதிரை கூட இரையாகக் கிடையாது. )

குதிரைகளை விடப் பெரிய்ய,  வட்டமான செவிகள் இருப்பதாலும்,  தன்  செவிகளை எந்தக் கோணத்திலும் திருப்ப முடிந்த  சக்தி கொண்டதாலும்,  அதன் கேட்கும், திறன் ,  நன்றாக உள்ளது. கண் பார்வையும் அபாரம்.. மோப்ப சக்தியும் அதிகம்.

இவைகள் சேர்ந்தே வாழும் சுபாவமுடையவை. பொதுவாக ஒரு கூட்டத்தில் ஓர் ஆணும், ஆறு பெண் குதிரைகளும்,  குட்டிகளும் காணப்படும்.  பிரமச்சாரிகளான ஆண்கள் தனித்து வாழும்., வயது வந்ததும் இவற்றின் வாழ்வு சவால் நிறைந்ததாகி விடும்.

கிரெவி எனப்படும் வரிக்குதிரைகளின் கூட்டம் ஒரு சில மாதங்களே நிலைக்கும் என்கிறார்கள்.  குட்டிகள் தாயோடு வளர, ஆண் மிருகங்கள் கூட்டத்தை விட்டு விலகிச் சென்றுவிடும்.

குதிரைகளைப் போல நின்று கொண்டே துாங்குபவை வரிக்குதிரைகள்.! அயலவர்கள் சுற்றிலும் நின்றால், நிலத்தில் கிடந்து உறங்கும்.

 

எப்படி  இவை ஏனைய மிருகங்களுடன் தொடர்பு கொள்கின்றன?

கனைப்பதும், உச்சஸ்தாயில் குரைப்பதும், ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ள வழி செய்கின்றன. நாய்களைப் போல இது ஜாக்கிரதை உணர்வோடு இருக்கும்போது இரு செவிகளும் உயர்ந்த நிலையில் இருக்கும். அதே போல தம்மை மிருகங்கள் தாக்க வருகின்றதா என்று நோட்டம் விடும்போது, தலையை நேராக உயர்த்தி, ஒரே பார்வையாகப் பார்க்கும்.காதுகளும் புடைத்து நிற்கும்.

தனது மூன்றாவது வயதில் குட்டி ஈன்று, அம்மாவாகி விடக்கூடியது வரிக்குதிரை. குதிரைக் குட்டி போல, வரிக்குதிரையின் குட்டிகள் பிறந்த சொற்ப நேரத்தில் துள்ளி எழுந்து, தாயிடம் பால் குடிக்கத் தொடங்கிவிடும்.

குதிரைகள் போல வரிக்குதிரைகளில் பயணிப்பது என்பது சுலபமானதல்ல. எனினும்  வரிக்குதிரைகளில் முன்னரெல்லாம் சவாரி செய்திருக்கிறார்கள். வரிக்குதிரை வண்டியையும் இழுத்திருக்கின்றது.

குதிரை, வரிக் குதிரை….  இரண்டுக்கும் வரிகள் மட்டுமா வித்தியாசம்?

காட்டு விலங்கினங்களின் கதைகளே சுவாரஸ்ஸியமானவைதான்!

17.01

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *