மறைந்து நின்று தாக்கும் கொரில்லாக்கள்-தெரிந்த மிருகம் தெரியாத கதை

மறைந்து நின்று தாக்கும் கொரில்லாக்கள்-தெரிந்த மிருகம் தெரியாத கதை

14 views
0

மனிதனைப் போலவே பல வழிகளில் நடந்து கொள்ளும், ஒராங் உட்டான் என்ற மனிதக் குரங்குகளைச் சென்றவாரம் சந்தித்தோம். இந்த இனக் குரங்குகளைப் போல, மனித குணாம்சங்கள் பலவற்றைக் கொண்டதுதான் கொரில்லாக்கள் எனப்படும் குரங்குகள். வேகமாக அழிந்து வரும் ஓர் இனமாக இது மாறியிருப்பது கவலைக்குரியதே! இவை அதிகமாகக் காணப்படும் ஆபிரிக்க நாடான கொங்கோவின் காடுகளில், 2020ம் ஆண்டளவில் இந்தக் குரங்குகள் பெரும் பகுதிகளில்  அழிந்துவிடலாம்,  என்று ஐ.நா.சபை அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள். பல அரிய , அழகிய மிருகங்கள், மனித பேராசையினால் படிப்படியாக அழிந்து, இறுதியில், எமது பிள்ளளைகள் வெறும் சித்திரங்களாகவே பார்க்க வேண்டிய நிலைமையே இன்று உருவாகி வருகின்றது.

அழிகின்ற அரிய இனம்

மனிதர்களைப் போல, இந்தக் கெரில்லாக்களும், மெதுவாகவே இனவிருத்தி செய்கின்றன. ஒரு தடவையில் ஒரு குட்டியே ஈனும். இந்தக் குட்டியை வளர்ப்பதில் நீண்ட காலத்தைச் செலவிட்ட பின்னரே, அடுத்த குட்டியை ஈனும். அதாவது ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு தடவையே இவை குட்டி ஈனுவதால், மானைப் போன்றோ, முயலைப் போன்றோ காடுகளில் இவை வேகமாக பல்கிப் பெருகுவதில்லை.. அது மாத்திரமல்ல மரங்கள் வேகமாக வெட்டப்பட்டு காடுகள் அழி்க்கப்படுவது, , இவற்றின் அழிவைத் துரிதப்படுத்துகின்றன. சுரங்கங்கள் வெட்டப்படுவது, வாயு உற்பத்தித் தொழிற்சாலைகள், , எண்ணெய் அகழ்வு, பலகை வியாபாரம் என்ற பல காரணங்களுக்காக, இவைகள் வதியும் காட்டுப் பிராந்தியங்கள் அழிக்கப்படுவது,கொரில்லாக்கள் அழிந்துபோக ஒரு காரணமாகும்.  மூன்றாவது காரணியாக இருப்பது இவற்றின் மாமிசம். ஆபிரிக்கர்கள் இதைக் கொன்று உண்கிறார்கள். இவற்றின் உடம்பிலுள்ள எபோலா என்ற பயங்கரமான கிருமி இதன் மூலம், மனித உடலைச் சென்றடைகின்றது. இரத்தம் கக்கி சாகவைக்கும் நோய்தான் எபோலா. இது மனிதர்களை மாத்திரமல்ல, கொரில்லாக்கைளையும் கொன்றழிக்கின்றது. 2003இல் எடுத்த ஒரு கணிப்பின்படி, 17 வீதமான குரங்குகளே பாதுகாப்புப் பிரதேசங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மனிதனுக்கு மிக நெருங்கிய இனம்

கொரில்லாக்களின் நெருங்கிய உறவுகளாக மனிதர்களையும், வாலில்லா மனிதக் குரங்கான சிம்பன்சியையும் கூறலாம்.  எல்லாமே முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவைகளாகக் குறிப்படுகின்றன. எல்லாவற்றிலுமே மிகப் பெரிதாக உள்ள வளர்ந்த ஒரு ஆண் கொரில்லாவின் எடை 135க்கும் 195க்கும் இடையிலான கிலோ எடை கொண்டதாக இருக்கும். இவற்றின் உயரம் 1.5மீற்றர் தொடக்கம் 1.6 மீற்றர் வரை இருக்கும். இதன் புஜம் 2.6 மீற்றர் வரை விரிந்து கொடுக்கும். அதிகூடிய எடைகொண்ட கொரில்லாவாக கமரூனில் 1.83மீற்றர் உயரமும் 267கிலோ எடையும்  கொண்ட மிருகமொன்று இருந்துள்ளது. ஆணின் எடையில் பாதி அளவைக் கொண்டதாகவே பெண் காணப்படும்.  ஒருவரது தொழிற்பாட்டையும் விருத்தியையும் நிர்ணயிக்கும் கொரில்லாவின் டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால் சிம்பன்சிக்கு அடுத்ததாக மனிதனுடன் நெருங்கியிருக்கும் உயிரினம் இதுவாகின்றது.

பிரிந்த இனங்களாக உள்ள கொரில்லாக்கள்

மலைக் கொரில்லா  கிழக்கத்திய கொரில்லா இனத்தின் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்றாகும். இவைகளில் ஒரு பிரிவு மலைக் கொரில்லாக்கள்  மத்திய ஆபிரிக்காவின் விருங்க எரிமலைப் பிராந்தியத்திலும்,, தென்மேற்கு உகண்டா, வடமேற்கு ருவாண்டா மற்றும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசு நாடுகளின் தேசியப் பூங்காக்களிலும் காணப்படுகிறது. மலைக் கொரில்லாக்களின் மற்றொரு இனம் எளிதில் செல்ல இயலாத உகாண்டாவின் பிவிண்டி தேசியப் பூங்காவில் உள்ளது. செப்டம்பர், 2015-இல் இங்கு 900 மலைக்கொரில்லாக்கள் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். மேற்கில் இருப்பதோ அல்லது கிழக்கில் இருப்பதோ, இரு இனங்களுமே அழிந்து கொண்டிருக்கின்றன.

மேற்கிலுள்ள இனத்தை விட, கிழக்கிலுள்ள இனம் கூடுதல் கறுப்பு நிறமுடையது. .மலை கொரில்லாக்கள்  அதி கறுப்பு நிறமானவையாகக் காணப்படுகின்றன. மிகத் தடித்த உரோமம் மலைக் கொரில்லாகளுக்கே உண்டு. மேற்கு தாழ்பிராந்திய கொரில்லாக்களின் நெற்றி சிவந்திருக்கும். . மலைகொரில்லாக்கள் உடல் பருத்திருக்கும். ஆனால் தரைவாழ் கொரில்லாக்கள் இவற்றைவிட மெலிந்த உடல்வாகு கொண்டிருப்பதோடு, மிக வேகமாக இயங்கும் திறனைக் கொண்டுள்ளன. கிழக்கத்தைய கொரில்லாக்களின் முகங்கள்  நீண்டிருப்பதோடு, நெஞ்ச அகன்றும் இருப்பதுண்டு.

நீர் அருந்துவது குறைவு

மலைவாழ் கொரில்லாக்கள் இலைகுழைகளை அதிகமாகவும், பழங்களைக் குறைவாகவும் உண்ணும் சுபாவம் கொண்டவை. இவற்றின் உணவு பரவலாக இருப்பதால், ஒன்றுடன் ஒன்று உணவுக்காக போட்டியிடுகின்றன. . ஆனால் கிழக்கத்தைய கொரில்லாக்களின் உணவில் 25 வீதமானவை பழங்கள்தான்!.  பூச்சிகளை குறிப்பாக  எறும்புகளை இவை தேடி உண்கின்றன.ஆனால் இவை  தினமும் தமது உணவுக்காக நிறையத் துாரம் நடக்கின்றன. தண்ணீர்த் தன்மை கொண்ட இலைகுழைகளை இவை அதிகம் உண்பதால், நீர் அருந்துவது குறைவு. ஆனால் மலை கொரில்லாக்கள் நீர் அருந்தும் சுபாவம் கொண்டவை.

 

25 மாறுபட்ட குரல்கள்

தங்களுக்குள் தொடர்புகளை வைத்திருக்க 25 வேறுபட்ட குரல்களுக்கு இந்தக் கொரில்லாக்கள் சொந்தக்காரர்கள் என்பது என்பது நம்மை அதிசயப்பட வைக்கும் ஒரு தகவல். அடர்ந்த காடுகளூடாக இவை எழுப்பும் குரல்கள், இவை எங்கே நிற்கின்றன என்பதை தனது குழுவினருக்குத் தெளிவுபடுத்தி விடுகின்றன. குரைப்பது போன்ற குரல் எழுப்புதல், அலறுதல், கர்ஜனை போன்று சப்தமிடுதல் என்று இவை எழுப்பும்  குரல்கள் மாறுபடுவதுண்டு. எச்சரிக்கை ஒலி அலறல் அல்லது கர்ஜனை மூலம் அனுப்பப்படுகின்றது. அடிவயிற்றால் ஏப்பம் விடுமாற்போல குரல் எழுப்புவது, , வயிறு நிரம்பியதை வெளிப்படுத்துவதுண்டு. பல சமயங்களில் , பிரச்சினைகள் உருவாகும்போது, குரல்கள் மூலமே “மிரட்டல்கள்” பரிமாறப்பட்டுக் கொள்வதால், நேரடி மோதல்கள் அதிகமாக தவிர்க்கப்பட்டு விடுவதுண்டு. பல வழிகளில் இவை  மிரட்டுவதுண்டு. மரங்களில் கிளைகளை முறித்து வீசுதல், நெஞ்சில் இரு கைகளாலும் பலமாக அறைதல், ஒரு காலால் எம்பி உதைத்தல், என்று பல வழிகளில் இவை ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகின்றன.

வாழுங்காலம்

ஒரு வளர்ந்த ஆண், பல பெண்கள், குட்டிகள் அடங்கியதாகவே இவற்றின் “படை” அமைவதுண்டு. பொதுவாக இவை காடுகளில் வாழும் காலம் 35 தொடக்கம் 40 வருடங்களாக இருக்கும். எனினும் மிருகக்காட்சிசாலையில் பராமரிக்கப்படுவது, 50 வருடங்கள் வரையில் வாழ்கின்றன. அமெரி்க்காவின் ஓஹியோ மாவட்டத்தின், கொலம்பஸ் மிருகக்காட்சியகத்தில் வளர்ந்த ஒரு கொரில்லா, தனது 60வது வயதில், கடந்த வருடம் ஜனவரி மாதம் மரணித்தது ஒரு சாதனையாக இருக்கின்றது.

கொரில்லாப் போர்முறை

கரந்தடிப் போர்முறை அல்லது கொரில்லாப் போர்முறை என்பது, ஓர் ஒழுங்கற்ற போர்முறையாகும்.. பதுங்கித் தாக்குதல், நாசமாக்கித் தாக்குதல், திடீர்த் தாக்குதல் முறைகளே இந்தப் போர்முறையில் கையாளப்படுகின்றன. 1809ஆம் ஆண்டு தொடக்ந்தான் இந்தக் கொரில்லாப் போர் என்ற ஆங்கிலப் பதம் நடைமுறைக்கு வந்தது. உலகின் பல பாகங்களிலும் கையாளப்படும் இந்தக் கொரில்லாப் போர் என்ற சொல், ஸ்பானிய மொழியில் சிறு போர் என்றே அர்த்தம் கொண்டது. மா சே துங் இந்தக் கொரில்லாப் போர்முறையை “எதிரி முன்னேறுகிறான், நாம் பின்வாங்குகிறோம்; எதிரி தங்குகிறான், நாம் துன்புறுத்துகிறோம்; எதிரி களைப்படைகிறான், நாம் தாக்குகிறோம்; எதிரி பின்வாங்குகிறான், நாம் துரத்துகிறோம்” என்று சுருக்கமாக முன்னொரு தடவை விளக்கியிரு்ககின்றார்..

ஒரு மிருகத்தின் தாக்குதல் முறையைப் பின்பற்றி, மனிதன் வெற்றி தேவதையை அணைப்பதைக் கவனித்தீர்களா? ,

09.03

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *