இருபதில் இருக்கின்றது இளமைச் சுகம்

இருபதில் இருக்கின்றது இளமைச் சுகம்

5 views
0

பொதுவாகவே தேசிய வீரர்கள் தினம், மதப் பெருநாட்கள், சுதந்திர தினம், என்பதை நினைவுகூர, உலக நாடுகள் பொதுவிடுமுறை தினங்களைப் பிரகடனப்படுத்துகின்றன. இந்த நாட்கள் தொகை , மதரீதியாக எண்ணுக்கணக்கில், தொகையில் வேறுபடுகின்றன.

ஜனவரி பிறந்ததும் பொங்கல் பட்டென நமக்கு நினைவுக்கு வந்து விடும். ஆனால் ஜப்பானிலோ இந்த ஜனவரி மாதம் “வயதுக்கு வருபவர்களுக்கு”  ஒரு பொது விடுமுறை தினத்தையும்  இழுத்துவருகின்றது

ஜனவரி மாதத்தின் இரண்டாவது திங்களே இந்த விடுமறை தினமாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இளவட்டங்கள் இருபது வயதை எட்டுவது, நாடளாவிய ரீதியாக கோலாகலமாக் கொண்டாடப்படுகின்றது. 1948இலிருந்தே இந்த நாள் பொதுவிடுமறை தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சரித்திர சான்றிதழ்களின்படி, இது நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. அந்தக் காலத்தில், அதிக எடைகொண்ட அரிசி மூட்டைகளை தோளில் சுமந்து, தமது பலத்தை ஆண்கள் வெளிக்காட்ட வேண்டியிருந்தது. பெண்களோ தமது தையல் வித்தைகள் மூலம் தம்மை வெளிப்படுத்தி இருந்தார்கள். .“ஜென்பக்கு”  என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் சடங்கு சம்பந்தப்பட்ட இந்த வயதுக்கு வரும் விடயத்தில், அவரவர் உடல் திறமையை வெளிக்காட்ட வேண்டியிருந்துள்ளது.

முன்பெல்லாம் வயதுக்கு வரும்போதுதான் இந்தச் சடங்குகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுதோ அரசு, 20 என்ற ஒரு கணக்கை நிர்ணயித்துள்ளது.  ஒரு கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கோஅல்லது ஒரு அலைபேசி வாங்குவதற்கான ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கோ 20வயது வந்தால்தான், இளவட்டங்களுக்கு இது சாத்தியப்படும். அத்துடன் மதுபானம் அருந்தவும், சிசரெட் புகைக்கவும் சட்டரீதியான அனுமதியை இந்த ”இருபதே” வழங்குகின்றது.

இந்த நாளில் இருபது வயதை எட்டிய  இளவட்டங்கள் இங்குள்ள நகரசபை அதிகாரிகள் முன்னால் ஒன்றுகூடும் வழமை இந்த நாளில் இருக்கின்றது. இந்த இளசுகளின் பொறுப்புகள் பற்றி, இங்கு உரையாற்றப்படுகின்றது. இதன் பின்னர் இவர்கள் குடும்ப அங்கத்தினரோடு வழிபாட்டு ஸ்தலங்களுக்குச் சென்று தமது வாழ்வின் வெற்றிக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் வழிபடுகிறார்கள். ஆனால் இதைத் தொடர்ந்து இவர்கள் கலந்து கொள்ளும் கொண்டாட்டம், “கலாச்சாரச் சீரழிவுக்கு” வழிவகுக்குமோ என்ற பயத்தை பெரியவர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. இளஞ் சந்ததியினர் மதுபோதையின் மயக்கத்தில் இருப்பதும், தலைமுடிக்கு நிறமூட்டி, தேவையற்ற மோதல்களில் ஈடுபடுவதும் மூத்தோரை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி வருகின்றது.

அதே சமயம் வெகுவேகமாக மூப்படைந்து வரும், ஜப்பான் , 1970இல் இருந்த தொகையை விட பாதித் தொகை அளவினரையே இந்தத் தடவை இளமட்டங்களாகக் கண்டுள்ளது. .இந்த வருடத் தொகை 1.23 மில்லியன் மாத்திரந்தான். இளவட்டங்களுக்கு பஞ்சநிலை இங்கே! சிக்கலான நிலைதான் இங்கே!

15.01

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *