தொற்றா நோய்கள் தொலைக்கின்ற மனித உயிர்கள்

தொற்றா நோய்கள் தொலைக்கின்ற மனித உயிர்கள்

29 views
0

வந்துவிட்டது ஸ்கூட்டி!  போயே போய்விட்து பொடிநடை

“தொற்றா நோய் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதமாக உயர்ந்துள்ளது” – இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை.

அதென்ன தொற்றா நோய்கள் என்று கேட்கிறீர்களா?

நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய், புற்று நோய், ஆஸ்துமா மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்றனவே இந்தத் தொற்றா நோய்கள்!  இந்த நோய்களால்  பெருந்தொகையானவர்கள்  உயிரிழப்பதாக சுகாதர அமைச்சின்  விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாந்தி குணவர்த்தன இதே செய்தியில் தெரிவித்திருந்தார். மோசமான சுகாதாரப் பழக்கம், மற்றும் தவறான உணவு முறையே இதற்கான காரணம் என்று சுட்டிக் காட்டப்படுவதோடு, உடல் பருமன் அதிகரிப்பதும் அதிக நோய்களுக்குக் காரணம் என்பதை இவர் சொல்லிக்காட்டத் தவறவில்லை.

மருத்துவ உலகம், நோய்களை இரண்டாகப் பிரிக்கிறது. தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என்பனதான் அவை! இதயநோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தொற்றாத நோய்கள், தொற்றா நோய்கள். இந்நோய்கள் வரக் காரணம், நம் வாழ்க்கை முறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள். பாரம்பரியமான, பதற்றமற்ற, அன்பும், அரவணைப்பும், உடற்பயிற்சிகளும் சூழ்ந்த வாழ்க்கைமுறை , இன்று வேறுவிதமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் பதற்றம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. அவசரம், வாழ்க்கையைக் கவ்விக்கொண்டுவிட்டது. அலுவலகம் செல்பவர்கள் மட்டுமின்றி, வீட்டில் இருப்போரையும் பதற்றமும் பரபரப்பும் சூழ்ந்தே இருக்கின்றன. இந்தப் பதற்றமும் பரபரப்பும் உடல் இயக்கத்தைப் பாதிக்கின்றன. ‘மெட்டபாலிசம்‘ மாறுகிறது. அதனால் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களெல்லாம் வருகின்றன.

உடற்பயிற்சிகள் இன்று வெகுவாகக் குறைந்து விட்டன. காலங்காலமாக மிதிவண்டியில் சென்று பல மைல் துாரம் பயணித்தவர்களும், பொடி நடையில் சந்தை, கடை, கோவில்களுக்குச் சென்று வந்தவர்களும் இன்று நடையை மறந்து விட்டார்கள். வந்துவிட்டது ஸ்கூட்டி!  போயே போய்விட்டது பொடிநடை.!. ஐந்து வருடங்களுக்கு  முன்பு யாழ் வீதிகளை நிறைத்த மிதிவண்டிகளின் நெரிசலை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள். இன்று யாழ் குடாநாட்டின் கார்பெட் தெருக்களில் வரிசையாகச் செல்லும் வாகனங்களைக் கவனியுங்கள். எத்தனை பெரிய மாறுதல்! ஆண் பெண் வேறுபாடின்றி, வயது பேதமின்றி  ஸ்கூட்டர்களில் அனைவரும் சவாரி வருகிறார்கள். மிதிவண்டிகள் ‘தீண்டத்தகாதவையாகி‘ விட்டன..  மிதிவண்டிப் பயணம், பொடி நடை என்றிருந்த நம்மிடம் உடற்பயிற்சிகள்  ஒரேயடியாகப் பறிபோய்விட்டன. நடக்க நேரமும் இல்லை. மனமும் இல்லை…

தொற்றாநோய்களை நாம் பெரிதாகப் பட்டியலிடலாம்.

*   உடலுறுப்புகள் தேய்ந்து போவதால் அல்லது பழுதடைவதால் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் தொற்றா நோய்கள்  வாதநோய், மாரடைப்பு, காக்கை வலிப்பு, பாரிசவாயு, ஒற்றைத் தலைவலி, கண்புரை, புற்றுநோய்

*  உடலுக்குத் தீங்கு அல்லது தொல்லை தரும் பிறகாரணங்களால் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் நோய்கள் ஒவ்வாமை, ஆஸ்துமா, விஷம், பாம்புக்கடி, புகைபிடிப்பதால் விளையும் இருமல்,குடல்புண், குடிப்பழக்கம்

*  உடலுக்குத் தேவைப்படுபவனவற்றுள் ஏதாவது குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் அழைத்து வரும் வியாதிகள் ஊட்டக்குறை,ஊட்டக்குறை ஏற்பட்டு முடிவில் மூளைக் கோளாறில் கொண்டு விடும் சில நோய்கள்,இரத்தசோகை, கழுத்துக்கழலை

*  பிறவியிலிருந்தே இருக்கும் பிரச்சனைகளால் தோன்றும் நோய்கள்  பிளவுபட்ட மேலுதடு, மாறுகண்,  பிற ஊனங்கள், காக்காய் வலிப்பின் சில வகைகள், மனவளர்ச்சிக் குறைபாடு.

*  பிறவியிலிருந்தே உடலில் காணப்படும் சில அடையாளங்கள். மனநோய்கள், தீங்கு செய்யாதவற்றைத் தீங்கு செய்யுமென எண்ணிப் பீதியடைதல், பதற்றம்,  பில்லிசூனியத்தில் நம்பிக்கை, அளவுகடந்த பயம்

மொத்தத்தில் பார்த்தால் தொற்றா நோய்கள் என்ற பெயரில் நம்மை மிரட்டி உயிரை வாங்கும் நோய்கள் பற்பல! முன்பெல்லாம் தொற்று நோய்களைக் கண்டு மிரண்டோடினோம். இன்று டெங்கு ஜூரம் ஒரு மிரட்டலான ஆசாமியாக இருந்தாலும், தொற்றா நோய்களே அதிகமாக எம்மைப் பீதிக்கு உள்ளாக்கி வருகின்றன.

தொற்றா நோய்கள் காரணமாக உயிரிழப்பவர்கள்  தொகை அதிகரிப்பதாக இந்த வருட ஆரம்பத்தில் ஒரு இணையச் செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்தத் தடவை குரல் கொடுத்திருப்பவர் அட்டாளச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகார மருத்துவர்  கே.எம்.அஸ்லாம். இவர் ஆற்றிய உரையிலிருந்து, தொற்றா நோய்கள் பற்றி  விழிப்புணர்வூட்டும் திட்டங்கள் அரசால்  முன்னெடுக்கப்பட்டு வருவதை அறிய வரும்போது , மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. மனித உயிர்களைக் காவு கொள்ளும் இந்தப் பாரிய பிரச்சினையைத் தட்டிக் கழிக்காமல், இலங்கை அரசு 9 மாவட்டங்களில் தொற்றா நோய்கள் பற்றி  விழிப்பணர்வுத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது வரவேற்புக்குரியதே!

நம்மைக் கவலைப்பட வைக்கும் புள்ளிவிபரமும் இருக்கின்றது. அதாவது 2020ம் ஆண்டளவில், தற்போதுள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விடும்  என்பதுதான் இந்தத் தகவல்.

நீரிழிவு என்பது வளர்சிதை மாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி என்றும் அழைக்கப்படுகின்றது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந் நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவு குளுக்கோஸ் எனும் சர்க்கரை இருக்கும். ஆனால் நீரழிவு என்பது ஒரு நோயல்ல. இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் எனும் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கம் நாடிகளில் ஏற்படும் நோய், மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக்கூடிய ஆபத்தை அதிரிக்க வைக்கின்றது.

நீரிழிவு ஒரு நோய் இல்லை என்று சொல்லப்பட்டாலும், மரணத்தை ஏற்படுத்தும் வியாதிகளை அது கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

சரி இந்த நோய் உங்களுக்கு இருக்கிறதா என்பதற்கு அறிகுறிகள் என்ன?

1 தொடர்ச்சியான சலப்போக்கு

  1. அசாதாராண நாவரட்சி, தாகம்
  2. உச்ச அளவு களைப்பு அல்லது சக்தி இழப்பு
  3. தொடர்ச்சியான பசி
  4. பாதங்கள் எரிவதைப் போல் உணர்தல்
  5. ஆறாத காயங்கள்
  6. சாப்பிட்ட பின்பு மிகையான வியர்வை
  7. உடல் எடை இழத்தல்

 

இந்த எட்டில் ஒரு அறிகுறி இருந்தாலும் கவனித்துக் கொள்ளுங்கள்! வருமுன் காப்போனாய் இருப்பது சிறப்பல்லவா?

இந்தத் தொற்றா நோய்கள்,  மனித உயிர்களைப் பலியெடுப்பதைக் குறைப்பது என்பது எம் கைளில்தான் இருக்கின்றது. வாழ்க்கையில் எளிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வருடாந்த இறப்பு வீதத்தை 2 வீதமாகக் குறைத்து பத்து வருடங்களில் எட்டு மில்லியன் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்று ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

குறிப்பாக நீரிழிவு,  40 வீதமான புற்று நோய்கள் போன்றவற்றை , வாழ்க்கையில் எளிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், குறைக்க முடியும் என்கிறார்கள்.

அதென்ன எளிய மாற்றங்கள் என்று கேட்கிறீர்களா?

ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ணுதல், கிரமமான உடற்பயிற்சி, புகைத்தலை நிறுத்துதல், மதுபாவனையைக் கைவிடுதல்,- இந்த நான்குமே அந்த எளிய மாற்றங்கள்.

தினமும் நிறைய நீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமது உடலில் 75 வீதம் நீராகும்.அதனால் ஆரோகியமான உணவில் நீரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. நீரானது நமது தொகுதிகளைக் கழுவ உதவுகின்றது. சிறுநீரகம், சிறுநீர்ப்பை  போன்றவற்றிலுள்ள கழிவுப் பொருட்களையும், நச்சுப் பதார்த்தங்களையும் இது நீக்குகின்றது.

மனிதர்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. புகை பிடித்தல் இன்று மனித குலத்தைப் பெரும் பாதிப்பில் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதேபோல் குடியும் குடியைக் கெடுக்கின்றது. . இவை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் சவாலாக உருப்பெற்று நிற்கின்றன

அந்தக் காலத்தில் நமது உணவென்பது, உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தியதாக இருந்தது. ‘உணவே மருந்து’ என்று அதனால்தான் சொன்னார்கள். உடலையும் மனதையும் பக்குவப்படுத்தும் ஆற்றல் உணவுக்கு உண்டு. ‘சத்தான உணவு, அதற்குச் சமமான உழைப்பு’ என்ற சூட்சுமம்தான் நம் முன்னோரை நீண்ட ஆயுளோடு வாழ வைத்தது.

உணவும் வாழ்க்கை முறையும் மாறி, பதற்றமும் அவசரமும் சூழ்ந்த ஒரு நவீன உலகத்துக்குள் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலானோர், இதை, ‘தொற்றா நோய்களின் யுகம்’ என்கிறார்கள். ஒருவிதத்தில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், தொற்று நோய்களை இன்னும் நாம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விடவில்லை. அவை நம்முன் மிகப்பெரும் சவாலாக முன்னெழுந்து நிற்கின்றன. அவற்றோடு இந்த நொடி வரை மருத்துவ உலகம் போராடிக்கொண்டிருக்கிறது.  அத்துடன் இந்தத் தொற்றா நோய்களும் நம்மைத் துரத்த ஆரம்பித்து விட்டன.

எதிர்த்துப் போராடுவோம். செல்வத்துள் செல்வம் நம் ஆரோக்கியந்தானே? சுகத்தை இழந்து நமக்கு சொத்தெதற்கு?

04.02.2018

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *