அறிந்த மிருகம் அறியாத கதை(7) கரடிகள் சொல்லும் கதை.

அறிந்த மிருகம் அறியாத கதை(7) கரடிகள் சொல்லும் கதை.

18 views
0

கரடியாய் கத்தியும் பயனொன்றும் இல்லையே

இந்தப் பழமொழி உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? இந்தப் பழமொழி நமக்குச் சொல்லும் பாடந்தான் என்ன? அதைச் சொல்வதற்கு முன்பு, ஆக்ரோஸமான இந்தக் காட்டு விலங்கைப் பற்றி, நமக்குத் தெரியாத கதைகளை அறிவோம்.

மாமிசமும் உண்ணும் மாம்பழமும் உண்ணும் ஒரு முலையூட்டி இது. இது மாமிச பட்சணி மாத்திரமல்ல தாவர பட்சணியும் கூட! இதற்கு முதுகெலும்பு உண்டு, உடல் முழுவதும் உரோமம் உண்டு. சூடான குருதி இதன் உடலில் ஓடுகின்றது. தனது குட்டிகளுக்கு பாலுாட்டுகிறது. எனவே இதுவும் ஒரு முலையூட்டிதான்!

பொதுவாகக் கூச்ச சுபாவமுடைய கரடிகள், எப்பொழுதும் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று ஒதுங்கி இருக்க விரும்பும் விலங்குகள். இவைகள் அச்சுறுத்தப்படும்போதுதான், ஆக்ரோஸமாகத் தாக்க முனைகின்றன. ஆசிய கண்டத்துக்குரிய கரடிகள், கறுப்புக் கரடிகள்,பிரவுண்,  கரடிகள், துருவப் பிரதேசக் கரடிகள், ஸ்லொத் என்று அழைக்கப்படும் கரடிகள் என்று பல இனங்கள் காணப்படுகின்றன.  இந்த பிரவுண் கரடிகளில், கிறிஸ்லி,கோடியாக் கரடிகள் உள்ளடங்குகின்றன.

பனிக்கால உறக்கம்

விலங்குகளின் பனிக்கால உறக்கம் பற்றி அறிந்திருப்பீர்கள். அதிலும் கரடிகளின் பனிக்கால உறக்கம் வித்தியாசமானது். விசித்திரமானது. பொதுவாக ஏனைய விலங்குகள் பனிக்கால உறக்கத்தின் போது, எதையாவது சாப்பிடவோ அல்லது சிறுநீர் கழிக்கவோ கண்விழிப்பதுண்டு. ஆனால் நமது கரடியாரோ ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் குட்டி ஈனும்  நிலை வந்தாலொழிய, பனிகாலத்தில் தொடர்ந்து உறங்கும் சுபாவம் கொண்டவர்.. குளிர்கூடிய வடதுருவப்  பிராந்தியங்களில் வாழும் கரடிகள், 7 மாத காலங்கள் தமது ‘குகைகளில்‘ தொடர்ந்து துாங்குகின்றன என்பது  அதிசயமான விடயந்தான்.

சாப்பாட்டில் நுணுக்கம் இல்லை…

பனி நிலத்தை, நீரை மூடியிருக்கும் காலங்களில் உணவுத் தட்டு்ப்பாடும் அதிகம் என்பதால்,  கரடிகள் நீண்ட உறக்கத்தை பெரிதும் வரவேற்கின்றன.  இந்த  நீண்ட  துாக்கத்திலிருந்து விழிக்கும்போது, பெரும் பசியோடு தாயும், குட்டிகளும் எழுந்து உணவு வேட்டையை ஆரம்பிக்கின்றன.  நீண்ட துாக்கத்தை ,  நிறைய உண்ட பின்னரே  ஆரம்பிக்கின்றன.. இங்கே இன்னொரு சுவாரஸ்ஸியமான விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பனித்துாக்கம் ஆசிய நாட்டு கரடிகளுக்கு அவசியமற்றது. 12 மாதங்களும் இந்தக் கரடிகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் , இவை வழமையான இரவுத் துாக்கக்காரர்கள் மட்டுமே!

பொதுவாக மான் குட்டிகளைக் கொன்று உண்ணும் கரடிகள்,  கொல்லப்பட்டு உண்ணப்பட்டு எஞ்சிய மாமிசங்களை லிட்டு வைப்பதில்லை.. பனிப் பிரதேசங்களில், குளிரில் இறந்து, உறைந்து போய்க் கிடக்கும் மிருகங்களை  இவை ஆவலோடு உ்ணகின்றன.  நாய்கள் குப்பைகளைக் கிளறி உண்பது போல, இங்குள்ள கரடிகளும், குப்பைகளைக் கிளறி, கிடைப்பதை உண்டு பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.  ஆற்றோரம் வாழுகின்ற கரடிகள், சுவையான  சல்மன் மீனை உயிரோடு பிடித்து உண்கின்றன.  நல்ல புஸ்டியான உணவு, ஒரு சீஸனில் தாராளமாகக் கிடைப்பதால்,  இந்த உணவு இவை  அளவில் பெரிதாக வளர உதவுகின்றன.

துருவப் பிரதேசக் கரடிகள், இங்கு வாழும் சீல்கள் பனிப்பாளங்களின் அடியில் இருந்து கொண்டு சுவாசிக்க ஏற்படுத்தும் துவாரங்களின் அருகே பொறுமையோடு காத்து நிற்கும். அது சுவாசிக்க  துவாரத்துாடாக தலையை நீட்டும்போது, லபக்கென்று அதைப் பிடித்து விடும். நீண்ட துாக்கம் காரணமாக இழந்த கொழுப்பை மீண்டும் பெற சீல் மாமிசம் இதற்கு அவசியப்படுகிறது.

சீனாவின் மூங்கில் காடுகளில் வசிக்கும் பன்டா கரடிகள் பிரதானமாக உண்பது மூங்கில் தளிர்கள். ஒரு நாளில் இவை மொத்தமாக 13.5 எடைகொண்ட துளிர்களைச் சாப்பிடுகின்றன என்பது ஆச்சரியமான தகவல்!  இவை மாமிசம் சாப்பிடுவதில்லை என்று சொல்ல முடியாது. கொடுத்தால் உண்ணும்.

 

அசத்தலான மோப்ப சக்தி

கரடிகளுடைய மோப்பசக்தி அபாரம் என்பதோடு, கண்பார்வையும் அசத்தலானது. பழங்களை, கொட்டைகளை இனங்காண இதன் கண்பார்வையே உறுதுணை புரிகின்றது. பல மைல்களுக்கு அப்பாலுள்ள உணவையும், தன் மோப்பசக்தியால் கரடியால்  கண்டு கொள்ள முடிகின்றது.  புலி, சிங்கங்களைப் போல  ஏனைய கரடிகள் சிறுநீர் கழித்து தமது எல்லைகளை அமைத்து அடையாளம் செய்வதை, இது தன் மோப்ப சக்தி கொண்டு அறிந்து விடுகின்றது.

இணை தேடும் படலம்

பெண்ணை விட அளவில் பெரிதும், பலசாலிகளாகவும் உள்ள ஆண் கரடிகள் , பெண் கரடிகளை பிடித்து உண்டு விடும் என்பது ஒரு விசித்திரமான தகவல். ஒற்றையாகத் திரியும், ஆணுக்கு, ஒரு பெண் சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை. தன்னை விட அளவில் பெரிய ஆண்கரடியை, பெண் கரடி சட்டென நம்பிவிடாது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தன்னைப் பின்தொடரும் ஆணை எப்பொழுதுமே, ‘துாரத்தில்‘ வைத்துக் கொள்ளும். ஒரு குறி்ப்பிட்ட காலத்தின் பின்னர்தான், ஆண் தன்னை நெருங்க, பெண் அனுமதிக்கும்.  கூடல் முடிந்ததும், ஆண் கரடி ‘ என்னை விடு சாமி‘ என்று விலகிப் போய்விடும். தன் குட்டிகளையோ, காதலியையோ அது திரும்பவும் ஏறெடுத்துப் பார்க்க வருவதில்லை. வரிக்குதிரைகளின் கதைதான் இங்கேயும்!

வசதிக்கேற்ப குட்டி ஈனும்  நாள்

முட்டைகள் சினைப்படுவதை தள்ளிவைக்கும் உடல் அமைப்பு பன்டாஸ், பிறவுண்(மரநிற) கரடி இனங்களுக்கு உண்டு என்பது இன்னொரு அதிசயமான விடயம். பாதுகாப்பாக, சூடான இடத்தில்  குட்டிகள் இருக்க, தமது உறங்கு நிலை வரும்போது இவை குட்டிகளை ஈனுகின்றன.

பிறந்த குட்டி, ஒரு வரிக்குதிரையின் கு்ட்டி போல துள்ளி எழ முடியாத ஒன்று. இவைக்கு பற்கள் கிடையாது. கண் பார்வை இல்லை. காதும் கேட்காது.  இப்படியொரு ஆக்ரோஸமான மிருகத்தின் குட்டிகள்  பிறக்கும்போது உள்ள இயலாமையை நினைக்கும்போது பாவமாகத்தான் இருக்கின்றது. ஒரு பூனைக்குட்டியின் அளவில் இருக்கும் இவற்றின் சராசரி எடை 454 கிராம் மாத்திரமே! ஸ்லொத் கரடிகளை விட, மற்றைய இனக் கரடிகள் எல்லாம், தமது குட்டிகளைத் தலையில் வைத்து கொண்டே  பயணஞ் செய்கின்றன அல்லது உணவை வேட்டையாடுகின்றன.

கண்டிப்பான அம்மாக் கரடி

பிள்ளைகளை வளர்ப்பதில் அம்மாக் கரடி மிகவும் கண்டிப்பாக  இருப்பதுண்டு. உணவை வேட்டையாடக் கற்றுக் கொடுப்பதோடு, எப்படி உணவு தேடுவது என்பதையெல்லாம் தாய்க் கரடி குட்டிக் கரடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றது.  அத்து மீறினால் குட்டிகளுக்கு  முன்னங் கால்களால் ‘அறை‘ கொடுக்க அம்மா பின்வாங்குவதில்லை. ஒன்றரை அல்லது இரண்டு வயதாகியதும், நீ போய் தனியனாகப் பிழைத்துக் கொள் என்று அம்மா குட்டிகளை அனுப்பி விடுவதுண்டு. பின்பு மீண்டும் அது தன்னை இன்னொரு உறவுக்கு தயார்படுத்திக் கொள்ளும். மீண்டும் ஒரு ‘மைனர் மச்சான்‘ வந்து தன் ‘பணியை‘ முடித்து விட்டு, கம்பி நீட்டிவிடுவார்!

ஆசியக் கரடிகள்

ஆசியக் கரடிகள் எனப்படும் இனம் இமயமலைகறுப்புக் கரடி, திபெத் கறுப்புக் கரடி சந்திரக் கரடி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கரடிகளின் நெஞ்சில் ‘வை‘ போன்ற வடிவில் வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில் அடையாளம் இருக்கும். காதுகள் பெரிதாக இருப்பதோடு, பெரிய கண்களும், நீண்ட முடியும் உடலில் காணப்படும். இவை மரங்களில்‘கூடு‘களைக் கட்டி கிளைகளில் உறங்குவதை விரும்புகின்றன. இவற்றின் முதல் எதிரி மனிதர்கள்தான் என்கிறார்கள். பனி கொட்டும் கால்ஙகளில் சுள்ளிகளைப் பொறுக்கி தரையில் அடுக்கி, வசதியான ஒரு படுக்கையை தனக்கு தயாராக்கிக் கொள்கிறது.  தாவரங்கள், பழங்கள், பூச்சிகள், எஞ்சிக் கிடக்கும் மாமிசம் என்று பலதையும் இவை உண்ணும். மனிதர்கள்தான், குறிப்பாக விவசாயிகள்தான் இவற்றை கொன்று விடுவதால், இந்த இனம் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றது.

கறுப்புக் கரடிகள்

கறுப்புக் கரடிகள் என்ற பெயருக்கு பொருத்தமில்லாத இனம் இது. காரணம் இந்த இனக் கரடிகள் கறுப்பு, பிரவுண், சாம்பர், வெள்ளி நீலம், கிரீம் என்று பல நிறங்களில் காணப்படுகின்றன. கனடாவின் வடபகுதி,அலஸ்கா, மத்திய அமெரிக்கா, மெக்ஸிக்கோ-  இவை காணப்படும் காடுகள் உள்ள இடங்கள்.  சிறிய கண்கள், நீண்ட மூக்கு, வட்டமான காதுகள்.,குட்டையான வால்-இந்த இனத்துக்கு உரியவை!. கொடியாக் கரடி என்று அழைக்கப்படுவது இந்த ‘கறுப்புக் கரடிகளுக்குள்‘ மிகப் பெரிய உருவம் கொண்டவை. .

பிரவுண் கரடிகள்

இந்த நிறக் கரடிகள், உலகெங்கும் பரந்திருப்பதுஇவற்றின் சிறப்பு.  கனடாவின்  மலை மீதுள்ள அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள், புற்றரைகள், மத்திய அமெரிக்கா, அமெரி்க்கா, ஐரோப்பா, ஆசியா என்று எங்கும் நிறைந்திருப்பவர் இவர். தோளில் ஏரி இருப்பது, இந்த இனத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

 

பன்டா கரடிகள்

சீனாவில்தான் இவற்றைக் காணமுடியும். சுமாராக 1000 பன்டாக்களே எஞ்சியிருக்கின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். ஆனால் ஒன்றை மட்டும் கவனமெடுத்து ஜாக்கிரதையாக வளர்க்கும். இரண்டாவது ஒழுங்கற்ற பராமரிப்பினால் இறந்துவிடும். ஒரு வயது வந்ததும் குட்டி தானாகவே தன் வாழக்கையைத் தொடரும்.

துருவக் கரடிகள்

தரையில்  காணப்படும் இரை பிடித்துண்ணும் மிகப் பெரிய வில்ஙகினம் என்றால் அது துருவக் கரடிதான்!  ஆர்க்டிக் பிராந்தியம், அலாஸ்கா,கனடா, ருஸ்யா, கிரீன்லாந்து, நோர்வே ஆகிய இடங்களில் இவற்றைக் காணமுடியும், இன்றைய நிலையில்25,000 தொடக்கம் 40,000 வரையில் இவை காணப்படுகின்றன. இந்த மிருகங்கள் உள்ள நாடுகள் வேட்டையைத் தடை செய்தோ அல்லது வேறு கட்டுப்பாட்டுவிதிகளை வைத்தோ , இந்த இனக் கரடிகள் அழிந்து போவதை தடுத்து வருகிறார்கள்.

பிறக்கும் போது மனிதக் குழந்தையை விட சிறிய அளவில் இருக்கும் குட்டிகள் , உணவு தாராளமாகக் கிடைத்தால், ஒரு வருடத்தில், ஒரு முழு மனித உயரத்திற்கு வளர்ந்து விடும்.  ஆண் கரடிகள் 10 அடி வரை உயர்ந்து வளர்வதோடு, எடை 1400 இறாத்தல்களைத் தொட்டுவிடும். இவை 25 வருடங்கள் வரை வாழக்கூடியன. இவற்றின் ஈரல்தான் இவற்றின் சிறப்பு. ஏனைய மிருகங்களை விட 10 மடங்கு அதிகமான விட்டமின் ஏ இவற்றின் ஈரலில் இருக்கின்றது. சீல் மிருகத்தை உண்ணும்போது கிடைக்கும் கொழுப்பிலிருந்து, இந்தச் சத்தைப் பெற ஈரலின் செயற்பாடு  இந்த துருவக் கரடிக்கு மிக மிக அவசியம்.

இனி ஆரம்பப் பழமொழிக்கு வருவோம்.

‘ கரடியாய் கத்தியும் பயனொன்றும் இல்லையே‘

கரடி பெரிதாகச் சத்தமிட்டே  மனிதனையும் மிருகங்களையும், நடுநடுங்கச் செய்து வெற்றிவாகை  சூடுகின்றது. சிங்கததின் கர்ஜனைக்கு அடுத்ததான  பயங்கரக் கர்ஜனை கரடியினுடையது என்றால் அது மிகையாகாது.  பெருங்குரல் எடுத்து கரடியாய் கத்தியும் பலன் கிடைக்கவில்லை என்பதையே இப் பழமொழி உணர்த்துகின்றது.

காட்டுக் கூச்சல் எப்பொழுதுமே வெற்றி  தருவதில்லை என்றும் சொல்லி விடலாம்..

மிருகங்களின் கதை தொடரும்…………

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *