உறவு கொண்டாட முயலும், உலக மகாஎதிரிகள்

உறவு கொண்டாட முயலும், உலக மகாஎதிரிகள்

9 views
0

எதிரிக்கு எதிரி நண்பன் . தவறேயில்லை.

வடகொரியாவுக்கு அமெரி்க்காவும் எதிரிதான்.  அதன் நண்பன்  தென் கொரியாவும் எதிரிதான்.

அப்படியானால் எதிரியின் நண்பன், எப்படி வட கொரியாவுக்கு நண்பனாகினார்?குழப்பமாக இருக்கிறது அல்லவா? உலக அரசியல் இப்படித்தான். எப்பொழுது என்ன நடக்கும் , யார் முகத்தில் யார் சேற்றைப்பூசக் காத்திருக்கிறார்கள் என்பது எவருக்குமே தெரியாது. 2 வருட கால இடைவெளியி்ன் பின்னர், தன் பரம வைரியான, தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்தத் தயாரென  வட கொரியா அறிவித்த போது உலகமே அதிர்ந்தது.

“என் மேசையில்  அணுகுண்டை வெடிக்க வைக்க அழுத்தும் பொத்தான் இருக்கிறது” என்று  டிரம்பிற்கு பதிலடியாக வட கொரியா கொடுத்த சில நாட்களில், இந்தப் பேச்சு வார்த்தைக்கான முதல்  விருப்பு வெளிவந்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக  அதற்குப் பதிலாக டிரம்ப்  இதைவிட அளவில் பெரிய , சக்தி அதிகம் கொண்ட  அணுகுண்டை வெடிக்க வைக்கும் “பட்டன்” என்னிடமிருக்கினறது என்று அறிக்கை விடுத்தார்.

இந்தப் பேச்சு வார்த்தைகள்  பற்றிய அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னர், இந்தத் திடீர் திருப்பம் தன்னால்தான் ஏற்பட்டது என்று டிரம்ப்  உலகுக்கு சொல்லிக் காட்ட ஆசைப்பட்டிருக்கிறார். ஆசை யாரைத்தான் விட்டு வைக்கிறது? அதற்கு அமெரிக்க நாயகன் மட்டுமென்ன விதிவிலக்கா? ‘நான் உறுதியாக நின்று, எமது  முழு சக்தியை வடகொரியாவுக்கு எதிராகப் பிரயோகிப்பேன் என்று அச்சுறுத்தியிராவிடின், இப்படியொரு பேச்சுவார்த்தை சாத்தியமானதா‘ என்று  அறிக்கை விடுத்துள்ளார் டிரம்ப.  இ்பபடியெல்லாம் “கச்சை கட்டிக் கொண்டு” மல்லுக்கு நிற்க களத்தில் குதித்தவர்கள், இன்று சமாதானப் பேச்சுவார்த்தைக்காக  உட்கார்ந்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

யார் பூனைக்கு மணி கட்டினார்கள் என்பதல்ல இங்கே முக்கியம். பூனையில் கழுத்தில் மணி தொங்குகின்றது என்பதுதான் முக்கியம். வட கொரியாவும், தென் கொரியாவும் , நேரில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடா்த்தி விட்டார்கள். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்றும் தொடரப்போகின்றது என்கிறார்கள். அடுத்த மாதம் தென் கொரியாவின் பயொங்சாங்கில் இடம்பெறும் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு, தம்மால் முடிந்த அளவு, விளையாட்டு வீரர்களை அனுப்ப உடன்பட்டிருக்கின்றது வட கொரியா.

அட இதென்ன…மூன்றாம் உலக மகாயுத்தம் வெடிக்கப் போகின்றது என்று நினைத்தோம். என்ன இது எல்லாம்  புஸ்வாணமாக  முடிந்து விடட்டது. ஆடியவர் அடங்கி விட்டார் என்று ஆதங்கப்படுகிறீர்களா? சற்றுப் பொறுங்கள். . இது ஓர் ஆரம்பமே…தேங்காய் உடைத்து  திறப்பு விழா தொடங்கியிருக்கிறார்கள்.  இனித்தானே எல்லாம் ஆரம்பம். சமாதானப் புறாக்கள் கொரிய மண்ணில்  சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனவேயென்று அவசரப்பட்டு வெடிகள் கொழுத்தி ஆரவாரப்பட ஆரம்பித்து விடாதீர்கள்..

களத்தில்  அணு குண்டு வீசப்போவதாகஇதுகால வரை பயமுறுத்திக் கொண்டிருந்த வட கொரியா, இப்படியொரு ‘குண்டை வீசும்‘ என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்?  இறுதியாக 2015 டிசம்பரில்தான் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள்  இடம்பெற்றன. எப்படி இந்த ‘மனமாற்றம்‘ ஏற்பட்டது? டிரம்ப் பீற்றிக் கொள்வதுபோல, அவர் ‘மிரட்டலால்‘ இது சாத்தியமானதா? அல்லது வட கொரியா எதையாவது திட்டமிட்டு, இந்த ‘நாடகத்தை‘ அரங்கேற்றுகிறதா?

இதை நாடகம் என்றும்  ஒதுக்கி விட முடியாது.   நேற்று  செவ்வாயன்று நடந்த பேச்சு வார்ததைகளில், எல்லாமே அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டு்ள்ளன.  அடுத்த மாதம் அதாவது பெப்ரவரி 9ந் திகதி இடம்பெறும், பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் ஆரம்ப விழாவில்,  வடக்கும் தெற்கும் ஒன்றாக அணிவகுத்துச் செல்லும் என்பதில் இரு நாடுகளுகளும் ஏகமனதாக ஒரு முடிவை எடுத்துள்ளன. தென் கொரியாவின் உதவி ஒன்றிணைப்பு அமைச்சரே இதைப் பத்திரிகையாளர்களுக்கு தெட்டத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

இவ்வளவு நடந்தும்,வட கொரியா தென் கொரியாவுக்கு எந்த வகையில் அச்சுறுத்தலாகத் தென்படுகின்றது என்றொரு  வினா எழுந்துள்ளது. அரச மட்டத்தில் இ்ப்படியொரு பேச்சுவார்த்தையும், எதிர்பாராத திருப்பமும் ஏற்பட்டிருப்பது வட கொரியாவின் அணு  ஆயுதத் தாக்குதல் பீதியை ஓரளவு தணித்துள்ளதை மறுப்பதற்கில்லை. .கடந்த பெப்ரவரி 2016 தொடக்கம்  ‘உறக்கத்திலிருந்த’ இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவத் தொலைபேசித் தொடர்பு  விழித்துக் கொண்டிருக்கிறது.  இதற்கு இந்தச் சந்திப்பில் இருநாடுகளும் இணங்கியிருக்கின்றன.

இராணுவம் இல்லாத, இரு நாடுகளினதும் எல்லைகளிலுள்ள  தென் கொரியாவை அண்டிய சூன்ய பிரதேசத்துப் பேச்சுவார்த்தைகள் பலனளித்து இருக்கின்றன.  தென் கொரியாவுடன் இணைந்து செய்யும் இராணுவப் பயிற்சிகளை , தற்காலிக இடைநிறுத்தம் செய்ய அமெரி்க்கா உடன்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.  இந்த  பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடியும்வரை, இராணுவப் பயிற்சிகள் ஓய்ந்திருக்குமென அமெரி்க்கா அறிவித்துள்ளது.

‘மக்களுக்கு  நல்லதொரு பெறுமதியான  புதுவருடப் பரிசைக் கொடுப்போம்.‘ என்று கூறியிருக்கும் வட கொரிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்  றி சொன் குவோன். “இருவர் இணைந்து மேற்கொள்ளும் பயணம் தனித்த ஒருவரது பயணத்தை விட அதிக காலம் நீடிக்கும்”என்று குறிப்பிட்டு்ள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. சீனர்களுக்கும் கொரியர்களுக்கும் புதுவருடம் அடுத்த மாதந்தான் பிறக்கின்றது. 1950- 1953 காலகட்டத்தில்   இடம்பெற்ற கொரிய யுத்த காலம் தொடக்கம் இன்றுவரையில் பிரிந்துள்ள பல குடும்பங்கள் மீண்டும் இணைய இந்தப் புதுவருடம் வாய்ப்பளிக்கப் போவதாக அவதானிகள் கருதுகிறார்கள்.

ஒலிம்பிக் விழாவுக்காக, வட கொரியா மீதான தடைகளையும் நீக்குவதை ஆலோசிக்கப் போவதாகக் கூறியுள்ள  தென்  கொரி ய வெளிநாட்டு அமைச்சு, பதட்ட நிலையைக் குறைக்க இராணுவ மட்டத்தில் பேச்சுவாவார்த்தைகளையும் நடாத்தப் போவதாக கூறியிருக்கின்றது.  சரி கதை இப்படிப் போனால் இனி அணுஆயுதப் பரிசோதனைகளை , வட கொரியா மேற்கொள்ளாதா?  அப்படி எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் அவதானிகள். தென் கொரியாவுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள வட கொரியா எத்தனிக்கின்றது. ஆனால் அதற்காக அணுஆயுதப் பரிசோதனைகளை மேற்கொள்வதை வட கொரியா இந்த ஆண்டு நிறுத்தப் போவதில்லை என்கிறார்கள் அவதானிகள்.

11மணி நேரப் பேச்சுவார்த்தையில் என்னதான் முடிவெடுத்தார்கள் என்று கேட்கிறீாகளா? இருவருமாக விட்ட கூட்டறிக்கையில் , அடுத்த மாதம் இடம்பெறப்போகும் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொள்ள, தமது நாட்டுக் குழுவை பெரிய அளவில் அனுப்பப்போவதாக வடகொரியா பிரஸ்தாபித்துள்ளது. அதே சமயம்  கொரிய குடாவை அணுமயமாக்குதலிலிருந்து விடுவிக்கும்படி தென்கொரியா கோரியதை வடகொரியா  விரும்பவில்லை என்பதை தனது “முறைப்பாடு” மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது வடகொரியா.  தோளில் கை போடுகிறேன் என்பதால்  ”அடி மடியில் கை வைக்காதே” என்று  வட கொரியா , தென் கொரியாவுக்கு சொல்ல விரும்புகின்றது போலும்.  ஆனால் அதே சமயம் கொரிய பிராந்தியத்தில் சமாதானம் நிலவும் என்பதை உறுதிப்படுத்த வட கொரியா இணங்கியிருந்தது என்று இன்னொரு அறிக்கையில்  தென் கொரிய  ஒன்றிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தன் நாட்டுப் பிரதிநிதிகளை ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள வட கொரியா தென் கொரிய மண்ணுக்கு அனுப்பி வைப்பது நல்ல சகுனம். 2007ம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற ஆசிய பனிக்கால விளையாட்டுகளில், தென் கொரிய விளையாட்டு வீரர்களுடன் இணைந்து வட கொரிய விளையாட்டு வீரர்கள் பவனிவந்த பிறகு, இப்பொழுதுதான் முதற்தடவையாக மீண்டும் அந்த “விந்தை” இடம்பெறப் போகின்றது. 11 வருட இடைவெளியில் இப்படியொரு பதற்ற நிலை தணிக்க நிகழும் அதிசயம் இது!

அமெரிக்கா என்ன சொல்கின்றது? 1950-1953 கொரிய யுத்த ஒப்பந்தத்திற்கு இணங்க தனது 28,000  துருப்புகளை அமெரிக்கா, தென் கொரிய மண்ணில் நிலைநிறுத்தி வைத்துள்ளது.  இது நல்ல விடயம் என்று சுருக்கமாகச் சொல்லியுள்ள டிரம்ப், இது ஒலிம்பிக் விளையாட்டுகளைத் தாண்டி நகர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் . இந்தப்  பேச்சுவாத்தைக்குப் பின்னர், தென் கொரிய அதிபருடனான ஒரு தொலைபேசித் தொடர்பில், வட கொரிய அதிபருடன் தானும் பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று கூறியிரு்ககிறார். நடிகர் ரஜனி சொன்னது போல ”சரியான சமயத்தில் நாம் வருவோம்” என்று திருவாய்மலர்ந்தருளி இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி.

சமீபத்தில் தடலாடியாக இவர் வட கொரிய  அதிபருக்கும் தனக்கும் இடையில் ‘மிக நல்லதொரு உறவு‘ இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். நாட்டை அடியோடு அழிப்பேன் என்று இதுகாலவரை துள்ளிக் குதித்த டிரம்ப் இப்படியா கூறியிருக்கிறார் என்று நாம் அதிர்ச்சிவயப்பட   வேண்டியிருக்கின்றது. இதில் என்ன அதிர்ச்சி?  அரசியல்வாதிகளே ‘பல்டி‘ அடிப்பவர்கள்தானே. உலகின் பலம் வாய்ந்த ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றாகி விட்டால், இதற்கு விதிவிலக்காகி விடுமா?  அமெரிக்காவை இருளில் மூழ்கடித்து, சாம்பரில் மூழ்கடிப்பேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தது வட கொரியா.  அனல் கக்கும் வார்த்ததைகளை முன்பு பிரயோகித்து வந்த, இப்பொழுது வட கொரியாவுடன் நட்புக் கரம் நீட்ட ஆசைப்படுவது தெரிகின்றது. வட கொரிய  ஜனாதிபதி கிம்முடன் உரையாடினீர்களா என்று கேட்டதற்கு  நான்  ஆம் என்றோ  இல்லையென்றோ  பதில் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. அவ்வளவுதான் என்று சூடகாமாகப் பதில் கொடுத்துள்ளார்.

சீனாவும் சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக , பேச்சுவார்த்தைகளை வரவேற்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  கிரெம்ளின் சும்மா இருக்குமா? இப்படியொரு  பேச்சுவார்த்தையைத்தான் நாம் தேவை தேவை என்று சொல்லிக் கொண்டிருந்தோம் என்று  கூறி இருக்கின்றது. கல்யாண அமர்க்களமும் விருந்தினர் அமர்க்களமும் நன்றாகத்தான் இருக்கிறது. மாப்பிள்ளை பெண் கழுத்தில் தாலி கட்டவும் போகிறார். விவாகரத்தில் முடியாமல், இந்தக் “குடும்ப” உறவு  தழைக்கும் என்றால் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! அவர்களுக்குப் பிறக்கும் புத்தாண்டு ஒரு விடியலைக் கொண்டு வரட்டும்.

13.01.2017

 

 

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *