தெரிந்த மிருகம் தெரியாத கதை (மருளும் மான்கள்)

தெரிந்த மிருகம் தெரியாத கதை (மருளும் மான்கள்)

12 views
0

 

காட்டுக்குள்ளே இதுவரையில் நாம் கண்ட விலங்குகளில் பல ஆக்ரோசமானவை, ஆபத்தானவை   ஊணுன்னிகள்! காண்டாமிருகம், ஒட்டச்சிவிங்கி, யானை போன்றவை உருவத்தால் பெரியவர்களானாலும் ‘சைவர்கள்‘. மாமிசம் உண்ணாமல் ‘மாமிச மலைகளாக‘, பலசாலிகளாக இருப்பவர்கள்.

இந்தத் தடவை மருளும் மான்களைச் சந்திக்கப் போகிறோம். மானைப் போல மருளுவதும், அதன் விழிகளைக் கொண்டவர்களும் பெண்கள்தான்!. இதனால் அவர்கள்  அழகு கூடுகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அழகிய மான்களைத்தான் இந்தத் தடவை சந்திக்கப் போகிறோம்.

புள்ளி மான் என்றால் எல்லோருக்கும் தெரியும். நமது காடுகளில் இவற்றைக் காணலாம். ஆனால் மானில் பல இனங்கள் இருப்பது மட்டுமல்ல, அளவிலும் இவை வேறுபடுகின்றன. கருகுமான், கடமான்(மரை), தொம்சன் சிறுமான், ரெயின்டீர், ஆபிரிக்கச் சிறுமான்(.இம்பாலா), பூட்டான் மறிமான், காஸ்மீர் மான், நீர் மான், கஸ்தூரி மான், சிவப்பு மான், காட்டுமான் , இரலை மான்,  எல்க்(மூஸ்), வனப்புமிகு சிறுமான், புல்வாய் என்று பல்வேறு இன மான்கள், உலக நாடுகளெங்கும் பரவலாக, பல்வேறு அளவுகளில் காணப்படுவது நமக்கு வியப்பைத் தரும் தகவல் என்றே சொல்ல வேண்டும்..உலகெங்குமுள்ள காடுகளில் சுமாராக 60 வேறுபட்ட மான் இனங்கள் வாழுகின்றன. அன்டார்க்ரிக்கா பிராந்தியத்தை விட, ஏனைய பிரதேங்கள் எல்லாவற்றிலும் மான்கள் காணப்படுகின்றன..

நல்லதொரு ஔடதம் தரும் சிகப்பு மான்

மிகப் பெரிய மான் இனங்களுள் சிகப்பு மானும் ஒன்றாகும். இவற்றுள் அனேகமானவை , ஐரோப்பிய காடுகளிலேயே காணப்படுகின்றன. .இதைவிட, கஸ்கஸஸ் மலைப் பிராந்தியங்களிலும், துருக்கியிலும்,மேற்கு ஆசியாவிலும்,  மொரொக்கோ, ரியூனிசியாவுக்கு இடைப்பட்ட மலைப் பிராந்தியங்களிலும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, பேரு, உருகுவே,ஆர்ஜென்டீனா என்று பரவலாக உலகெங்கும் காணப்படும் இனம் இது!

மூஸ், எல்க், சம்பார் மான் என்ற வரிசையில், மான் இனங்களில் காணப்படும் மிகப் பெரிய இனங்களில் இந்தச் சிவப்பு மான் , நான்காவது இடத்தைப் பிடிக்கின்றது. இதன் எடை 240 கிலோ வரைக்கும் இருக்கின்றது. இதில்  சிறிய இனங்களும் இருக்கின்றன. இவை கோர்சிக்கா, சார்டீனியா தீவுகளில் வாழ்கின்றன. இவை  சுமாராக100 கிலோ எடை வரைகாணப்படுபவை.. ஆண்களுக்கு விரிந்த கொம்புகளுண்டு.இந்தக் கொம்புகள் சிலவற்றில் 6அடி அகலம்கூடஉண்டு. உலகத்திலேயே  மிகவும் பரந்த கொம்புள்ள பிராணி  இதுதானாம். ஒவ்வொரு  வருடமும்  ஜனவரியில் இந்தக்கொம்புகள் உதிர்ந்து ஆறு மாதத்தில் மீண்டும் முளைத்துவிடும். பின்னங் கால்களில்  நின்று கொண்டு 12-15 அடி உயரத்தில் இருக்கும் தழைகளைக்கூட உண்ண முடியும். ஒரு முறைக்கு ஒரு குட்டி போடும்

இந்த மானின் இறைச்சியில் ஒரு பெரிய  துண்டை  இங்கிலாந்து இராணி வருடாவருடம், அமைச்சரவையில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் வழமையில் இருந்து  வருகின்றது என்று கூறப்படுகின்றது. புரோட்டின் அதிகமாகவும், கொழுப்பைக் குறைவாகவும் கொண்டிருப்பது, இந்த இறைச்சியின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். மாட்டிறைச்சி, கோழி இறைச்சியை விட, இதன் இறைச்சி குறைந்த அளவு கொழுப்பைக் கொண்டுள்ளது.

இவற்றின் கொம்புகளைச் சுற்றி வளரும் ‘வெல்வெட்‘ தலைசிற்நத ஔடதமாகக் கணிக்கப்படுகின்றது. இந்த வெல்வெட்டை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக நியூசிலாந்து திகழ்கின்றது. இங்கு மான் பண்ணைகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. ஆசிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும், பல மில்லியன் டொலர் பெறுமதியான ‘வெல்வெட்டை‘ நியூசிலாந்து ஏற்றுமதி செய்கின்றது.இங்கு 2800 பேர் சுமாராக 1.1 மில்லியன் அளவு மான்களை தமது  பண்ணைகளில் வளர்த்து வருகிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியமூட்டும் தகவல்தான்! மயக்க ஊசி ஏற்றிய பின்பே, கொம்பைச் சுற்றி படையாக வளரும் வெல்வெட்டை அகற்றுகிறார்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு இரு சிறந்த மருந்தாக இருந்த போதிலும், அமெரிக்கா இதைச் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் அளவுக்கு மீறிய பாவனை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகின்றது.

கோரைப் பற்களைக் கொண்ட  சீன நீர்மான்

மான்கள் எல்லாமே கொம்புகள் கொண்டவைதான்! ஆனால் ஒரு விதிவிலக்காக சீனாவிலுள்ள நீர் மான்களுக்கு கொம்புகள் கிடையாது. நீர் மான் இனத்தில் ஆண் மான்களுக்கு வாயின் இரண்டு பக்கவாட்டிலும் கூரிய கோரை பற்கள்(தந்தம்) இருப்பது, இவற்றைத் தனித்துவமானதாக்குகின்றன. இப்படி ஒரு அபூர்வமான மான் இனத்திலும் இரு இனங்கள்-அதாவது சீன நீர் மான், கொரிய நீர் மான் என்ற இரு இனங்களை நாம் காண முடியும்.  இவற்றிற்கு ‘வம்பயர் மான்கள்‘ என்ற செல்லப் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். வம்பயர் என்பது இரத்தத் குடிக்கும் காட்டேரி வௌவாலைக் குறிக்கும் சொல்!

நல்ல நீச்சல்காரர்களான இந்த மான்கள் பல மைல்கள் தொடர்ச்சியாக நீந்தக்கூடியவை.சீனா, கொரியாவுக்கே உரித்தான இந்த இன மான்கள், இப்பொழுது பிரிட்டன், பிரான்ஸ், அமெரி்க்கா, ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.இவற்றின் கால்கள் நீண்டவை. முன்னங்கால்களை விட பின்னங்கால்கள் நீளமாகக் காணப்படும். முயல்களைப் போல் பாய்ந்தோடும்.

நறுமண வாசனைத் திரவியங்கள் தரும் கஸ்துாரி மான்

இந்தக் கஸ்துாரி மானும் நீர் மானைப் போன்றதுதான். இது  அரிதாகக் காணப்படுவதோடு.  இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்காகும்.   சீன நீர் மான்களைப் போன்று  இவற்றுக்கும் கொம்புகள் கிடையாது. ஆனால் நீண்ட மேற்பற்கள் இருப்பதும் (ஆண் மான்களுக்கு), இதன் பின் புறம் மணம் தரும் பொரு’ட்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புத் தன்மையாகும். . இது இரட்டைப்படைக் குளம்பி வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.

கறுப்புச் சந்தையில் இந்தக் கஸ்துாரி, கிலோ45,000 டொலர்கள் என்ற விலையில் விற்பனை போவதாகச் சொல்லப்படுகின்றது.

 

 

வேகம் மிக்க எழில் மான்கள்

Gazelle என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எடுப்பான , எழிலான இந்த மான்கள் அதிவேகமாக ஓடக்கூடியவை!. அதிகூடிய வேகமாக  சிறுத்தையைப் போல மணி்க்கு 100கி.மீற்றர் வேகத்தில் பாய்ந்தோடக் கூடிய சக்தி இவைக்குண்டு. இந்த இன மான்களைப் பார்த்த பிறகுதான் அழகிய பெண்களை மானே மயிலே என்றெல்லாம் ஆண்கள் அழைக்கத் தலைப்பட்டார்களோ என்ற நினைக்கத் தோன்றுகின்றது. அந்த அளவுக்கு அழகு மிக்க காட்டு விலங்குகள் இவை!

ஒட்டப் பந்தய வீரர்களுக்கான காலணிகளைத் தயாரிக்கும் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம், இந்த மானின் பெயரிலும் காலணிகளைத் தயாரிக்கின்றது. இவற்றுள்பல இனங்கள் இருக்கின்றன. அதிகமானவை ஆபிரிக்க காடுகளில்தான் உள்ளன. அளவில் சிறியதும் , எழில் மிக்கதும், மிக வேகமாக ஓடக்கூடியதுமான இன்னொரு இனமே இம்பாலா. இதன் பெயரில் மிகப் பிரசித்தமான சொகுசு கார் ஒன்றை அமெரிக்கா நீண்ட காலமாக உற்பத்தி செய்து வருகின்றது. . இம்பாலா என்ற பெயர் சுலு மொழியில்இருந்து பெறப்பட்டது. இது ஆபிரிக்காவில் உள்ள புல்நிலங்களிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது. இதன் உயரம் 75 செ. மீ. முதல் 95 செ. மீ. வரை இருக்கலாம்.  பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து ‘M’ போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்குக் கொம்புகள் உண்டு. 90 செ. மீ. நீளம் வரை வளரும். பெட்டைகளுக்குக் கொம்புகள் கிடையாது

 

அளவில் பெரிய ஆசிய மான்

மூஸ், சிகப்பு மான்  போல  வட அமெரிக்காவிலும் தெற்கு ஆசியாவில் பெரிய இனமாக இருப்பது எல்க் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கடமான் இனமே! இதை நம் நாட்டில் மரை என்றே அழைக்கிறார்கள். சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்கள் கடமான், கடமா, கடமை, கடம்பை என்று குறிக்கப்படுகின்றன. கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன.இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடாமாநிலங்களிலும், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றது.

ஒரு நல்ல வளர்ந்த மாடு நிற்பது போன்ற தோற்றத்தையே இது தரும்.  வட அமெரிக்காவில் ஆணை எருது என்றும்,  பெண்ணைப் பசு என்றுதான் அழைக்கிறார்கள்.அதனுடைய பரந்த கிளைவிட்ட கொம்புகள் இதனை மான் என்று அடையாளப்படுத்தி விடும். இந்த மான் மூலம் ஏனைய கால்நடைகளுக்கு பல தொற்று நோய்கள் பரவி விடுவதாகச் சொல்லப்படுகின்றது. அலஸ்கா பிராந்தியத்தில் ‘ரூஸ்வெல்ட் எல்க்‘ என்று அழைக்கப்படும் இனத்தின் எடை 600கிலோ வரை இருந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. கீழே கிடந்து தங்கள் சிறுநீரால் தங்கள் உடலை நனைக்கும் ஆண்கள்,  இந்த வாடையில் பெண்களை ஈர்க்க. இந்த வழிமுறையைக் கையாள்கின்றன.

அளவில் சிறிய ஆசிய ஆபிரிக்க மான்கள்

‘புடு‘  என்பது தெ.அமெரிக்க நாடான சிலிக்குரிய ஒரு சொற்பதம்.உலகின் மிகச் சிறிய மான் இனங்களுள் இதுவும் ஒன்று. ஆர்ஜென்டீனாவிலும், சிலியிலும் இந்தச் சிறிய இனங்கள் வாழ்கின்றன.32 தொடக்கம் 44 செ.மீ. உயரமும்  85செ.மீற்றர் நீளமும் கொண்ட இந்தச் சிறிய மான்கள்  அழிந்து கொண்டு வருபவை. 6 கிலோவுக்கு மேல் இதன் எடை இருப்பதில்லை. இவை தனித்து வாழும் இனம் என்பதால், இதன் நடவடிக்கைகைளை அறிவது மிகச் சிரமம் என்கிறார்கள். நன்றாக மரங்களில் ஏறக்கூடியது, பாயக்கூடியது, வேகமாக ஓடக்கூடியது என்பதால் இதைப் பிடிப்பதும் சாத்தியமானதல்ல! ஆந்தைகள், நரிகள்தான் இவர்களது எதிரிகள்!

டிக் டிக் என்று அழைக்கப்படும் ஆபிரிக்க மான்கள் நீளத்தில் 50- 70செ.மீற்றர் வரை காணப்படும். எடை 5 தொடக்கம் 6 கிலோ வரைதான்! உயரம் 30 தொடக்கம் 42வரை இருக்கும்.பெண் மான்களை எச்சரிக்க இவை விசிலடிப்பது போன்று குரல் கொடுக்கும். அதனால்தான் இதனை டிக் டிக் என்று அழைக்கிறார்கள். கிழக்கு ஆபிரிக்காவிலும் தெற்கு ஆபிரிக்காவிலும் இவை காணப்படுகின்றன.

தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுவதுதான் சருகு மான்கள் எனப்படும் இன்னொரு சிறிய இனம். இதை ஆங்கிலத்தில் Mouse Deer  என்பார்கள்.  மே.ஆபிரிக்க காடுகளிலும் இவை காணப்படுகின்றன. ஆச்சரியமூட்டும் வகையில் இது நன்கு வளர்ந்த எலியைப் போன்றே தோற்றமளிக்கும். இவற்றுக்கு கொம்புகள் இல்லை, சிறிய வால் உண்டு. ஆசிய இனங்கள் 0.7 – 8.0 கிலோகிராமுக்கு (1.5 – 17.6 இறாத்தலுக்கு) இடைப்பட்ட எடை உள்ளவை . இவை உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினமாகும்.  ஆபிரிக்க சருகுமான் 7-16 கிலோகிராம் (15-35 இறாத்தல்) எடையுள்ளது. பிற சருகுமான் இனத்தைவிட,  இவை பெரியதாகும். உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு.  இவை ஒரு சோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இவை இலங்கை, தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.

கிறிஸ்மஸ் தாத்தாவின் வ்ண்டியை இழுக்கும் றெயின்டீர் மான்கள்.

இந்த இன மான்களை வட அமெரிக்காவில் கரீபு என்று அழைக்கின்றார்கள். இவை துருவப் பகுதிகளில் காணப்படுபவை. கூட்டமாக வாழ்பவை. ருஸ்யாவில் வாழும் கூட்டமே மிகப் பெரியது என்கிறார்கள். 4000 தொடக்கம் 10,000 வரையிலான மிருகங்கள் இந்தக் கூட்டத்தில் காணப்படுவதுண்டாம். இவை இறைச்சி, தோல், கொம்புகள், பால் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காகப் பயன்படுகின்றன. ஆண், பெண் இரண்டிற்குமே கொம்புகள் வளர்கின்றன. பொதுவாக ஆண் ரெயின்டீர்களின் கொம்புகள் பெரியவையாக உள்ளன. நீங்கள் நத்தார் வாழ்த்து அட்டைகளில் காணும் மான் இதுதான்! பிரபல்யமான கிறிஸ்மஸ் தாத்தாவின் வண்டியை பரிசுப் பொருட்களுடன் இழுத்துச் செல்வது இந்த ரெயின்டியர்கள்தான்!

இப்படியாக இந்த அழகிய மிருகங்களின் கதைகளை நீட்டிக்கொண்டே போகலாம். இக் கட்டுரையை முடிக்கு முன்ப ஒரு சுவாரஸ்ஸியமான தகவலைப் பகிர்ந்து கொள்வோம்.

Buck என்ற ஆங்கிலச் சொல்லை அறிவீர்களா?  இது ஆண் மானைக் குறிக்கும் சொல். அமெரிக்காவில் ஒரு டொலர் தாளை , இப்படித்தான் அழைப்பார்கள். இதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. 18ம்,19ம் நு ற்றாண்டுகளில் மான் தோல் அல்லது முழு மான் பணமாக அமெரிக்கர்களால் பாவனையில் இருந்துள்ளதால்தான், இன்றும் ஒரு டொலரை இப்படி அழைத்து வருகிறார்கள்.

 

25.02 உதயன் வாரமலர்-சூரியகாந்தி

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *