அறிந்த மிருகம் அறியாத கதை-கங்காரு

11 views
0

”ஒரு நுாதனமான மிருகமாகவே, ஐரோப்பியர்கள் கங்காருவை நோக்கியிருக்கின்றார்கள். ஆரம்ப கால தேசாந்திரிகள்  மானைப் போன்ற தலை ஆனால் கொம்புகள் கிடையாது. மனிதனைப் போல நேராக நிமிர்ந்து நிற்கும். தவளைகள் போல பாய்ச்சல்.. இரண்டு தலைகள் கொண்டது போல தேமாற்றமளிக்கும் தாய்க் கங்காரு என்ற பார்வையில்தான் இந்த நுாதனமான மிருகத்தைப் பார்த்திருக்கின்றார்கள்.”

அதென்னகங்காரு? இதுஎந்த மொழிப் பெயர்?

இதையறிய சற்றுப் பின்னோக்கிப் போகவேண்டும்.

தேசாந்திரியான ஜேம்ஸ் குக் புதுப்புது தேசங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கோடு பயணங்களை மேற்கொள்பவர். இவர்இப்படி ஒருதடவை , தன் கப்பலில் பயணித்தபோது, கப்பல் பழுதுபட்டு விட்டதால்,இன்று இவர் பெயரால் அவுஸ்திரேலியாவில் அழைக்கப்படும் குக்ரவுண் என்ன்னுமிடத்தில் தரையிறங்கியிருக்கின்றார். இவருடன் கனவான் ஜோசப் பாங்ஸ் என்பவரும் இருந்துள்ளார். இவர்கள் இங்கே கண்ட வித்தியாசமான மிருகமொன்றைக் கண்டு இந்த மிருகத்தின் பெயர் என்னவென்று அங்கே கண்ட ஒருவரைக் கேட்டுள்ளார். இவர்களைச் சந்தித்த ஆதிவாசி ‘நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை‘ என்ற பொருள்பட, ‘கங்காரு‘ என்று அவன் மொழியில் பதில் கொடுத்துள்ளான். ஆகஸ்ட்4, 1779இல் குக்கின் டயரிக்குறிப்பில், முதற்தடவையாக இந்த கங்காரு என்ற சொல் காணப்படுகின்றது.

கங்காரு இனத்தில் மிகப்பெரியவர்

அவுஸ்திரேலியாவிலும், அதனை அண்டிய தீவுகளிலும் மாத்திரமே காணப்படும் கங்காரு என்ற இந்தப் பாலுட்டி விலங்கினங்களில் 4 இனங்கள் உள்ளன. சிகப்பு கங்காரு இனந்தான் மிகப் பெரியது. அவுஸ்திரேலியாவின் மேற்கத்தைய நியூசவுத்வேல்ஸ் பிராந்தியத்தில் இந்த இன மிருகங்கள் நிறையக் காணப்படுகினறன. நன்கு வளர்ந்த ஒரு ஆண் கங்காருவின் உயரம் 2 மீற்றர்வரையில்இருக்க, இதன் எடைசுமாராக 90 கிலோவரை உள்ளது.. கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு  சிவப்புக் கங்காரு என்பதோடு, இது அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்  பெரிய  முலையூட்டியும் ஆகும்.

இவை அவுஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள செழுமையான பகுதிகள், கிழக்குப் பகுதியில் உள்ள கரையோரப்பகுதி, மற்றும் வட பகுதியில் உள்ள மழைக்காட்டுப் பகுதி தவிர்ந்த மற்றைய பகுதிகள் அனைத்திலும் பரந்து காணப்படுகின்றன. இவை சிறிய பற்றைச் செடிகளையும், காட்டுத்தாவரங்களையும் உண்டு வாழ்கின்றன.இவற்றின் மலம் உலர்ந்ததாகவே கானப்படுகிறது. இதன் உடலில் நீர் சேமிப்பதற்கான ஓர் உபாயமாகவே இது கருதப்படுகிறது.எனினும், வியர்வையால் இதன் உடலில் இருந்து நாளாந்தம் சிறிதளவு  நீர் வெளியேற்றப்படுவதனால், இந்த சிவப்புக் கங்காருக்கள் நாளாந்தம் நீர் தேடி அப்பகுதிகளிலுள்ள சிறிய ஏரிகளை நாடுகின்றன

தெற்கில் சாம்பர் கங்காரு இனம் பெருந்தொகையில் உள்ளது. பசுமை நிறைந்த கிழக்குப் பிராந்தியங்களையே இவை விரும்புகின்றன. வடகுயீன்ஸ்லாந்தின் மேலுள்ள கேப்யோர்க் பெனிசூலா தொடக்கம், விக்ரோடாரியா வரைக்கும் இவற்றின் ஆக்ரமிப்பு இருப்பதோடு, தென்கிழக்கு அவுஸ்திரேலியா, தஸ்மேனியாவிலும் இவை வாழ்கின்றன.  .மீற்றர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சுமாராக 100  மிருகங்கள் வரையில் காணப்படுவதுண்டாம்.

மேற்கத்தைய சாம்பர் இனம் என்பதுமூன்றாவது இனம்.  சுமாராக 54 கிலோ எடையுடைய இந்த இன மிருகங்கள் ஏனைய இனங்களைவிட, அளவில் சற்றே சிறியவை. மேற்கு அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் இவற்றைக் காணமுடியும்.நான்காவது இனத்தின் உரோமம் அன்ரிலோப் என்று அழைக்கப்படும் பெரியமான் இனத்தின் உரோமத்தை ஒத்திருப்பதால், அந்தப் பெயர் கொண்டேஇவற்றை அழைத்து வருகின்றார்கள். ஆனால் இதன் குணாம்சங்கள், சாம்பர், சிகப்பு கங்காரு இனங்களை ஒத்தவையாகவே இருக்கின்றன.

ஆங்கிலேயரும் கங்காரும்

ஒரு நுாதனமான மிருகமாகவே, ஐரோப்பியர்கள் கங்காருவை நோக்கியிருக்கின்றார்கள். ஆரம்ப தேசாந்திரிகள்  மானைப் போன்ற தலை ஆனால் கொம்புகள் கிடையாது. மனிதனைப் போல நேராக நிமிர்ந்து நிற்கும். தவளைகள் போல பாய்ச்சல்.. இரண்டு தலைகள் கொண்டது போல தேமாற்றமளிக்கும் தாய்க் கங்காரு. இப்படித்தான் அவர்கள்  தாம் கண்ட அந்த நுாதனமான மிருகத்தை விபரித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலிய பயணிகள் இங்கிலாந்து திரும்பியபோது, இப்படியெல்லாம் விபரித்ததை பலர் நம்ப மறுத்தார்கள். வெறும் கட்டுக்கதை என்றே தட்டிக் கழித்தார்கள்.

கப்டன் குக்குடன் பயணித்த ஜோண் கோர் என்ற அதிகாரி, 1770இல் ஒரு மிருகத்தைச் சுட்டு, அதன் தோலையையும், மண்டையோட்டையும், இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்பு அதை உயிருள்ள ஒரு கங்காரு போலாக்கி , பார்வைக்கு வைத்து, ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றார்..

தவளைப் பாய்ச்சல்

இவற்றின் தவளைப் பாய்ச்சல் வேகம் மணிக்கு 20-25 கி.மீ! ஆனால் சிங்கத்தைப் போல குறுகிய துரத்திற்கு மணிக்கு 70கி.மீற்றர் வேகத்தில் இவற்றால் ஓட முடிகின்றது. இரண்டு கி.மீற்றர் துரத்திற்கு மணிக்கு 40கி.மீற்றர் என்ற நிலையான வேகத்தில் ஓடமுடியும். தினமும் தமது உணவுக்காகவும், நீருக்காகவும் நீண்ட துரம் பயணித்து , இவை தம் உடம்பை வேகமாக நகர்த்தும் பக்குவத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளன.

நல்ல நீச்சல்காரன்! பொதுவாக தனது எதிரிகளிடமிருந்து தப்ப, நீருக்குள் குதிக்கும் சுபாவம் இதற்குண்டு. முதலையைப் போல தண்ணீருக்குள் இதன் பலம் அதிகம். முன்னங்கால்களால் தாக்கி தன் எதிரியை தண்ணீருக்குள் மூழ்கடிக்கும்  குணம் கொண்டவை இந்த கங்காருக்கள்.

காதலிக்கான வேட்டை

தனக்கொரு காதலியைத் தேடும் பணி,  ஆண்களுக்கு சுலபமாக அமைந்து விடுவதில்லை. உடல் உறவு வைத்துக்கொண்ட பின்னர், காதலியை  ஆண் ,அம்போவென்று விட்டு விடும் , தனக்கொரு காதலியைத் தேட, கண்கொத்திப் பாம்பாக காதலியைக் கண்காணிக்க வேண்டியிருக்கின்றது. பெண்ணின் ஒவ்வெரு அசைவையும் அவதானித்து, அதன் சிறுநீரை முகர்ந்து, உறவுக்கு இது தயாரா என்று அறிந்து கொள்ள முற்படுகின்றது. இதை உறுதிப்படுத்தியதும், பெண்ணை அச்சுறுத்தாது, மெல்லமெல்ல ஆண் நெருங்குகின்றது. தன்னைக் கண்டு மிரண்டு பெண் ஓடவில்லையென்றால், நக்குதல், சுரண்டுதல், கால்களால் தட்டிக்கொடுத்தல் என்று சிறு சேஷ்டைகள் முடிவில், பெண்ணுடன் ஆண் உறவு வைத்துக் கொள்கின்றது. இது முடிந்த கையோடு, அடுத்த காதலிக்கான வேட்டை ஆரம்பித்து விடும். என்ன பொறாமையாக இருக்கிறதா? இப்படியான கன்னி வேட்டையை எந்த ஆண்தான் விரும்பாது இருப்பர்?கவனிக்கவும் .இது காட்டுச் சட்டம். காட்டுவாழ்வு.!

 

சண்டைக்கார கங்காருகள்

எல்லா இனங்களுமே சண்டைக்காரர்கள்தான்! இந்தச் சண்டைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு காதலியில் ஒருவருக்கு மேற்பட்டவர் கண்வைத்து விட்டால். காதலுக்கு முதல் மோதல் ஆரம்பமாகி விடுகின்றது. வென்றவர்தான் பெண்டாள முடியும். குடிநீர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கின்ற ஒரு சூழலில், தண்ணீருக்காக அடிபடும் நிலைவரும். .கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு சடங்காக, ஆண்கள் ஒன்றுடன் ஒன்று குத்துச் சண்டையில் ஈடுபடுவதும் உண்டு. இளசுகளின் சவால்களை பெரிசுகள் ஏற்றுக் கொள்வதில்லை.  மோதுவதில் ஒன்றோ அல்லது இரண்டுமே நின்றபடி , தனது முன்னங்கால்களால் மற்றையதின் கழுத்தைப் பிடித்துக் கொள்ளும் .வால்களின் உதவியுடன் நிமிர்ந்து நின்றபடி, நெஞ்சிலோ தலையிலோ அல்லது தோளிலோ ஒன்றையொன்று தாக்க முற்படும். பொதுவாக சண்டையை ஆரம்பித்தவரே வெல்வதுண்டு. ஆண்களுக்கு மத்தியில் பலவான் என்றொரு ஆதிக்கத்தை உருவாக்க இந்தச் சண்டைகள் துணைபோகின்றன.

அடிமடியில்கைவைக்காதே

வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகைகளில் சிகப்புக் கங்காருக்கே மிகப் பெரிய வயிற்றுப்பை உள்ளது. ஜாக்கிரதை அடிமடியில் கைவைத்து விடாதீர்கள். இதன் குட்டி இங்கேதான் வாழ்கிறது. தாயின் முலைக்காம்பும் இதற்குள்தான் இருக்கின்றது. ஜோயி என்றுதான் குட்டியை ஆங்கிலத்தில் அழைக்கின்றார்கள். அடிமடியிலுள்ள பைக்குள் வைத்துத்தான் தாய் குட்டியைத் தாலாட்டுகிறது. பாலுட்டுகிறது. ஒரு திராட்சைப் பழத்தின் அளவுதான் குட்டி இருக்கின்றது என்பது ஆச்சரியமான சங்கதி! இதன் அளவு 2.5செ.மீற்றர் மாத்திரமே! 4 மாதங்கள் கழித்து, குட்டி, பைக்குள் இருந்து வெளியே வந்து, நிலத்தில் குதித்து தாயோடு புல் மேயும். 10 மாதங்கள் கழித்து, தனியனாக வாழ ஆரம்பித்து விடும்.

எதிரிகள் வரிசையில்…..

மனிதருக்கு அடுத்ததாக இங்கே டிங்கோஸ் என்று அழைக்கப்படும், காட்டு நாய்கள்தான் இவற்றின் இரண்டாம் எதிரிகள்! இது இரண்டையும் மீறி, செயற்கைதான் இவற்றின் பெரிய எதிரிகள்! கடும் வரட்சி, பசி,அளவுக்கு மீறிய சூடு, வதிவிடங்கள் அழிக்கப்படுதல்-இவற்றின் அழிவுக்கு கைகொடுப்பவை! மனிதன் தோலுக்காகவும், இறைச்சிக்காகவுமே இதனைக் கொல்கிறான். ஆனால் இது அழியும் நிலையில் இல்லை. 2011இல் அவுஸ்திரேலிய அரசு எடுத்த ஒரு கணிப்பின்படி, 34.3 மில்லியன் கங்காருக்கள் இருந்துள்ளன. 2010இல் இருந்த தொகை 25.1 மில்லியன். பிராந்தியரீதியாக, இவற்றை வேட்டையாட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவற்றிற்கு, கங்காரு இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

மாமிச பட்சணிகள் இருப்பதால்தான், சில சமயங்களில், ஒரு தாவரபட்சிணி  இனம் அளவுக்கு மீறி பெருகாமல், கட்டுப்பாட்டுக்குள் இருக்கத் துணைபோகின்றது என்பதை மறுப்பதற்கில்லை….

12.03.18

 

 

 

 

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *