இதயம் கைமாறும் இனிய நாளிது….

இதயம் கைமாறும் இனிய நாளிது….

7 views
0

 

நம் குழந்தைகளுக்கு

அப்பா   நான்   அம்மா நீ..

நம் கவிதைகளுக்கு

அப்பா நீ  அம்மா நான்..!!

படித்தில் பிடித்த புதுக்கவிதை வரிகள் இவை!

இதய வியாதிகள் வெகுவேகமாக மனித உயர்களை அழித்துக் கொண்டுவரும் இந்தப் பொல்லாத யுகத்தில், இதயத்தைக் குளிர்விக்கும் காதலர் தினம், நம் மனதிற்கும், கடும் கோடை காணும் கனத்த மழையாக இறங்குகின்றது. இதய மாற்று சிகிச்சைகள் பல இடம்பெறுகின்ற இந்த நுாற்றாண்டில், ஒருவர் இதயத்தை இன்னொருவர் திருடி, அந்தக் களிப்பில் மிதப்பது மாறுபட்ட அனுபவந்தான்…….

மறுபடியும் வந்திருக்கின்றது, வலன்டைன் தினம் என்னும் காதலர் தினம்.ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.!

ஏன் இந்தத் தினத்தை வலன்டைன் தினம் என்று அழைக்கிறார்கள்?

.ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில்தான்  இந்தக் காதலர் தினக்  கொண்டாட்டம் தொடங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டாவது குளோடியஸ்  என்ற உரோமாபுரிச் சக்கரவர்த்தி  நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை தன் காலத்தில் பிறப்பித்தார்.  ஆண்கள் குடும்ப பந்தத்தில் இறங்குவதை விட, நாட்டுக்கு சேவை செய்யும் இராணுவத்தில் இணைந்து கொள்வது  சிறந்ததுஎன்ற முடிவுக்கு சக்கரவர்த்தி வந்தததினால்தான் இப்படியொரு அறிவிப்பு! இந்நிலையில் அந்நாட்டுப்  பாதிரியார் வலன்டைன் ,சக்கரவர்த்தியின்  அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவருக்கும்  திருமணங்களை நடத்தி வைத்தார்.

இதனையறிந்த மன்னன் வலன்டைனைக் கைது செய்ததோடு, அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் வலன்டைனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது  சிறைக்காவலருக்கு தெரியவர,  அஸ்டோரியசை வீட்டுக் காவலில் வைத்தார்கள்.. அப்போதுதான் வலன்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பியிருந்தார்.

இதை அடுத்து,  வலன்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த நிலையில்.  தலை துண்டிக்கப்பட்டு  கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள்! இந்த நாளையே வருடாவருடம்  வலன்டைன் தினம்  -அதாவது காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள்

ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான பல கதைகள் இருந்தபோதிலும், பெப்ரவரி 14ந் திகதி காதலர்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது என்பது மறுக்க முடியாத நிஜம்! உலக நாடுகளெங்கும் இத் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா , அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாககக் கூறப்படுகின்றது.  நத்தார் கொண்டாட்ட அட்டைகள், தீபாவளி வாழ்த்து அட்டைகள் போல, 1700இன் பிற்பகுதியில்தான் வலன்டைன் வாழ்த்து அட்டைகளை ஆளுக்கு ஆள் அனுப்பத்தொடங்கி இருக்கின்றார்க்ள. 1800களில்  அமெரிக்காவில் வர்த்தகரீதியாக, வலன்டைன்  வாழ்த்து அட்டைகள் விற்கப்பட்டுள்ளன.

 

பொதுவாக இந்த நாளின் வாழ்த்து அட்டைகளில்  ரோமர்களின் காதற் கடவுளான கியூபிட்தான் சித்தரிக்கப்படுவார். இவரைச் சுற்றி இதயங்கள் வலம்வரும். பறவைகள் பெப்ரவரி மாதத்தில்தான்,   தம் இணையைத் தேடும் வழக்கம் கொண்டவை என்பதால்  இந்த அட்டைகளில் பறவைகளின் சித்திரங்களையும் காணமுடியும். காதலர்கள் தங்களுக்குள் பரிசுகளைப் பரிமாறும்போது, குறிப்பாக காதலை வெளிப்படுத்தும் சிகப்பு ரோஜாக்கள் கைமாறுவதுண்டு.

இங்கே இந்தத் தினம் வந்தது பற்றி இன்னொரு சுவாரஸ்ஸியமான தகவலையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பெப்ரவரி மாதத்தில்‘லுப்பர்கலியா‘ என்ற பெயரில், ரோமானிய விவசாயக் கடவுளுக்கான பவுனுஸூக்கு விழா எடுப்பது, முன்னனைய காலத்தில் வழமையில் இருந்துள்ளது. இந்த விழாவை ஆரம்பிக்க, லுப்பர்ஸீ அமைப்பின் ரோமானிய மதக்குருக்கள் ஒரு புனிதமான குகைக்குள் ஒன்றுகூடி , பயிர்பச்சை, வேறுபட்ட உயிரினங்கள் எல்லாமே சூலுற்று வளம்பெற வேண்டும் என்பதற்காக ஆட்டை வெட்டிப் பலி கொடுப்பார்களாம்.

வெட்டிய ஆட்டின் தோலை உரித்து, அதை ஆட்டின் இரத்தத்தில் தோய்த்து தெருவெங்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்வார்களாம். வழியில் சந்திக்கும் பெண்களின் உடலில் இந்தத் தோலால் மெல்லத் தட்டிக் கொடுப்தோடு, வயல்  வெளிகளில் பயிர்பச்சைகள் மீதும்  தோலைத் தெளிப்பார்கள். இந்தச் செய்கையின் மூலம் எல்லாமே சூலுற்று வளம் பெறும் என்பது இவர்கள் நம்பிக்கையாக இருந்துள்ளது.  பெண்கள்  நிர்வாணமாக இவர்களை  எதிர்கொண்டு இந்தச் செல்லத் ‘தட்டைப்‘ பெற்றுக் கொள்வார்கள் என்பது மேலதிக தகவல் !பின்பு  ஒவ்வொரு இளம் பெண்ணும் தங்கள் தங்கள்  பெயர்களை ஒரு சீட்டில் எழுதி, ஒரு  பெரிய கிண்ணத்தில் போட்டுவிடுவார்களாம். நகரிலுள்ள அனைத்து பிரமச்சாரிகளும், இந்தக் கிண்ணத்திற்குள் ஒரு சீட்டைப்  பொறுக்கி எடுப்பார்கள். அப்படித் தெரிந்து எடுக்கும் பெண், குறி்பபிட்ட ஆணின்  ஜோடியாகி, பின்பு அது திருமணத்திலும் முடிவதுண்டாம்.

எப்படி இருக்கிறது இந்தக் கதை?

இந்த  அசாதாரண வழமை கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானது என்று காரணம் காட்டி 5ம் நுாற்றாண்டில் இறுதியில் மதத் தலைவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து அப்பொழுது பாப்பரசராக இருந்த கெலாசிய்ஸ் என்பவர், பெப்ரவரி14ந் திகதியை வலன்டைன் தினமாக அறிவித்தார் என்று இந்தக் கதை முடிவடைகின்றது.

கதை கேட்கிற ஆசை மேலும்  இருந்தால், இந்த வலன்டைன் தினம் பற்றிய இன்னொரு சுவாரஸ்ஸியமான கதை பற்றி அறியத்  தயாராகுங்கள்.

5ம் நுாற்றாண்டுக்கும் 15ம் நுாற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஐரோப்பாவின் வரலாற்று இடைக்காலத்தின்போது, இந்த நாள் ஒரு விடுதலை தினமாக இருந்துள்ளது.இக் காலகட்டத்தில் இங்கிலாந்து , பிரான்ஸ் நாட்டவர்கள்.  பெப்ரவரி 14ந் திகதியை  பட்சிகள் புணரும் கால ஆரம்பமாகக் கணித்திருந்தார்கள். இந்த வலன்டைன் தினமன்று ஒரு இளம்பெண் அன்று  காணும் பட்சியை வைத்து, தான் எப்படியான  ஓர் ஆணைத் திருமணம் செய்யப் போகிறாள் என்று சொல்லி விடுவாளாம்-இப்படியொரு மூடநம்பிக்கை அப்பொழுது இருந்துள்ளது. ஒரு கருங்குருவியைக் கண்டால் ஒரு மதகுரு கணவனாக அமைவார் என்று நம்புவது தொடக்கம், ஒரு மரங்கொத்தியைக் கண்டால் எந்தக் கணவனும் வந்துசேரமாட்டான் என்று நம்பும் அளவுக்கு இவர்கள் பறவை ஜோஸ்யம் வலுத்துப் போய் இருந்திருக்கின்றது.

இதயவடிவிலான சாக்லெட்டுகள் இந்த நாளில் அமோகமாக விற்பனையாகி வருவதை நாம் கண்டிருப்போம். இன்று இங்கிலாந்தின் மூலைமுடுக்கெல்லாம் விற்பனையாகும் மிகப் பிரபல்யமான காட்பெரி சாக்லெட் உலகறிந்த ஒன்று. 1800களில் இந்த இதய வடிவிலான சாக்டெ்டுகளை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை  இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்த றிச்சார்ட் காட்பெரிக்கே போய்ச்சேரும்.  இந்தக் காலகட்டத்தில், காதலில் தோற்றவர்கள் சற்றே மனஆறுதல் அடைய சாக்லெட்டைத்தான் ‘மருந்தாக‘  மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துள்ளார்கள் என்பது இன்னொரு ‘இனிப்பான‘ ,  விசித்திரமான தகவல்!

கதைகள் எப்படியாக இருந்தாலும், இன்று உலக நாடுகள் அனைத்துமே, காதலர் தினமாக பெப்பரவரி14ஐ கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டன என்பதுதான் நிஜம்! ஒரு மதப் பெருநாளான கிறிஸ்மஸை  எப்படி வியாபாரிகள்  வர்த்தகரீதியான ஒன்றாக மாற்றிவிடுவதில் வெற்றி கண்டார்களோ அதுபோல, இந்தக் காதலர் தினமும் வர்த்தகரீதியாக வியாபாரிகளுக்கு  வருமானம் ஈட்ட வழிவகுத்துக் கொடுத்து வருகின்றது.  ஆண்டுதோறும்  அனுப்பப்படும் கிறிஸ்மஸ் அட்டைகள் தொகை 2.6 பில்லியனை எட்டிப் பிடிக்க , வலன்டைன் அட்டைகள் ஒரு பில்லியன்தொகையுடன் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தொகையில் பெண்களால் 85 வீதமான வாழ்த்தட்டைகள் அனுப்பப்படுவது கவனிக்கத்தக்கது.

காதல் என்றை சொல்லை இளவட்டங்கள் பார்க்கும் விதமே வேறு!

பலர் உடல்ரீயான காதலோடு ஒருவரை ஒருவர் நோக்குகிறார்கள். இந்தக் காதலர்கள் உறவு, கடுவேகத்தில் உடைந்து சிதைந்து விடுகின்றது. காதல் என்பது இளவயதினருக்கு வரும்  ஒன்றே என்ற தவறான கருத்தும் பலரிடம் மேலோங்கி இருக்கின்றது. வாழ்க்கையே ஒரு காதல் பூங்காதான்! அந்தக் காதல் பாசம், நேசம், அன்பு பல பெயர்களில் திரிகின்றதேயொழிய, காதல் என்பதில்லாமல் எந்த வயதினருக்கும் வாழ்வு முழுமையடையவதில்லை. நம்மை நாமே நேசிக்கக் கற்றுக் கொள்வதிலிருந்து, நம் தொழிலை நேசிப்பது, பிறரை நேசிப்பது , வாசிப்பதை நேசிப்பது என்று இந்தக் காதல் நீள்கின்றது.

காதல் இன்றேல் சாதல் என்பதெல்லாம் மடமைத்தனம். ஒருவர் இன்னொருவர் மீது வெறித்தனமாக அன்பு கொள்வது மூடத்தனம். கண்மூடித்தனமான காதல் தடம்புரள வைப்பது. கண்மூடித்தனமாக வேகத்தில் ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கு ஒப்பனது.  எங்கோ முட்டிமோதி  பெருஞ் சேதமும், மரணமும் தருவது!

அன்பின் வலிமை பெரிது. அகிலத்தையே அன்பால் ஆளலாம். காதல் என்ற பெயரில் அன்பைக் கொச்சைப்படுத்தாதவரை, அது உன்னதமானது. உயர்ந்தது.

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *