தளம்பல்நிலையில் இலங்கையின் உணவுத் தன்னிறைவு!

தளம்பல்நிலையில் இலங்கையின் உணவுத் தன்னிறைவு!

12 views
0

கணனி மவுஸ் பிடிக்க ஆசைப்படும் கரங்கள், கலப்பையைப் பிடிக்கத் தயாராக இல்லை.. நான்கு சுவருக்குள் கதிரையில்  உட்கார்ந்து, குளிரூட்டப்பட்ட அறைக்குள் வேலை செய்யத் தயாராக உள்ள இன்றைய சமூகத்தினர், வெயிலில் காய்ந்து, வயல்களிலோ, தோட்டங்களிலோ தமது நேரத்தைச் செலவிடத் தயாராக இல்லை. ”

உணவு உற்பத்தி விடயத்தில், இலங்கை இன்னமும் தன்னிறைவு காணவில்லை என்பதே யதார்த்தம். இங்கு பிரதான உணவாக இருக்கும்  சோற்றைப் பொறுத்த மட்டில்  அரிசி உற்பத்தியில் , இலங்கை காலத்துக்குக் காலம் தன்னிறைவு கண்டுவருகின்றது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் உற்பத்தி, கி.மு.800வது ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது என்ற கொள்ளலாம்.

இவ்வளவு கால நீண்ட சரித்திரம் இருந்தும், இந்த விவசாயத்தின் பொருளாதார முக்கியத்துவம், பெரிய அளவில், இலங்கையில் வீழ்ச்சி கண்டுவிட்டதே உண்மை. 1950ஆம் ஆண்டு,  இலங்கைப் பொருளாதாரத்தில் 46.3 வீதம் விவசாய உற்பத்தியாக இருந்தது. ஆனால் இன்றோ அது 7 வீதமாக பெருவீழ்ச்சி கண்டுள்ளதோடு, தொழில் செய்வோரின் 28 வீதமானவர்களையே கொண்டுள்ளது இலங்கை கண்டுள்ள பெரிய வீழ்ச்சி!

விவசாயத்துக்காக ஏராளமான வேளாண் கருவிகள் வந்திருந்தாலும் மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி உழுத காலமே பொற்காலம் என்கின்றனர், பழமையான பாரம்பரிய முறையைப் பின்பற்றி விவசாயம் செய்துவரும்  விவசாயிகள்.  விவசாயத்தில் உழுவதில் தொடங்கி அறுவடை வரை முற்றிலுமாக தற்போது இயந்திரமயமாகியுள்ளது.

மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை

கம்பராமாயணத்தில் வரும் வரிகள் இவை. மேழி என்பது ஏர் அல்லது கலப்பையைக் குறிக்கும் சொல்!

ஒளவையார் எழுதிய  கொன்றைவேந்தனில் மேழிச் செல்வம் கோழை படாது  என்கிறார்.

இப்படியாக இலக்கியங்களில் புகழப்பட்டு, அன்று பலராலும் விரும்பப்பட்ட விவசாயம் இன்று இளம் வயதினரால் விரும்பப்படாத ஒன்றாக மாறிவருகின்றது. கணனி மவுஸ் பிடிக்க ஆசைப்படும் கரங்கள், கலப்பையைப் பிடிக்கத் தயாராக இல்லை.. நான்கு சுவருக்குள் கதிரையில்  உட்கார்ந்து, குளிரூட்டப்பட்ட அறைக்குள் வேலை செய்யத் தயாராக உள்ள இன்றைய சமூகத்தினர், வெயிலில் காய்ந்து, வயல்களிலோ, தோட்டங்களிலோ தமது நேரத்தைச் செலவிட விரும்புகிறார்களில்லை.

“உணவுப் பாதுகாப்புத்தன்மை” என்று நோக்குமிடத்தில் இலங்கையைப் பொறுத்தமட்டில், நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிட்டால் போதுமானது என்ற கொள்கையே நிலவிவருகின்றது.   நாடு சுதந்திரமடைந்த பின்னர், ஏனைய தென் கிழக்கு  ஆசிய நாடுகளைப் போல, உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பதில், முக்கியமாக அரிசி உற்பத்தியையே கொள்கையாக வகுத்துள்ளார்கள். 1985ம் ஆண்டளவில் இலங்கை 90 வீதமான தன்னிறைவைக் கண்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்று  உணவில் தன்னிறைவு என்பதற்கான கொள்கை   வெங்காயம், கிழங்கு, சோளம், சோயா பீன்ஸ் போன்ற உப உணவுப் பொருட்களை நொக்கி நகர ஆரம்பித்துள்ளது.  2016ம் ஆண்டில் வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றிலிருந்து சுமாராக 900,000 பேர் தமது உணவுத் தேவை விடயத்தில், ஒரு பாதுகாப்பாற்ற தன்மைக்கு  முகம் கொடுத்திருக்கின்றார்கள். நாடு , கடந்த 40 வருடங்களில் இல்லாதவாறு எதிர்கொண்ட மிக மோசமான வறட்சியான காலநிலையே இதற்கான காரணமாகும். கடந்த ஆண்டு மே மாதம் தென் மேற்கு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெரு மழை , இந்த நிலையை மேலும் மோசமாக்கி இருக்கின்றது.

ஓர் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள 21 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட இலங்கையில்  சுமாராக காற் பகுதியினருக்கு சத்துணவு இல்லையெனக் கணித்தது ஐ.நா.சபையின் உணவு விவசாயப் பிரிவு! இத் தொகையை இவர்கள் 4.7 மில்லியன் என்று கணித்தார்கள் . 2030இல் இலங்கையின் ஜனத்தொகை 600,000ஆல் எகிறிக் குதிக்கப் போவதாக ஒரு கணிப்பும் இருக்கின்றது. இந்த நிலையில் உணவுக்கான தேவையின் அளவும் மேலேறப் போவது திண்ணம்.  எனவே என்றும் இல்லாதவாறு, மக்களின் உணவுத் தேவைக்கான அழுத்தம்  அதிகரித்துள்ளது.  பல திட்டங்களை இலங்கை அரசு கடந்த காலங்களில் வகுத்திருந்த போதிலும், இந்த உணவுப் பாதுகாப்பபுத் தன்மை விடயத்தில், அரசு பெரிதாக எதையும் இன்றுவரை சாதிக்கவில்லை.

ஐ.நா.சபையின் உணவு, விவசாயப் பிரிவு சமீபத்தில் எடுத்த புள்ளிவிபரங்களின்படி, 2014க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில்,  உலக ஜனத்தொகையான 7.3 பில்லியனில் , 795 மில்லியன் ஜனத்தொகையினர் -அதாவது 9பேரில் ஒருவர், சத்துணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்பவராக இருக்கிறார் என்று அறிவித்திருந்தது. இத் தொகையினரில் 12.9 வீதமானவர்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழ்பவர்கள். அதாவது இங்குள்ள  எட்டுப் பேரில் ஒருவர் இப்படி இருக்கின்றார். உலக நாடுகளின் பட்டினி நிலைமை பற்றியும், சத்துணவுப் பற்றாக் குறைபற்றியும் அளவிட பல வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. . இதில் இரு கணிப்பீடுகள் இலங்கையின் உணவுப் பாதுகாப்பற்ற தன்மையை குறைந்த தரத்திலேயே மதிப்பிடுகின்றது. .உலக நாடுகளோடு ஒப்பீடு செய்ததில், ஒரு கணிப்பு இலங்கையை 118வது இடத்திலும், இன்னொரு கணிப்பு 113வது இடத்திலும் வைத்திருக்கின்றது. தெற்கு ஆசிய நாடுகளில் மிக மோசமான நிலையில் இருப்பது இலங்கை என்று இவர்கள் கணிப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இது கிராமப்புறங்களிலுள்ள ஏழைமக்களையே பெரிதும் பாதித்து இருக்கின்றது. கடந்த காலங்களில், உணவு உற்பத்தி வீழ்ச்சியும், ஜனத் தொகை அதிகரிப்பும் , பயிர்ச் செய்கை பன்முகப்படுத்தப்படாமையும், இலங்கையின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்கிறார்கள்.

உணவு விலை அதிகரிப்பையையும் இங்கே கவனிக்க வேண்டும். பல உணவுப் பொருட்கள் அவற்றின் விலை உயர்வினால், வறுமைக் கோட்டில் வாழ்பவர்களின் கைகளை எட்டுவதில்லை.

இந்தச் சத்துணவுப் பற்றாக்குறை பிராந்தியரீதியாக வேறுபடுகின்றது. தோட்டப் பகுதியில் வாழும் மலை நாட்டவர்களும், போரால் பாதிக்கப்பட்ட கிழக்கு, வடக்குப் பிராந்தியங்களில் வாழ்பவர்களும், சத்துணவு விடயத்தில் மிக மோசமான பாதிப்பைக் கண்டுவருகின்றார்கள்.

 

உணவு இறக்குமதியும்  அதன் மீது விதிக்கப்படும் வரித் தொகையும், இலங்கைக்கு கிடைக்கும் வருடாந்த வருமானத்தின் 4 வீதத்துக்கு காரணியாகின்றது. பம்பாய் வெங்காயம், வெள்ளைப் பூடு, சமையல் எண்ணெய், என்று இறக்குமதியாகும் உப உணவுப் பொருட்களில் அரசால்  விதிக்கப்படும் வரி, பொருட்களின் விலை உயர்வுக்கான ஒரு காரணமாகி விடுகின்றது. இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தும், ஆண்டு தோறும் 300 பில்லியன் ரூபா பெறுமதியான உணவை இறக்குமதி  செய்துவருவதை இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இலங்கையில் பரவலாக 23 விவசாய மாவட்டங்களை உருவாக்கி , இன்றைய ஏற்றுமதித் தொகையை 2020க்குள் இரட்டிப்பாக்க   போவதாக ஆரம்ப கைத்தொழில்  அமைச்சரான தயா கமகே அறிவித்திருந்தார்.  அதே சமயம் இந்த இறக்குமதியை பாதியாக்க அதாவது 150 மிலலியனாக்கப் போவதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

நல்ல நோக்கம், நல்ல திட்டம்..சாதிக்குமா இலங்கை அரசு? போக்கடிக்கப்படுமா இந்த சத்துணவுப் பற்றாக்குறை? தளம்பல் நிலை சீராகுமா? 2020வரை பொறுக்க வேண்டும்.

புதுவிதி24.02

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *