மரத்தை மணஞ் செய்வோம்

மரத்தை மணஞ் செய்வோம்

7 views
0

ஏவாளுக்கு ஆதாமைப் படைத்து, இவன் உன் வாழ்க்கைத் துணைவன் என்று சொல்லி வைத்தார் கடவுள். ஆனால் மனிதனோ புத்தி தலைக்கேறி, அவன் இஸ்டப்படியெல்லாம் வாழ ஆரம்பித்து விட்டான். “ஏவாளுக்கு இன்னொரு ஏவாள்”, “ஆதாமுக்கு இன்னொரு ஆதாம்” என்றெல்லாம் வாழத் தலைப்பட்டு விட்டது உலகம்.

இதையெல்லாம் ஓரங் கட்டுவது போல, வெறும் ஜடங்களையும் , வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொள்ளும் காலம் வந்திருக்கின்றது. சட்டரீதியான திருமணம் இல்லையென்ற போதிலும், மெக்சிக்கோவில், இளம் பெண்கள், மரங்களைக் கணவனாக வரித்துக் கொள்ளும் நிகழ்வுகள் இங்கு புதினமாகத் திகழ்கின்றது. மரங்கள் களவில் வெட்டிச் சாய்க்கப்படுவதை எதிர்த்தே, .இந்தப் புதுமையான திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன.

மெக்ஸிக்கோவின் நிலப்பரப்பில் மூன்றிலொரு பகுதி, காடுகளால் நிறைந்துள்ளது. . இங்கே களவில் மரங்களை வெட்டுவது ஒரு பெரிய களவாணிக் கும்பலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. குறிப்பாக ஒயக்ஸாக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, ஐந்து பிராந்தியங்களுள் ஒன்றாக இருக்கின்றது.

“மரத்தை மணஞ் செய்வோம்” என்ற அமைப்பை ஆரம்பித்து. ,இங்குள்ள இன்கா இனத்தவர்களின் வழமையைப் பின்பற்றிய சடங்குகள் நடாத்தப்பட்டு, இளம் பெண்கள் நல்ல மரங்களைத் தேர்ந்தெடுத்து, தமது கணவன்மாராக வரித்துக் கொள்கிறார்கள். திருமணப் பெண்ணைப் போல, அழகாக வெண்ணிற ஆடையணிந்து வரும் இவர்கள், தாம் தெரிந்தெடுக்கும் மரத்தைச் சுற்றி, வரிந்து கட்டிவிடுகிறார்கள். அரத நம் மொழியில் சொல்வதானால், மரத்திற்கு “தாலி கட்டி” சொந்தமாக்கி விடுகிறார்கள்

“மரங்கள் எம்முடன் பேசுவதில்லை. ஆனால் அவை ஓலமிடுவது எம் காதில் விழுகின்றது. அநியாயமாக அழிகின்ற மரங்களை நாம் காப்பாற்றுவோம்” என்கிறார் மணக்கோலத்தில் நின்ற ஓர் இளம்பெண்!.

காட்டுக் குதிரைகள் கதை முடிந்த கதையா?

 

காட்டுப் பூனைகள் காட்டு நாய்கள்  போல்,  காட்டுக் குதிரைகள் இன்றும் இருக்கின்றனவா? காட்டுக் குதிரை என்பது, யாரோ ஒருவரால் , வீட்டில் சாதுவான மிருகமாக வளர்க்கப்பட்டு, , பின்பு, எஜமானிடமிருந்து தப்பியோடி, தன்னிச்சையாக வளர்ந்த ஒன்று என்கிறது புதிய ஆய்வு. . இந்த ஆய்வின்படி பார்த்தால், உண்மையான காட்டுக் குதிரைகள், பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இல்லாதழிந்து விட்டன என்றே கொள்ளுதல் வேண்டும். .  அமெரிக்காவிலுள்ள முஸ்ராங் என்ற இனக் காட்டுக் குதிரைபோல, உலக நாடுகளெங்கும் உள்ள “காட்டுக் குதிரைகள்” என்று சொல்லப்படும் குதிரைகள், என்றோ எவராலோ வளர்க்கப்பட்டு, தப்பியோடியவைதான் என்பதே இவர்கள் ஆய்வின் முடிவு. . இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட அமெரிக்காவின் கன்ஸாஸ் மாநிலப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உயிரியலாளர் சன்டிரா ஒல்சன், இது பெரிய ஆச்சரியம் என்று அபிப்பிராயப்படுகிறார்.

இதன்படி பார்த்தால், மொங்கோலியாவில்  இன்று எஞ்சியிருக்கும்  2000 வரையிலான குதிரைகளைத்தான், உலகில் காட்டுக்குதிரைகள் எஞ்சியுள்ள ஒரே இடம் என்று இதுவரையில் கருதப்பட்டு வந்தது. இந்தக் குதிரைகள் கூட, அறுபதுகளில், அழியும் விளிம்பு நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இவற்றை முறையாக வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், , அழிவிலிருந்து மீட்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஆய்வின்படி, இந்த இனக் குதிரைகள் காட்டுக் குதிரைகள் அல்ல. 5500 வருடங்களுக்கு முன்பு, வட கஸகஸ்தானில், வாழ்ந்தவர்களால் வளர்க்கப்பட்டு வந்தவைதான் என்று கண்டறியப்பட்டுள்ளது. .அதேபோல காட்டுக் குதிரைகள் எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் முஸ்ராங் இனக் குதிரைகள், ஸ்பானியர்களால், ஒரு நுாற்றாண்டுக்கு முன்னர்,வட அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.  கண்ணால் காண்பது பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்.

அதிகரிக்கும்சைபர்குற்றங்கள்!

2017இல் மட்டும் 6 மில்லியன் இணைய மேய்ச்சல்காரர்கள், ”தாக்குதலுக்கு” உள்ளாகி இருக்கின்றார்கள். அதுவும் இந்தத் தொகை அவுஸ்திரேலியாவில் மட்டும் என்பது அதிர்ச்சியான தகவல்!. இணையப் பாவனையாளர்கள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரிப்பது போல, இணையத்தை திருட்டுத்தனமாக ஊடுருவுபவர்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றார்கள்.

அவுஸ்திரேலியாவின் ஜனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 2.3 பில்லியன் டொலர் தொகையும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றன புள்ளி விபரங்கள்!  வங்கிக் கணக்குகளை முடக்கும் இந்தப் பொல்லாத ”ஆக்ரமிப்பிலிருந்து” விடுபட மிகக் குறைவானவர்களே பாதுகாப்பு நடவடிக்கைகைளில் இறங்கியுள்ளார்கள் என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

27 வயதான ஜொசூவா கேஸ்மோர் என்பவர், தன் கடன் அட்டை விபரங்களைத் திருடியவர்கள்,12,000 டொலர் (சுமாராக 19இலட்சம் ரூபா) தொகைக்கு , கடந்த வருடம் வலன்டைன் தினமன்று, கணனி தொடக்கம் பூக்கள் வரை வாங்கி, தன்னை 19இலட்சம் ரூபாவுக்கு கடனாளியாக்கி இருக்கின்றார்கள் என்று குமுறுகிறார்.

இவரைப் போல 6 மில்லியன் அவுஸ்திரேலியர்கள், தங்களுக்குள்ள நிதி அழுத்தங்களோடு, , இந்தச் சைபர் குற்றங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகின் பிரபல்யங்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. நிக்கலோ கிட்மான் போன்ற ஹாலிவுட் பிரபல்யங்களின் வங்கிக் கணக்குகளிலும் இவர்கள் கைவைத்துள்ளார்கள். 2014இல் ஜெனிபர் லோரன்ஸ், கிம் கர்டாஷியான் போன்றவர்கள் இவர்களிடம் சிக்கியிருந்தார்கள்.  உங்கள் அலைபேசிகளைத் தவற விடுவதும், சிக்கலற்ற கடவைச் சொற்களை உபயோகிப்பதும், வீண்வம்பை விலைக்கு வாங்க உதவும் என்பதை உன்றுமே மறந்து விடாதீர்கள்.

11.03

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *