இடறிவிழுந்த இங்கிலாந்து அணி…

இடறிவிழுந்த இங்கிலாந்து அணி…

4 views
0

இங்கிலாந்தின்  சிறந்த பன்முக ஆட்டக்காரான பென் ஸ்டோக்ஸில் சனி பகவானின் பார்வை இங்கிலாந்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். அணித்தலைவர் வயிற்றோட்டத்தால் பீடிக்கப்பட்டு, ஐந்தாவது டெஸ்டின் இறுதி நாளில் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தை தொடர முடியாத வரைக்கும் சனிப் பார்வை தொடர்ந்திருக்க வேண்டும்.

விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது இங்கிலாந்து அணி. இரண்டில் இன்னிங்ஸால் தோல்வி, ஒன்றில் பத்துவிக்கட்டுகளால் தோல்வி என்று மூன்று மோதல்களில் இங்கிலாந்து நன்றாகவே வாங்கிக் கட்டியிருக்கின்றது. நான்காவது டெஸ்டில் இந்த அணி தப்பிப்பிழைத்ததால் ‘வெள்ளையடிப்பு‘ என்ற அலங்கோலத்திலிருந்து மீண்டுள்ளது.

என்னதான் நடக்கின்றது?

நின்று, நிதானித்து நம்பி ஒட்டங்களைக் குவிக்கக் கூடியவர்களும், எதிரணியை தமது பந்து வீச்சால் சுருட்டக் கூடியவர்களும் இங்கிலாந்து அணியில் அருகிக் கொண்டு வருகிறார்கள் என்பதே யதார்த்தம்.

இந்த அவுஸ்திரேலிய தொடரை  இங்கிலாந்து விரைவில் மறந்துவிடமுடியாது. ஒவ்வொரு மேதலிலும் இவர்கள் பட்ட அவமானங்களை, அடிகளைப் பட்டென மறந்துவிட முடியாது. கசப்பான அனுபவங்கள் புகட்டும் பாடங்கள்தான், பின்னொரு நாள் வெற்றிக்கு இவர்களுக்கு கைகொடுக்கப் போகின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக்  4 வது டெஸ்ட் மோதலில் புதிய சாதனை படைத்துள்ளார். சிட்டினியில்  நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த  அலெஸ்டர் குக் , சர்வதேச டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். படுதோல்வியிலும் இங்கிலாந்திற்கு கிடைத்த அறுதல் பரிசு அதுதான்.

இங்கிலாந்து அணியின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்று முதற்தடவையாக, அணித்தலைவராக ஆஷஸ் டெஸ்ட் தொடரை   ஜோ ரூட் எதிர்கொண்டார். தோல்வி தோல்வியாக அடிவாங்கிய அவர், .இறுதி டெஸ்டில் நன்றாகவே ‘ஆடிப்‘ போனார். இடைநடுவே விட்ட ஆட்டத்தை இவரால் தொடர முடியவில்லை.. அந்த அளவுக்கு சிட்னி வெயிலும், எதிராளிகளின் அபார ஆட்டமும் இவரை அலைக்கழித்து விட்டன. அரைச் சதங்கள் பல இத் தொடரில் அடித்திருந்தாலும், அரைச் சதங்களை முழுதாக்கும் திறன் இல்லாத இவரைப் பற்றிய குற்றச்சாட்டு தொடர்கிறது. இனிவரும்  மோதல்களில் இவர் தலைமைப்  பொறுப்பைத் தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கின்றது. மிக இளம்வயதில் தலைமைப் பொறுப்பு இவரது தலையில் போடப்பட்டுள்ளது. இந்தச் சுமை இவருக்கு அதிகம் என்பதும் தெரிகின்றது.

 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் சிமித் அணித்தலைவராகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார் . பல சதங்களை அடித்துள்ள இவர், அவுஸ்திரேலிய அணியினரில் மிக அதிக ஒட்டங்களை ஆடிக்குவித்தவர் என்ற பெருமைக்கு உள்ளாகின்றார்.

நடந்து முடிந்த ஐந்தாவது டெஸ்ட் மோதலின் அபார வெற்றியின் பின்னணியில் இரு சகோதரர்களான ஸோன் மார்ஸ், மிட்சல் மார்ஸ் ஆகிய இருவரும் இருந்துள்ளார்கள். இருவருமே சதம் அடித்து, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 3வது சகோதரர்கள் என்ற சரித்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு முன்பு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவராக இருந்த இயன் சப்பெலும் அவர் சகோதரர் கிரெக் சாப்பலும் இதே சாதனையை நிலைநாட்டியிருந்தனர்.,

அவுஸ்திரேலியா. 7 விக்கெட் இழப்பில்209 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்த நிலையில், பின்வந்தவர்கள் பொறுப்பாக ஆடி328 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தோ 4 விக்கெட் இழ்ப்பிற்கு 368 ஓட்டங்கள் எடுத்துவிட்டு, 403 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளார்கள். இது பேர்த் மைதானக் கதை!

ஜிம்மி அன்டர்சனைத் தவிர, எநதப் பந்து வீச்சாளரும், குறிப்பிடும்படியாக இங்கிலாந்து அணியில் ஜொலிக்கவில்லை என்பது பெரியதொரு சோகம். சுழல்  பந்து வீச்சாளர் என்றிருந்த அலி பந்துவீச்சிலாகட்டும், துடுப்பாட்டத்திலாகட்டும் பெரிய ஏமாற்றமே! ஆனால் நதன் லையோனும், வேகப் பந்து வீச்சாளர்களும் அவுஸ்திரேலிய அணிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

பொதுவாகவே இப்படியான தோல்விகளுக்குப் பின்னர் பல தலைகள் உருளுவதுண்டு. இந்த்த் தடவை அணித்தலைவர் ஜோ ரூட்டின் தலை உருளுமா? அப்படி நடவாது என்பதே பலரது நம்பிக்கை. இவர் மீதுள்ள சுமை சற்றே இறக்கப்பட வேண்டும். இவர் துடுப்பாட்டம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் 50ஐ  100ஆக்கும் தந்திரத்தை இவர் சீக்கரம் கற்றுவிட வேண்டும்.

தோல்விகள் வெற்றிகளின் முதற்படிகள் என்கிறார்கள். அடுத்து நியூசிலாந்து அணியை இங்கிலாந்து சந்திக்கப்போகின்றது. பந்துவீச்சாளர்கள் சிலர் ஆடும் வாய்ப்பை இழக்கலாம். புதியவர்கள் வரலாம். எது எப்படியிருப்பினும், புதிய உத்வேகத்தோடு, இந்த அணி களமிறங்கி, வெற்றிகளை அரவணைக்கும் என்று நம்புவோம்.

08.01.2018

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *