குப்பையாகும் குடாநாடு

குப்பையாகும் குடாநாடு

9 views
0

எப்படியோ இருந்த யாழ்ப்பாணம் எப்படியோ மாறிவிட்டது. எப்பொழுதுமே ஜனப்புழக்கத்தோடும், புதிய புதிய கடைகளோடும் இருந்த யாழ் சந்தை , அரிய பல நுால்களுடன் இருந்த யாழ் நுாலகம், யாழ் மண்ணுக்கு ஒரு முத்திரை தந்த யாழ்தேவி ரயில் சேவை, நல்ல செய்திகளைத் தந்த ‘ஈழநாடு‘ பத்திரிகை, சிாிப்போடு சிந்தனையையும் மக்களுக்குக் கொடுத்த ‘சிரித்திரன்‘, யாழ் மக்களை மகிழ்வித்த இணுவில் ‘மில்க் வைற்‘சோப், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த கே.கே.எஸ். சீமெந்துத்தொழிற்சாலை, பரந்தனின் இரசாயணத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் என்று வரிசையாக தொழிற்சாலைகள்…

ஜே ஜே என்றிருந்த யாழ் குடாநாட்டின் முகம்மாறிவிட்டது. கோரப்படுத்தப்பட்டு விட்டது. தமிழர்கள் , சிங்கள அரசினால் உதாசீனப்படுத்தப்படுவது நீள நீள, ஆயுதப் போராட்டம் வெடித்தது. யாழ்குடா நாடு சிதைந்தது..பெருமை தந்தவை எல்லாமே பேரழிவைக் கண்டன. விலைமதிக்க முடியாத தமிழ் உயிர்கள் பலவற்றைப் பறிகொடுத்தோம்.
இதெல்லாம் பழைய கதை.

கொழுகொம்புகளை பிடித்துக் கொண்டு, உயிரை விட்டுக்கொண்டிருந்த குடாநாடு, மெல்ல மெல்ல கொடிபரப்பி இலேசாக வளர ஆரம்பித்திருக்கின்றது. செடி கருகவில்லை என்ற ஒரு மன ஆறுதலேயொழிய, இது ஆனந்தப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சியல்ல.
இந்தச் சிறு வளர்ச்சியைச் சாக்காக வைத்துக் கொண்டு, யாழ் குடா மண்ணில் பௌத்தம் திணிக்கப்படுகின்றது. காணிகள் இராணுவத்தினரால் ஆக்ரமிக்கப்படுகின்றன.
போதை வஸ்து புழக்கம் என்றும் இல்லாதவாறு மூக்கை நுழைத்து, நம் மண்ணில் பெரு விருட்சமாக வளரத் துடிக்கிறது. கொடிகட்டிப் பறந்த கல்வித் தரம் தலைகுப்பற விழுந்து கிடக்கின்றது.

இந்தக் ‘குப்பைகளோடு குப்பையாக ‘கழிவுகளும் யாழ் மண்ணை நிறைத்து தலையிடி தரும் விவகாரமாக மாறியிருக்கின்றது.
சமீப காலத்தில் பத்திரிகைகளில் பெரிதாக அடிபட்ட செய்தி கல்லுண்டாய் கழிவுகள் பற்றிய செய்திதான்!
யாழ் மாநகர சபையால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் யாழ், காரைநகர் வீதி, கல்லுண்டாய்ப் பகுதியில் கொட்டப்பட்டு வந்ததை , பொதுமக்கள் விசனத்தோடு கவனித்தனர். வெறும் கழிவுகள் மாத்திரமல்ல மலக்கழிவுகளையும் இங்கேதான் கொட்டினார்கள். யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளும், அதே இடத்தில்தான் கொட்டப்பட்டன.

கற்பனை செய்து பார்க்கவே சிரமமாக இருக்கின்றது. இத்தனை மோசமான கழிவுகள் ஒரு இடத்தில் கொட்டப்படும்போது, இந்தப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழ்பவர்கள் எப்படியான தாக்கத்திற்கு உள்ளாவார்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
இந்தக் குப்பைகளில் இருந்து வெளிக்கிளம்பும் இயற்கை உயிரியல் வாயுவின் அதிகரி்ப்பால், இந்தக் கழிவுகள் தானாகவே தீப்பிடித்து, பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கி வந்தன. சில சமயங்களில் மாநகர சபை ஊழியர்களே , இந்தக் குப்பைகளுக்கு தீ வைத்தார்கள்.
இதனால் பெரிதும் பாதிக்கப்ட்டவர்கள் இந்தப் பிராந்தியச் சூழலிலுள்ள நவாலி, அராலி, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள்தான்! இவை எரியும் போது எழும் புகைமண்டலம், பொதுமக்களை எந்த அளவுக்கு அசௌகரியத்துக்கு உட்படுத்துகிறது என்பது சொல்லாமலே புரியும்.

இரண்டு வருடங்களாக இழுபட்ட இந்தக் குப்பை விவகாரம், இப்பொழுது ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கின்றது. மல்லாகம் நீதவான் அண்மையில் அளித்த தீர்ப்பில் , இனிமேல் இங்கு குப்பைகளைக் கொட்ட முடியாது என்று தடையுத்தரவு பிறப்பித்திருப்பது, இந்த ஆண்டு, யாழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
கல்லுண்டாய் குப்பை மேட்டைச் சூழ, 3 மாதததிற்குள் ஒரு வேலி எழுப்பப்பட வேண்டும் என்ற கடுமையான உத்தரவு பிறபபித்து்ளது நீதிமன்றம்! இனிமேல் மலக்கழிவுகள் எதையுமே இங்கு கொட்ட முடியாது. குப்பைகளை எரிக்கவும் முடியாது. பிளாஸ்டிக் கழிவுகள் உரிய முறையில் முகாமை செய்யப்பட வேண்டும்.
அப்பாடா ஒரு பிரச்சினை தீர்ந்தது என்கிறீர்களா?
நீங்களே சொல்லி விட்டீர்களே. ஒரு பிரச்சினைதானே தீர்ந்திருக்கின்றது?
யாழ் குடாப் பிராந்தியமெங்கும் இந்தக் கழிவுப் பிரச்சினை எப்பொழுது தீரப்போகின்றது? இதில் அதிகாாிகளை மட்டுமே குற்றஞ்சாட்டுவதிலும் அர்த்தமில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் மிகமிக அவசியமாகின்றது.
ஒத்துழைப்பு கிடைக்கிறதா? இல்லையே? தங்கள் தங்கள் வசதிக்கேற்ப பிற வீடுகளின் மதில் பக்கமாக மூட்டையாகக் கொண்டுவரும் தமது கழிவுகளைஎறிந்து விட்டு போய்விடுகிறார்கள். தமது வீட்டைத் துப்பரவு செய்வதாக நினைத்துக் கொண்டு, வீட்டிலிருந்து குப்பை மூட்டையைக் காவி வந்து, இன்னொரு வீட்டு மதிலருகே எறிந்து அதைக் குப்பையாக்கி விட்டு, நைஸாக நழுவும் இந்தக் குப்பையர்கள் இருக்கும் வரை, எப்படி இந்தக் குப்பைப் பிரச்சினை தீரும்?
இவர்கள் எறிந்து விட்டுச் செல்லும் மூட்டைகளை தெருநாய்கள் துவம்சம் செய்ய , அது வீதியெங்கும் பரவ, அடடா அது கண்கொள்ளாக் காடசியாகி விடும். உடுவிலுள்ள வலி தெற்கு பிரதேச செயலகத்தை எதிர்த்தாற்போல உள்ள முடக்கைப் பாருங்கள். அதாவது மதவடி என்று சொல்லலாம். அழகாகப் போடப்பட்ட கார்ப்பெட் ரோட்டில் இந்தக் குப்பைகள் கிடக்கும் இலட்சணம், தலைமுடியை பிடித்து, எங்காவது பாழுங் கிணற்றில் இந்தப் பாவிகளைத் துாக்கி எறிந்து விடலாமா என்ற கோபமே தலைக்கேறும்.

யாழ் பேருந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை கண்டும் காணணாதது போல் செயற்படும் மாநகரசபை, ஏன் கழிவுகளை முறையாக அகற்றவதில்லை என்று பொதுமக்களும், வியாபாரிகளும், பெரிதாகக் கவலைப்பட்டார்கள்.
டெங்கு நோய் பரவுகிறது பரவுகிறது என்று கூச்சலிடுகிறார்களே. பொது இடங்களில் குப்பைகளை ஒழுங்காக அகற்றினால், இந்தக் குப்பைகள் வளர்க்கும் செல்லப் பிள்ளைகளான நுளம்புகள் குறையலாமல்லவா?

ஆங்காங்கே காண்ப்படும் கழிவு வாய்க்கால் வடிகாலுக்குள் குப்பைக்கழிவுகள் போடப்படுவதால் கழிவு நீர் தேங்கி விடுகிறது. பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்றன எறியப்படுவதால், இது நுளம்புகளின் ஆடம்பர பங்காளாவாக மாறி விடுகின்றது.
கடந்த வருடம் கொழும்பின் மீதேட்டமுல்ல குப்பை மேடு சரிந்து 26 அப்பாவிகளின் உயிர்ககளைப் பறித்தது நாடறிந்த கதை! குப்பைகளுள் உருவாகும் அளவுக்கு மீறிய மீதேன் வாயுவே,குப்பைகளை எரிய வைக்கின்றது. அதிகரித்த வெப்பமும், இந்த வாயுவும் சேர்ந்தே குப்பைகளை எரிய வைக்கின்றன. எப்படியோ இன்று நீதிமன்றம் தலையிட்டு, கல்லுண்டாய் குப்பை விவகாரத்தை ‘முடித்திருப்பதால்‘ அனாவசிய உயிர்ப்பலிகள் தெற்கைப் போல. வடக்கிலும் தொடராது தடு்ககப்பட்டிருப்பது, மனதிற்கு ஒரு பெரிய ஆறுதலைத் தருகின்றது.

பருத்தித்துறை நகர எல்லைக்குள் வடிகாலினுள் கழிவு வீசுவோர்மீது இனி சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபைச் செயலாளர் சமீபத்தில் எச்சரித்திரு்ககிறார். தொடர்ந்தும் வீட்டுக் கழிவு நீர் வடிகாலினுள் சேர்க்கப்பட்டு வருவதே இதற்கான காரணம். சட்டங்களுக்கு அமைவாக வீட்டுக் கழிவு நீரை நிலக்கீழ் நீர்த்தொட்டிகளில் சேகரித்து அந்த நீரினை நிலத்தினுள் சேகரிப்பதன் மூலமாக, நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும் என்று சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே பல நுாற்றாண்டுகளுக்கு மு்னனால் அமைக்கப் பெற்ற மழைநீர் வடிகாலின் நீர்மட்டத்தினை விட கடல்நீர் மட்டம் உயர்ந்து செல்வதனால், மழைநீர் கடலுக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது வீட்டுக் கழிவு நீரும் ஏனைய காலங்களில் இந்த வாய்க்காலில் சேர்வதால் அவை கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. கடல்நீர் மட்ட உயர்வு ஏற்படும்போது கடல் அலைகளினால் அடிக்கப்பட்டு உருவாகும் மண் திடல்கள் , மழைநீர் வடிகாலின் வாய்ப் பகுதியை மூடிக் கொள்கின்றன. அதனால் வீட்டுக் கழிவு நீரானது மழை வடிகாலில் தேங்கிக் காணப்படுகின்றது. கடல் நீர் மட்டம் குறைவடையும்போது மட்டுமே அந்த மண் திடல்கள் வெட்டப்பட்டு கழிவு நீரை அகற்றக்கூடியதாக இருக்கும்.

ஆளை ஆள் சட்டையைப் பிடித்திழுத்து, எட்டி உதைத்து, நீ திருடன் என்று கூச்சலிட்டு, பாராளமன்றத்துக்குள் ‘குப்பை ஆட்சி‘ நடாத்தும் இந்த அரசியல்வாதிகள், நாடெங்கிலும் உள்ள குப்பை விவகாரங்களுக்கு ஒரு முடிவு கட்டுவார்கள் என்று நம்பலாமா? நம்பத்தான் முடியுமா?
19.01

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *