தொங்குநிலையில் இலங்கை அரசகட்சிகள்…..

தொங்குநிலையில் இலங்கை அரசகட்சிகள்…..

10 views
0

யானை அடிபட்டிருக்கின்றது…

உயர்ந்து நின்ற கை சோர்ந்து விழுந்திருக்கின்றது.

தாமரை மொட்டு புதிய அழகுடன் எழும்பி நிற்கின்றது. .

அடிப்படையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கசப்பான உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்த்திருப்பதுடன் ,அடுத்த நடவடிக்கைகைள் தொடர்பாக முடிவெடுக்க முடியாது, மூச்சுத் திணறும் நிலையை ஏற்படுத்தியும் உள்ளன.

தேசிய ஒற்றுமைக்கு  என்று உருவாக்கப்பட்ட ஒரு அரசுக்கு பலத்த அடி விழுந்திருப்பதை எம்மால் கவனிக்க முடிகின்றது. தேர்தல் காலத்தில் ஐ.தேசியக் கட்சியை விமர்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன , பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றி, கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி தன் அரச கடமையைச் சரிவரச் செய்யவில்லையெனச் சாடியிருக்கிறார் ஜனாதிபதி!. இந்த அரசு இப்பொழுது முகம் கொடுக்கும் மோசமான பின்னடைவுக்கு இதுதான் காரணம் என்பதுபோல கூப்பாடு போட்டுள்ளார் ஜனாதிபதி! ஆனால் ஒருவரை வீழ்த்தி, மற்றவர் மேல்வர எடுத்த முயற்சிகள் இருவரையுமே தள்ளிக் கீழ்விழுத்தி விட்டன என்பதே யாதார்த்தம்.

அதன் காரணமாக தன் பதவியிலிருந்து ரணில் இறங்க வேண்டும். இன்னொருவருக்கு வழிவிட வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜனாதிபதி.!ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பிரதமர் அவர் நாற்காலியில் தொடர்ந்து உட்கார வேண்டும் என்பதில் பிடிவாதமாக நிற்கிறார்கள் ஐ.தே.கட்சி  அரசின் ஆட்சிக் காலம் முடியும்வரை ரணிலே  பிரதமராக இருக்க வேண்டும் என்பது அவா்கள் விருப்பமாக இருக்கின்றது. ஐ.தேசியக்கட்சிக்கு தலைமை வகிப்பவர்தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும். தலைமைத்துவத்தைத் தீர்மானிப்பது  கட்சியாக இருக்க வேண்டுமேயொழிய, ஜனாதிபதியோ அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ இதைத் தீர்மானிக்க முடியாது என்பதுஅவர்களின்  வாதம்!

இந்த நேரத்தில் புதிய அரசு 2015இல், அறிமுகப்படுத்திய 19வது அரசியலமைப்புச் சட்டத்தை நினைவுகூர வேண்டியுள்ளது. இந்தச் சட்ட அமைவுக்கு இணங்க ஜனாதிபதி, பிரதமருடன் கலந்தாலோசிக்காமல், அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முடியாது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி கையில் இருந்தாலும், பிரதமருடன் கலந்தாலோசித்து, அவரின் ஒப்புதல் மூலந்தான் மாற்ற முடியம். இது ஒரு கட்டாய தேவையாகும்.

அதனால்தான் பிரதமரையே பதவி விலகும்படி ஜனாதிபதி, பிரதமரைக் கோரியிருக்கிறாரென உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வளவுதான் ஜனாதிபதியால் செய்ய முடியும். அவரால் பதவி நீக்கம் செய்ய முடியாது. சுருங்கச் சொல்வதானால், ..இந்த ஐக்கியம் பிரசவித்த குழந்தை காரணமாக, ஜனாதிபதியால்,  நினைத்த மாத்திரத்தில் பிரதமரைத் துாக்கி எறிய முடியவில்லை.இப்படி இந்த 19வது சட்டச் சீர்திருத்தம் வேலைசெய்யும் என்று ஜனாதிபதி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். எப்படி இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபடுவது என்ற ஜனாதிபதியின் ஆராய்ச்சிகளே இனித் தொடரப் போகின்றது.

ஆட்சி அமைத்து நான்கரை வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்பு, ஆட்சியைக் கலைக்கவும் முடியாது. அப்படி ஆட்சியைக் கலைப்பதற்கும், மூன்றில் இரண்டு என்ற அறுதிப் பெரும்பான்மை தேவைப்படுகின்றது. அதிலும் பாராளமன்றத்துக்குள் முதற் தடவையாக உள்நுழைந்தவர்கள், தமது முழுமையான ஓய்வூதியப் பணத்தைப் பெற, தமது  சேவையை இடைநடுவில் குழப்பிக் கொள்ள தயாராக இல்லை.அதேபோல அடுத்த தடவை தெரிவு செய்யப்பட மாட்டோம் என்ற நிலையில் இருப்பவர்களும், இடைநடுவில் பேரவையைக் கலைப்பதில் உடன்பாடு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசை ஒரு ஸ்தம்பித நிலைக்கு தள்ளியுள்ளன. வாகன நெரிசல் காரணமாக, நெடுஞ்சாலையில் வாகனங்கள் முன்னேயும் போகமுடியாமல், பின்னேயும் போகமுடியாமல் ஓர் இடத்தில் தரித்து நிற்பது போன்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் ஆட்சி மன்றத் தேர்தலே நடந்து முடிந்ததாக இருந்தபோதிலும், மக்களின் “நாடி பிடித்துப் பார்க்கும்” குட்டித் தேர்தலாக இது அமைந்துள்ளது.  அடுத்து வரப்போகும் பெரிய தேர்தல் இப்படித்தான் இருக்கும் என்ற செய்தி மக்களிடமிருந்து, நல்லாட்சி அரசுக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றது.

பிரதமர் விக்கிரமசிங்க துாக்கியெறிப்படும் நிலை, ஜனாதிபதியிடம் மாத்திரமல்ல, அவருடைய சொந்தக் கட்சியிலேயே சிலரால் முன்வைக்கப்பட்டு்ளளது. 1994 தொடக்கம் ஐ.தே.கட்சியின் தலைவைராக இருந்து வந்த பழுத்த அரசியல்வாதி இவர் என்பதை மறுப்பதற்கில்லை. . இடையிடையே கட்சிக்குள் வெடித்த புரட்சிகளுக்கு முகம் கொடுத்து தன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் இவர்!

அதே சமயம் இன்னும் 2 வருடங்களுக்கு இரண்டு கட்சிகளும் இணைந்து, இந்த அசௌகர்யமான நிலையிலும் தொடர வேண்டிய இக்கட்டமான நிலையும் இருக்கின்றது. அதே சமயம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியாவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும்படியும் அப்படிச் செய்யத் தவறினால், அரசை விட்டு விலகி, எதிர்க்கட்சி ஆசனங்களில் உட்கார்ந்துவிடப் போவதாகப் பயமுறுத்தி இருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா இந்த ஐக்கிய அரசு தொடரவேண்டும் என்பதையே விரும்புகின்றது. சர்வதேச அரசுகளின் ஆசீாவாதத்துடனேயே இந்த அரசு நிறுவப்பட்டது என்பது பலரும் அறிந்த விடயம். இதில் குறிப்பாக, இந்தியாவும் அமெரிக்காவும் வகித்த பாத்திரங்கள் முக்கியமானவை. தங்களுக்குப் பிடித்தமான அரசியல் தலைமை பெரிய தொகையினரால் நிராகரிக்கப்பட்டிருப்பது, சர்வதேசரீதியில் சற்றே மயக்கத்தை ஏற்படுத்தி இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். என்றாலும் இந்த நிலைமை தங்கள் கையை விட்டு நழுவிப் போய்விடுவதை இவர்கள் விரும்பவில்லை. அமெரிக்க துாதர் அற்றுள் கெஷாப்யும் இந்திய உயர் ஸ்தானிகர் ரறஞ்சித்சிங்கும், தேர்தலுக்கு பின்னர், ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமரைக் கதிரையிலிருந்து துாக்க வேண்டாமென்று கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதே சமயம் ஐ.தே.கட்சியுடன் இணைந்து செய்ற்படும் மனோ கணேசின் தமிழர் முற்போக்குக் கூட்டணியும் தற்போதைய நிலையைில் அதிருப்தியையே கண்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியை இனி நம்பியிராமல், தங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. குட்டிச் சூறாவளியென  தேர்தலின் பின்னர் ஒரு தாக்குதலை எதிர்கொண்டுள்ள நல்லாட்சி அரசு எப்படி இந்தத் தாக்குதலில் இருந்து வெளிப்படப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

09.02.18

நன்றி :டெய்லி மிரர்

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *