மின்னல்வேக சிறுத்தைகள்(5)….அறிந்த மிருகம் அறியாத கதை

மின்னல்வேக சிறுத்தைகள்(5)….அறிந்த மிருகம் அறியாத கதை

15 views
0

அளவில் பெரிய வங்காளப் புலிகளும் சைபீரியப் புலிகள் உங்களை இதுவரையில் மிரட்டின. இப்பொழுது மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறார் சிறுத்தையார்!

ஒரு காலத்தில் சிங்கப்பூர், குவெத், சிரியா, லிபியா,ரியூனிசியா என்று உலக நாடுகள் பலவற்றில் பரவலாகக் காணப்பட்ட சிறுத்தைகளின் தொகையில் 75 வீதம் அழிந்து, இப்பொழுது 25 வீதமான தொகை இலங்கை உட்பட ஆசியாவின் சில பிராந்தியங்களிலும், ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.

ஏனைய இனப் புலிகளோடு ஒப்பிடும்போது, குட்டையான கால்களும், நீண்ட உடலும், பெரிய மண்டையோடும் கொண்டதுதான் இந்தச் சிறுத்தைகள்.  இதனுடைய உரோமத்தில் சிறிய ரோஜா போன்ற புள்ளிகள் பரவலாக இருக்கும்.  ‘ஜவுகர்‘ என்று அழைக்கப்படும் இன்னொரு இனப் புலிக்கும், சிறுத்தைப் புலிக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் சிறுத்தையின் உடம்பு அளவில் சற்று சிறியதாகவும்,, உடல் எடை குறைந்தும் இருக்கும். இதன் உடலில் காணப்படும் ரோஜா போன்ற புள்ளிகள் அளவில் சிறியதாகவும், தொகையில் ஜவுகர் புலிகளை விட அடர்த்தியானதாகவும் இருக்கும் . இவையே கறுப்பு நிறத்தில் காணப்படும்போது Panther-அதாவது கரும்புலி என்று அழைக்கப்படுகின்றன.

இவை நல்ல பலசாலிகள். தாம் வேட்டையாடிய மானை தாடையில் கவ்விக் கொண்டு, அணில் போல வேகமாக மரத்தில் ஏறி , இரையோடு கிளையொன்றில் உட்காருவது என்பது இந்த மிருகத்தால்தான் முடியும். கிளைக்கு கிளைக்கு வெகு இலாவகமாக தாவ முடிந்த இந்தச் சிறுத்தைகள், உயரமான மரத்தில் உட்கார்ந்தபடி, கீழே புல் மேயும் மான்களை நோட்டமிடும். தக்க தருணத்தில்  மேலிருந்து பாய்ந்து  தன் இரையைக் குரல்வளையில் பிடித்து கொன்று, பக்கத்தில் உள்ள பற்றைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

ஒலிம்பிக் போட்டிகளில் இதைப் பங்குபற்ற விட்டால், தங்கப் பதக்கங்களை அடுக்கடுக்காக வாங்கி தன் ‘வீட்டை‘ நிறைத்து விடும் ஒரு சிறுத்தை இனம் இருக்கின்றது. . அந்த அளவுக்கு வேகமாக ஒடக்கூடியது இந்த வனவிலங்கு.  மிகக் குறுகிய நேரத்தில் படு வேகமாக ஒடக்கூடிய திறனை, நீண்ட கால்களையும், , நீண்ட உடல்வாகையும் கொண்ட சீற்றா என்னும் சிறுத்தை இனம் கொண்டுள்ளது. ஒரு சொற்ப நேரத்திற்கு மணிக்கு, 110-120 கிலோ மீற்றர் வேகத்தில் இவற்றால் ஒட முடியும்.20 தொடக்கம் 60 வினாடி காலமே இந்த வேகம் நிலைக்கும் என்பதால், இவை பாதித்தொகை இரைகளை தமது வேட்டைகளில் இழந்து விடுகின்றன.

இவை அதிகேமாக ஒடும்போது, இவை செல்ல வேண்டிய திசைக்கு உடலைத் திருப்பும் பணியை இவற்றின் வால்களே செய்து முடிக்கின்றன. இவற்றின் வால்கள் ஒரு படகின் சுக்கானைப் போல செயற்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 1900ம் ஆண்டு 100,000க்கு மேற்பட்ட சீற்றாக்கள் இருந்துள்ளன. இன்று 9000 தொடக்கம் 12.000 வரையில்தான எஞ்சியிருக்கின்றன. பெரும்பான்மையான மிருகங்கள் ஆபிரிக்க காடுகளில்தான் உள்ளன.

சீற்றா, ‘லெப்பேர்ட்‘, ‘ஜவுகர்‘ என்று காணப்படும் மூன்று சிறுத்தை இனங்களும் உரோமத்தில் ரோஜா போன்ற கறுத்த புள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் புள்ளிகள் தோற்றத்தில் வேறுபட்டவை. வட்டமான கறுத்த புள்ளிகளைக் கொண்டதுதான் சீற்றா. றொசெற் என்று அழைக்கப்படும் பூப்போன்ற புள்ளிகளைக் கொண்டதுதான் லெப்பேர்ட். ஆனால் ஜவுகர் இனத்தின் ‘றோசெற்கள்‘ அளவில் பெரியதாக உடம்பின் மையப் பகுதியில் காணப்படும்.

இந்த ஜவுகர், லெப்பேர்ட் ஆகிய இரு இனப்புலிகளையும் ஒப்பீடு செய்த்தில், ஜவுகரின் உடல் கூடிய தசைப் பிடிப்பு கொண்டதாக இருப்பதோடு அகலமான தலையும், பலமான தாடையும் கொண்டதாகவும் இருக்கின்றது. இரண்டுமே மிக நன்றாக நீந்தக் கூடியன. என்றாலும், ஜாவுகருக்குத்தான் தண்ணீரில் அதிக நேரம் செலவிட ஆசை இருக்கின்றது. தன்னை விட உருவத்தில் பெரிய மிருகம் நேரில் வந்தால், லெப்பேர்ட்ஸ் எனப்படும் சிறுத்தைகள் ஆளை விடு சாமி என்று ஒதுங்கி விடும் சுபாவம் உடையவை. ஆனால் ஜாவுகர் இனம், அப்படியெல்லாம் அடிபணிந்து விடாத பெரிய சண்டைக்காரன்.

இந்தச் சிறுத்தைகள் ஆபிரிக்க, சிறுத்தைகள், இந்திய சிறுத்தைகள், ஜாவாச் சிறுத்தைகள், வட சீனச் சிறுத்தைகள், அரேபியச் சிறுத்தைகள், அமுர் சிறுத்தைகள்,  சிறீலங்கா சிறுத்தைகள் என்று பிரிக்கப்படுகின்றன.  இவற்றுள் அரேபியச் சிறுத்தைதான் அளவில் மிகச் சிறியது என்கிறார்கள். வளர்ந்த ஒரு பெண்புலியின் எடை 18 கிலோ மாத்திரமே!

சிங்கத்தைப் போல, இரவில்தான் இவர்களது நடமாட்டம் அதிகம். பொதுவாக அந்தி மாலையிலிருந்து விடிகாலைவரை இவர்களது நடமாட்டம் அதிகமாக இருக்கும். தமது வேட்டைக்காக 75 கிலோ மீற்றர்வரை நடப்பது இவற்றின் இயல்பு. இவற்றின் சராசரி ஓட்ட வேகம் மணிக்கு 58கி.மீற்றர் . ஒரு பாய்ச்சலில் 6 மீற்றர்  து ரத்தை இவை கடக்கும் வல்லமை கொண்டுள்ளன.

ஆபிரிக்காவின் நைல் நதி முதலைகளுக்கு, இந்தச் சிறுத்தைகள் சமயா சமயங்களில் இரையாகி விடுவதுண்டு. சில சமயங்களில் சிங்கங்கள் மரத்தில் ஏறி, இவற்றின் இரையைத் தட்டிப் பறித்து கொண்டு சென்றுவிடுகின்றன. அதே சமயம் சிங்கக் குட்டிகளை, சிறுத்தைகள் கொல்லும் சம்பவமும் இடம்பெறுகின்றது. பர்மாவின் மலைப் பாம்புகள் சிறுத்தைகளை விழுங்கி விடும் நிகழ்வும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. பபூன் எனப்படும் குரங்கினங்களை இவை பிடித்துண்பது வழமை. ஆனால் இதே குரங்குகள் இளம் சிறுத்தையைக் கொன்று உண்ட சம்பவம், ஆபிரிக்க காடுகளில் நிகழ்ந்துள்ளது.

சிறிய மிருகங்களைக் கொன்றால், இவற்றை முழுமையாக சிறுத்தைகள் உண்டுவிடும். ஆனால் அளவில் பெரிதாக இருந்தால், பலநு று மைல் து ரத்திற்கு இரை  இதன் வாயால் இழுத்துச் செல்லப்படும். ஒரு தடவை 125 கிலோ எடை கொண்ட இளம் ஒட்டகச் சிவிங்கி ஒன்றை 5.7 மீற்றர் துரத்துக்கு இழுத்துச் சென்று, பின்பு அதை ஒரு மரக்கிளை வரை கொண்டு சென்ற சம்பவம் பலரையும் அதிசயப்பட வைத்திருக்கின்றது.

 

இப்படி இப்படியாக புலிகளின் கதைகள் நீள்கின்றன. இவற்றின் சாகசங்கள் விரிகின்றன…

அடுத்த வாரம்

வந்தனவே வரிக்குதிரைகள்……..

03.01.18

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *