யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சி…

 யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சி…

8 views
0

ஒன்பதாவது சர்வதேச வர்த்தகச் சந்தை யாழ்பாணத்தில், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் 26இல் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி, 28 வரை தொடர்ந்திருக்கின்றது.

அபிவிருத்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வட மாகாணத்தில், இப்படியொரு நிகழ்வு இடம்பெறுவது சிறப்புக்குரியதே. இந்த வளர்ச்சியை வெளிப்படுத்துவதுபோல, “வடக்கிற்கான நுழைவாயில்” என்று பெயரிட்டுள்ளார்கள். யாழ் மாநகர சபை மைதானத்திலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ் வர்த்தக சந்தையினை யாழ் மாநகர சபை, இலங்கை மாநாட்டுப் பணியகம், சர்வதேச வர்த்தக மன்றம், ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் யாழ் வர்த்தக மன்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ,Lanka Exhibition& Conference Service(Pvt) Ltd(LECS)  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ் இந்திய துணை துாதரகம், தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம், மற்றும் இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்றும் இந் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியுள்ளன.

இம்முறை நடைபெற்ற வர்த்தகச் சந்தையில் 300 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு தேவைகளை நிறைவேற்ற, உள்ளூர், வெளிநாட்டு காட்சிக்கூடங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தியாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட காட்சிக் கூடங்கள் பல வெறுமைாக இருந்ததை, பார்வையாளர்கள் மனறங்களில் ஒரு வெற்றுணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது தினம், இந்தக் கண்காடசியை நேரில் பார்க்க முடிந்தது. நுழைவுச் சீட்டை வாங்க முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றதைப் பார்த்தபோது, எம்ஜிஆர் படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்க்க பாம்பு போல நீளும் பார்வையாளர்கள் வரிசைதான் ஞாபகத்திற்கு வந்தது.  கடைசி தினமான ஞாயிறன்றும் திரளான ஜனக்கூட்டம் இங்கே அலைமோதியது. கட்டணம் 40 ரூபாய் மட்டுமே என்பதால் இவ்வளவு பார்வையாளர்கள் திரண்டார்களா அல்லது, பிரமாண்டமான அளவில் யாழ் மண்ணைச் சிறப்பிக்கும்  இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்தார்களா என்பது உள்ளே நுழைந்தபோது தெரிந்தது.

 

 

பல உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் களமாகவே இது அமைந்திருந்தது. தெற்கத்திய உற்பத்தியாளர்களின் ஆக்ரமிப்பே அதிகமாக இருந்தமை கவனிக்கத் தக்கது. உள்ளே நுழைந்தவர்கள் பல பொருட்களை ஆர்வத்துடன் வாங்கினார்கள். ஆனால் தங்கள் விற்பனையை முதல் நாளில் முடித்துக் கொண்டு, இரண்டாம் நாளில் தங்கள் காட்சிக் கூடங்களைக் காலிசெய்து விட்டது, கண்காட்சியகத்தில் ஒரு வெறுமையைத் தோற்றுவித்தது, ஏற்பாட்டாளர்கள் அசிரத்தை என்றே கொள்ளல் வேண்டும். கண்காட்சி ஒன்று இவ்வளவு பெரிய அளவில் மூன்ற நாட்கள் தொடரும்போது, அந்த மூன்று நாட்களும், காட்சிக் கூடங்கள் அனைத்தும் இயங்க வேண்டியது முக்கியமானதாகும். இறுதி நாளான ஞாயிறன்றும், பல காட்சிக்கூடங்கள் நேரத்தோடு இழுத்து மூடப்பட்டு விட்டது, இது பல பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். இது 10வது கண்காட்சியில் தவிர்க்கப்படுவது விரும்பத்தக்கது.

சுமாராக 1000 வரையிலான உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வந்திருந்தன. பொதுமக்கள் பலவற்றை தம் பாவனைக்காக வாங்கிச் செல்வதைக் காணமுடிந்தது. ஆனை விலை குதிரை விலையில் பொருட்களை விற்காமல், சந்தை விலைக்கும் குறைவாக பல பொருட்கள் விற்கப்பட்டமையால், மக்கள் பல பொருட்களை விரும்பி வாங்கியிருக்கின்றார்கள்.

இந்தக் கண்காட்சி வடக்கில் இடம்பெற்றாலும், தெற்கின் ஆதி்க்கம் நிறையவே இருந்துள்ளது. எஸ்லோன் சிறீலங்கா , மொபிரெல், சென் அன்டனிஸ், பிரவுன், சிட்டி சைக்கிள், கீல்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி, சிங்கர், சொப்ட்லொஜிக், ரொயாட்டோ சீமெந்து, போன்ற இராட்சத நிறுவனங்கள் உள்பட, பல நிறுசனங்கள் தெற்கிலிருந்து வந்து கலந்து கொண்டன. வடக்கின் நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, இது மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த திண்ணை  என்ற பெயரில் மூன்ற காட்சியகங்கள் நம்மவரால் திறந்து வைக்கப்பட்டமை பாராட்டுக்குரியதே! இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவுக்காக இயற்கை விவசாயத்தை நாடுபவர்கள், ஆர்வமுள்ளவர்கள் வடக்கில் அதிகரித்து வருகிறார்கள். இப்படியொரு நிலையில் இந்தப் பிரச்சாரம் வடக்கில் இயற்கை விவசாயத்தை பலர் பின்பற்ற வழிவகுக்கலாம் என்று நம்புகிறார்கள்.

யாழ் மாவட்ட  அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம், ரிக்கோ யாழ் நகர   ஹாட்டல்கள், கோபிநாதன் ஆடைகள், அன்டிரா பிரசுரங்கள், யாழ் கூட்டுறவுச் சங்கம், பனை அபிவிருத்தி சபை போன்றன யாழ் மண்ணின் சில குறிப்பிடத்தக்க உற்பத்தி  நிறுவனங்கள்

2010இல் ஜனித்தஇந்த சர்வதேசக் கண்காட்சிக்கு இப்பொழுது வயது ஒன்பதாகின்றது. 2016இல் 248 நிறுவனங்கள், 52,732 பார்வையாளர்களைக் கவர்ந்தது. அதுவே 2017இல் 60,000 பார்வையாளர்களாக மாறியிருக்கின்றது. கண்காட்சி நிலையங்களின் தொகை இந்த ஆண்டு  300ஐ எட்டிப் பிடித்து விட்டது. இந்த ஆண்டுக்குரிய பார்வையாளர்களின் தொகை நிச்சயம் 60,000ஐ தாண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

300 என்பது 600ஆக வேண்டும். நம் மண்ணின் புதுப்புது உற்பத்திகள் அறிமுகப்படுத்த வேண்டும். தமிழன் எவருக்கும் சளைத்தவனல்ல என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

01.02.18

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *