சிலிர்த்தெழுந்தது சிறீலங்கா!!!!!!!!

சிலிர்த்தெழுந்தது சிறீலங்கா!!!!!!!!

7 views
0

அடி மேல் அடி வாங்கிய இலங்கை கிரிக்கெட் அணி சிலிர்த்தெழுந்திருக்கின்றது. விட்டேனா பார் என்பது போல, துடுப்பாட்டத்திலும் சரி, பந்து வீச்சிலும் சரி, களத்தில் பந்து பொறுக்குவதிலும் சரி  ஆக்ரோஷமாக விளையாடி, வெற்றியின் பாதையில் காலெடுத்து வைத்திருக்கின்றது இலங்கை அணி….

சுமுகமான ஆரம்பம்.. இது தொடருமா?

இலங்கை, பங்களாதேஷ், சிம்பாவே ஆகிய 3 நாடுகளும், கடந்த மாதம் ஜனவரியில் முத்தரப்பு மோதலொன்றில் குதித்திருந்தன. அடுத்தடுத்து சிம்பாவேயிடமும், பங்களாதேஷ் நாட்டுடனும் விளையாடி, அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது. பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதை போல, இல்ஙகை அணி வாலைச் சுருட்டிக் கொண்டு போட்டியிலிருந்து துாக்கியெறியப்படப் போகின்றது  என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்தது ஏது நடந்ததோ தெரியவில்லை.

31 பந்துகள் மீதமிருக்க, முத்தரப்பு மோதலில், நான்காவது போட்டியாக சிம்பாவே அணியுடன் மோதி, 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றபோது, பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆறாவது மோதலாக பங்களாதேஷ் அணியை இலங்கை எதிர்கொண்டது. 10 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றி கொண்டு, இறுதி மோதலுக்குத் தயாராகிய போது, ஆச்சிரியத்திற்கு மேல் ஆச்சரியம்!.

ஜனவரி 27இன்று இறுதி மோதல்!

களத்தில் குதித்த அணிகள் பங்களாதேஷ், இலங்கை! 221 ஒட்டங்கள் ஆடியெடுத்த இலங்கை அணி, எதிரணியை 142 ஓட்டங்களுடன் வெளியேற்றியபோது, சிலிர்த்தெழுந்து நிற்கும் சிங்கங்களை எல்லோரும் வியப்போடும், புதுப் பார்வையோடும் நோக்கினார்கள்.

இந்தக் கதை தொடருமா என்று பலர் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார்க்ள.

வந்தது, இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள். இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் இது!

ஒரு கிண்ணத்தைக் கைப்பற்றிய உற்சாகத்தில் நிற்கும் இலங்கை அணி என்ன செய்யப்பபோகிறது என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

அடி வாங்குமா? அடி கொடுக்குமா? பங்களாதேஷ் தன் கைவரிசையைக் காட்டுமா? சொந்த மண்ணில் எந்த அணிக்குமே பலம் அதிகம். என்ன செய்யப் போகிறது இலங்கை அணி?

ஜனவரி மாதம் கடைசித் தினமன்று முதலாவது டெஸ்ட் போட்டி, பங்களாதேஷின் சிட்டாகொங் நகரில் ஆரம்பமாகியது.

துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கபுரி என்றுதான் இந்தத் திடலைக் கூறவேண்டி இருக்கின்றது. பங்களாதேஷ் அணிதான் முதலில் துடுப்பெடுத்தாடியது.  அது 513 ஒட்டங்களை ஆடிக் குவித்தபோது, இலங்கை அணி “வாங்கிக் கட்டப் போகின்றது” என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது. துடுப்பாட்ட வீரர் மொமிநுல் 176 ஓட்டங்களும், மகமதுல்லா 83 ஒட்டங்களும் ஆடியெடுத்து, தமது அணியின் இலக்கு 500ஐ தாண்ட வழிவகுத்தனர்.

இலங்கை அணி ஆடத் தொடங்கியது. விட்டேனா பார் என்று இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களும், உற்சாகமாக ஆடத் தொடங்கினார்கள். மென்டிஸ் 196, தனஞ்சயா 173, றோஷென் 109 என்று வரிசையாக சதங்களை அடித்து நொறுக்கியபோது, மைதானமே அதிர்ந்தது. 9 விக்கட்டுகள் இழப்பில் 713 ஓட்டங்கள் அதிரடியாக  எடுத்து, இலங்கை அணி தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இரட்டை சதத்தை அண்மித்த ஒருவர், சதங்களை அடித்த இருவர் என்று இலங்கை அணியின் ஓட்டக்குவிப்பு, பலரை மிரள வைத்தது.. ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது . 500க்கு மேல் ஓட்டங்கள் அடித்துவிட்டோம் என்ற அக்களிப்பில் இருந்த பங்களாதேஷ் அணி, கடைசி நாட்களில், களம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறினால் நம் பாடு தர்மசங்கடமானதாகி விடும் என்று கவலைப்பட ஆரம்பித்தது.

எனினும், பந்து வீச்சாளர்களுடன் ஒத்துழைக்க மறுத்த களம், பங்களாதேஷ் அணி மீண்டும் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க உதவியது. ஐந்து விக்கட்டுகளை இந்த நிலையில் இவர்கள் இழந்திருந்தார்கள். மொமிநுல் இரணடாவது தடவையாக ஒரு சதம் அடித்தது, இந்த ஆட்த்தின் ஒரு தனிச் சிறப்பு. முதற்தடவையாக இப்படியொரு சாதனையை நிலைநாட்டிய பங்களாதேஷ் அணிவீரர் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது.

24 விக்கட்டுகள் இழப்பிற்கு 1533 ஓட்டங்கள் ஆடியெடுக்கப்பட்டன

ஆட்டம் உப்புச்சப்பென்று முடிந்தது. ரசிகர்களுக்கு திருப்தி இல்லை. அடி மேல் அடி விழுந்தது. அவ்வளவுதான். சிட்டடாங்கொங் மைதானம் மிக மோசமானது என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஓர் அறிக்கை வெளியிட்டது.

மிர்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. இது மூன்று நாட்களில் முடிவடைந்து விட்டது. அதிலும் இலங்கை அணிக்கு அபார வெற்றி. பந்து வீச்சாளர்களும், துடுப்பாட்ட வீரர்களும், (பொறுப்புணர்ந்து விளையாடினார்கள். டிக்வெல்ல ஒரு நாள் ஆட்டப் போட்டிகள் போல டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது) ஆனால் இதுகால வரை சிறப்பாக விளைாயாடிய பங்களாதேஷ் அணி பொறுப்பற்ற தன்மையுடன் விளையாடி, தமது விக்கட்டுகளை அநியாயமாக இழந்தார்கள் என்ற முணுமுணுப்பு இருக்கின்றது.

முதல் இன்னிங்ஸ் 110, இரண்டாவது இன்னிங்ஸ் 123. இதற்குமேல் பங்களாதேஷ் அணி அடிக்கவில்லை.

 

இலங்கை அணி சார்பில் தன் சுழல் வித்தையை மீண்டும் காண்பித்த பழுத்த அனுபவசாலியான ரங்கனா ஹெரத், இந்த டெஸ்ட் போட்டி முடிவில் 415 என்ற மைல் கல்லைத் தொட்டிருக்கின்றார் . .இடது கைச் சுழற்பந்துவீச்சாளர்  ஒருவர்  மிக அதிகமாக வீழ்த்திய விக்கெட்டுகள் 415 என்பது இவரது சாதனை! 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இவர் பாகிஸ்தானிய பந்துவீச்சாளர் வஸிம் அக்ரமின் சாதனையை முறியடித்துள்ளார்.

இன்னும் 2 , ரி20 மோதல்களை விளையாடி விட்டு, தாயகம் திரும்புகிறது இலங்கை அணி!

நல்லதொரு முன்னேற்றப் பாய்ச்சல்.

ரசிகர்கள் மனம் குளிர்ந்திருக்கிறார்கள்.

இது தொடருமா என்பது இன்னமும் கேள்விக்குறிதான்!

14.02

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *