எங்கு நோக்கினும் டெஙகுப் பீதி

3 views
0

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறார்கள்.

ஆனால் அந்தச் செல்வம் நம்மில் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? வாழ்க்கை முறை அடியோடு மாற்றப்பட்டு, உணவு முறைகள் பாழடிக்கப்பட்ட பின்னர், எந்த வயதில் எவருக்கு என்ன நோய் வருமென்று தெரியாமல், நம்மைத் திணறடிக்கின்றன புதுப் புது நோய்கள்!

இன்று யாழ்ப்பாணம் அடங்கலாக, இலங்கையின் முழுப்பிராந்தியங்களையும், டெங்கு ஆட்டுவித்து வருகிறது. இந்த டெங்கு என்ற நுளம்புக் கடிக் காய்ச்சல், ஒரு நுற்றாண்டு காலத்தை தாண்டிய ஒரு வைரஸ் நோய்! 1907இல் மஞ்சள் காமாளைக்கு அடுத்தாக, அடங்கு வைரஸ்தான் இருந்திருக்கின்றது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய்.

உறுதிப்படுத்தப்படாவிடினும். இந்த டெங்கு என்ற சொல் ஆபிரிக்க சுவாலி மொழியிலிருந்து தோன்றியது என்கிறார்கள். ‘Ka-ding pepo”  என்ற சுவாளி மொழிச் சொல்லடையின்படி, இதற்கு ‘அசுத்த ஆவிகளினால் ஏற்படுத்தப்பட்ட தசைப் பிடிப்பு‘ என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். சுவாளி மொழிச் சொல்லான ‘டிங்கா‘ என்பது  கவனம் என்ற அர்த்தம் பொதிந்த ‘டெங்கு‘ என்ற ஸ்பானிய மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார்கள். ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது புராதன பதிவுகளின்படி,சீன மருத்துக் களஞ்சியத்தில்,கி.மு.265-420 காலகட்டத்தில், இந்த நோயை  பறக்கும் பூச்சிகளோடு தொடர்புடைய ‘தண்ணீர் நஞ்சு‘ என்று விளக்கியிருக்கிறார்கள்.

1780களில் ஆசிய, ஆபிரிக்கா, வடஅமெரிக்க கண்டங்களை டெங்கு ஜூரம் தாக்கியிருக்கின்றது.  1779இல்தான்இந்த நோயை இனங்கண்டு டெங்குத் தாக்குதல் என்று அறிந்துள்ளார்கள்.‘எலும்பை உடைக்கும் ஜூரம்‘ என்று அப்பொழுது வர்ணித்திருக்கிறார்கள். 20ம்நுற்றாண்டில்தான் இது நுளம்பின் திருவிளையாடல் என்று கண்டறிந்துள்ளார்கள். இன்றையநிலையில் 100 நாடுகள் வரையில் பரவியுள்ள இந்த டெங்கு உலக ஜனத்தொகையின் 40 வீதமானவர்களைத் தாக்கியிருக்கின்றது என்பது, ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை..

இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.

சுகாதார அமைச்சின் இந்த வருட ஆரம்ப அறிக்கையின்படி, 2017ம் ஆண்டின் 12 மாதங்களிலும், 1,85,688 பேர் டெங்கு நோய்க்காக சிகிச்சை பெற்றிருப்பதாக, இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இத் தொகையில் சுமாராக 41.53 வீதமானவர்கள் மேற்கு மாவட்டத்தினர் என்றும், 2017ம் ஆண்டில் 29வது வாரமே மிக அதிகமானோர் டெங்கு ஜூரத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள் மூலம் அறியப்படுகின்றது.

தேசிய டெங்கு அழிப்பு பிரிவின் சென்ற வருட அறிக்கையின்படி, வடக்கிலும், மத்திய மாகாணத்திலும், டெங்கு நோயாளிகள் தொகை அதிகரித்திருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. சமீபத்தில் இப் பிராந்தியங்களில் வீசிய வட கிழக்கு மொன்சூன் பருவப் பெயர்ச்சிக் காற்றே இதற்கான காரணம் என்று சொல்லப்படுகின்றது.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் , 700 பேர் அடங்கிய இராணுவத்தினர், கிளிநொச்சிப் பிராந்தியத்தில், , டெங்கு தடுப்பு பிரச்சாரத்தில் இறங்கியிருந்தார்களென ஒரு செய்தி வெளிவந்தது. கிளிநொச்சி, முழங்காவில்,  கண்டவெளி பன்ற பிரதேசங்களில்  இராணுவத்தில்  57,65,66ம் பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் மருத்துவ அதிகாரிகள், அரச அதிகாரிகளுடன் கைகோர்த்து, தெங்கு தடுப்பு செயற்பாடுகளில் பங்குபற்றியிருந்தார்கள். நாடு அடங்கலாக அரச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இந்த நோய் பரவுவதைத் தடுக்கும் திடங்களைச் செயற்படுத்த உதவியுள்ளார்கள். நீர்கொழும்பு கிரிபத்கொட மருத்துவமனைகளில் இரத்தப் பரிசோதனை செய்து நோயாளிகளை இனங்காணும் பணிகளில் இவர்கள் பங்களிப்பும் இருந்துள்ளது.

இந்த நுளம்புகள்  வேகமாகப் பல்கிப் பெருகுகின்றன.. ஆணுடன் சேரும் பெண் நுளம்பு,  500 தொடக்கம் 1000 முட்டைகளை இட்டு விடுகின்றது. 3 வார காலம் மாத்திரதே ஆயுள் கொண்ட இவை சாகும் வேகத்தை விட அதி வேகமாக இனவிருத்தி செய்து விடுகின்றன. எனவே நுளம்புகள் தங்கி, தம் கடும்ப வாழ்வை நடாத்தும் இடங்களை கண்டறிந்து, இவற்றை அழித்தொழிப்பதே, சுகாதார அதிகாரிகளின் பிரதான பணியாக இருக்கின்றது.

ஒன்றே குலம் ஒன்றே மதம் என்பது இந்த டெங்கு விடயத்தில் நன்றாகவே பொருந்தும் போலிருக்கின்றது. பணக்காரன் ஏழை என்ற பேதமின்றி, மதம் இனம் என்ற பிரிவைக் கடந்து, வடக்கு தெற்கு என்ற பிரிவு இல்லாமல், எல்லோருக்கும் பொதுவான எதிரியாக இந்த டெங்கு மாறியிருக்கின்றது. இது எல்லோரும் இணைந்து செயற்பட்டால்தான், ஒழிக்கக் கூடிய ஒன்றே தவிர, தனி ஒருவரின் முயற்சியால், இதை அழித்து விட முடியாது.

இரு இலங்கை மருத்துவர்கள், பொதுமக்களின் நன்மை கருதி, , தற்போது நடைமுறையிலுள்ள தடுப்பு முறைகளின் குறைபாடுகளைக் களையும் வித்ததில், புதிதாக ஒரு செயற்பாட்டை உருவாக்கி இருக்கின்றார்கள். மருத்துவ துறையில் வல்லுனர்களும், தொழிலால் மருத்துவர்களுமான லசந்தா ரண்வெல, யுடீஸ்வரா வெடிசிங்க ஆகிய இருவரும் கணனி மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவர் பற்றிய விபரங்களைச் சேகரித்து, பொதுஜன சுகாதார அதிகாரிக்கு அனுப்பப்படுகின்றது. சுகாதாரஅதிகாரி சம்பந்தப்பட்ட இடத்திறகு விஜயம் செய்து, நேரில் பார்வையிட்டு, இது மேலும் பரவாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இவை எல்லாமே எழுத்து வடிவில் கைமாறுவதால், குறிப்பிட்ட சுகாதார அதிகாரியைச் சென்றடைய சில சமயங்களில் இரு வாரங்கள் தேவைப்படலாம் என்று கூறும் இந்த மருத்துவர்கள், தாம் அறிமுகப்படுத்துவது, எல்லாமே இணையவழி என்பதால், விரயமாகும் நேரம் பெருமளவு குறைக்கப்படுகின்றது  என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் கொடுக்கப்படும் தரவுகளின் துல்லியம் சிறப்பாக இருக்கும் என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

எழுத்து மூலம் கைமாறும் தரவுகள், தொலைக்கப்படலாம். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனிநபரின் அறிக்கைகைகளும், ஒரு கோப்பாக, இணையத்தில் பாதுகாப்பாக  இருப்பதோடு, வேண்டிய சமயத்தில், தேவைப்படும் எவராலும் எல்லாத் தகவல்களையும் பார்க்க முடியும் என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

கொழும்பு மாவட்டத்தில் ஒரு ‘பைலட்‘ திட்டமாக , கடந்த ஆகஸ்டில் இது ஆரம்பிக்கப்பட்டு விட்டது.இன்னும் இது ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், , வெகு விரைவில் இத் திட்டம்  கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படும் என்று மருத்துவர்கள் ஆங்கிலேயப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தத் திட்டத்துக்கு பல மில்லியன் ரூபா வகையில் செலவாகலாம்.. . ஆனால் வெளியாரின் எந்தப் பண முதலீடும் இல்லாமல் இதைச் செய்து முடித்தோம். என்று கூறும் இவர்களுக்கு ‘காமென்வெல்த் டிஜிட்டல் சுகாதார விருது‘ காமென்வெல்த் மருத்துவ அமைப்பினால், கடந்த வருடம் அக்டோபரில் வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல இடங்களில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு மருத்துவர் ஜி.ரஜீவ் தெரிவித்திருக்கிறார்.இந்த மலேரியா நுளம்பு முதன்முறையாக மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும். இதனை இல்லாதொழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் டெங்கு நோய் வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்துவதற்காக டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உரிய அதிகாரிகள் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர். டெங்கு நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக ஒலிபெருக்கி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரத்தியேகமான ரீதியில் மாநகர பிரேதச மற்றும் கிராமங்கள் தோறும் வாகனத்தில் ஒலிபரப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

காலை 7.30 க்கு ஆரம்பிக்கப்பட்ட ஒலிபெருக்கியின் மூலம் மேற்கொள்ளப்படும் வடபகுதி விசேட டெங்கு ஒழிப்பு  விழிப்புணர்வு நடவடிக்கையில்,  இரண்டு நாட்களின் மேல் காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று இரத்த பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.. டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை கொண்டிருப்போரின் சுற்றாடல் பகுதி குறிப்பிட்ட வகையில் துப்பரவு செய்து காணப்படாதவிடத்து இவ்வாறான இடங்களை கொண்டுள்ளோருக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுவிக்கப்படும். அதனை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவர் எச்சரித்திருந்தார். .

மேலும் பாடசாலை குழு என்ற வகையில், அதிபர் உள்ளடங்கலாக     3 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு,  ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலையில் டெங்கு தொடர்பில் துப்பரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறும் அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நோயினால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகாதேவி (48) உயிரிழந்துள்ளார். மற்றும் யாழ்ப்பாணம் புனித ஜோன்பொஸ்கோ பாடசாலையைச்சேர்ந்த 9வயதையுடைய மாணவி கடந்த வருடம் ஒக்டோபரில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த வருட ஆரம்பத்தில் 40 வயதான கீர்த்திகா லசானி என்ற ஆசிரியை, டெங்கு நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்திருக்கிறார்.இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், ஒரு குழந்தையைப் பிரசவித்திருந்தார்.. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத் தீவில் மர்மக் காய்ச்சல் நிலவுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காய்ச்சல் காரணமாக 21பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட ஆரம்பத்தில், நிலைமை யாழ் மண்ணில் மிக மோசமாக இருந்ததை இங்கு வாசகர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் , சென்ற வருட ஆரம்பத்தில் திகழ்ந்துள்ளது. உடுவில், சாவகச்சேரி மற்றும் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன்  சென்ற வருடம் குறிப்பிட்டிருந்தார். .

நுளம்பால்  மட்டுமே  டெங்கு  பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes  Aegypti)  எனும் நுளம்புகள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது.  நுளம்பு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும். இது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை..

ஏடிஸ் நுளம்பு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண்நுளம்பிற்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் நுளம்பின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில், நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் ‘லாவா‘ என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லாவாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான நுளம்பாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும்.

நுளம்பு, வாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும். பொதுவாக, நுளம்புகள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால், டெங்கு நுளம்புகளோ  அசுத்தமற்ற நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை. மற்ற நுளம்புகள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த நுளம்புகளோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.

திடீரென கடுமையான (40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

விழிப்போடு இருப்போம். வீணான நோய் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.

11.02.18

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *