நாட்டு வைத்தியம் தெரிந்த  காட்டுக் குரங்குகள்

நாட்டு வைத்தியம் தெரிந்த காட்டுக் குரங்குகள்

12 views
0

 

காட்டு விலங்குகளின் வாழ்க்கையை நுணுக்கமாக நோக்கும்போது, பல வியப்பூட்டும் விந்தைகளை நாம் கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மனிதரின் மூதாதையர் என்ற சொல்லப்படும் குரங்குகள் செய்யும் சேஷ்டைகள் பல சுவாரஸ்ஸியமானவை. மேலும் மேலும் அறிய வைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை.

இந்தோனேசியக் காடுகளின் மிகப் பிரபல்யமான மனிதக் குரங்கான ஒராங் உட்டானுக்கு நாட்டு வைத்தியமும் தெரியும் என்று கண்டறிந்துள்ளார்கள். எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோவுகளுக்கு, நாட்டு வைத்தியர் ”நோவெண்ணெய்” கொடுப்பது வழக்கமல்லவா? சில தாவரங்களை வாய்க்குள் வைத்து மென்று குதப்பி, நுரையாக்கி அதனை உடல் வலியுள்ள இடங்களில் பூசுவதை, ஆய்வாளர்கள் படமாக்கி உள்ளார்கள்.

இந்தோனேசியாவின் போர்னியோக் காடுகளில் இந்த நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. அதிலும் 20,000 மணி நேரப் படப்பிடிப்பில் ஓர் அரிய நிகழ்வாக இது சிக்கியிருக்கின்றது. தாவரங்களை நுரையாக்கி விட்டு , உடல் வலிக்கு நிவாரணியாக, கால்கள், புஜங்களில் 15 தொடக்கம் 45 நிமிடங்கள் இந்த நுரையைத் தேய்த்துள்ளன இந்த மனிதக் குரங்குகள்! வாய்க்குள் வைத்து குதப்பிய எந்த இலைகளையும் விழுங்காது, நுரையாக்கிய முடிவில்,  அவற்றை இவை துப்பிவிடுவதும் அறியப்பட்டுள்ளது.

இந்தத் தாவர இலைகள் , விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்குப் பின்னர் உடல் வலிக்கு நிவாரணமளிக்கும் இலைகளென உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இலைகளைக் குதப்பி நுரையாக்கி, உடம்பில் பூசும் நிகழ்வொன்று முதற்தடவையாக இப்பொழுது படமாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொரில்லா, சிம்பன்சி இனக் குரங்குகள், இலைகளை மென்று, அவற்றின்  கசப்பான சாற்றை அருந்தி தமது நோய்க்கு நிவாரணம் தேடிக் கொள்வது முன்பே அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்களைப் போல் நாட்டு வைத்தியர்களாக மாறும் திறன் ஒராங் உட்டான் இனக் குரங்களிடம் மாத்திரமே இருக்கின்றன. இந்த “மிருக வைத்தியர்” பற்றி சில வரிகள். இந்தோனேசியாவின் போர்னியோ, சுமத்திரா தீவுகளில் மாத்திரமே இந்தக் காட்டு விலங்குகள் காணப்படுகின்றன. மலேசியக் காடுகளிலேயே ஆரம்பத்தில் ஏராளமாகக் காணப்பட்டுள்ள இந்த ஒராங் உட்டான் என்பது ஒரு மலேசிய மொழிச் சொல்லாகும். “காட்டு மனிதன்” என்பது இதன் பொருள்!

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *