ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

7 views
0

ஆடைஅவிழ்ப்புக்கும் ஒரு நாளா?

 உலகம் போகிற போக்கைப் பார்க்கும்போது, எதாவது ஒரு சுவரில்தான் முட்டி மோதிக் கொள்ள வேண்டும்போல் இருக்கின்றது. சென்ற ஆண்டைப் போல, இந்த ஆண்டும் “ரியூப் தினம்”  என்ற ஒரு பெயரில் “ஆடை அவிழ்ப்பு” செய்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் இலண்டன்வாசிகள்.

”நீளக் காற்சட்டைகள் வேண்டாம்”- இந்த ரியூப் நாளின் மகத்துவம் இதுதான். ரியூப் ரயில் என்று அழைக்கப்படும் பாதாள ரயில் பயணிகள் இந்த நாளில் இடைக்கு கீழே வெறும் உள்ளாடையுடன் வந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். இது கோடை காலமும் அல்ல. ஜனவரி மாதக் குளிரையும் பொருட்படுத்தாது, உள்ளாடை அணிந்தபடி, ரயிலேறி இறங்கியிருக்கிறார்கள் இளவட்டங்கள். இதன் நோக்கம் ஏதாவது தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சேகரித்துக் கொடுப்பது என்றால் அதுவும் இல்லை. ரயில்களில் தங்கள் கால்களைக் காட்டியபடி , உள்ளாடையுடன் நின்றபடி, நிதானமாக புத்தகமொன்றை வாசித்தபடி, இவர்கள் பயணித்திருக்கிறார்கள். நிர்வாணமாகப் பயணிப்பது தடை என்பதால், உள்ளாடை அணிவதோடு நிறுத்தியிருக்கிறார்கள். அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் இருப்பார்கள்.

இந்த ஆடை அவிழ்ப்பை ஒழுங்கு செய்த அமைப்பு, சில விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ”உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், ஒன்றுக்கு இரண்டு உள்ளாடைகளை அணியலாம். ஆனால் பொதுமக்களைக் காயப்படுத்துவது போன்ற உள்ளாடைகளை அணியாதீர். பொதுமக்களைச் சிரிக்க வைப்பதுதான் எமது நோக்கமே ஒழிய, வீண் பிரச்சினைகள் உருவாகுவதை நாம் விரும்பவில்லை. ” என்கிறார்கள் இந்தத் தினத்தை ஒழுங்கு செய்தவர்கள்.

இவர்கள் நீளக் காற்சட்டை அணியக்கூடாது என்பதுதான் இந்த அமைப்பின் கோரிக்கை.  இதில் பங்குபற்றுபவர்கள் எல்லோருமே ஒரே பெட்டியில் ஏறக்கூடாது என்பதும், தலையில் தொப்பி, குளிர் மேலங்கி, எல்லாம் அணிந்து கொண்டு வரவேண்டும் என்பதோடு, இதில் கலந்து கொள்பவர்கள், ஒருவரையொருவர் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்ளக்கூடாது என்பதும் இன்னொரு விதிமுறை.

கடந்த ஞாயிறன்று, வெப்பநிலை 3பாகை சென்டிகிரேட் என்பதையும் பொருட்படுத்தாது, 400 இலண்டன்வாசிகள் இந்தக் ”கூத்தில்” கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதாம், ஏவாள் காலத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

 

கெட்டியாகி விட்ட கொட்டும் நீர்

ஒரேயடியாக நீர் கொட்டும் காட்சியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அந்த அளவுக்கு நீர்வீழ்ச்சிகள் எழில் மிக்கதாக அமைகின்றன. ஆர்ஜென்டீனாவின் இகுவாசு முதலிடத்தையும், ஸம்பியாவின் விக்டோரியா நீர்வீழ்ச்சி இரண்டாவது இடத்தையும் பெற்று, கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி மூன்றாம் இடத்தில் நின்றாலும், கொட்டும் தண்ணீரின் அளவைப் பொறுத்தமட்டில், இதற்குத்தான் முதலிடம் என்கிறார்கள். ஒரு வினாடிக்கு 7000 கியூபிக் மீற்றர் அளவு தண்ணீர் கொட்டுகிறது என்ற கூறும்போது, அருவியாகக் கொட்டும் நீரின் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புலனாகும்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை ஒரு பக்கமும், மறுபக்கம் கனடாவின் ஒன்ரேறியோ நகரையும் கொண்டுள்ள இந்தப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி உறைந்திருப்பதுதான் இன்றைய செய்தி.

வெடவெடக்கும் குளிரை அசட்டை செய்து விட்டு, பேரிரைச்சலோடு கொட்டும் அருவி நீர் உறைந்திருப்பதை நேரில் பார்த்து ரசிக்க இங்குள்ளவர்கள் சென்று வருகிறார்கள் என்பதான் இப்போதைய புதினம். இங்குள்ள வெப்ப நிலை  மைனஸ் 14பாகை சென்ரிகிரேட். இங்கு ஒரு வினாடிக்கு 3000 தொன் நீர் வீழ்வதால், கொட்டும் நீர் முழுவதும் உறை நிலையை அடைவதும் அசாத்தியம்.

ஒரு பக்கம் தண்ணீர் கொட்டும் அந்தப் பேரோசை காதில் வீழ்கின்றது. மறுகணம் ஐஸ் பாளங்கள் உடைந்து நொருங்கும் சப்தம் வருகின்றது. கொட்டும் நீரின் ஒரு பகுதி பட்டென உறைந்து விடுவதே காரணம். இந்த நீர்வீழ்ச்சியின் கிழக்கு கரையோரம் மைனஸ் 35 பாகை சென்கிரேட் அளவிற்கு வெப்பநிலை இறங்கியிருப்பதோடு, சில பகுதிகளில் 18 அங்குல தடிப்புடைய பனி கொட்டியுள்ளதாம்.

அருவியாய் கொட்டிய நீரைப் பார்த்து ரசித்தவர்கள், இப்பொழுது அதன் உறைநிலையை ரசித்துப் பார்க்க ஒன்றுகூடுகிறார்கள். எலும்பை ஊடுருவிக் கொண்டு செல்லும், மோசமான குளிர்நிலைதான். ஆனால் அதையும் ரசிக்கிறது ஒரு கூட்டம்.

பல மாரிகாலங்களில் நீர் உறைவது பொதுவான நிகழ்வாக இருந்தாலும், ஒரேயொரு தடவைதான்-அதாவது 1848ம் ஆண்டு மார்ச் 29ந் திகதி.  இந்த நீர் வீழ்ச்சி ஒரேயடியாக உறைந்து போயிருக்கிறது  என்கிறார்கள். 1885, 1906, 1902, 1911, 1932, 1936, 2014 ஆகிய ஆண்டுகளும் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு உறைநிலையைக் கண்ட ஆண்டுகள்.!!!!

 

தோலிலும் சுவை கொண்ட வாழைப்பழங்கள்

பொதுவாகவே வாழைப்பழத்தோல் ஒரு ”ஆபத்தான பேர்வழியாகக்” கணிக்கப்படுபவது. பழத்தைச் சாப்பிட்டு விட்டு, தோலை தங்கள் இஸ்டத்துக்கு தெருவில் வீசிவிட்டுச் செல்வதால், பலர் வழுக்கி விழுந்து, கை கால்களை உடைத்துக் கொண்ட சம்பவங்களுக்குப் பஞ்சமல்லை.

இனி அப்படியான விபத்துக்களுக்கு இடமில்லை என்பதுபோல, பழத்தோடும் தோலையும் சேர்த்து சாப்பிடும் வகையில், புதியதொரு வாழைப்ழ இனத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள் ஜப்பானிய விவசாயிகள். ஒக்கோயாமா என்ற ஜப்பானிய பிரதேச பழ உற்பத்தி விவசாயிகளே, இந்தப் புதுவிதமான வாழைப்பழத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இதற்கு “மொங்கீ வாழைப்பழம்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. வழமையான வாழைப்பழங்களைப் போலல்லாது குறிப்பிட்ட அளவு மெலிதாகக் காணப்படும் இந்த இனப் பழங்கள் 100 வீதம் சாப்பிடக் கூடிய இனங்கள் என்று சொல்கிறார்கள்.

தமது மூதாதையர்கள் முன்னொரு காலத்தில் செய்த முறைப்படிதான் இப்பொழுது இந்தப் பழத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். 20,000 வருடங்களுக்கு முன்பு, பனியுகத்தின் முடிவில் , கொடும் பனிக்குள் முடங்கிக் கிடந்த தாவரங்கள், மெல்ல மெல்ல தலைநீட்டி வளர ஆரம்பித்தன. மைனஸ் 60 பாகை வெப்பநிலையில், வாழைச் செடிகளை   உறை நிலையில் வைத்தார்கள். பனி உருகியதும் வளர ஆரம்பித்தன. வழமையாக  கோடைகால வாழைச் செடிகள் வளர்ந்து காய்க்க , இரு வருடங்கள் எடுத்தால், இந்த மொங்கி வாழைகள் வளர்ந்து காய்க்க, 4 மாதங்கள் மாத்திரமே எடுக்கின்றன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஒரு வாரததில் 10 வாழைப்பழங்கள் மாத்தரமே உற்பத்தி செய்ய முடியுமென்பதோடு, ஒக்காயாமா பிராந்தியத்தின் ஒரு விற்பனை நிலையத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு பழத்தின் விலை 5.70 டொலர்கள்( உள் நாட்டு பணமதிப்பு 648 யென்)

வழமையான வாழைப்பழங்களை விட இது அதிக இனிப்பானது என்கிறார்கள். கூடுதல் சீனி அளவைக் கொண்ட இந்தப் பழத்தின் சுவை, அன்னாசிப் பழச் சுவையை ஒத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நன்றாகப் பழுத்தால்தான் இதைச் சாப்பிடலாம் என்கிறார்கள். பழம் நன்றாகப் பழுத்தவுடன் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தென்பட ஆரம்பிக்குமல்லவா? அந்த நிலதான் சாப்பிட உகந்தது என்கிறார்கள். இதன் தோல் மிக மெல்லிதாக இருப்பதால், நன்கு பழுத்த , நல்ல இனிப்பான இந்தப் பழத்தைத் தோலோடு சாப்பிட முடிகின்றது என்கிறார்கள்.விட்டமின் பி6உம் மக்னீசியமும் கொண்ட உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது என்கிறார்கள். இந்தப் பழத்தைச் சாப்பிடும்போது, ”தோலிருக்கச் சுளைவாங்கி” என்று சொல்ல முடியாது.

 

குடிக்கும் தடையை மீறாதிருக்க, குட்டித் தீவொன்று!

 

குடிக்கத் தடை வந்தால் என்ன செய்யலாம்? குட்டித் தீவை உருவாக்கி , அங்கு குடித்து மகிழ்ந்து, வெற்றியும் கண்டுள்ளார்கள் நியூசிலாந்தில் ஒரு குழுவினர். நாட்டுக்குப் புறம்பாக ஒரு குட்டித் தீவை  உருவாக்கி, அங்கு அமைதியாக மது அருந்தி உற்சாகமாகப் பொழுதைக் கழித்துள்ளார்கள்.

வன்முறைகளைத் தவிர்க்க, டிசம்பர்31 அன்று  மதுபானம் அருந்துவதற்கு நியூசிலாந்து அரசு தடைவிதித்திருந்தது. இத் தடையை மீறி எவராவது குடித்தால் 250 டொலர் தொகை தண்டப் பணம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இந்தச் சட்டத்தை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில், கடந்த சனியும், ஞாயிறும், பொலிஸார் நகரவலம் வந்துள்ளார்கள்.  ஆனால் இந்தக் குழுவினர் புத்திசாலித்தனமாக  உருவாக்கிய தீவுக்குள், மதுபானம் அருந்தியதை பொலிஸாரால் தடைசெய்ய முடியவில்லை. அவர்கள் நிதானமாக மது அருந்தியபடி , வருடக் கடைசித் தினத்தில் வெளியே இடம்பெற்ற வானவேடிக்கைகைளைப் பார்த்து ரசித்துள்ளார்கள்.

வெறும் மணல், கடல் சிப்பிகள், மரப்பலகைள்-ஒரு குட்டித் தீவை உருவாக்க இவாகள் உபயோகித்த பொருட்கள் இவை மாத்திரமே. அவாக்ள தமது குட்டித் தீவை அமைத்த விதம் எவ்வளவு சிறப்பாயிருந்தது என்பதற்கு , இந்தத் தீவில் அடுத்த தினம் எவருமே இல்லாவிடினும், தீவு முழுதாக இருந்துள்ளதைச் சொல்லலாம்.

உள்நாட்டு பொலிஸ் அதிபர் கூட இவா்கள் பணியை வியந்து பாராட்டியிருக்கிறார். இவர்கள் ஏற்பாடு, எவரையும் எநதவகையிலும் காயப்படுத்தவில்லை. எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானும் இணைந்திருப்பேன் என்று நகைச்சுவையோடு இவர் கூறியுள்ளார்.

 

புத்திசாலிகள் என்றுமே பிழைத்துக் கொள்வார்கள்.

.

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *