கண்டம் விட்டு கண்டம் கடத்தப்படும் தவளைகள்…

கண்டம் விட்டு கண்டம் கடத்தப்படும் தவளைகள்…

7 views
0

கடத்தலில் சின்ன உயிரினம் பெரிய உயிரினம் என்கிற வேறுபாடுகளெல்லாம் இல்லை. பணமென்றால் எறும்பையும் கடத்துவார்கள். எருமையையும் கடத்துவார்கள். பத்து யானைத் தந்தங்களின் பணத்தை ஒரு கிலோ எறும்பு தின்னியின்  செதில்கள் பெற்றுக் கொடுத்துவிடும். ஒரு கிலோ எறும்பு தின்னி தரும்  செதில் பணத்தை 300 கிராம் மட்டுமே இருக்கிற தவளை சம்பாதித்துவிடும். இங்கே யானைக்கும் சந்தை இருக்கிறது, தவளைக்கும் சந்தை  இருக்கிறது. இன்று  கடத்தப்படும் டார்ட் தவளைகள் (Dart Frogs)  பற்றிய வியப்பான தகவல்களை இங்கே நோக்கலாம்.

 மர முட்களை முதுகில் குத்தினால் நுனியில் விடம்

2006இல் “அப்போகலிப்டோ” (Apocalypto) என்கிற ஆங்கில திரைப்படத்தில், படத்தின் நாயகன் ஒரு கும்பலிடமிருந்து தப்பித்து ஓர் அடர் வனத்திற்குள் ஓட அவரை எதிரிகளின்  கும்பல் துரத்திக் கொண்டே போகின்றது. எதிரிகளை வீழ்த்த, கதாநாயகன் காட்டிலுள்ள ஒரு தவளையைப் பிடிப்பார். சிறு ஈட்டி போல இருக்கும் நான்கைந்து  மர முட்களைத் தவளையின் முதுகில் குத்தி எடுத்து வைத்துக்கொள்வார். மூங்கில் குச்சியைப் பயன்படுத்தி அந்த முள்ளை எதிரியின் உடலில் செலுத்துவார். எதிரி இறந்து விடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த முள்ளிலிருந்தது தவளையின் விஷம். அந்தத் தவளையின் பெயர் விஷ டார்ட் தவளை (Poison Dart Frog).

2017 அக்டோபர் 17 துருக்கியின் தெற்கில் இருக்கிற  ஒரு  நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டார்கள் காவலர்கள். அந்த வழியாக வந்த பேருந்திலிருந்த ஒரு பையைச்  சோதனை செய்தார்கள்.. “கவனமாகக் கையாளுங்கள்” என்ற வார்த்தைகள் சந்தேகம் கிளப்ப,  பையைத் திறந்து பார்த்ததில் அதிலிருந்தவை தவளைகள் என்று அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. . மொத்தம் 30 பைகளில் 7500 தவளைகள்! குற்றவாளிகளை விசாரித்ததில் 70 ஆயிரம் டொலர்களுக்கு ஆசைப்பட்டுக் கடத்தியதை ஒப்புக் கொண்டார்கள். எல்லாத் தவளைகளும் கப்பல் மூலமாக சீனாவிற்கு கடத்தப்பட இருந்தவையென.  விசாரணையில் தெரிய வந்தது. 2009ஆம் ஆண்டு இஸ்ரேல் விமான நிலையத்தில் உயிருடன் பிடிபட்ட 5 டார்ட் தவளைகள்,  கடத்தலின் எல்லைகள் எவ்வளவு பறந்து விரிந்திருக்கிறது என்பதை உலகிற்குக் காட்டியது. கைப்பற்றப்பட்ட தவளைகளின் சர்வதேச மதிப்பு இலங்கை ரூபாயில் 192 லட்சங்கள்.!!!!!!!

ஒரு கிராம் விஷம் பத்துப் பேரைக் கொல்லும்.

கறுப்பு சிவப்பு, மஞ்சள் பச்சை, தோடம்பழ நிறம், வெள்ளி நிறம், நீலம் எனப் பல வண்ணங்களில் காணப்படுவதால் மழைக் காடுகளின் ஆபரணம் என இவ்வகைத்  தவளைகள் அழைக்கப்படுகின்றன. பார்க்க அழகாக இருக்கிறதென்று தொட்டு விட முடியாது காரணம் அவற்றின் முதுகுப் பகுதியில் வியர்வை போன்ற விஷம் ஒன்றை அவை எப்போதும் வைத்திருக்கின்றன. உலகில் இருக்கிற தவளை இனத்தில் அதி தீவிர விஷம் கொண்ட தவளை வகை கொலம்பியாவின் அடர்ந்த ஈர நிலக்காடுகளில் வசிக்கும் இவைதாம்.  மஞ்சள் டார்ட்  தவளையின் ஒரு கிராம் விஷம் 10 மனிதர்களை கொல்லக்  கூடியது. தவளை தனக்கு ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றி கொள்வதற்காகத் தோலிலிருந்து விஷத்தை வெளியேற்றுகிறது. ‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த விஷம்  நரம்பு மண்டலத்தின் செயல்களை முழுமையாகச் செயலிழக்கச் செய்துவிடும். கடைசியில் உயிருக்கே உலை வைத்து விடும். உள்ளூர் பழங்குடி மக்கள் இதன் நஞ்சைச் சேகரித்து வேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர். ஓராண்டு வரை விஷத்தைச் சேமித்து வைத்திருப்பார்கள். எல்லாக் கடத்தல்களுக்குப் பின்னாலும் ஒரு மருத்துவ காரணமிருக்கிறது. தவளை கடத்தலுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது.

 

இலட்சங்களைப் புரட்டும் தவளைகள்

2001 ஆண்டிற்கு பிறகே தவளைக் கடத்தல் சர்வதேச அளவில் முக்கிய இடத்தைப் பிடித்தது. கடத்தப்படும் மொத்தத் தவளைகளின் 70% கொலம்பியாவில் இருந்தே கடத்தப்படுகிறது. கொக்கெயின், கஞ்சா, அபின் எனக் கடத்தல் தொடர்பான எல்லா “வலைப்பின்னல்களும்” கொலம்பியாவை கடந்தே பயணிக்க வேண்டியிருக்கிறது. கொலம்பியாவிலிருந்து மற்ற நாடுகளுக்குக் கிளம்புகிற பத்தில் ஒரு பயணியிடம் விஷத் தவளை இருக்கிறது என அதிர வைக்கிறது கொலம்பிய வன கடத்தல் அமைப்பான  ProAves தரும் அறிக்கைகள். 2016 ம் ஆண்டில் மட்டும் 5000 வன விலங்கு கடத்தல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலம்பியாவில் கடத்தல் தொடர்பாக நடக்கிற கொலைகளின் சதவிகிதம் 24.4.  20000 மெக்ஸிகோ பெசோ நாணயங்களுக்கு (இலங்கை மதிப்பில்  சுமாராக 160,000 ரூபாய்கள்)  பிடிக்கப்படுகிற தவளைகள் வெனிசுலா  வலையமைப்பில்  வரும் பொழுது 2000 அமெரிக்க டொலர்களுக்கு (ரூ 3இலட்சம்) விற்கப்படுகின்றன. கொலம்பியாவின் பக்கத்து நாடுகளான பெரு, வெனிசுலா, மெக்ஸிகோ நாடுகளில் இதற்கென வியாபாரிகள் தவளைக்கான விலையைத் தினமும் தீர்மானிக்கிறார்கள். அவை சர்வதேச சந்தையில்  நுழையும் பொழுது 4500 அமெரிக்க டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தண்ணீர்க் கோழி சாப்பிடவில்லையா?

2015-ம் ஆண்டு துணி மற்றும் பரிசுப் பொருள்கள் என ஒட்டியிருந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்ததில் ஆறு சிறு பெட்டிகளில்  சுமார் பத்து டார்ட் தவளைகள் இருந்தன. ஹாங்காங் விமான நிலையத்தில் அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். தாய்லாந்தின் பட்டாயா விமான நிலையத்தில் புத்தகத்தின் உள்பகுதியில் இருக்கிற பக்கங்களை, சதுர அளவாக வெட்டி எடுத்துவிட்டு அதனுள் தவளைகளை வைத்து கடத்தினார்கள். ஆண்மைக் குறைவுக்கு மருந்து என்கிற விதி தவளைகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்கா , சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இவை உணவாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் மேலான தவளைகளை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். சீனாவில் தண்ணீரில் கோழி (Swie kee) என்கிற பெயரில் முக்கிய உணவாகவும் இருக்கிறது. பெரு நாட்டில் தவளையின் ஜூஸ் “வயாகரா ஜூஸ்” என்கிற பெயரில் விற்கப்படுகிறது. ஆண்மைக்கு மிகச் சிறந்த மருந்து என்று பெரு நாட்டினர் நம்புகிறார்கள்.

இந்த விஷத்திலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கொடிய புற்று நோய்க்கும், மயக்கவியலுக்கும், பக்கவாதத்திற்கும், வலி நிவாரணியாகவும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தி மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. பச்சை மரத் தவளை, போதையில் இருந்து விடுபட நிவாரணியாகவும் அதன் விஷம் ஆண்மைக் குறைவிற்கு “கம்போ” (KAMBO) என்கிற பெயரிலும் பயன்படுகிறது. குறிப்பிட்ட  தவளை என்றில்லாமல் உலகம் முழுக்க எல்லாத் தவளைகளுக்கும்  கறுப்புச் சந்தை  வைத்திருக்கிறார்கள். சாதாரண தவளை கூட  காய்ச்சல் வைரஸுக்கு மருந்து என்று 2017 ம் ஆண்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு வேளை மருத்துவ உலகில் இங்குள்ள  தவளைகள் அங்கீகரிக்கப்பட்டால் இன்னொரு கடத்தல் இங்கிருந்தே நடக்கும். கடத்துவதற்கு  எடையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. போதைப் பொருள், ஆயுதம், விலங்குகள் எனக் கடத்துவதற்குச் சொந்தமாக  நீர் மூழ்கிக் கப்பல்  வைத்திருக்கிறார்கள்.

கடத்தல்காரர்களிடம் நீர்மூழ்கிக் கப்பல்கள்

2015 ம் ஆண்டு கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட நீர் மூழ்கிக் கப்பலைப்  பார்த்து அதிர்ந்து போனது கடற்படை. ரேடார், சோனார், இன்ப்ராரெட் என எந்தத் தொழில் நுட்பங்களாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நவீனப்படுத்தி   வைத்திருக்கிறார்கள். இதுவரை சர்வதேச அளவில் விலங்குகள் கடத்தலில் முக்கியமான நபராக  யாரையும் கைது செய்யவில்லை. ஏன் சர்வதேச பொலிஸால் நெருங்கக் கூட முடியவில்லை.  அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாத அளவிற்குக் கடத்தல் வலைப்பின்னல்  செயல்படுகிறது. “ஆன்லைன் பணப் பரிவர்த்தனை”, “கொரியர் சர்விஸ், ஸ்லீப்பர் செல்ஸ்” (Sleeper Cells) என இருக்கிற வலைப்பின்னல்களின்  அடுத்த கடத்தல் எலியாகவோ, எறும்பாகவோ கூட இருக்கலாம், ஏனெனில் கறுப்புச் சந்தை தனக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் உருவாக்கும். எப்படி வேண்டுமானாலும் அழிக்கும்….

24.02.18

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *